சென்னை: ரூ.10 கோடி முதல் ரூ.20 கோடி கொடுத்தால் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவியைப் பெற்றுவிடலாம் என்ற மோசமான நிலை நிலவுவதாக சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், ஐஐடி கான்பூர் தலைவருமான மு.அனந்தகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இந்தியத் தொழிலக கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) சார்பில் தேசிய அறிவுசார் ஆணையம் குறித்த யஷ்பால் கமிட்டியின் பரிந்துரைகள் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை யில் நடந்தது.
இதில் பேசிய அனந்தகிருஷ்ணன்,
பல்கலைக்கழகங்கள், பட்டதாரிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள் அல்ல. சிறந்த சிந்தனைத் திறன் உடைய பட்டதாரிகளையும், ஆய்வு மாணவர்களையும் உருவாக்கும் இடம்.
பல்கலைக்கழகங்களில் உள்ள பாடதிட்டங்கள், தேர்வு முறைகள், கற்பிக்கும் முறை ஆகியவற்றை மறுசீரமைக்க வேண்டும்.
தனியார் கல்வி நிறுவனங்களில் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இல்லாமல், இளநிலை பட்டம் முடித்தவர்களே பாடம் நடத்தும் சூழல் உள்ளது. பி.எச்டி. முடித்தவர்கள் சொற்ப எண்ணிக்கையில் தான் பணியாற்றுகின்றனர்.
உயர்கல்வி யில் 15க்கும் மேற்பட்ட கவுன்சில்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் அங்கு முறைகேடுகளும், குளறுபடிகளும்தான் நடக்கின்றன.
யார் வேண்டுமானாலும் பணம் கொடுத்து துணைவேந்தராகலாம் என்ற நிலை உருவாகிவிட்டது. ரூ.10 கோடியோ, ரூ.20 கோடியோ கொடுத்தால் போதும், துணைவேந்தராகிவிடலாம்.
துணைவேந்தர்களை நியமனம் செய்வதில் அரசியல் தலையீடுகள், குறுக்கீடுகள் இருக்கக் கூடாது. பல்கலைக்கழகங்கள் செயல்பட அரசு நிதி மட்டும் ஒதுக்க வேண்டும். அவை தன்னாட்சியுடன் இயங்க வேண்டும்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.டி, எம்.எஸ். படிப்புக்கு ரூ.1.5 கோடி கொடுத்து சேரும் நிலை உள்ளது என்றார் அனந்தகிருஷ்ணன்.
No comments:
Post a Comment