Wednesday, October 27, 2010

ராஸல் கைமா மன்னர் மரணம்

ஐக்கிய அரபு அமீரக நாட்டின் 7 மாகாணங்களில் ஒன்று ராஸ் அல் கைமா. இதனுடைய மன்னராக இருந்த ஷேக் ஷக்ர் பின் முஹம்மத் அல் காஷிமி இன்று (27.10.2010) காலை மரணம் அடைந்தார்.

இவருடைய மரணத்திற்கு ஜனாதிபதி ஷேக் கலிபா இரங்கல் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகம் ஒரு வாரத்தை துக்க தினங்களாக அறிவித்துள்ளது. ராஸ் அல்கைமாவிலுள்ள அரசு அலுவலகங்களுக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஷார்ஜாவில் அரசு அலுவலகங்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அருந்ததி ராயை கைதுச் செய்யும் முயற்சி கண்டிக்கத்தக்கது -NCHRO

புதுடெல்லி,அக்.27:டெல்லியில் கருத்தரங்கில் கஷ்மீரைக் குறித்து உரை நிகழ்த்திய சமூக ஆர்வலரும், எழுத்தாளருமான அருந்ததி ராயை தேசத்துரோகம் குற்றஞ்சாட்டி கைதுச் செய்ய முயல்வது அரசியல் சட்டம் அனுமதித்த அடிப்படை உரிமைகள் மீதான அத்துமீறல் என NCHRO என்ற மனித உரிமை அமைப்பின் தேசிய கமிட்டி தெரிவித்துள்ளது.

தனது கருத்தை வெளியிட்டதற்காக ஜனநாயக அரசு ராணுவ அரசு மேற்கொள்வதற்கு சமமான மனித உரிமை மீறலை நடத்துகிறது. சர்வதேச அளவில் பிரபலமான இலக்கியவாதியும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததி ராயை கைதுச் செய்ய நடத்தப்படும் முயற்சி
எதிர்க்கப்பட வேண்டியதாகும்.

அருந்ததிராயை பொய் வழக்கில் கைதுச்செய்து சிறைக்கொட்டடியில் அடைக்க முயற்சிக்கும் மத்திய அரசின் தீர்மானம் கண்டிக்கத்தக்கது என NCHRO தலைவர் நீதிபதி ஹெச்.சுரேஷ், தேசிய ஒருங்கிணைப்பாளர் ரெனி ஐலின் ஆகியோர் இவ்வறிக்கையை வெளியிட்டனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,

பாப்ரி மஸ்ஜித்:வீணான பேச்சுவார்த்தைகளை நிறுத்துங்கள் -முஸ்லிம் தலைவர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் வேண்டுகோள்

பெங்களூர்,அக்:பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் சங்க்பரிவார் மற்றும் அதன் துணை அமைப்புகளுடனான எல்லாவித சமரசப் பேச்சுவார்த்தைகளை நிறுத்திவிட்டு முஸ்லிம் தலைவர்கள் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்ய முடிவெடுத்திருக்கும், சுன்னி வக்ஃப்போர்டு மற்றும் முஸ்லிம் தனியார் சட்டவாரியத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய முஸ்லிம்களில் அதிக செல்வாக்குப் பெற்ற அமைப்பான முஸ்லிம் தனியார் சட்டவாரியம் இந்த மாதம் கூட்டிய கூட்டத்தில் வைத்து சமரசத் தீர்வு காண்பதற்கான சந்தேகங்களுக்கு முடிவுக்கட்டி, எதிர்கால செயல் திட்டங்களுக்கு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படவும் செய்ததாகும்.

ஆதாரங்களை விட நம்பிகையை அடிப்படையாகக் கொண்ட அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்சின் தீர்ப்பின் அபத்தங்களை திருத்துவதற்காக உச்சநீதிமன்றத்தை அணுகுவதற்கான உரிமையும், பொறுப்பும் முஸ்லிம்களுக்கு உண்டு என அக்கூட்டம் மதிப்பீடுச் செய்திருந்தது.

கோயிலை இடித்துவிட்டு மஸ்ஜித் கட்டப்பட்டது என்ற வாதம் நிரூபிக்கப்படாத சூழலில், பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்தை ராமர் கோயில் கட்டுவதற்கு நன்கொடையாக அளிக்கவேண்டும் என்ற வாதம் உள்ளிட்ட சில தனிப்பட்ட கருத்துக்களை முஸ்லிம் தனியார் சட்டவாரியம் நிராகரித்துவிட்டது.

நிலைமை இவ்வாறிருக்க, மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடன் இதுக்குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் சில உறுப்பினர்களின் நடவடிக்கை ஆச்சரியமளிப்பதாகவும், தேவையற்றதுமாகும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசியத் தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் தெரிவித்துள்ளார்.

அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் விமர்சிக்கப்பட்டுள்ள ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய தலைவர்களில் ஒருவரான இந்திரேஷ்குமார், ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆதரவாளர்களான சுவாமி சிதானந்த், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஆகியோருடன் சமரசப் பேச்சுவார்த்தைகள் நடத்துவது வீண் வேலையாகும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடம் குறித்த முஸ்லிம்களின் உரிமைக் கோரிக்கையைக் குறித்து பொதுமக்களிடம் இது சந்தேகத்தை கிளப்பவே உதவும்.

பாப்ரி மஸ்ஜித் நிலத்தை ராமன் பிறந்த இடம் என்பதை அங்கீகரித்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யாமலரிந்தால்தான் மட்டுமே பேச்சுவார்த்தையின் மூலம் பரிகாரம் காண இயலும் என ஆர்.எஸ்.எஸ்ஸின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ்
தெளிவுப்படுத்தியுள்ளார்.

பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் முடிவுச் செய்துள்ள தீர்மானங்களைக் குறித்து எல்லா மாநிலங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டுமென முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் தலைவர் மற்றும் செயலாளர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்டின் தேசியத் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

ஹிந்தத்துவா அமைப்புகளுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தும் வாரியத்தின் உறுப்பினர்களை தலைவர்கள் சந்தித்து அந்த சிந்தனையிலிருந்து மாற்றவேண்டும் என இ.எம்.அப்துற்றஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,

இஸ்லாமிய வங்கி முறையை RBI அறிந்து கொள்ள பிரதமர் வேண்டுகோள்!

மலேசியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இஸ்லாமிய வங்கி முறை குறித்து ஆய்வு செய்து அதனை இந்தியாவில் அறிமுகப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி முனைய வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

இஸ்லாமிய வங்கியலை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பல தரப்பிலும் கோரப்படுகிறது. இந்த கோரிக்கையை செயல்படுத்தும் விதமாக, மாலேசிய வங்கிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இஸ்லாமிய வங்கி முறை குறித்து ரிசர்வ் வங்கி ஆய்வு செய்ய வேண்டும் என்று நான் ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை செய்கிறேன்என்று பிரதமர் மன்மோகன் சிங் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் கூறினார்.

மலேசியாவில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள இஸ்லாமிய வங்கி முறை குறித்து அறிய இந்தியா விரும்புகிறதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில் பிரதமர் இவ்வாறு கூறினார்.

அரசு முறைப் பயணமாக மலேசியா சென்றுள்ள பிரமர், மலேசியப் பிரதமர் முஹம்மது நஜீப் துன் அப்துல் ரஜாக்குடன் பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல் குறித்து விரிவாகப் பேசினார்.

வட்டியில்லா வங்கி முறையான இஸ்லாமிய வங்கியை இந்தியாவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கிக்கு பல தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன

Thursday, October 21, 2010

அயோத்தி: இராமர் பிறந்த பூமியா? சீதை மறித்த பூமியா?

உத்தரபிரதேச மாநிலம் ஃபைசாபாத் மாவட்டத்திலுள்ள அயோத்தியில், சங் பரிவார் அமைப்புகளால் இடித்துத் தள்ளப்பட்ட பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்ற இந்துக்களின் நம்பிக்கையை ஏற்றுக் கொண்டு, பாபர் மசூதி - இராமர் ஜென்ம பூமி வழக்கில் அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்ட நிலையில், அங்கு இராமர் பிறந்திருக்க முடியுமா? அல்லது அங்கு இராமருக்கு கோயில் இருந்திருக்க முடியுமா? என்பது குறித்து ரகு வம்சத்தை எடுத்துக் காட்டி ஒரு எதிர் விளக்கத்தை தருகிறார் சத்தியமங்கலம் என். நாகராஜன்.

FILE
84 வயதாகும் திரு. எஸ்.என், நாகராஜன் பொதுவுடைமை இயக்கதில் நீண்ட காலம் பணியாற்றியவர். கீழை மார்க்சிய சிந்தையாளர். அதுமட்டுமின்றி, ஆழ்வார்களின் தென் கலை வைணவப் பின்னணியும், அதில் மிகுந்த ஈடுபாடும் கொண்டவர். இன்றைக்கு விவசாயத்தையும், சுற்றுச் சூழலையும் காப்பாற்ற தொடர்ந்து பணியாற்றி வருபவர். நமது நாட்டின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் அறிந்த ஒரு சீரிய சிந்தனையாளர்.

இவர் அயோத்தியில் இராமர் பிறந்திருக்க முடியாது என்று வாதிடுகிறார். அவருடைய வாதம் வருமாறு:

“அயோத்தி அரசன் தசரதனின் மனைவியான கோசலை, குசால இராஜ்யத்தின் இளவரசியாவார். இவரை தசரதன் கடத்திச் சென்றோ அல்லது கடி மனமோ (காந்தர்வ விவாஹம்) புரியவில்லை, முறைப்படியே மணம் புரிந்துள்ளார். எனவே, தொன்று தொட்டு இந்நாட்டில் நிலவிவரும் மரபுப் படி, நிறைமாத கர்பினியான ஒரு பெண், தனது தாய் வீட்டிற்குச் சென்று பிள்ளை பெறுவதைப்போல, தசரதனின் மனைவியான கோசலையும் தனது தாய் வீடான (இராஜ்யமான) குசால மன்னன் அரண்மனைக்குச் சென்று அங்குதான் இராமனை பிரசவித்திருக்க முடியும்.

எனவே, அயோத்தியில்தான் இராமன் பிறந்தார் என்பதற்கு அடிப்படையேதுமில்லை. எந்தப் புராணத்திலும் அதற்கான ஆதாரமும் இல்லை.

இரண்டாவதாக, அயோத்தி புண்ணிய பூமியா? என்ற கேள்வியும் உள்ளது. இராவணனின் பிடியில் இருந்து சீதையை காப்பாற்றி வந்த இராமன், அவளுடைய கற்பின் தூய்மையை நிரூபிக்க அக்னி பிரவேசம் செய்ய முற்பட்டபோது, இராமன் தடுக்கவில்லை. சீதை அக்னி பிரவேசத்தை நிறைவேற்றிய இடம் அயோத்தியாகும். இந்த விவரம் வால்மீகி இராமயணத்தில் உள்ளது. அக்னிப் பிரவேசத்தின் போது சீதையை அவளுடைய தாயான பூமிதேவி தன்னுள் எடுத்துக் கொண்டாள் என்று அனைத்துப் புராணங்களும் கூறுகின்றன.

இதில் குறிப்பிடத்தக்கது ரகு வம்சம். காளிதாசர் எழுதிய ரகு வம்சத்தில் அயோத்தி ஒரு புனித தலமாக சித்தரிக்கப்படவில்லை. அதை சீதை மறித்த பூமியாகவே காட்டுகிறார் காளிதாசர். ரகு வம்சத்தில் உத்தர காண்டம் மிக முக்கியமானது. அதில் இந்த விவரம் உள்ளது.

தனது மனைவி சீதை மீது இராமன் சந்தேகம் கொண்ட நிலையிலேயே, சீதையை தனது ஆசிரமத்திற்கு அழைத்துச் செல்கிறார் வால்மீகி. இராமனின் பிள்ளைகளான லவ, குசா இருவரும் வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில்தான் பிறந்தனர். அங்குதான் வளர்ந்தும் வந்தனர். அவர்கள் 6 வயதைக் கடந்த நிலையில் அவர்களை இலக்குவன் அயோத்திக்கு அழைத்து வருகிறார். அப்போது வால்மீகியும் உடன் வருகிறார்.

அப்போது லவ, குசா இருவரும் யாருக்குப் பிறந்தவர்களோ என்ற சந்தேகத்தை ஒருவன் எழுப்ப (வண்ணான் என்று கூறுகின்றனர்), சீதை அக்னி பிரவேசம் செய்ய முற்படுகிறார். அதை இராமன் தடுக்கவில்லை. சீதை அக்னி பிரவேசம் செய்த நிலையில், அவளுடைய தாயான பூமிதேவி சீதையை தன்னோடு அழைத்துக் கொண்டு பூமிக்குள் சென்று விடுகிறாள்.

தங்களது தாய் மறித்த இடத்தில் நாங்கள் வாழ் மாட்டோம் என்று கூறிவிட்டு, லவ, குசா இருவரும் அயோத்தியை விட்டு வெளியேறுகின்றனர். அவர்களோடு அயோத்தி மக்களும் வெளியேறி விடுகின்றனர். அத்துடன் அயோத்தியே காலியாகிவிடுகிறது.

அயோத்தியை விட்டு வெளியேறி, வேறொரு இடத்தில் வாழ்ந்துவந்த குசாவின் கனவில் வரும் அயோத்தியின் தேவதை, “உனது தந்தை ஆண்ட பூமி இன்று வனமாகிவிட்டது. அங்கு புலிகளும் மற்ற கொடிய விலங்குகளும் தான் வாழ்கின்றன. அங்கு நீங்கள் வந்து மீண்டும் அயோத்தியை புனர் நிர்மாணம் செய்யுங்கள” என்று கூறியதா காளிதாசர் எழுதியுள்ளார்.

இந்த விவரத்தை ரகு வம்சத்தில் 13வது சர்க்கத்தில் காளிதாசர் வர்ணிக்கிறார். “அதேதரே சப்த ரகுப்பிரவீராக... என்று தொடங்குகிறது அந்த பாடல்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டப் பிறகு டெல்லியில் தீனதயாள் உபாத்தியாய ஆய்வு மையத்தில் ‘அக்டோபர் புரட்சியும் அதன் விளைவுகளும்’ என்ற தலைப்பில் பாரதிய ஜனதா கட்சி ஏற்பாடு செய்து, ஜே.டி.சேத்தி துவக்கி வைத்த கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு பேசியபோது இதை நான் தெரிவித்தேன். 13வது சர்க்கத்தை அப்படியே அங்கு நான் மனப்பாடமாக ஒப்பித்து விளக்கமும் அளித்தேன். அந்த நிகழ்ச்சியில் பின்னாளில் பிரதமராக வந்த ஐ.கே.குஜ்ரால், நேபாள நாட்டின் இந்திய தூதராக இருந்த பீமல் மிஸ்ரா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.பி.பர்தன், சுப்ரத்தா பானர்ஜி, இமிதியாஸ் அகமது, சுபாஷ் சந்திர போசின் சகோதரர் போஸ், பாரதிய ஜனதா கட்சியின் நானாஜி தேஷ்முக், எம்.எம்.ஜோஷி, கே.ஆர்.மசானி ஆகியோரெல்லாம் இருந்தனர். நான் கூறியதற்கு ஒருவரும் எதிர்க்கருத்து கூறவில்லை.

ரகு வம்சத்தில் உத்தர காண்டத்தில் கூறப்பட்டுள்ள விவரம் இது. ஆனால் கம்ப இராமாயணத்தில் இந்த உத்தரகாண்டம் பகுதியே இருக்காது. அதனை கவி கம்பர் தவிர்த்துவிடுகிறார். ஏனெனில் உத்தரகாண்டத்தைக் கூறினால், சீதை மறித்ததைக் கூற வேண்டும், அது இராமனுக்கு இழுக்காக ஆகுமல்லவா?

மீனவன் குகனோடு ஐவரானோம் என்று கூறியவன் இராமன், ஜடாயுவிற்கு அண்ணனாக நின்று ஈமக் கிரியை செய்தவர் இராமன். சபரியின் எச்சிலை உண்கிறார். அவளைத் தாயாராக பாவிக்கிறார். சுக்ரீவனையும், விபீடனனையும் தம்பிகளாக ஏற்றுக் கொள்கிறார். இப்படிப்பட இராமனுக்கு, உத்தரகாண்டத்தைக் கூறுவதால் பெருமை குறைந்துவிடாதா? எனவே தவிர்த்து விடுகிறார் கம்பர்.

கம்பன் காட்டிய இந்த இராமனைத்தான் தமிழ்நாட்டு மக்கள் வழிபடுகின்றனர். இதனை தமிழும், சமஸ்கிருதமும் அறிந்த ஒரு உபய வேதாந்தியால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். நான் அந்த பாரம்பரியத்தில் வந்தவன். இந்த அறிதலை அத்வானியிடமிருந்தோ அல்லது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரிடமிருந்தோ எதிர்பார்க்க முடியாது” என்று கூறுகிறார் திரு.எஸ்.என். நாகராஜன்.

Tuesday, October 5, 2010

இஸ்லாத்திற்கு எதிரானவரா பெரியார்?



பெரியார் இந்து மதத்திலிருந்து வெளியேறிச் சென்றவர்களை மீண்டும் இந்து மதத்திற்கு கொண்டு வர நினைத்திருந்தார் - இஸ்லாம் குறித்து விமர்சன சிந்தனைகளைக் கொண்டிருந்தார் - அவர் இஸ்லாத்தைப் பாராட்டியதாகக் கூறுவது தவறு என்றெல்லாம் கருத்துப்பட பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, "பெரியாரோடு ஒரு பயணம்' என்ற கருத்தரங்கில் பேசியதை, பேராசிரியர் அ. மார்க்ஸ் மற்றும் சன் டி.வி. வீரபாண்டியன் ஆகியோரிடத்தில் எடுத்துக்காட்டி அவர்களது கருத்தை கேட்டோம். அவர்கள் தெரிவித்த கருத்துக்களை வாசகர்களின் பார்வைக்கு வைக்கிறோம். (-ஆர்)

""நபிகளின் வாழ்க்கையை அறியும்போது, எனக்கு இஸ்லாமிய உணர்வு ஏற்படுகிறது என்றார் பெரியார்''
- - அ. மார்க்ஸ்

கொளத்தூர் மணியா அப்படிச் சொன்னார். நான் நம்பவில்லை. கௌத்தூர் மணி நேர்மையான கருத்துக்களை திரிக் காமல் பேசக் கூடியவர் என்றே நான் நம்பு கிறேன். இந்தப் பேச்சை பதிவு செய்திருக் கிறீர்களா? என்பதையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் நீங்கள் தவறாக சொல்வதற்கான வாய்ப்புகளும் உண்டு. இருந்த போதிலும் இப்படித்தான் அவர் சொன்னார் என்று நீங்கள் சொல்வீர்களானால் அதற்கான நான் பெரிதும் வருந்துகிறேன்.
பெரியார் குறித்து ஒரு தவறான நம்பிக்கை ஏற்படுத்த மணி முயற்சிப்பது வருந்தத்தக்கது. பெரியார் மிகத் தெளிவாக இஸ்லாம் குறித்து பேசியிருக்கிறார். எல்லா மதங்களையும் ஒழிக்க மாநாடு போடும் நீங்கள், இஸ்லாத்தை மட்டும் ஆதரிப்பது ஏன் என்று கேட்கப்பட்ட கேள் விக்கு, ""எல்லா மதங்களும் ஒழிக்கப்பட வேண்டியதுதான். ஆனால் ஏதாவது ஒரு மதம் இருக்க வேண்டுமானால் அது இஸ்லாமாகத் தான் இருக்க வேண்டும் என்று பதில் சொன் னவர் பெரியார். ஆனால் அவர் இந்து மதத்தை விட்டு வெளியே போனவர்களை இந்து மதத் திற்கு கொண்டு வர நினைத்திருந்ததாகச் சொல் வது வேதனை மட்டுமல்ல வியப்பாகவும் இருக்கிறது.
அதற்கான உரிய ஆதாரங்களை மணி தர வேண்டும். பெரியார் இஸ்லாத்தை தீண்டத் தகாதவர்களுக்கு மட்டும்தான் பரிந்துரைந்தார் என்று சொல்வதும் விஷமத்தனமானது. பெரி யாரிடம் எல்லோரையும் இஸ்லாத்திற்கு வரச் சொல்லும் நீங்கள் ஏன் இஸ்லாத்திற்கு வரவில்லை என்று கேட்டபோது, ""இஸ்லாத்தில் இல்லாமல் இருந்தால்தான் நான் இந்து மதத்திற்கு எதிராக விமர்சிக்க முடியும்'' என்று பதில் சொன்னவர் அவர்.
அது மாத்திரமல்ல, இஸ்லாமிய நம்பிக்கைக ளில் ஒன்றான நபிகள் நாயகம் தான் இறுதி இறைத் தூதர் என்கிற கருத்தையும் ஏற்றுக் கொண்டவர் பெரியார். அவருக்குப் பின் அந்தத் துறையில் யாரும் இல்லாததனால் அவர் இறுதித் தூதர் என்கிற கருத்து என்று சொன்னார். அது போலவே ஹஜ் யாத்திரை போவதைக் கூட அவர் ஏற்றுக் கொண்டு பேசியிருக்கிறார். இந்து மதத் தைப் போல எல்லாப் பாவங்களையும் செய்து விட்டு, கோவில் குளத்திற்குப் போய் குளித்தால் போதும் என்கிற அர்த்தத்தில் ஹஜ் யாத்திரை செய்யப்படுவதில்லை. அது ஒரு மதக் கடமையாக நபிகள் தோன்றிய இடத்திற்கு சென்று வருதல் என்கிற பொருளில் மேற்கொள்ளப்படுகிறது என விளக்கம் அளித்தார்.

எனவே இஸ்லாம் குறித்து பெரியார் தொடர்ச் சியாகப் பாராட்டும் வகையிலேயே பேசியிருக் கிறார். அது மாத்திரமல்ல, கிறிஸ்தவ மதத்திற்கு மாறுவது என்கிற கருத்து வந்தபோது கிறிஸ்தவ மத்திலும் சாதி உள்ளது. இஸ்லாத்திற்கு மாறு வதே சிறந்தது என்றும் அவர் மொழிந்துள்ளார்.

அம்பேத்கர் புத்த மதத்திற்குச் செல்வது என்கிற முடிவெடுத்தபோது கூட இஸ்லாத்திற்குச் செல்வது சிறந்தது என்கிற கருத்தை பெரியார் கூறியுள்ளார்.

இஸ்லாத்தை அவர் விமர்சித்தது என்பது இன்று உண்மையான முஸ்லிம்கள் எல்லோரும்
விமர்சிக்கக் கூடிய அம்சங்களைத்தான் எடுத்துக் காட்டாக தர்காவை வணங்குவது, கந்தூரி விழா எடுப்பது, பேய் பிசாசு ஓட்டுவது முதலான மூட நம்பிக்கைகள் இஸ்லாத்தில் புகுந்திருப்பதைத் தான் அவர் விமர்சித்தார். இவை தவிர நான் அறிந் தவரை இஸ்லாத்தில் அவர் விமர்சித்திருப்பது பெண்களுக்கு ஹிஜாப் என்னும் முகத்திரை போடுகிற அம்சத்தைத்தான் அவர் கண்டித்தார்.
எனவே பெரியார் இஸ்லாத்திற்கு எதிரானவர் என்று சித்தரிப்பது அடிப்படையில் பெரியாரை புரிந்து கொள்ளாத ஒன்றாகும். அது மாத்திர மல்லாமல் சமீபத்தில் வந்த ஆணைமுத்து தொகுதிகளில் பெரி யார் ஓரிடத்தில், ""நபிகளின் வாழ்க் கையை அறியும் போது, எனக்கு இஸ் லாமிய உணர்வு ஏற்படுகிறது'' என்கிற பொருள்பட குறிப்பிட்டுள்ளார். பெரியார் இருந்த வரைக்கும் எந்த அம்சங்களிலும் அவர் இந்துத்து வாவாதிகளுடன் சமரசம் செய்து கொண்டதில்லை. ஆனால் சமீபத்தில் முல்லைப் பெரி யார் அணை விஷய மாக சாலை மறியல் போராட்டம் நடந்தபோது, இந்து முன்னணி அமைப்பு, பெரியார் திராவிடர் கழ கம் ஒன்றாக இணைந்து போராட்டம் நடத்தியது இங்கே குறிப்பிடத்தக்கது.
இது போன்ற நிலையில் நான் பெரிதும் மதிக்கும் மணி, இவ்வாறு பேசியிருப்பது எனக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களை உறுதி செய்கிறது.

ஆனாலும் இப்போதும் கூட மணி அப்படி பேசியிருக்க மாட்டார் என்றே கருதுகிறேன். பெரியார் கடைசி பல ஆண்டுகள் பொது மேடைகளில் கைலியுடன் தோன்றி னார் என்பதைக் கூட நான் இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். அதை வெறும் உடல் நோயின் விளைவு என்று நான் கருதவில்லை. எத்தனை அரசியல்வாதிகள் இப்படி யான ஒரு நிலையில் கைலியுடன் பொது மேடைகளில் தோன்றக் கூடியவர்களாக இருப்பார்கள்?

தயவு செய்து நீங்கள் மணியிடம் இன்னொரு முறை இப்படித்தான் பேசினீர்களா என்று கேட்டுப் பாருங் கள். அவர் இல்லை என்று சொன் னால் நான் மகிழ்வேன். அவர் மீதுள்ள மரியாதைகளை நான் தக்க வைத்துக் கொள்வேன்.

""இஸ்லாம் மார்க்கம் உங்களுக்கு ஒரு வழிமுறையாக இருக்கும் என்றார் பெரியார்''
- வீரபாண்டியன்

இஸ்லாம் குறித்து பெரியாரின் கருத்துக்களை பெரியாரியவாதிகள் இருட் டடிப்புச் செய்ய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. இஸ்லாம் என்பது தாழ்த் தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, தீண்டப்படாமல் கிடந்த மக்களுக்கான ஒரு மாற்ற மருந்து என்கிற கருத்தை பெரியார் கொண்டிருந்தார். அதே வேளையில் மதம் மாறுவது பற்றி அம்பேத்கர் ஆலோசனை கேட்டபோது, ""நீங்கள் போய் புத்த மதத்தில் சேருங்கள், நீங்கள் முடிவு செய்து விட்ட விஷயத்தில் நான் தலை யிட விரும்பவில்லை. ஆனால் சாதாரண மாய் போகதீர்கள். கூட்டம் கூட்டமாகப் போனால்தான் உங்களை அங்கே மதிப் பார்கள். பெரும் கூட்டத்தை திரட்டிக் கொண்டு செல்லுங்கள். ஆனால் அதே வேளையில், நான் பிறந்த - நான் வாழ்ந்து கொண்டிருக்கிற மதத்தில் இருக்கிற பிரச்சனை களை சரி செய்வதற்காக இந்த மதத்திற்குள்ளேயே இருக்க வேண்டும். வெளியில் போனால் அதைப் பற்றி விமர்சனம் செய்யும் உரி மையை நான் இழந்து விடுவேன். அதனால் கடைசி வரையில் இங்கேயே இருந்து உள்ளிருப்புப் போராட் டம்தான் நடத்துவேன். இங்கி ருந்து கொண்டு தான் இவர்களிடத்தில் சண்டை செய்வேனே தவிர மதம் மாற மாட்டேன்'' என்று சொன்னார்.
அதே நேரத்தில், இந்து மதத்தின் பிற்போக் குத் தனங்கள், இங்கிருக்கிற தீண்டாமைக் கொடுமை, ஏற்றத் தாழ்வுகள் இவற்றிலிருந்து விடுபடுவதற்காக - தீண்டத்தகாதவர்கள் சேரிகளில் ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களுக்கு வடிகாலாக, ""நீங்கள் இஸ்லாத்திற்குப் போங்கள். அங்கு ஏற்றத்தாழ்வுகள் இல்லை. சாதிப் பிரிவுகள் இல்லை. அந்த மார்க்கத் தைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். உங்களுக்கு அது ஒரு வழி முறையாக இருக்கும்'' என்று அவர்க ளுக்கு அவர் பரிந்துரை செய்தார்.

ஆனால், எல்லா மக்களையும் மதம் மாற்றுவது, மதத்திற்கு மாறிப் போவது என்கிறபோது தான் மாறத் தேவையில்லை என்றும் பெரியார் சொன்னார். எனவே பெரியாரிய வாதி இஸ்லாம் குறித்து பெரியார் சொன்ன கருத்துக்களை இருட்ட டிப்புச் செய்யத் தேவையில்லை. ஒரு வேளை பேராசிரியர் பெரியார் தாசன் அவர்கள் அண்மையில் இஸ் லாத்திற்கு மாறிப் போனதைப் பற்றி திராவிட இயக்கப் பத்திரிகைகளில் கடுமையான விமர்சனங்கள் வந்ததை நான் படித்தேன். அவர் மாறிப் போனது ஒரு பெரியாரியவாதி, ஒரு பகுத்தறிவாளர் என்று சொன்ன நாத்திகவாதி. அப்படி இஸ்லாத் திற்கு மாறிப் போகிறாரே என்கிற கோபத்தில் திராவிட இயக்கப் பத்தி ரிகைகள் கடும் விமர்சனம் செய்ததை நான் பார்த்தேன். அந்த அடிப்படை யில் அவர்கள் இது போன்ற கருத் துக்களை சொல்லியிருக்கலாம்.

அதே நேரத்தில் இஸ்லாம் என் பது உட்பிரிவுகள் ஏதுமில்லா மல், மனிதர்களை சாதிப் பிரிவுகள் ஆக்கி விட்டு, பேதப்படுத்துகிற வேலை யைச் செய்வதில்லை. அங்கே சமத் துவம் இருக்கிறது என்கிற பெரியா ரின் கருத்திலிருந்து பெரியாரியவாதி கள் மாறுபடவும் வாய்ப் பில்லை.
பெரியாரியவாதிகள் எனப்படு வோர் உயர்சாதி மேலாண்மையை, உயர்சாதிக்காரர்களின் கொடுமை களை எதிர்த்துப் போராடுவதில் பின்வாங்குகிறவர்கள் அல்ல. அதே நேரத்தில் அவர்கள் எந்த மதத்திற் காகவும் பிரச்சாரம் செய்ய மாட் டார்கள். மதம் என்பது மனிதர் களுக்கு "அபின்' என்கிற கருத்துக் கொண்டவர்கள் தான் அவர்கள். அதுதான் அவர்களின் கருத்தாக்கம். பல சமூகப் பிரச்சனைகள் வருகிற போது, உதாரணமாக பாபர் மஸ் ஜித் இடிப்பு, கோத்ரா ரயில் எரிப்பு போன்ற பிரச்சனைகளின் போது இஸ்லாமியச் சகோதரர்க ளோடு அவர்கள் கைகோர்த்து நின்றதை நாடு பார்த்தது. பிரச்சனை என்றால் அவர்கள் வருவார்களே தவிர மதப் பிரச்சாரத்தில் அவர்கள் ஈடுபடுவ தில்லை. இதுதான் அவர்க ளின் நிலைப்பாடு என்று நான் புரிந்து கொள்கிறேன்.

Sunday, October 3, 2010

இந்திய மக்கள் அனைவரும் சட்டத்தின் முன் சமம் அல்ல -- பாபர் மசூதி தீர்ப்பு

1. இராமன் இந்தியாவில் நம்பப்படும் ஆயிரக்கணக்கான சாமிகளில் ஒருவன். ஆனாலும், இராமனே முதன்மையான நாயகன் என்பதுபோல பிற்காலத்தில் நம்பவைக்கப்பட்டான். (இந்தியவின் பெரும்பான்மை மக்களுக்கு இன்றும் இராமன் ஒரு முதன்மை தெய்வம் அல்ல).

2. அயோத்தி இராமர் கோவிலை இசுலாமிய மன்னர்கள் எவரும் இடிக்கவில்லை. இராமர் கோவில் இடிக்கப்பட்டதாகக் கூறப்படும் காலத்தில் வாழ்ந்தவர் துளசி தாசர். அவர் எழுதிய ஆவாதி மொழி இராமாயணத்தில் - கோவில் இடிக்கப்பட்டது பற்றி எந்த குறிப்பும் இல்லை.

3. குறிப்பிட்ட அந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்பது இந்துத்வ சங்கப்பரிவாரம் உருவாக்கிய ஒரு கட்டுக்கதை. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

4. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மதச்சண்டையை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் இசுலாமிய மன்னர்கள் இந்துக்கோவிலை இடித்ததாக கட்டுக்கதைகளை பரப்பினர். அதனை பின்னர் இந்துத்வ தீவிரவாதிகளும் பயன்படுத்தி வருகின்றனர். (ஒருமன்னன் மற்றொரு நாட்டின்மீது படையெடுக்கும்போது அங்குள்ள கோவில்களை இடிப்பதோ, எரிப்பதோ, கொள்ளையடிப்பதோ வழக்கம். இதனை பல இந்து மன்னர்களும் செய்துள்ளனர்.)

எனினும், பாபரின் வரலாற்றைக் கூறும் ‘பாபரிநாமா’ ஏன்ற அரிய வரலாற்று நூலில் அவர் இந்துக் கோவில்களை இடித்ததாகச் செய்திகளோ, குறிப்புகளோ இல்லை. அதே நூலில் கி.பி 11.01.1527 அன்று தனது புதல்வர் ஹூமாயூனுக்கு விட்டுச் சென்ற புகழ்பெற்ற உயிலில் பாபர் பின்வருமாறு கூறுகிறார் :

‘‘அருமை மகனே! வகை வகையான மதங்களைப் பின்பற்றுபவர்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள். இத்தகைய நாட்டின் அரசாட்சியை மன்னாதி மன்னராம் கடவுள் உன்னிடம் ஒப்படைத்ததற்கு நீ நன்றி செலுத்த வேண்டும். ஆகவே நீ பின்வருவனவற்றைக் கடமைகளாக அமைத்துக் கொள்”

“நீ உனது மனதைக் குறுகிய மத உணர்வுகள், தப்பெண்ணங்கள் பாதிக்க அனுமதிக்கக் கூடாது. மக்களின் எல்லா பிரிவினர்களும் பின்பற்றுகின்ற மதசம்பந்தமான மென்மையான உணர்ச்சிகளுக்கும் மதப்பழக்கங்களுக்கும் நீ உரிய மதிப்புக் கொடுத்து பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க வேண்டும்.”

“நீ மற்ற சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்களை ஒரு போதும் இடித்துச் சேதப்படுத்தக் கூடாது. நீ எப்போதும் நியாயத்தை நேசிப்பவனாக விளங்க வேண்டும். இதனால் மன்னருக்கும் மக்களுக்குமிடையே சுமுகமான இனிய உறவு நிலவ முடியும். அப்போதுதான் அமைதியும் திருப்தி உணர்வும் நிலைபெறும்.”

5. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பாபர் மசூதிக்குள் 1949 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ராம் லல்லா சிலைகள் சட்டவிரோதமான முறையில் வைக்கப்பட்டன. இந்த அநீதியான செயலை இந்திய அரசு தடுக்கத்தவறியது மட்டுமின்றி, திருட்டுத்தனமாக வைக்கப்பட்ட சிலைகளை அப்புறப்படுத்தவும் தவறிவிட்டது.

6. ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதக் கூட்டத்தின் திட்டமிட்ட சதிச்செயலால், 1992 டிசம்பர் 6 அன்று, இந்திய அரசின் பாதுகாப்பில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

7. அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த அலகாபாத் நீதிமன்றம் - அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரான இந்துத்வ பயங்கரவாதிகளின் அநீதியான செயல்களை அங்கீகரித்துள்ளது.

படிப்பினை: இந்திய மக்கள் அனைவரும் சட்டத்தின் முன் சமம் அல்ல.

ஒரு குற்றச்செயல் தண்டனைக்குறியதா அல்லது போற்றுதலுக்குறியதா என்பது குற்றமிழைப்பவர் சார்ந்திருக்கும் சாதி, மதத்தைப் பொறுத்தது.

தேங்க்ஸ் டு : பசுமை பக்கங்கள்...

கருப்பு கோட் எதற்கு , காவி உடை போதுமே





பாபர் மசூதி பற்றி தீர்ப்பு வந்துள்ளது பா ஜா கா மற்றும் இந்து முண்ணனியினர் மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள் ,தீர்ப்பின் சாராம்சம் இந்து மதத்தினுடைய நம்பிக்கை , அதாவது ராமர் கோவில் அங்கு இருந்தது என்று ஒருநம்பிக்கையாம் அதனால் இந்துக்களுக்கும் நிலத்தை பகிர்ந்து கொடுக்கிறார்களாம் . சில கேள்விகள்

1 வெறும் நம்பிக்கை மட்டுமே ஆதாரமாய் இருக்கும் பட்சத்தில் , இப்பொழுது இருக்கும் ஒரு ஹிந்து கோவில் இடிக்கப்பட்டு இங்கு ஒரு கிருத்துவ சர்ச் இருந்தது என்றால் நீதிமன்றம் , கிறுத்துவர்களுக்கு நிலத்தை பாதியாய் தந்து விடுமா ??????
2 நம்பிக்கை மட்டுமே தீர்ப்பின் சார்மசமாய் இருக்கும் பட்சத்தில் , சட்ட மன்றம் இருக்கும் இடத்தில் என் மதத்தினுடைய கோவில் இருந்தது என்று அதை இடித்தால் நீதிமன்றம் , மற்றும் கரசேவகர்கள் ஒத்துக்கொள்வார்களா ?????3 மசூதியை இடித்ததற்கு வீடியோ ஆதாரம் முதல் இருக்கும் பொழுது அதை எல்லாம் ஒரு பொருட்டாய் கருதாமல் அங்கு முன்பே ராமர் கோவில் இருந்தது என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம் ????? 4 அப்படி பார்க்கும் பொழுது ஒவொவொரு இடமுமே 10000 வருடங்களுக்கு முன்பு வேறு போல் இருக்கும் அதற்க்கு
ஏற்றார் போல் அனைத்து தீர்ப்பும் எழுதப்படுவது எவ்வளவு முட்டாள் தனம் .
5 ராமர் இருப்பது உண்மை என்றால் சேது சமுத்திர திட்டம் போன்ற திட்டங்கள் அம்பேலா ???????
6 கோவிலை இடித்து கட்டியதால் அது மசூதியே அல்ல என்கிறார்களே , கோவிலை இடித்ததற்கு ஆதாரம் உண்டா ?????
பார்ப்பனர்கள் கடல் கடந்து போகக்கூடாது என்று வேதம் சொல்கிறது , இன்று US போன்ற வெளிநாடுகளில் இருப்பது
பார்ப்பனர்களே , அதற்காக அவர்கள் பார்ப்பனர் இல்லை என்று ஒத்துக்கொள்வார்களா ?????
7 நான் ஒரு வீடை இடித்து விட்டு , முன்பு ஒரு காலத்தில் அது என் தாத்தாவின் வீடு அங்கே அவர் படம் எல்லாம் இருக்கிறது என்று சொன்னால் நீதி ஏற்றுக்கொள்ளுமா ???
8 வருணாசிரமம் தூக்கிப்பிடிப்பதை போல் உள்ளதே நீதி இதற்க்கு எதற்கு நீதி மன்றம் , கருப்பு கோட் எதற்கு , காவி உடை
போதுமே ...................................??????

தேங்க்ஸ் டு : வெண்ணிற இரவுகள்....!

Saturday, October 2, 2010

வரலாற்று ஆவணங்களின் அடிப்படையில் அணுகாமல் ஒருதலைப்பட்சமாக வழங்கப்பட்ட தீர்ப்பு!

அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு:

வரலாற்று ஆவணங்களின்
அடிப்படையில் அணுகாமல்
ஒருதலைப்பட்சமாக வழங்கப்பட்ட தீர்ப்பு!

தொல். திருமாவளவன் அறிக்கை!


அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்னும் வகையில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஒருதலைப்பட்சமானது. அநீதியானது. இத்தகைய தீர்ப்புகளால் நாட்டில் நல்லிணக்கமும் சகோதரத்துவமும் சீர்குலைந்து அமைதியின்மை ஏற்படவே அதிகம் வாய்ப்பிருக்கிறது.

பாபர் மசூதி இடம் முஸ்லிம்களுக்குச் சொந்தமானதா இல்லையா என்பதுதான் பிரச்சனையின் அடிப்படை. அந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் பெரிய பொறுப்பிலுள்ள நீதிமன்றம், அதைச் சொத்து ஆதாரங்களின் அடிப்படையிலும் அனுபவப் பாத்தியதையின் அடிப்படையிலும் அணுகாமல், ஒரு சொத்து யாருக்குச் சொந்தம் என்பதைத் தீர்மானிக்கச் சட்டம் கூறுகிற வழிமுறைகளைப் புறந்தள்ளிவிட்டு, தீர்ப்பு வழங்கியிருப்பது கண்டனத்துக்குரியது.


450 ஆண்டுகாலமாக அயோத்தியில் பாபர் மசூதி இருந்ததும், அங்கே முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்ததும், 1949இல் அங்கே வலுக்கட்டாயமாக ராமர் சிலைகளை உள்ளே நிறுவி, அதைக் காரணம் காட்டி மசூதியை இழுத்து மூடியதும், 1992இல் இந்துத்துவச் சக்திகள் பாபர் மசூதியை இடித்துத் தகர்த்ததும் நம் கண்முன்னே நடைபெற்ற வரலாற்று நிகழ்வுகள். ஆனால், ராமர் அயோத்தியில்தான் பிறந்தார் என்பதற்கான வரலாற்று ஆதாரமோ ஆவணமோ எதுவும் இல்லை என்பதும் ராமர் ஒரு புராண நாயகன்தான் என்பதும் ஒரு சாதாரண பாமரனுக்குக்கூடப் புரியும். இது இரண்டு நீதிபதிகளுக்குப் புரியாமல் போனது வியப்பளிக்கிறது. மேற்படி உண்மைகளை மூன்றாவது நீதிபதி தனது தீர்ப்பில் சொல்லியும், பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பு என்கிற அடிப்படையில் அது மூடி மறைக்கப்படுகிறது.

அயோத்தி நில வழக்கை ஆதாரங்களின் அடிப்படையில் அணுகி தீர்ப்பு வழங்காமல், 60 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்.சும், அத்வானியும், மோடியும், சோவும் என்ன சொல்லி வந்தார்களோ அதையே ஒரு வரி விடாமல் தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாகவே கருதவேண்டியுள்ளது. பாபர் மசூதியை இடித்துத் தகர்த்த அத்வானி உள்ளிட்ட இந்துத்துவச் சக்திகளின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களைச் சுதந்திரமாக உலவவிட்டுள்ள நீதிமன்றமும் சட்டமும், இப்போது மசூதியையும் கபளீகரம் செய்து இந்துத்துவச் சக்திகளிடம் ஒப்படைக்கத் துணிந்திருப்பது மிகப்பெரும் மோடியாகும். ஏற்கனவே நம்பிக்கை இழுந்து விரக்தியில் வாழும் இசுலாமிய மக்களுக்கு இது மேலும் ஆத்திரமூட்டும் செயலாகும்.

இத்தகைய ஒரு நெருக்கடியான சூழலில், அநீதி இழைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் பக்கம் நின்று அவர்களின் உரிமையை மீட்கப் போராடுவது சனநாயகச் சக்திகளின் கடமை என விடுதலைச் சிறுத்தைகள் கருதுகின்றது. பாபர் மசூதி இருந்த இடத்தில் திரும்பவும் மசூதியைக் கட்டித் தருவோம் என்று காங்கிரசு அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வரை போராடுவோம் என்று மதச்சார்பற்ற சனநாயகச் சக்திகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் அறைகூவல் விடுக்கிறது.

இவண்

(தொல். திருமாவளவன்)

அயோத்தி விவகாரம் - அற்புதமான கட்டப்பஞ்சாயத்து

கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவை இம்சித்துக் கொண்டிருந்த ஒரு பிரச்சனைக்கு சரியான தீர்ப்பினை வழங்கிவிட்டார்கள் நீதியரசர்கள். இந்தியாவின் ஜனநாயகம் காக்கப்பட்டு விட்டது, சமநிலையான தீர்ப்பு என அரசியல் தலைவர்கள் பலரும் தங்களின் கருத்தினை சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்கள். இது போன்ற தீர்ப்பினை இதுவரையிலே இந்திய நீதிமன்றங்கள் அளித்தது இல்லை என்றால் தான் இந்த தீர்ப்பு குறித்து நாம் ஆச்சரியப்படவேண்டும். ஆனால் வழக்கமாக வரும் அடிப்படையிலே இந்த தீர்ப்பும் அமைந்திருப்பது தான் வருத்தப் படவைக்கிறது. இனிமேல் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் மசூதிகளை இடிக்கலாம். அந்த வழக்கும் நீதிமன்றத்திடம் செல்லும். ஏம்பா ரெண்டு பேரும் அடிச்சிக்கிறீங்க? இந்தாங்க ஆளுக்குப் பாதியா பிரிச்சிக்கிங்க. அதுவும் இடித்தவர்களுக்கு முக்கிய இடங்களாகப் பிரித்து விட்டு இடிபட்டவனுக்கு கக்கூஸ் இருந்த இடம் மற்றும் காம்பவுண்ட் இருந்த இடங்களை ஒதுக்கிக் கொடுங்கள் என இனிமேல் இந்தியாவில் இருக்கும் அனைத்து நீதிமன்றங்களிலும் தீர்ப்புகள் வெளியாகலாம்.


அதிலும் நீதிபதிகளில் முக்கியமானவரான நீதியரசர் டிவி.சர்மா கீழ்க்கண்டவாறு அறிவிக்கிறார்,.

* சர்ச்சைக்குரிய இடம் இராமர் பிறந்த இடம் தான்
* அங்கு பாபரால் கட்டிடம் எழுப்பப்பட்டது
* அது எந்த வருடம் என்பது தெரியவில்லை. ஆனால் அது இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு முரணாக இருந்தது. மசூதிக்கு உரிய அம்சங்களே அதில் இல்லை. எனவே அதை மசூதியாக கருதமுடியாது.ஏற்கனவே இருந்த பழமையான கட்டிடத்தை இடித்து விட்டுத்தான் இந்த கட்டிடம் கட்டப்பட்டு இருக்கிறது..

என தன் கருத்தினைச் சொல்லி இருக்கிறார். இந்தியாவின் மத நல்லிணக்கத்திற்கு வேட்டு வைத்து தங்களின் அரசியல் வெறியை தீர்த்துக் கொண்ட ஒரு கூட்டத்தினருக்கு மேலும் வலுசேர்க்கும் இந்த தீர்ப்பு.



அடித்தவனுக்கு 100 ரூபாய் அபராதமும், அடிவாங்கியவனுக்கு 200 ரூபாய் அபராதமும் இனிமேல் நீதிமன்றங்களில் விதிக்கப்படலாம். சட்டம் ஒரு இருட்டறை என அன்றைக்கே அறிஞர் அண்ணா சொல்லிவிட்டார். இந்த தீர்ர்பு குறித்து திராவிடர் கழகத்தலைவர் அய்யா கி.வீரமணி அவர்கள் கீழ்க்கண்டவாறு தெரிவித்து இருப்பது கொஞ்சம் நமக்கு ஆறுதலை தருகிறது.

சட்டக் கோர்ட்டா? நம்பிக்கைக் கோர்ட்டா?

புராண கால கற்பனைகளுக்கும், இதிகாச கால நம்பிக்கைகளுக்கும் மதப் பூச்சு பூசப்பட்டதாலேயே வெறும் நம்பிக்கை அடிப்படையில் ராமர் அங்குதான் பிறந்தார் என்றெல்லாம் இதுபோன்ற தீர்ப்புகளில் எழுதப்படுவது, நீதிமன்றங்களை - சட்ட கோர்ட்டுகள் (Courts of Law) என்பதற்குப் பதிலாக, நம்பிக்கை கோர்ட்டுகளாக (Courts of belief and Faith) ஆக்குவதாக அமைந்துள்ளது. இதன் தீய விளைவு நிகழ்காலத்தில் மட்டுமல்ல, வருங்காலத்திலும் நியாய விரோத தீர்ப்புகள், புற்றீசல்கள்போல் கிளம்ப வழிவகுத்து விடும்.







இது போன்ற வார்த்தைகளிலேயே நடுநிலையாளர்கள் இந்த தீர்ப்பினை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம். இதுபோன்ற தீர்ப்புகள், மக்கள் கடைசி கடைசியாக நம்பி வரும் நீதிமன்றங்களின் மீது ஒரு நம்பிக்கையின்மையையே ஏற்படுத்துகிறது. நீதியரசர் சொல்வதைப் போல அந்தக் கட்டிடம் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரானது அல்ல. ஆனால் முழுக்க முழுக்க இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிராக ஆக்ராவில் கட்டப்பட்டிருக்கும் தாஜ்மஹாலை மட்டும் ஏன் தொல்லியல் துறை, சுற்றுலா துறை பாதுகாக்கிறது என தெரியவில்லை.





இதை எப்படி சமநீதியான தீர்ப்பு என ஏற்றுக் கொள்ள முடியும்? உதாரணமாக‌

ஒரு கிராமத்தில் "A" என்பவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரீடத்திலே வீடு கட்டி வாழ்ந்து வருகிறார் என வைத்துக்கொள்வோம். ஒரு நாள் அந்த வீட்டுக்குள் நள்ளிரவில் புகுந்த "B" அங்கே தன் பண்டபாத்திரங்களை வைத்துவிட்டு இது என் வீடு என்கிறார். வழக்கு நாட்டாமையிடம் போகிறது. வழக்கை மிகவும் நேர்மையாக விசாரித்த நாட்டாமை, அப்படியா சங்கதி!! வீடு யாருக்கும் இல்லை, இழுத்துப் பூட்டு என்கிறார். வீடு இழுத்துப் பூட்டப்படுகிறது. இந்த நிலையில் "C" என்பவர் இந்த நிலம் என் தாத்தா காலத்து பூர்வீகம், எனவே நான் தான் அதற்கு உரிமையாளர் என சொல்கிறார்.அ தையும் நாட்டாமை ஏற்றுக்கொள்கிறார். ஒருநாள் "B" பஞ்சாயத்தில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்கிறார்.அதாவது என்னுடைய பாத்திரங்களை நான் கழுவி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் அது துருபிடித்து விடும் என கேட்கிறார். அப்படியா அப்படியானால் நீ ஜன்னல் வழியாக திறந்து அதை செய்து கொள் என்கிறார் நாட்டாமை.

உடனே அந்த வீட்டின் உரிமையாளர் "A" நாட்டாமையிம் அவருக்கு மட்டும் ஜன்னலை திறந்து விடுவது மாதிரி எனக்கும் கொஞ்சம் கதவைத் திறந்து விட்டா நான் அந்த வீட்டுக்கு ஒட்டடை அடித்துக் கொள்வேனே என கேட்க, அதெல்லாம் முடியாது வழக்கு பஞ்சாயத்துல இருக்கு என்கிறார் நாட்டாமை. கொஞ்ச நாளில் "B" தன் ஆட்களை அழைத்து வந்து அந்த வீட்டை இடித்து தரைமட்டமாக்குகிறார். செய்வதறியாத "A" நாட்டாமையிடம் முறையிட அவரை தேடி அலைகிறார். ஆனால் வீடு இடிக்கப்படும் வரை நாட்டாமை தலைமறைவாகி விடுகிறார். சரி வீடு போனா போகட்டும் அந்த நிலமாவது மிஞ்சுமே என மீண்டும் நாட்டாமையை தேட அப்போதும் அவர் கிடைக்கவில்லை. அதற்குள்ளாக "B" தன் பாத்திரங்களை வைப்பதற்கு ஏற்ப ஒரு தற்காலிகமாக கொட்டகை அமைத்துக் கொள்கிறார்.


இப்போது மீண்டும் வழக்கு நாட்டாமையிடம் வருகிறது. இப்போது நாட்டாமை சொல்கிறார், கொஞ்ச நாள் ஆறப்போட்டு அப்புறமா பாத்துக்கலாம் என்று. நீண்ட நாள் குறித்து தன்னுடைய கட்டப்பஞ்சாயத்தைக் கூட்டி நாட்டாமை ஒரு அழகான தீர்ப்பினைச் சொல்கிறார். அதாவது "A" இருந்தது வீடே அல்ல. அது ஒரு பேய் பங்களா. ஆனாலும் அவருக்கு உரிமை உண்டு. "B" தான் இப்போது அந்த இடத்தை பராமரித்து வருகிறார். எனவே அதிலே அவருக்கும் உரிமை உண்டு. இது "C" யின் தாத்தா காலத்து நிலமாம். எனவே அவருக்கும் அதிலே உரிமை உண்டு. ஆக இதை மூன்றாக பிரித்து "B" பாத்திரம் வைத்திருக்கும் முக்கிய இடமான ஹால் மற்றும் அறைகளை அவருக்கும், தாத்தா காலத்து வாரிசுதாரரான "C"க்கு ஹால் மற்றும் முற்றப்பகுதிகளும், ஆதாரமேயில்லா விட்டாலும் போனா போவுது "A" க்கு மாட்டுக்கொட்டகை மற்றும் காம்பவுண்டு சுவர் பகுதியும், அதிலும் மூன்றாக‌ பிரிக்கும் போது இடம் போறாவிட்டால் "A"க்கு அவர் வீட்டு வாசலில் கொஞ்சமாக கிடக்கும் ஏரிப்புறம் போக்கையும் சேர்த்து அவர் கணக்கை செட்டில் செய்ய தீர்ப்பளிக்கிறேன் என ஒரு சாதாரண கட்டப்பஞ்சாயத்து கிராமத்து நாட்டாமை சொன்னா நாமெல்லாம் ஏற்றுக் கொள்வோமா?

இதுபோன்றவற்றையெல்லாம் பார்க்கக் கூடாது என்று தானோ என்னவோ நீதி தேவதை தன் கண்களைக் கட்டிக் கொண்டிருக்கிறாள் போலும். ஆனாலும் இன்னமும் நீதியின் கண்கள் மங்கிவிடவில்லை. தூரத்தில் இருக்கும் உச்ச நீதிமன்றத்தை நோக்கி மேல் முறையீடு செய்யப்படுகிறது.அதிலாவது சரியான நீதி கிடைக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

உச்ச நிதிமன்றத்தின் தீர்ப்பு எப்படி வந்தாலும் அதை ஏற்றுக் கொண்டு தான் ஆகவேண்டும். காரணம் நாம் வாழும் நாட்டின் இறையான்மைக்கு எந்த வகையிலும் உலக அரங்கில் குந்தகம் வந்துவிடக் கூடாது. உலக அரங்கில் ஜார்ஜ் புஷ் மற்றும் ராஜபக்சே போன்றவர்கள் குற்றவாளிகளாக கைகட்டி நிற்கும் நிலை நம் நாட்டுக்கும் வந்து விடக்கூடாது. எனவே மேல்முறையீட்டுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர் நோக்க வேண்டும். அதுவும் இப்படியே வந்தால் நாம் மனம் உவந்து நமக்கென வழங்கப்பட்ட இடத்தையும் கோவிலுக்காக கொடுத்து விட்டு ஒதுங்கி விடவேண்டும். சகோதரத்துவமான இந்தியாவின் நிலையை சீர்குலைக்க சதி செய்யும் சண்டாளர்களின் சூழ்ச்சிகளில் இனியும் சிக்கி யாரும் பலியாகிட வேண்டாம். பொருமையே சிறந்த ஆயுதம். இறைவன் பொருமையாளர்களுடன் இருக்கிறான்.

நிஜாம்