கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவை இம்சித்துக் கொண்டிருந்த ஒரு பிரச்சனைக்கு சரியான தீர்ப்பினை வழங்கிவிட்டார்கள் நீதியரசர்கள். இந்தியாவின் ஜனநாயகம் காக்கப்பட்டு விட்டது, சமநிலையான தீர்ப்பு என அரசியல் தலைவர்கள் பலரும் தங்களின் கருத்தினை சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்கள். இது போன்ற தீர்ப்பினை இதுவரையிலே இந்திய நீதிமன்றங்கள் அளித்தது இல்லை என்றால் தான் இந்த தீர்ப்பு குறித்து நாம் ஆச்சரியப்படவேண்டும். ஆனால் வழக்கமாக வரும் அடிப்படையிலே இந்த தீர்ப்பும் அமைந்திருப்பது தான் வருத்தப் படவைக்கிறது. இனிமேல் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் மசூதிகளை இடிக்கலாம். அந்த வழக்கும் நீதிமன்றத்திடம் செல்லும். ஏம்பா ரெண்டு பேரும் அடிச்சிக்கிறீங்க? இந்தாங்க ஆளுக்குப் பாதியா பிரிச்சிக்கிங்க. அதுவும் இடித்தவர்களுக்கு முக்கிய இடங்களாகப் பிரித்து விட்டு இடிபட்டவனுக்கு கக்கூஸ் இருந்த இடம் மற்றும் காம்பவுண்ட் இருந்த இடங்களை ஒதுக்கிக் கொடுங்கள் என இனிமேல் இந்தியாவில் இருக்கும் அனைத்து நீதிமன்றங்களிலும் தீர்ப்புகள் வெளியாகலாம்.
அதிலும் நீதிபதிகளில் முக்கியமானவரான நீதியரசர் டிவி.சர்மா கீழ்க்கண்டவாறு அறிவிக்கிறார்,.
* சர்ச்சைக்குரிய இடம் இராமர் பிறந்த இடம் தான்
* அங்கு பாபரால் கட்டிடம் எழுப்பப்பட்டது
* அது எந்த வருடம் என்பது தெரியவில்லை. ஆனால் அது இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு முரணாக இருந்தது. மசூதிக்கு உரிய அம்சங்களே அதில் இல்லை. எனவே அதை மசூதியாக கருதமுடியாது.ஏற்கனவே இருந்த பழமையான கட்டிடத்தை இடித்து விட்டுத்தான் இந்த கட்டிடம் கட்டப்பட்டு இருக்கிறது..
என தன் கருத்தினைச் சொல்லி இருக்கிறார். இந்தியாவின் மத நல்லிணக்கத்திற்கு வேட்டு வைத்து தங்களின் அரசியல் வெறியை தீர்த்துக் கொண்ட ஒரு கூட்டத்தினருக்கு மேலும் வலுசேர்க்கும் இந்த தீர்ப்பு.
அடித்தவனுக்கு 100 ரூபாய் அபராதமும், அடிவாங்கியவனுக்கு 200 ரூபாய் அபராதமும் இனிமேல் நீதிமன்றங்களில் விதிக்கப்படலாம். சட்டம் ஒரு இருட்டறை என அன்றைக்கே அறிஞர் அண்ணா சொல்லிவிட்டார். இந்த தீர்ர்பு குறித்து திராவிடர் கழகத்தலைவர் அய்யா கி.வீரமணி அவர்கள் கீழ்க்கண்டவாறு தெரிவித்து இருப்பது கொஞ்சம் நமக்கு ஆறுதலை தருகிறது.
சட்டக் கோர்ட்டா? நம்பிக்கைக் கோர்ட்டா?
புராண கால கற்பனைகளுக்கும், இதிகாச கால நம்பிக்கைகளுக்கும் மதப் பூச்சு பூசப்பட்டதாலேயே வெறும் நம்பிக்கை அடிப்படையில் ராமர் அங்குதான் பிறந்தார் என்றெல்லாம் இதுபோன்ற தீர்ப்புகளில் எழுதப்படுவது, நீதிமன்றங்களை - சட்ட கோர்ட்டுகள் (Courts of Law) என்பதற்குப் பதிலாக, நம்பிக்கை கோர்ட்டுகளாக (Courts of belief and Faith) ஆக்குவதாக அமைந்துள்ளது. இதன் தீய விளைவு நிகழ்காலத்தில் மட்டுமல்ல, வருங்காலத்திலும் நியாய விரோத தீர்ப்புகள், புற்றீசல்கள்போல் கிளம்ப வழிவகுத்து விடும்.
இது போன்ற வார்த்தைகளிலேயே நடுநிலையாளர்கள் இந்த தீர்ப்பினை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம். இதுபோன்ற தீர்ப்புகள், மக்கள் கடைசி கடைசியாக நம்பி வரும் நீதிமன்றங்களின் மீது ஒரு நம்பிக்கையின்மையையே ஏற்படுத்துகிறது. நீதியரசர் சொல்வதைப் போல அந்தக் கட்டிடம் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரானது அல்ல. ஆனால் முழுக்க முழுக்க இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிராக ஆக்ராவில் கட்டப்பட்டிருக்கும் தாஜ்மஹாலை மட்டும் ஏன் தொல்லியல் துறை, சுற்றுலா துறை பாதுகாக்கிறது என தெரியவில்லை.
இதை எப்படி சமநீதியான தீர்ப்பு என ஏற்றுக் கொள்ள முடியும்? உதாரணமாக
ஒரு கிராமத்தில் "A" என்பவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரீடத்திலே வீடு கட்டி வாழ்ந்து வருகிறார் என வைத்துக்கொள்வோம். ஒரு நாள் அந்த வீட்டுக்குள் நள்ளிரவில் புகுந்த "B" அங்கே தன் பண்டபாத்திரங்களை வைத்துவிட்டு இது என் வீடு என்கிறார். வழக்கு நாட்டாமையிடம் போகிறது. வழக்கை மிகவும் நேர்மையாக விசாரித்த நாட்டாமை, அப்படியா சங்கதி!! வீடு யாருக்கும் இல்லை, இழுத்துப் பூட்டு என்கிறார். வீடு இழுத்துப் பூட்டப்படுகிறது. இந்த நிலையில் "C" என்பவர் இந்த நிலம் என் தாத்தா காலத்து பூர்வீகம், எனவே நான் தான் அதற்கு உரிமையாளர் என சொல்கிறார்.அ தையும் நாட்டாமை ஏற்றுக்கொள்கிறார். ஒருநாள் "B" பஞ்சாயத்தில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்கிறார்.அதாவது என்னுடைய பாத்திரங்களை நான் கழுவி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் அது துருபிடித்து விடும் என கேட்கிறார். அப்படியா அப்படியானால் நீ ஜன்னல் வழியாக திறந்து அதை செய்து கொள் என்கிறார் நாட்டாமை.
உடனே அந்த வீட்டின் உரிமையாளர் "A" நாட்டாமையிம் அவருக்கு மட்டும் ஜன்னலை திறந்து விடுவது மாதிரி எனக்கும் கொஞ்சம் கதவைத் திறந்து விட்டா நான் அந்த வீட்டுக்கு ஒட்டடை அடித்துக் கொள்வேனே என கேட்க, அதெல்லாம் முடியாது வழக்கு பஞ்சாயத்துல இருக்கு என்கிறார் நாட்டாமை. கொஞ்ச நாளில் "B" தன் ஆட்களை அழைத்து வந்து அந்த வீட்டை இடித்து தரைமட்டமாக்குகிறார். செய்வதறியாத "A" நாட்டாமையிடம் முறையிட அவரை தேடி அலைகிறார். ஆனால் வீடு இடிக்கப்படும் வரை நாட்டாமை தலைமறைவாகி விடுகிறார். சரி வீடு போனா போகட்டும் அந்த நிலமாவது மிஞ்சுமே என மீண்டும் நாட்டாமையை தேட அப்போதும் அவர் கிடைக்கவில்லை. அதற்குள்ளாக "B" தன் பாத்திரங்களை வைப்பதற்கு ஏற்ப ஒரு தற்காலிகமாக கொட்டகை அமைத்துக் கொள்கிறார்.
இப்போது மீண்டும் வழக்கு நாட்டாமையிடம் வருகிறது. இப்போது நாட்டாமை சொல்கிறார், கொஞ்ச நாள் ஆறப்போட்டு அப்புறமா பாத்துக்கலாம் என்று. நீண்ட நாள் குறித்து தன்னுடைய கட்டப்பஞ்சாயத்தைக் கூட்டி நாட்டாமை ஒரு அழகான தீர்ப்பினைச் சொல்கிறார். அதாவது "A" இருந்தது வீடே அல்ல. அது ஒரு பேய் பங்களா. ஆனாலும் அவருக்கு உரிமை உண்டு. "B" தான் இப்போது அந்த இடத்தை பராமரித்து வருகிறார். எனவே அதிலே அவருக்கும் உரிமை உண்டு. இது "C" யின் தாத்தா காலத்து நிலமாம். எனவே அவருக்கும் அதிலே உரிமை உண்டு. ஆக இதை மூன்றாக பிரித்து "B" பாத்திரம் வைத்திருக்கும் முக்கிய இடமான ஹால் மற்றும் அறைகளை அவருக்கும், தாத்தா காலத்து வாரிசுதாரரான "C"க்கு ஹால் மற்றும் முற்றப்பகுதிகளும், ஆதாரமேயில்லா விட்டாலும் போனா போவுது "A" க்கு மாட்டுக்கொட்டகை மற்றும் காம்பவுண்டு சுவர் பகுதியும், அதிலும் மூன்றாக பிரிக்கும் போது இடம் போறாவிட்டால் "A"க்கு அவர் வீட்டு வாசலில் கொஞ்சமாக கிடக்கும் ஏரிப்புறம் போக்கையும் சேர்த்து அவர் கணக்கை செட்டில் செய்ய தீர்ப்பளிக்கிறேன் என ஒரு சாதாரண கட்டப்பஞ்சாயத்து கிராமத்து நாட்டாமை சொன்னா நாமெல்லாம் ஏற்றுக் கொள்வோமா?
இதுபோன்றவற்றையெல்லாம் பார்க்கக் கூடாது என்று தானோ என்னவோ நீதி தேவதை தன் கண்களைக் கட்டிக் கொண்டிருக்கிறாள் போலும். ஆனாலும் இன்னமும் நீதியின் கண்கள் மங்கிவிடவில்லை. தூரத்தில் இருக்கும் உச்ச நீதிமன்றத்தை நோக்கி மேல் முறையீடு செய்யப்படுகிறது.அதிலாவது சரியான நீதி கிடைக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
உச்ச நிதிமன்றத்தின் தீர்ப்பு எப்படி வந்தாலும் அதை ஏற்றுக் கொண்டு தான் ஆகவேண்டும். காரணம் நாம் வாழும் நாட்டின் இறையான்மைக்கு எந்த வகையிலும் உலக அரங்கில் குந்தகம் வந்துவிடக் கூடாது. உலக அரங்கில் ஜார்ஜ் புஷ் மற்றும் ராஜபக்சே போன்றவர்கள் குற்றவாளிகளாக கைகட்டி நிற்கும் நிலை நம் நாட்டுக்கும் வந்து விடக்கூடாது. எனவே மேல்முறையீட்டுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர் நோக்க வேண்டும். அதுவும் இப்படியே வந்தால் நாம் மனம் உவந்து நமக்கென வழங்கப்பட்ட இடத்தையும் கோவிலுக்காக கொடுத்து விட்டு ஒதுங்கி விடவேண்டும். சகோதரத்துவமான இந்தியாவின் நிலையை சீர்குலைக்க சதி செய்யும் சண்டாளர்களின் சூழ்ச்சிகளில் இனியும் சிக்கி யாரும் பலியாகிட வேண்டாம். பொருமையே சிறந்த ஆயுதம். இறைவன் பொருமையாளர்களுடன் இருக்கிறான்.
நிஜாம்
நிஜாம்
No comments:
Post a Comment