ஏன் சிறுபான்மையான பார்ப்பனர்கள் நடுத்தரவர்க்கமாகவும், பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியினர் ஏழைகளாகவும் இருக்கின்றனர்? ஏன் சிறு அளவில் கூட பார்ப்பனர்கள் விவசாயிகளாக இல்லை? ஏன் பார்ப்பனர்களும், முதலியார்களும், செட்டியார்களும், வெள்ளாளக் கவுண்டர்களும் தங்களை உயர்ந்த சாதி என்று இன்னமும் கருதுகிறார்கள்? ஏன் பெரும்பான்மையான தலித் மக்களை தாழ்ந்த சாதி என்று இவர்கள் கூறிவருகிறார்கள்
காரணம் எதுவாக இருந்தால் என்ன? எதற்கு இந்த ஆராய்ச்சி என்ற அடுத்த கேள்வியும் இருக்கிறது. சாதி என்பது இந்த நாட்டையும் சமூகத்தையும் கெடுத்து, முடமாக்கி, சீரழித்துக் கொண்டிருக்கும் ஒரு சாபக்கேடு மட்டுமல்ல, ஒழுக்கக் கேடுகளிலெல்லாம் தலையாய ஒழுக்கக்கேடு என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ளவேண்டும். அதன்பால் மென்மையான அணுகுமுறையைக் காட்ட முடியாது. அதை ஈவு இரக்கமின்றி ஒழிக்க வேண்டும். எப்படித் தோன்றியது யார் காரணம் என்ற ஆராய்ச்சி அதற்காகத்தான். அதற்காக மட்டும்தான்.
இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களை முடமாக்கி வைத்திருக்கும் சித்தாந்தம் ஹிந்து மதம், சாதி வர்ணாசிரம முறை அவற்றின் புனிதம் போன்ற கருத்துகள்; இன்னமும் அவற்றை நியாயப்படுத்துவது மட்டுமல்ல, சூத்திரன் தொட்டால் சாமி தீட்டாகி விடும் என்று சுப்ரீம் கோர்ட் வரை போய் வாதாடுபவர்கள். இவர்களை என்ன செய்யலாம்? கருத்தை கருத்தால் வெல்ல வேண்டுமா,அல்லது இவர்கள் மீது வேறு எதையாவது பிரயோகிக்கலாமா.
“பரப்பயலுக்கு அவ்வளவுதான் புத்தி” என்று இந்தக் கணம் வரை உயர்சாதியினர் என்று தம்மைக் கூறிக்கொள்வோர் பேசி வருவதில் பலருக்கு உறுத்தல் இல்லை. “மேல் சாதிகளை”ச் சேர்ந்த படித்த அறிவாளிகளைப் பொருத்தவரை அது முதியவர்களின் அறியாமை, அல்லது சம்பிரதாயப் பிடிப்பு இன்ன பிற, இன்னபிற. ஆனால் “பாப்பார புத்தி” என்று ஒரு சூத்திரனோ தலித்தோ போகிற போக்கில் சொல்லி விட்டால் கூட உடனே சுர் என்று வந்து விடுகிறது.
தி.மு.க அரசு 2006 ஆம் ஆண்டில் தொடங்கிய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில், ஒன்றரை ஆண்டுக்காலம் முறையாகப் பயின்ற 207 மாணவர்கள் பணி நியமனம் பெற இயலாமல் கடந்த 2 ஆண்டுகளாகக் காத்திருக்கின்றனர். பார்ப்பன சாதியைச் சார்ந்த சிவாச்சாரியார்கள் மற்றும் பட்டாச்சாரியார்கள் என்ற பிரிவினரைத் தவிர்த்து, பிற சாதியினரை அர்ச்சகராக்குவது ஆகமவிதிகளுக்கும், இந்துமத சம்பிரதாயங்களுக்கும் எதிரானது என்று மதுரையைச் சேர்ந்த பட்டர்கள் சிலர் உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற்றிருப்பதே இதற்குக் காரணம்.
இந்தத் தடையாணையின் விளைவாக, அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் முடங்கிவிட்டன. சைவ / வைணவக் கோயில்களில் வடமொழி மற்றும் தமிழில் வழிபாடு நடத்துவதற்கு முறையாகப் பயிற்றுவிக்கப்பட்டு, தேர்வில் வெற்றி பெற்று, தீட்சையும் பெற்றிருக்கும் இந்த மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளாகச் சான்றிதழும் வழங்கப்படவில்லை. 2009 நவம்பரில் இம்மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததனர் இதன் தொடர்ச்சியாக 2010 ஜனவரியில்தான் இவர்களுக்கான சான்றிதழே வழங்கப் பட்டிருக்கிறது. எனினும் உச்ச நீதிமன்றத் தடையாணை காரணமாக இவர்கள் யாரும் இதுவரை அர்ச்சகராக நியமிக்கப் படவில்லை.
பார்ப்பன சாதியில் பிறந்த பட்டாச்சாரியார்கள் அல்லது சிவாச்சாரியார்கள் தவிர வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் கருவறையில் உள்ள சிலையைத் தீண்டினால், சிலை தீட்டுப்பட்டுவிடும் என்றும், சிலையிலிருந்து கடவுள் வெளியேறிவிடுவார் என்றும் கூறுகின்ற தீண்டாமைக் கருத்துக்கு எதிரான இந்த வழக்கு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
1970 இல் பெரியார் அறிவித்த கருவறை நுழைவுக் கிளர்ச்சியைத் தொடர்ந்து, 1971 இல் அர்ச்சகர் வேலையில் நிலவிவந்த வாரிசுரிமையை ஒழிக்கும் சட்டமொன்றைத் திமுக அரசு கொண்டு வந்தது. இதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில் “அர்ச்சகர்கள் எனப்படுவோர் இந்து அறநிலையத்துறையால் நியமிக்கப்படுபவர்கள் என்பதால், அதில் வாரிசுரிமை கோர முடியாது என்றும் தகுதியான நபர்களை அரசு தெரிவு செய்யலாம்” என்றும் கூறிய உச்சநீதிமன்றம், “அவ்வாறு அர்ச்சகராக நியமனம் செய்யப்படுபவர்கள், குறிப்பிட்ட பார்ப்பன உட்சாதியிலிருந்துதான் தெரிவு செய்யப்பட வேண்டும்“ என்றும் வலியுறுத்தியது.
“இதனை மீறி அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவது, அரசியல் சட்டம் வழங்கியுள்ள இந்து மத உரிமையில் தலையிடுவதாகும் “என்று கூறி, சாதியையும் ஆலயத் தீண்டாமையையும் அங்கீகரித்துத் தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம். 1972 இல் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பின் அடிப்படையில்தான், 2006 இல் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வண்ணம் திமுக அரசு பிறப்பித்த அரசாணைக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் இடைக்காலத்தடை விதித்திருக்கிறது.
ஆணாதிக்கத்தை நிலைநாட்டி வந்த உடன்கட்டை ஏறுதல், பால்ய விவாகம், பலதார மணம் போன்ற சமூகக் கொடுமைகளும், சாதி ஆதிக்கத்தை நிலைநாட்டி வந்த தேவதாசி முறை, தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலில் நுழையவிடாமல் தடுத்தல் போன்ற அநீதிகளும் “இந்து மத உரிமை“ என்ற பெயரில்தான் நியாயப்படுத்தப்பட்டு வந்தன. மக்கள் போராட்டங்கள் மற்றும் சமூக நிர்ப்பந்தத்தின் விளைவாக இத்தகைய இந்து மத உரிமைகள் இன்று கிரிமினல் குற்றங்களாக்கப்பட்டு விட்டன. எனினும் ஆலயத் தீண்டாமை எனும் குற்றம், ஆகமவிதிகளின் பெயரால் மூடிமறைக்கப்பட்டு, அரசியல் சட்டத்தாலும் உச்ச நீதிமன்றத்தாலும் நியாயப்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வழக்கு 207 மாணவர்கள் பணி நியமனம் பெறுவது தொடர்பான வழக்கு மட்டுமல்ல; ஆலயத் தீண்டாமையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான வழக்கு. சமூக நடவடிக்கைககளில் தீண்டாமை குற்றமாக்கப்பட்டிருந்தாலும், அர்ச்சகர் நியமனத்தைப் பொருத்தவரை தீண்டாமை என்பது இந்துமத உரிமையாகவே அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது.
உச்ச நீதிமன்றத்தின் பார்வையில், இந்த 207 மாணவர்களின் ஒரே தகுதிக் குறைவு அவர்களது பிறப்புதான். குறிப்பிட்ட பார்ப்பன உட்சாதியில் பிறந்தவர்கள் என்ற காரணத்தினாலேயே இன்று பல்வேறு கோயில்களில் பணி செய்து வரும் அர்ச்சகர்கள் பலர், அவர்களே கூறுகின்ற ஆகம விதிகளின் அடிப்படயில் தகுதியற்றவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. திருமணமாகாதவர்கள், திருமணமாகி மனைவியை இழந்தவர்கள் போன்றோர் சாமி சிலையைத் தீண்டக்கூடாது என்று ஆகம விதிகள் கூறுகின்றன. ஆனால் அத்தகைய பலர் அர்ச்சகர்களாகப் பணி செய்து வருகின்றனர்.
அவர்களில் தேவநாதன் போன்ற “ நல்லொழுக்க சீலர்களும்“ அடக்கம். 207 மாணவர்களுக்கு தேர்வு நடத்தி அவர்களுக்குத் தகுதி இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்த தமிழக அரசு, தேவநாதன் உள்ளிட்டு இன்று பணியில் இருக்கும் அர்ச்சகர்கள் யாருக்கும் அத்ததகைய தேர்வு எதையும் நடத்தவில்லை. வழிபாட்டு முறைகள் தெரிந்தவர்களா, ஒழுக்கமானவர்களா என்று கண்காணிக்கும் அதிகாரம் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு இருந்தும்கூட, அவ்வாறு யார் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டதும் இல்லை. இவர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரே தகுதி சாதி மட்டும்தான்.
மாதச் சம்பளம் வழங்குவதுடன், அர்ச்சனைத்தட்டில் பக்தர்கள் போடுகின்ற பணத்தை எடுத்துக்கொள்ளவும் அர்ச்சகர்களுக்கு உரிமை வழங்கியிருக்கிறது தமிழக அரசு. இந்து அறநிலையத்துறையின் உள்துறைப் பணியாளர்களாக இருந்து கொண்டு, மாதம் பல ஆயிரங்களை வருவாயாக ஈட்டும் மதுரைக் கோயில் பட்டர்கள்தான், அறநிலையத்துறை கொண்டு வந்த சட்டத்துக்கு எதிராக இன்று உச்சநீதிமன்றம் சென்றிருக்கிறார்கள். சிதம்பரம் கோயிலை அறநிலையத்துறை மேற்கொள்ளலாமென்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து ஒரு ஆண்டு கடந்த பின்னரும், இந்தக் கணம் வரை தில்லைக் கோயில் தீட்சிதர்கள், நகைகளையும், கணக்குகளையும், நிர்வாகத்தையும் அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கவில்லை. அரசும் அவர்கள் மீது நடவடக்கை எடுக்கவில்லை
Tuesday, February 16, 2010
பார்பண ஹிந்து மதமும் வர்ணாசிரம தீண்டாமை கொடுமையும் ஒரு ஆய்வு.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
சாதியும் மதமும் சமயுமும் காணா
ஆதிய அநாதியாம் அருட்பெருஞ்ஜோதி
சாதியும் மதமும் சமயமும் பொய் என
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி
திருவடி தீக்ஷை(Self realization)
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.
நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.
Utube videos:
(First 2 mins audio may not be clear... sorry for that)
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
www.youtube.com/watch?v=FOF51gv5uCo
Online Books
http://www.vallalyaar.com/?p=409
Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454
Post a Comment