Wednesday, June 24, 2009

மூஸ்லீம்களும் - இடஒதுக்கீடும்

சல்மான் குர்ஷித் அறிவாரா?

மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் தேவையில்லாமல் வார்த்தைகளைவிட வீண்வம்பை விலைக்கு வாங்கிவிட்டார்.

இட ஒதுக்கீடு வழங்கிவிடுவதால் முசுலிம்களின் பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்ந்துவிடப் போவதில்லை என்று கூறியிருக்கிறார்.

முசுலிம்களின் பிரச்சினைகள் என்பது வெறும் பொருளாதாரம் சம்பந்தப்பட்டது என்கிற அளவில்தான் அமைச்சரின் சிந்தனை தேங்கி நிற்கிறது என்று தெரிகிறது.

முதலாவதாக முசுலிம்களுக்கு தேவைப்படுவது கல்வியும், சமூகத்தில் ஒரு கவுரவத்தை அளிக்கும் அரசு வேலை வாய்ப்பும்தான் என்பது வளரவேண்டிய ஒரு சமூகத்துக்குத் தேவையானவையாகும்.

இன்னொரு வகையில் பார்த்தாலும் பொருளாதார வளர்ச்சிக்கு கல்வியும் அவசியம் என்பதையும் மறந்துவிடக்கூடாது. அதுவும் வளர்ந்துவரும் இந்த விஞ்ஞான உலகில் பொருளாதார வளர்ச்சிக்குக் கல்வி மிக அவசியமே!

முசுலிம் மக்களின் கல்வி நிலை எந்த நிலையில் இருக்கிறது என்கிற விவரம் அமைச்சருக்குத் தெரியுமா என்று தெரியவில்லை.

தொடக்கப் பள்ளிகளிலிருந்து உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லும் எண்ணிக்கையில் முசுலிம் மாணவர்களின் வீழ்ச்சி அதிர்ச்சிதரக் கூடியதாக உள்ளது.

இதன் காரணமாக உயர்கல்வியில் முசுலிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளனர்.

4.1.2009 நாளிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏட்டில் ஒரு புள்ளி விவரம் வெளிவந்தது. இந்தியாவில் பல பிரிவுகளைச் சார்ந்த மாணவர்கள் மேல்படிப்புச் சேர்க்கையில் அவரவர் சமூகத்தில் எவ்வளவு விகிதாச்சாரம் இருக்கிறார்கள் என்கிற புள்ளி விவரம் அது. இந்தக் கணக்கீட்டுக்கு கிராஸ் என்ரோல்மென்ட் ரேசியோ (ஜி.இ.ஆர்) என்று கூறுகின்றனர்.

இதன்படி பார்க்கும்பொழுது கிறித்துவர்களின் ஜி.இ.ஆர். 19-.85 விழுக்காடாகும். சீக்கியர்கள் 17.81 விழுக்காடாகும். இந்து தாழ்த்தப்பட்டவர்கள் 7.37 விழுக்காடாகும். முசுலிம்கள் 7.7 விழுக்காடாகும். கிட்டத்தட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் நிலையில்தான் முசுலிம்கள் உள்ளனர் என்பது இந்தப் புள்ளி விவரம் மூலம் அறிய முடிகிறது. முசுலிம்களில் எழுத்தறிவு பெற்ற-வர்களின் விழுக்காடு 42 தான். தேசிய சராசரியைவிட இது மிகவும் குறைவானதாகும்.
மெத்த படித்த அமைச்சராகவும் ஆகியுள்ள சல்மான் குர்ஷித் இந்த விவரங்களையெல்லாம் அறிந்திருந்தால் வெறும் வார்த்தைகளை கொட்டியிருக்க மாட்டார்.

முசுலிம் மக்களின் சமூக நிலையைக் கணித்துதான் சச்சார் கமிஷனும், அதனைத் தொடர்ந்த ரங்கநாத் மிஸ்ரா கமிஷனும் அமைக்கப்பட்டன. முசுலிம்களுக்கு தேசிய அளவில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று பரிந்துரைத்துள்ளனர்.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான் இந்த ஆணையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பதுகூட அமைச்சருக்குத் தெரியவில்லை போலும்.
தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் முசுலிம்களின் இட ஒதுக்கீடுக்கு வகை செய்துள்ளன. அரசுப் பணிகளைப் பொறுத்தவரை முசுலிம்கள் 5 விழுக்காட்டுக்கும் கீழே உள்ளனர் என்று சச்சார் ஆணையம் கூறுகிறது.

அர்ஜூன் சென்குப்தா அறிக்கையோ, இந்தியாவில் உள்ள முசுலிம்களில் 85 விழுக்காட்டினர் அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர் என்றும், தனி நபர் மாத வருமானம் ரூ.60-0-_க்கும் கீழ்தான் என்றும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவேண்டும். உயர்கல்வி பெறவேண்டும் என்ற நினைப்பும் செயல்பாடும் எங்கிருந்து குதிக்கும்?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கிறித்துவர்களுக்கும், முசுலிம்களுக்கும் 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடுக்கு தி.மு.க. அரசு வழி செய்தது.

சில நாள்களில் கிறித்துவர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வேண்டாம் என்று கூறிவிட்டனர். காரணம், கல்வி, வேலை வாய்ப்புகளில் இந்த மூன்றரை சதவிகிதத்தைவிட கிறித்துவர்கள் அதிகமாகவே பலன் பெற்று வருகின்றனர். ஆனால், முசுலிம்களோ இந்த மூன்றரை விழுக்காடு இட ஒதுக்கீடுக்கும் பச்சைக் கொடிகாட்டி விட்டனர். காரணம், இவர்களின் நிலைமை அதளபாதாளத்தில் கிடப்பதுதான். இதனையெல்லாம் புரிந்துகொண்டு இனிமேலாவது அமைச்சர் நிலையில் உள்ளவர்கள் பொறுப்புணர்ச்சியோடு எதையும் அளந்து பேசுவது நல்லது.

---------------------நன்றி:"விடுதலை" தலையங்கம் 23-6-2009

இதுதான் சர்கோசி கூறும் பெண்ணுரிமை....?

நேற்று முன்தினம் பிரான்ஸ் அதிபர் சர்கோசி, பர்தா என்பது பெண்ணடிமைத்தனம் என்று விமர்சித்திருந்தார். அவரது இப்பேச்சு பரவலாக முஸ்லிம்களின் மத்தியில் எதிர்ப்பை விதைத்திருக்கும் நிலையில், பர்தா என்பது ஒரு குறிப்பிட்ட வகை ஆடையை குறிப்பதல்ல. மாறாக பெண்ணின் முகம் முன் கை நீங்கலாக, ஏனைய பகுதிகளை அந்நிய ஆடவனின் பார்வையிலிருந்து மறைத்துக்கொள்ளும் வகையில் அணியும் எவ்வகை ஆடையும் பர்தாதான் என்பதை பல ஆயிரம் முறை விளக்கிய பின்னும் மேற்க்கத்திய உலகும், சில முற்போக்கு[?] வியாதிகளும் அவ்வப்போது தங்களின் இஸ்லாமிய அரிப்பை தீர்ப்பதற்காக பர்தாவை வம்புக்கு இழுப்பதை வாடிக்கையாகவே வைத்துள்ளனர்.

அந்த வரிசையில் சர்கோசியும் தன்பங்கிற்கு இஸ்லாமிய எதிர்ப்பை பர்தாவை பற்றிய விமர்சனம் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். பர்தாவை பெண்ணடிமைத்தனம் என்ற சர்கோசி,பெண்களுக்கு எது சுதந்திரம் என்பதை தன் மனைவியின் ஆடை மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.[பார்க்க படம் ]
கிராமங்களில் குளங்களில் குளிக்கும் பெண்களில் சிலர் தங்களின் சேலை, ஜாக்கெட்டுகளை அவிழ்த்துவிட்டு பாவாடையை மார்பை மறைக்கும் அளவுக்கு ஏற்றிக்கட்டிக்கொண்டு குளிப்பார்கள். அதுபோன்றதொரு ஆடையைத்தான் சர்கோசியின் மனைவி அணிந்திருக்கிறார். அதுவும் அந்நிய நாட்டு மன்னர் ஒருவரின் வரவேற்பு நிகழ்ச்சியில். இவ்வகை ஆடை அணிவது சர்கோசியின் மனைவியின் உரிமை. அதை நாம் குறை கூற மாட்டோம். அதே நேரத்தில், பர்தாவை விரும்பி அணியும் பெண்களெல்லாம் அடிமைத்தளையில் கட்டுண்டவர்கள் என்ற ரீதியில் பேசும் சர்கோசி, இதுபோன்ற ஆடை தான் பெண்களின் சுதந்திரம் என்று கருதுகிறார் போலும்.

அது சரி! ' எல்லோரும் நிர்வாணமாக திரியும் ஊரில் ஒருவன் உள்ளாடை அணிந்து வந்தால் அவனை கண்டு கைகொட்டி சிரிப்பார்கள்' என்ற முதுமொழிக்கேற்ப, முக்கால் நிர்வாணமாக அலையும் மேற்க்கத்திய உலகத்திற்கு கணவனைத்தவிர மற்றவர் பார்வையிலிருந்து தற்காத்து கொள்ளும் கவச உடையான பர்தா அணிபவர்களைப்பார்த்தால் இலப்பமாகத்தான் தோன்றும்.

படம் நன்றி;தினத்தந்தி.

Tuesday, June 23, 2009

இந்திய இராணுவத்தில் சேருவது எப்படி?

இந்திய இராணுவத்தில் சேருவது எப்படி?தேசிய பாதுகாப்பு அகாதமி

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலையில் வகுப்புகள் துவங்குகின்றன. 19
வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி: பனிரெண்டாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி

தேர்வு செய்யப்படும் முறை: யுபிஎஸ்சி நடத்தும் தேசிய பாதுகாப்பு அகாதமித் தேர்வு மற்றும் எஸ்எஸ்பி நேர்முகத் தேர்வு

எப்படி விண்ணப்பிப்பது: தேசிய நாளிதழ்களில் மார்ச்/ ஏப்ரல் மற்றும் அக்டோபர்/ நவம்பரில் இதற்கான விளம்பரங்கள் வெளியிடப்படும்.

இந்திய ராணுவ அகாதமி

பட்டதாரிகள்

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலையில் வகுப்புகள் தொடங்கும். 19 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் இதில் சேரலாம்.

கல்வித் தகுதி: பட்டப்படிப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி

தேர்வுமுறை: யுபிஎஸ்சி நடத்தும் ஒருங்கிணைந்த பாதுகாப்புத் தேர்வு(சிடிஎஸ்சி) மற்றும் எஸ்எஸ்பி நேர்முகத் தேர்வு

எப்படி விண்ணப்பிப்பது: மார்ச்/ஏப்ரல் மற்றும் அக்டோபர்/நவம்பர் மாதங்களில் இதற்கான விளம்பரங்கள் வெளியிடப்படும்.

பொறியியல் பட்டதாரிகள்

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் வகுப்புகள் துவங்கும். 20 முதல் 27 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி: குறிப்பிடப்பட்ட பிரிவில் பொறியியல் பட்டம்

தேர்வுமுறை: எஸ்எஸ்பி நடத்தும் நேரடி நேர்முகத் தேர்வு

எப்படி விண்ணப்பிப்பது:

இயக்குனர் ஜெனரல்(தேர்வுத்துறை)
ராணுவத் தலைமையகம், மேற்கு பிளாக் 3, ஆர்கே புரம், புதுதில்லி-110066 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களில் இதற்கான விளம்பரங்கள் வெளியிடப்படும்.

பல்கலைத் தேர்வுமுறை

ஜூலை மாதம் வகுப்புகள் தொடங்கும்.

வயது: 19-24 வயது வரை(பொறியியல் இறுதி ஆண்டு மாணவர்கள்)
18-24 வயது வரை( பொறியியல் இறுதி ஆண்டுக்கு முந்தைய ஆண்டு மாணவர்கள்)

தேர்வு முறை: பல்கலைக்கழகங்களில் கேம்பஸ் இன்டர்வியூ மற்றும் எஸ்எஸ்பி இன்டர்வியூ

ஜூலையில் வெளியாகும் விளம்பரங்களைப் பார்த்து விண்ணப்பிக்கலாம்.

பிளஸ் 2

ஜனவரி மற்றும் ஜூலையில் வகுப்புகள் துவங்கும்

வகுப்புகளில் சேரும்போது 161/2} 191/2 வயது இருக்க வேண்டும்.

பொருத்தமான பாடப்பிரிவில் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

மே மற்றும் நவம்பர் மாதங்களில் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

பணிச்சலுகைகள்

தங்கும் வசதி

இலவச ரேஷன் பொருட்கள்

இலவச மருத்துவ சிகிச்சை

ராணுவக் குழுக் காப்பீட்டு நிதியம் மூலம் 8 லட்சம் மதிப்பில் காப்பீட்டு வசதி

கேன்டீன் வசதி

கிளப்புகள் மற்றும் நிறுவனங்களில் உறுப்பினராக சலுகை

60 நாட்கள் ஆண்டு விடுப்பு மற்றும் 20 நாட்கள் சாதாரண விடுப்பு

ஆண்டுக்கு 1500 கிலோமீட்டர் வரை குடும்பத்துடன் இலவச சுற்றுப்பயணம் மேற்கொள்ளலாம்.

அதிகாரிகள் பயிற்சிப் பிரிவு

குறுகியகாலப் பணி

மே மற்றும் அக்டோபர் மாதங்களில் வகுப்புகள் துவங்கும்

வயது: 19-24 வயதுக்குட்பட்டவர்கள் இதில் சேரலாம்.

கல்வித்தகுதி: சேரும்போது பட்டப்படிப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வுமுறை: யுபிஎஸ்சி நடத்தும் ஒருங்கிணைந்த பாதுகாப்புத் தேர்வு(சிடிஎஸ்ஈ) மற்றும் எஸ்எஸ்பி நேர்முகத்தேர்வு

மார்ச் மற்றும் அக்டோபரில் வெளியிடப்படும் விளம்பரங்களைப் பார்த்து விண்ணப்பிக்கலாம்

குறுகியகாலப் பணி(தொழில்நுட்பம்)

மே மற்றும் அக்டோபரில் வகுப்புகள் துவங்கும்

20 முதல் 27 வயதுக்குட்பட்டவர்கள் இதில் சேரலாம்.

குறிப்பிடப்பட்ட பிரிவில் பொறியியல் பட்டம்

தேர்வு முறை: எஸ்எஸ்பி நடத்தும் நேரடி நேர்முகத்தேர்வு

மார்ச் மற்றும் அக்டோபரில் வெளியாகும் விளம்பரங்களைப் பார்த்து விண்ணப்பிக்கலாம்.

குறுகியகாலப் பணி(என்சிசி சிறப்பு அனுமதித் திட்டம்)

மே மாதம் வகுப்புகள் தொடங்கும்.

சேரும்போது 19 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்

கல்வித்தகுதி: பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்கள் இருக்க வேண்டும். என்சிசியில் இரண்டு ஆண்டுகள் சேவைபுரிந்திருக்க வேண்டும். மேலும் சி சான்றிதழில் பி கிரேடு பெற்றிருக்க வேண்டும்.

தேர்வுமுறை: நேரடி எஸ்எஸ்பி இன்டர்வியூ

அக்டோபரில் வெளியாகும் விளம்பரங்களைப் பார்த்து விண்ணப்பிக்கலாம்.

தினமணியில்(23-6-2009) வெளியான செய்தி

கலகவதி ஆகலாமா திலகவதி!

நக்கீரன் 20.06.2009, தேதியிட்ட இதழின் முகப்புக்கட்டுரையான ‘மகனைக் கொன்ற அப்பன், அப்பனைக் கொன்ற மகன் குற்றப்பின்னணி என்ற கட்டுரையில் (பக்-7) காவல்துறை அதிகாரியும், இலக்கியவாதியுமான திருமதி திலகவதியின் கருத்தை வெளியிட்டிருந்தீர்கள். திலகவதி ஐ.பி.எஸ்.ஸின் கருத்து முஸ்லிம் சமுதாயத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதால் இவ்விளக்கத்தை எழுதுகிறோம்.

”குடும்பகௌரவத்தைக் காப்பாற்ற பெற்றோர்களே அந்தப் பிள்ளையைக் கொன்று விடும் கௌரவக் கொலைகள் அரபுநாடுகளில் அளவுக்கதிகமாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. சலீம் ஒரு இஸ்லாமியர் என்பதால் அந்த மதத்திற்கு இந்தச் சம்பவம் புதிதானதும் அல்ல” என்று கருத்துகூறியுள்ளார் திலகவதி.

அரபு நாடுகளில் கௌரவக் கொலைகள் நடக்கின்றன என்பதற்கு அனுவின் துகள் அளவும் ஆதாரம் கிடையாது. அரபுநாடுகளில் அளவுக்கதிகமாக கௌரவக்கொலைகள் நடக்கின்றன என்பது அபத்தமான அவதூறு.

‘சலீம் ஒரு இஸ்லாமியர் என்பதால் அந்த மதத்திற்கு இந்தச் சம்பவம் புதிதானதும் அல்ல’ என்ற நச்சுக்கருத்தை திலகவதி போன்ற நல்லிலக்கியவாதி வெளிப்படுத்துவது வேதனைக்குரியது.

இஸ்லாம் மார்க்கம் இத்தகைய கொலைகளை கொள்கையளவில் அங்கீகரிப்பது போன்ற தோற்றத்தை திலகவதி ஏற்படுத்துகிறார்.

”இது அமைதி மார்க்கம் இதில் எவ்விதமான நிர்பந்தமும் கிடையாது” என்கிறது திருக்குர்ஆன். இறைக்கட்டளையையே நிர்பந்தப்படுத்தி ஒருவரை ஏற்கச் செய்ய இஸ்லாம் அனுமதிக்காத போது. தன்கருத்துக்கு ஒவ்வாத பிள்ளையைக் கொல்வதற்கு எப்படி அனுமதிக்கும்?

பெண்சிசுக் கொலைகளை தடுத்து நிறுத்திய மார்க்கம் இஸ்லாம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. நபிகள் நாயகத்திற்கு முந்திய காலத்தில் அறியாமைக்கால அரபுகள் பெண்குழந்தைகளை உயிருடன் புதைத்து வந்தார்கள். பெண் குழந்தைகளை சாபக்கேடாகக் கருதினார்கள்.

இதை நபிகள் நாயகம் தடுத்து நிறுத்தியதோடு பெண்குழந்தைகளை இறைஅருளின் அடையாள்மாய் போதித்தார்கள். இருபெண் குழந்தைகளை சிறப்பாக வளர்த்தவருக்கு சுவர்க்கம் உறுதி என்று நவின்றார்கள்.

திருக்குர்ஆனின் 81 வது அத்தியாயத்தின் 8,9 வசனங்கள் பெண் சிசுக்கொலை செய்வோரைக் கடுமையாக எச்சரிக்கின்றன.

குழந்தைகளை நேசிக்காதவர்கள் என்னைச் சேர்ந்தவர்களில்லை என்று நபிகள் நாயகம் நவின்றார்கள் இப்படி ஏராளமான சான்றுகளைக் கூறிக்கொண்டே போகலாம்.

உண்மை இவ்வாறிருக்க பெற்ற பிள்ளையையக் கொல்வது அந்த மதத்திற்குப் புதிதானது இல்லை என்ற திலகவதியின் கருத்து வன்மையான கண்டனத்திற்குரியது.

”சொந்தப்பிள்ளையை அல்ல அநியாயமாக எந்த ஒரு மனித உயிரை எவர் கொன்றாலும் அவர் உலக மக்கள் அனைவரையும் கொன்றவர் போலாவார். ஒரு மனித உயிரை வாழவைத்தவர் உலகமக்கள் அனைவரையும் வாழவைத்தவர் போலாவார்” என்று திருக்குர்ஆன் போதிக்கிறது. இத்தகையக் கட்டளைகளைக் கொண்டுள்ள மார்க்கத்தை கொலைகளை அங்கீகரிக்கும் மதமாக திலகவதி சித்தரித்துள்ளார்

காவல்துறையின் உயரதிகாரி ஒருவர் தனிவாழ்வில் ஒழுங்கீனமானவராக இருக்கிறார் என்பதற்காக ஒட்டுமொத்த காவல் துறையினரும் அப்படிப்பட்டவர்களே என்று கூறமுடியுமா?

மகளின் மீது அதீதபாசம் வைத்திருந்த ஒருவர் தன் கண்முன்னால் மகள் சீரழிவதை சகிக்க முடியாமல். வெறியோடும் அறிவீனத்தோடும் செய்த கொலைக்கும் மதத்திற்கும் முடிச்சுப் போட்டதே முதலில் தவறு. இந்தக் கொலையை முஸ்லிம் சமுதாயம் ஏற்கவில்லை. குற்றச் சம்பவத்தையும், அதைச் செய்தவர்களின் மதத்தையும் இணைத்துப் பார்ப்பது முஸ்லிம்கள் விஷயத்தில் மட்டுமே நடக்கிற கருத்தியல் வன்கொடுமை என்பதைச் சுட்டிக் காட்டுகிறோம். இரண்டு சம்பவங்கள் நடந்திருக்க, ஒரு சம்பவத்திற்கு மட்டும் மதத்தை முடிச்சுப் போட்டுப் பார்ப்பதும் அறிவு நாணயமுள்ள செயலா? ‘

மஹாபாரதத்தில், ‘என் உறவுகளை பதவிக்காக நான் கொல்லமாட்டேன்’ என்று அர்ஜுனன் மறுக்கும் போது தர்மத்தை நிலைநாட்ட உறவினர்களாக இருத்தாலும் அவர்களைக் கொலை செய்வது ஒரு ஷத்ரியனின் கடமை என்று போதிக்கிறார் கிருஷ்ணபரமாத்மா. இது பகவத் கீதையிலும் பதிவாகியுள்ளது.

பத்தொன்பது வயது விஜயகுமார் அவரது குடிகாரத் தந்தையான நடேசனைக் கொன்றுள்ளதற்கு கீதையை ஆதாரம் காட்டி தந்தையைக் கொல்வது இந்துமதத்திற்குப் புதியதல்ல என்று திலகவதி கூறுவாரா? குற்றங்களுக்கும் மதத்திற்கும் முடிச்சுப்போடும் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைப்பது தான் சமூக ஒற்றுமைக்கு உதவும். திலகவதி தன்கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.

Saturday, June 20, 2009

ஜூனியர் அதிகாரியை செக்ஸுக்கு அழைத்து ஜட்டியுடன் நின்ற ஐஏஎஸ் அதிகாரி சஸ்பெண்ட்!

போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் ஜூனியர் அதிகாரியை செக்ஸ் உறவுக்கு அழைத்து ஜட்டியுடன் நின்ற ஐஏஎஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

சஸ்பெண்ட் ஆன அதிகாரியின் பெயர் தியானேஸ்வர் பாட்டீல். இவர் மாநில பஞ்சாயத்துக்களுக்கான தலைமை செயலதிகாரி பொறுப்பில் இருந்தவர்.

தனக்குக் கீழ் பணியாற்றும் அதிகாரியை ஓரினச் சேர்க்கைக்கு வற்புறுத்தியதாக பாட்டீல் மீது குற்றம் [^] சாட்டப்பட்டுள்ளது. பாட்டீலின் அறையில் அவரும், ஜூனியர் அதிகாரியும் ஜட்டியுடன் நிற்பது போன்ற வீடியோ மத்தியப் பிரதேச டிவிகளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து பாட்டீலை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார் முதல்வர் சிவராஜ் சிங் செளஹான்.

ஐஏஎஸ் அதிகாரியான பாட்டீல் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

எனது ஜூனியர் அதிகாரி தனது நண்பர் ஒருவரது பணியை நிரந்தரமாக்க வற்புறுத்தினார். நான் மறுத்ததால் என் மீது இப்படி அபாண்டமான புகாரை சுமத்தியுள்ளார் என்று கூறியுள்ளார் பாட்டீல்.

பாட்டீல் அலுவலகத்தில் தனது ஜூனியர் அதிகாரியை அவர் செக்ஸுக்கு வற்புறுத்துவதாக டிவி சேனல்களுக்கு நேற்று செய்தி பரவியது. இதையடுத்து டிவி கேமராமேன்கள் அங்கு விரைந்தபோது, பாத்ரூமில் பாட்டீல் ஜட்டியுடனும், அவருடைய ஜூனியர் அதிகாரி ஜட்டியுடன் அறையிலிருந்து வெளியே வருவதையும் பார்த்து அப்படியே படம்பிடித்து விட்டனர்.

Sunday, June 14, 2009

சர்ச்சைக்குள்ளான மகளிர் தனி இடஒதுக்கீடு மசோதா!

இறைவனின் படைப்பில் ஆணும்-பெண்ணும் சமம்தான் என்றாலும், இருவரின் குணம், வலிமை, சமூக சூழல் இவையெல்லாம் கவனத்தில் கொண்டு இஸ்லாம், பெண்கள் ஒரு நல்ல மகளாக, மனைவியாக, தாயாக இருந்து வீட்டின் பொறுப்புகளை கவனித்து நிர்வகிக்கவேண்டும் என்று கட்டளையிடுகிறது. இதை பார்க்கும் சிலர் இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறது என்று ஒரு புறம் கூப்பாடு போடுவர். இஸ்லாம் பெண்களை வீட்டில் இருக்க சொல்கிறதே அன்றி, மற்ற எல்லாவகையான உரிமைகளையும் வழங்கியுள்ளது.
பிறக்கும் உரிமை
கல்வி உரிமை
பேச்சுரிமை
மணமகனை தேர்ந்தெடுக்கும் உரிமை
அட்வான்ஸ் மஹர்
விவாகரத்து உரிமை
சொத்துரிமை
மறுமணம் செய்யும் உரிமை.
இப்படியான பல்வேறு உரிமைகளை வழங்குவதோடு , பெண்களை வேலைக்கு சென்று அல்லது அரசியல் உள்ளிட்ட பதவிகளுக்கு சென்று மன, சுமைகளுக்கும் ஆளாகாமல் பெண்களை பராமரிக்கும் முழு கடமையை ஆண்கள் மீது இஸ்லாம் சுமத்தி பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்குகிறது.

ஆனால் இன்று பெண்கள் முன்னேற்றம் என்ற பெயரில் ஆண்களுக்கு சமமாக வேலை, அரசியல் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை அலங்கரிப்பதுதான் பெண்களின் கவுரவம் என்ற மாய தோற்றம் உருவாக்கப்பட்டு அதை நோக்கி பெண்கள் சமூகம் இன்று சென்று கொண்டிருக்கிறது. ஆண்களுக்கு சமமாக எல்லா துறைகளிலும்[அரசியல்உட்பட] பெண்கள் பரினமிப்பதால், பல நேரங்களில் பல இடங்களில் அவர்களது பெண்மைக்கு இழுக்கு உண்டாகும் காரியங்கள் நடப்பதையும் நாம் பத்திரிக்கைகளில் பார்க்கிறோம். அதிலும் மற்ற துறைகளைவிட அரசியல் துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பது அவர்களுக்கு நன்மையை விட அதிகமாக தீமைகளை ஏற்ப்படுத்தித்தரும்.

இத்தகைய அரசியலில் சில ஆண்டுகளாக பெண்கள் அதிக அளவில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தியாவின் இதயமான நாடாளுமன்றத்தின் சபாநாயகராக ஒரு பெண், இந்தியாவின் முதல் குடிமகளாக ஒரு பெண் என்று இடம்பெறும் அளவுக்கு அரசியலில் அவர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது . இவை காணாது என்பது போல அரசு தனி இடஒதுக்கீடு மூலம் இன்னும் அதிகமாக பெண்களை அரசியலுக்கு இழுக்க முயற்சிக்கிறது. அதற்காகத்தான் நாட்டில் எத்துணையோ பிரச்சினைகள் இருக்க அவைகளை புறந்தள்ளிவிட்டு மகளிருக்கு தனி இடதுக்கீடு மசோதா நூறு நாள் திட்டத்தில் நிறைவேற்றப்படும் என்று ஜனாதிபதி உரையில் குறிப்பிட செய்தது.

இந்த மசோதாவுக்கு அரசே எதிர்பாராத பகுதிகளில் இருந்து எதிர்ப்பு வலுத்துள்ளது. சரத் யாதவ், இப்போதுள்ள அடிப்படையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் பாராளுமன்றத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன் என்கிறார். முக்கிய தலைவர்களை அரசியலில் இருந்து அப்புறப்படுத்தவே இந்த மசோதாவை காங்கிரஸ் கொண்டு வருகிறது என்கிறார் முலாயம்சிங் யாதவ். இந்த மசோதாவை இப்போது உள்ளவடிவில் நிறைவேற்ற நாங்கள் விடமாட்டோம்.தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பெண்களும் பயன்பெறும் வகையில் உள் ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டும் என்கிறார் லாலு பிரசாத் யாதவ். இவர்களை எல்லாம் தாண்டி இன்னொரு முக்கியமானவரும் எதிர்க்கிறார். அவர்தான் உமாபாரதி! லாலு சொன்னது போன்ற கருத்தை இவரும்முன்வைக்கிறார்.

இப்படி எதிர் கட்சிகளின் எதிர்ப்பை மீறி இந்த மசோதா நிறைவேற்ற பட்டாலும் அதனால் பெண்களுக்கு எந்த முன்னேற்றமும் இல்லை என்பதை அரசு புரிந்து கொள்ளவேண்டும். எப்படி எனில், தமிழகத்தில் உள்ளாட்சிகளில் பெண்கள் மட்டுமே போட்டியிடும் இடங்கள் ஒதுக்கப்பட்டது. அதில் பெண்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். ஆனால், அவர்களில் பெரும்பாலோர் ரப்பர் ஸ்டாம்பாக இருப்பதோடு சரி! பெரும்பாலும் அவர்களது கணவரோ, அல்லது உறவினரான ஆண்கள்தான் அதிகார பலத்தோடு வளைய வருகிறர்கள். இதே நிலைதான் மகளிர் மசோதா நிறைவேற்றப்பட்டாலும் ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு தொகுதியில் ஒரு பெண் போட்டியிட விரும்பினால் அது அவரின் உரிமை. ஆனால் அந்த தொகுதியில் பெண்தான் போட்டியிடவேண்டும் என்ற நிர்பந்தத்தை உண்டாக்கும் சட்டத்தை அரசு கொண்டுவருவது அதிகார தோரனையாகும்.இதுபோன்ற மசோதாக்களை ஓரம்கட்டிவிட்டு, முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கி ஒரு சமுதாயத்தின் வாழ்க்கை தரத்தை முன்னுக்கு கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்கவேண்டும். தேர்தலில் காங்கிரசுக்கு 'தொண்டைகிழிய' கத்தி பிரச்சாரம் செய்தவர்கள் காங்கிரசை வலியுறுத்தவேண்டும்.

இதுதான் இந்தியாவின் சமநீதி....??????


இந்த லிங்கை கிளிக் செய்க;
unitedtamilmuslims: View Attachment : Anti Torture Day

Wednesday, June 10, 2009

குஜராத் இனப்படுகொலை: பாதிக்கிணறு தாண்டும் நீதிமன்றத் தீர்ப்புகள்!

http://www.a1realism.com/CRISIS/gujara6.jpg

குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நடந்த முசுலீம் இனப் படுகொலை தொடர்பாக உச்சநீதி மன்றத்தாலும் குஜராத் உயர்நீதி மன்றத்தாலும் சமீபத்தில் அளிக்கப்பட்டுள்ள மூன்று தீர்ப்புகள் இந்து மதவெறி கும்பலுக்கு, குறிப்பாக அப்படுகொலையை நடத்திய நாயகன் மோடிக்கு எதிராக அமைந்திருப்பதோடு, இந்த இனப்படுகொலை தொடர்பாக இந்து மதவெறிக் கும்பல் நடத்திவரும் பொய்ப் பிரச்சாரங்களையும் அம்பலப்படுத்தியுள்ளன.

கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி விரைவு வண்டியின் எஸ் 6 பெட்டி எரிந்து போனதை, பாகிஸ்தான் ஆதரவோடு நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் என ஊதிப் பெருக்கி, அவ்வழக்கை காலாவதியாகிப்போன பொடா சட்டத்தின் கீழ் நடத்தி வந்தது, குஜராத் அரசு. “இச்சம்பவத்தைத் தீவிரவாதத் தாக்குதலாகக் கருத முடியாது; எனவே, இவ்வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள முசுலீம்களை பொடா சட்டத்தின் கீழ் விசாரிக்க முடியாது” என குஜராத் உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. கோத்ரா சம்பவம் தொடர்பான தனது பித்தலாட்டங்களை எப்படியாவது நிரூபித்து விட வேண்டும் என்ற வெறியோடு இருக்கும் மோடி அரசு, தனது கைக்கூலிகளைத் தூண்டிவிட்டு இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்து, இடைக்காலத் தடையைப் பெற்றுவிட்டது.


கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி விரைவு வண்டியின் எஸ்6 பெட்டி எரிந்துபோன வழக்கு மற்றும் அகமதாபாத்திலுள்ள நரோடா பாட்டியா, நரோடா கிராமம், குல்பர்க் சொசைட்டி ஆகிய முசுலீம் குடியிருப்புகளில் இந்து மதவெறிக் கும்பல் நடத்திய கொலைவெறித் தாக்குதல்கள் தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட 10 வழக்குகளை விசாரிக்க ஆறு விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும்; இவ்வழக்கு விசாரணையை உச்சநீதி மன்றத்தால் உருவாக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு கண்காணித்து, மூன்று மாதத்திற்கு ஒருமுறை விசாரணை தொடர்பான அறிக்கையை உச்சநீதி மன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளது, உச்சநீதி மன்றம்.


இந்து மதவெறிக் கும்பல் நடத்திய தாக்குதல்கள் தொடர்பான வழக்குகளில் ஏறத்தாழ 2,000 வழக்குகளைப் போதிய சாட்சியம் இல்லை என்று கூறி, கலவரம் நடந்து முடிந்த கையோடு கைகழுவி விட்டது, மோடி அரசு. இந்த 2,000 வழக்குகளையும் மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ள உச்சநீதி மன்றம், இந்தக் குறிப்பிட்ட 10 வழக்குகளைத் தனது கண்காணிப்பின் கீழ் எடுத்துக் கொண்டுள்ளது.


இந்து மதவெறிக் கும்பல் குல்பர்க் சொசைட்டி குடியிருப்பைத் தாக்கியபொழுது மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட காங்கிரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஹ்ஸான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி, இந்த இனப்படுகொலையில் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிக்குள்ள தொடர்பை விசாரிக்கக் கோரி நடத்தி வந்த வழக்கில், “சிறப்புப் புலனாய்வுக் குழு குஜராத் இனப் படுகொலையில் முதலமைச்சர் நரேந்திர மோடிக்குள்ள தொடர்பை மூன்று மாதத்திற்குள் விசாரித்து அறிக்கை தர வேண்டும்” என உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ஜாகியா ஜாப்ரியின் இவ்வழக்கை குஜராத் உயர்நீதி மன்றம் ஏற்றுக் கொள்ள மறுத்து ஏற்கெனவே தள்ளுபடி செய்து விட்டது என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

http://lh4.ggpht.com/_IEYubfMaOJM/Sen_AsogaYI/AAAAAAAABLc/NMhZHb6Owdw/modi4%5B8%5D.jpg


இத்தீர்ப்புகள் வரவேற்கப்படத் தக்கவைதான் என்றபோதும், உச்சநீதி மன்றம்கூட குஜராத் முசுலீம் இனப் படுகொலை தொடர்பான வழக்குகளை பத்தோடு பதினொன்றாகத்தான் நடத்தி வருகிறது என்பதையும் இங்கு அழுத்தமாகச் சொல்லித்தான் தீர வேண்டும்.


இந்த இனப்படுகொலை நடந்து முடிந்து ஏழு ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த இனப்படுகொலையின்பொழுது உயிர் தப்பிப் பிழைத்த ஆயிரக்கணக்கான முசுலீம் குடும்பங்கள் இன்றும்கூட தாங்கள் வாழ்ந்து வந்த பகுதிகளுக்குள் கிராமங்களுக்குள் நுழைய முடியாமல் அகதிகளாக வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர். இந்த இனப்படுகொலை தொடர்பாகப் பதியப்பட்ட 2,000 வழக்குகளில் வெறும் 2 வழக்குகளில்தான் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்; மீதி வழக்குகள் அனைத்தும் நீதிமன்ற விசாரணை என்ற நிலையிலேயே ஊறப்போட்டு வைக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு வழக்குகளிலும்கூட நீதிமன்றம் தன்முனைப்போடு செயல்பட்டுக் குற்றவாளிகளைத் தண்டித்துவிடவில்லை. மோடி கும்பல் நடத்திய தாக்குதலில் நேரடியாகப் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு போன்ற அப்பாவி முசுலீம்களும் மனித உரிமை அமைப்புகளும் நடத்திய பெரும் போராட்டத்திற்குப் பிறகுதான் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர்.


இந்த இனப்படுகொலையைத் தலைமையேற்று நடத்திய நரேந்திர மோடியையும், அவரது தளபதிகளாகவும் அடியாட்களாகவும் செயல்பட்ட இந்து மதவெறி பாசிசக் குண்டர்கள் அனைவரையும், யூத இனப்படுகொலையை நடத்திய பாசிச நாஜிக் கும்பலைத் தண்டித்ததைப் போல, தனி விசாரணை மன்றம் அமைத்து, தனிச் சட்டம் இயற்றி இந்நேரம் தண்டித்திருக்க வேண்டும். முசுலீம் தீவிரவாதிகள் கடந்த நவம்பரில் மும்பய் நகர் மீது தாக்குதல் நடத்தியவுடனேயே, இது போன்ற தாக்குதல்களை எதிர்கொள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களைச் செய்த இந்திய அரசு, மோடி போன்ற இந்து மதவெறி தீவிரவாதிகளை எதிர்கொள்ள தனிச் சட்டம் இயற்ற மறுத்து வருகிறது. இந்த இனப்படுகொலை தொடர்பான 2,000 வழக்குகளில் வெறும் 10 வழக்குகளை மட்டும் தனது கண்காணிப்பின் கீழ் கொண்டுவந்துள்ள உச்சநீதி மன்றம், இந்தப் பத்து வழக்குகளை வெளி மாநில நீதிமன்றங்களில் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தனது தீர்ப்பில் உதறித் தள்ளி விட்டது.


குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள விரைவு நீதிமன்றங்களில் நடக்கும் விசாரணையைக் கண்காணித்து உச்சநீதி மன்றத்திற்கு அறிக்கை அனுப்புவது; இந்தப் பத்து வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள கட்சிகளுக்குப் போதிய பாதுகாப்பு அளிப்பது; சிறப்புப் புலனாய்வுக் குழுவோடு கலந்தாலோசித்து, அரசு வழக்குரைஞர்களை நியமிப்பது ஆகிய பொறுப்புகள் சிறப்புப் புலனாய்வுக் குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளதால், இந்தப் பத்து வழக்குகளும் இந்து மதவெறிக் கும்பலின் அச்சுறுத்தலின்றி நடைபெறும் என நம்பச் சொல்கிறது, உச்சநீதி மன்றம்.


2,000 வழக்குகளில் இந்தப் பத்து வழக்குகளில் மட்டும் விரைவாகவும் நியாயமாகவும் நீதி கிடைத்துவிட்டால் போதும் என்று இருந்துவிட முடியாது; இரண்டாவதாக, இந்து மதவெறிக் கும்பல் சட்டத்தின் ஓட்டைகளுக்குள் புகுந்துகொண்டு இந்த பத்து வழக்குகளையும் இழுத்தடிக்கும் நரித்தனத்தில் இறங்காது என்பதற்கும் எந்த உத்தரவாதமும் கிடையாது.


குஜராத் அரசில் மகளிர் நலத் துறையில் இணை அமைச்சராக இருந்த மாயாபென் கோத்நானியும், விசுவ இந்து பரிசத்தின் பொதுச் செயலாளராக இருந்த ஜெய்தீப் படேலும்தான், நரோடா பாட்டியாவிலும், நரோடா கிராமத்திலும் நடந்த தாக்குதல்களுக்குத் தளபதிகளாகச் செயல்பட்டவர்கள். இவர்கள் இருவரும் கைபேசிகள் மூலம் கொடுத்த உத்தரவுகளின்படிதான் இந்து மதவெறிக் கும்பல் அந்தத் தாக்குதலை நடத்தினார்கள் என்பதற்கு அசைக்க முடியாத ஆதாரங்கள் இருந்தபொழுதும், இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய மறுத்துவிட்டதோடு, நரோடா பாட்டியா மற்றும் நரோடா கிராம கொலைச் சம்பவ வழக்குகளைப் போதிய சாட்சியமில்லை என்ற பொய்யைச் சொல்லிக் கைகழுவி விட்டது, மோடி அரசு.


உச்சநீதி மன்ற உத்தரவுப்படி இந்த இரண்டு வழக்குகளையும் மீண்டும் புலனாய்வு செய்த சிறப்புப் புலனாய்வுக் குழு, அமைச்சர் மாயாபென்னையும், ஜெய்தீப் படேலையும் விசாரணைக்கு அழைத்தது. அவர்கள் இருவருமே மோடிக்குள்ள அதிகாரத்தைக் கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டு, விசாரணைக்குப் போகாமல் காலத்தைக் கடத்தினர். இதனையடுத்து, சிறப்புப் புலனாய்வுக் குழு அவர்கள் இருவரையும் தலைமறைவாகத் திரியும் குற்றவாளிகள் என அறிவித்தது. அவர்களோ குஜராத்திலுள்ள கீழ் நீதிமன்றமொன்றில் மனுப் போட்டு, சிறப்புப் புலனாய்வுக் குழு தங்களைக் கைது செய்துவிடாத வண்ணம் பிணை வாங்கிக் கொண்டனர். அந்த நீதிமன்றம் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் இவர்கள் சாட்சியத்தைக் கலைத்துவிட மாட்டார்கள் என இக்கிரிமினல்களுக்குச் சான்றிதழ் அளித்தது. இதன்பின், சிறப்புப் புலனாய்வுக் குழு குஜராத் உயர்நீதி மன்றத்தை அணுகி கீழ் நீதிமன்றம் வழங்கிய பிணையை ரத்து செய்ய வைத்து, அதன் பிறகு அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தது. எனினும், கைது செய்யப்பட்ட சில நாட்களிலேயே அவ்விருவருக்கும் பிணை வழங்கி விட்டது, குஜராத் நீதிமன்றம்.


இப்படிப்பட்ட இழுத்தடிப்புகளை இந்து மதவெறிக் கும்பல் மட்டுமல்ல, உச்சநீதி மன்றம்கூட “சட்டப்படி” செய்து வருகிறது என்பதும் உண்மை.


சிறப்புப் புலனாய்வுக் குழுவின் வசமுள்ள இந்தப் பத்து வழக்குகளையும் குஜராத்திற்கு வெளியே விசாரிக்க வேண்டும் எனக் கோரி மனித உரிமை அமைப்புகள் 2003ஆம் ஆண்டு உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தன. இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதி மன்றம் இந்த வழக்குகளின் மீது குஜராத் நீதிமன்றங்களில் நடந்துவந்த விசாரணைகளுக்கு இடைக்கால தடை விதித்தது. மனித உரிமை அமைப்புகளின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்ட உச்சநீதி மன்றம், இந்த பத்து வழக்குகளை குஜராத்திலேயே விரைவு நீதிமன்றங்களை அமைத்து விசாரிக்கலாம் என இப்பொழுது தீர்ப்பளித்திருக்கிறது. இந்த “பரபரப்பான” தீர்ப்பை உச்சநீதி மன்றம் வழங்குவதற்குள் ஏறத்தாழ ஆறு ஆண்டு காலம் உருண்டோடிவிட்டது. இந்து மதவெறியன் வருண் காந்தி மீது போடப்பட்ட தேசிய பாதுகாப்புச் சட்ட வழக்கை கைசொடுக்கும் நேரத்திற்குள் தள்ளுபடி செய்துவிட்ட உச்சநீதி மன்றம், இந்தப் பஞ்சு மிட்டாய் தீர்ப்பை வழங்குவதற்கு இத்துணை காலதாமதம் ஏன் செய்தது? இப்படி இழுத்தடிப்பதில் நீதிபதிகளுக்கு ஏதாவது உள்நோக்கம் இருக்குமா? என்ற கேள்விகளை எழுப்பினால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நம் மீது பாய்ந்து விடும்.


சபர்மதி விரைவுவண்டி கோத்ரா ரயில் நிலையத்தைக் கடந்து சென்ற ஒருசில நிமிடங்களிலேயே, அவ்வண்டியின் எஸ்6 பெட்டி தீக்கிரையானது. இது தொடர்பாக கோத்ராவைச் சேர்ந்த 135 முசுலீம்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்களுள் 22 பேர் தலைமறைவாகிவிட 100 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த 100 பேரில் 16 பேருக்கு மட்டும் பிப்ரவரி 14, 2003 அன்று குஜராத் உயர்நீதி மன்றம் பிணை வழங்கியது. இந்தத் தீர்ப்பு வந்த மறுநிமிடமே, அதுவரை சாதாரண குற்றவியல் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை பாசிச பொடா சட்டத்தின் கீழ் கொண்டு வந்தார், மோடி. இந்த வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு எளிதாகப் பிணை கிடைத்துவிடக் கூடாது என்ற ‘நல்லெண்ணம்’தான் இதற்குக் காரணம்.


இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்குப் பிணை வழங்க வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, கடந்த ஐந்தாண்டுகளாக முறையாக விசாரிக்கப்படாமல் உச்சநீதி மன்றத்தால் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. சபர்மதி விரைவுவண்டியின் எஸ்6 பெட்டி தீக்கிரையான வழக்கு பொடாவின் கீழ் வராது என குஜராத் உயர்நீதி மன்றம் தீர்ப்பளிப்பதற்கு முன்பாகவே, மைய அரசால் அமைக்கப்பட்ட பொடா மறு ஆய்வுக் கமிட்டி 2004ஆம் ஆண்டிலேயே இப்படியான தீர்ப்பை அளித்துவிட்டது. பொடாவின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்குப் பிணை கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும் உரிமை உண்டு என 2006ஆம் ஆண்டில் உச்சநீதி மன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது. இத்தனை சாதகமான அம்சங்கள் இருந்தும், கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த ஏழு ஆண்டுகளாகச் சிறையில் வாடி வரும் 84 முசுலீம்களுக்குப் பிணை வழங்கும் மனுவை முறையாக விசாரிக்காமல் தள்ளிப்போட்டுக்கொண்டே போகிறது, உச்சநீதி மன்றம்.


உச்சநீதி மன்றத்தின் இந்த அநீதியான மற்றும் பாரபட்சமான போக்கை வெட்கக்கேடு என விமர்சித்தார், மனித உரிமைப் போராளியும் வழக்குரைஞருமான தீஸ்தா சேதல்வாட். உச்சநீதி மன்றத்தின் முதல் “தலித்” தலைமை நீதிபதியான கே.ஜி. பாலகிருஷ்ணன் இந்த அநீதிக்காக வெட்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவரோ, தீஸ்தா சேதல்வாட் உச்சநீதி மன்றத்தின் பாரபட்சமான சிவப்பு நாடாத்தனத்தை அம்பலப்படுத்தியதற்காக ஆத்திரமடைந்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி 84 முசுலீம்களின் பிணை மனு விசாரணைக்கு வந்தபொழுது, “யார் இந்த தீஸ்தா சேதல்வாத்? உங்களில் யாராவது எந்த வகையிலாவது அவருடன் தொடர்புடையவர்களா? அவருடன் தொடர்புடைய யாராவது பிணை மனு தாக்கல் செய்திருந்தால், அதனை இந்த அமர்வு நீதிமன்றம் கேட்க விரும்பவில்லை” எனக் கீழ்த்தரமான முறையில் மனுதாரர்களுக்கு மிரட்டல் விடுத்தார்.


குஜராத் இனப் படுகொலையின்பொழுது நடந்த கொடூரங்களை வெளிக் கொண்டு வந்ததிலும், பெஸ்ட் பேக்கரி மற்றும் பில்கிஸ் பானு தொடர்பான வழக்குகளில் இந்து மதவெறிக் கிரிமினல்கள் தண்டிக்கப்பட்டதிலும் தீஸ்தாவின் பங்கு அளப்பரியது எனத் தெரிந்திருந்தும், “யார் இந்த தீஸ்தா?” என உச்சநீதி மன்றம் வினவியது, அம்மன்றத்தின் அதிகாரத்திமிரைத்தான் வெட்ட வெளிச்சமாக்கியது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்க வேண்டும் என்பதை விட, தனது அதிகாரத் திமிரையும் பாரபட்சமான, தன்னிச்சையான போக்கையும் யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்பதில்தான் உச்சநீதி மன்றம் குறியாக இருந்து வருகிறது.


மனுதாரர்கள் தங்களுக்குப் பிணை கிடைக்க வேண்டும் என்ற பதைபதைப்பில், உச்சநீதி மன்றத்தின் மிரட்டலுக்கு அடிபணிந்து, தீஸ்தாவுடன் தொடர்பு வைத்துக் கொள்வதைக் கைவிடுவதாக அறிவித்தனர். எனினும், உச்சநீதி மன்ற நீதிபதிகள் அவர்களுக்குப் பிணை வழங்காமல், விசாரணையை ஒத்திவைத்து, அம்முசுலீம்களின் வாழ்க்கையோடு விளையாடிப் பார்த்து மகிழ்ந்தனர். இந்தக் குரூரத்தை யாரால்தான் சகித்துக் கொள்ள முடியும்? தனது அரசால் கைது செய்யப்பட்டுள்ள முசுலீம்களுக்கு நீதி மட்டுமல்ல, பிணைகூடக் கிடைத்துவிடக் கூடாது என விரும்புகிறார், மோடி. மோடியைப் போலவே நீதிபதிகளும் எண்ணுகிறார்கள் என்று ஏன் சொல்லக்கூடாது?


‘‘தாமதமாக வழங்கப்படும் நீதி, நீதி மறுக்கப்படுவதற்குச் சமமானது” என்ற பொன்மொழியை உச்சரித்துக் கொண்டே, குஜராத் முசுலீம்களுக்கு ‘நீதி’ வழங்குவதை இழுத்தடிக்கும் திருப்பணியை இந்திய நீதிமன்றங்கள் சட்டப்படியே செய்து வருகின்றன. சில சமயங்களில் குஜராத் முசுலீம்களுக்குச் சாதகமாக வழங்கப்படும் தீர்ப்புகள்கூட, அவர்களுக்கு முழுமையான நியாயத்தை வழங்கிவிடுவதில்லை. பில்கிஸ் பானு வழக்கில் (பார்க்க; புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2008) பாலியல் வன்முறை தாக்குதலையும், படுபாதக கொலைகளையும் நடத்திய இந்து மதவெறி கிரிமனல்களுள் ஒருவனுக்குக்கூடத் தூக்குத் தண்டனை தரப்படவில்லை. இக்கிரிமினல் குற்றங்களை மூடிமறைக்கத் துணையாக நின்ற போலீசு அதிகாரிகள், அரசு மருத்துவர்களில் ஒருவருக்குக்கூட ஒருநாள் சிறை தண்டனைகூட வழங்கப்படவில்லை.


இச்சூழ்நிலையில், இந்து மதவெறிக் கும்பலுக்கு எதிராக வழங்கப்படும் தீர்ப்புகளில் உள்ள ஓட்டைகளை அம்பலப்படுத்தும் அதேசமயம், இந்த இனப்படுகொலையின் நாயகன் மோடி தண்டிக்கப்படும் வரையிலும், ஒவ்வொரு வழக்கிலும் விரைவாகவும், நியாயமாகவும் தீர்ப்பு வழங்கப்படும் வரையிலும் போராடுவது ஒன்றுதான் மதச்சார்பின்மையை நேசிக்கும் இந்திய மக்களின் முன் உள்ள ஒரே வழியாகும்.


கட்டுரையாளர்: செல்வம்

புதிய ஜனநாயகம், ஜூன்'2009,