ரஜினிகாந்த் கூற்றுப்படி இரண்டு வேளை உணவுக்காக விபச்சாரம் செய்த புவனேஸ்வரியை கைது செய்தது காவல்துறை.இதைன்பிறகு அவர் குறிப்பிட்டதாக கூறி சில நடிகைகளின் விலை விவரங்களையும் அவர்கள் புகைப்படங்களையும் வெளியிட்டது தினமலர். தொடர்ந்து செய்தித்தாள் படிப்பவர்களுக்கு இந்த செய்தி புதியதாக இருக்காது, செய்தியில் உள்ள புதிய தகவல் அவர்தம் கட்டணவிவரம்தான். பெயரை மட்டும் குறிப்பிடாமல் இந்த செய்தி எல்லா பத்திரிக்கைகளிலும் வந்தபடிதான் இருக்கிறது. ஸ்ரீபிரியா தன்னை ஒரு நடிகர் ஏமாற்றியதற்காக தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தபோது பாராமுகமாய் இருந்துவிட்டதைப்போல இன்னொரு வரலாற்றுத் தவறை செய்துவிடக்கூடாது என முடிவு செய்துவிட்ட நடிகர்சங்கம் உடனடியாக உலக நாயகன்.. மன்னிக்கவும் உலக சாதனையாளர், முதல்வர் கலைஞரை சந்தித்தார்கள். திரௌபதிக்கு சேலை கொடுத்த கிருஷ்ண பரமாத்மாவைப்போல நவயுக திரௌபதிகளுக்கு வன்கொடுமை சட்டத்தைத்தந்து அருள்பாலித்தார் கருணாநிதி.
சத்துணவு பணியாளர்கள் மாதக்கணக்கில் போராடியும் பார்க்க முடியாத முதல்வருக்கு நடிகர்களுக்கென ஒதுக்க எப்போதும் நேரமிருக்கிறது. அவர்கள் முறையிட்டவுடன் தினமலர் செய்தியாசிரியர் கைது செய்யப்படுகிறார். நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகு ஷகிலா உள்ளிட்ட நடிகர் நடிகைகளுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் அவர் தவறவில்லை.
இதனிடையே நடந்த நடிகர்சங்க கூட்டத்தில் தங்கள் சுயரூபத்தை காட்டினார்கள் நடிகர்கள். அவர்கள் பேசியதைப்பார்த்தால் மறுநாள் தினமலர் பத்திரிக்கையே இருக்காதோ என சந்தேகம் பலருக்கு வந்திருக்கும். ஒரு விருதுக்காக ஊரையே எழுதித்தரும் பட்டத்துராஜா ஒருவர் கூப்பிடுதூரத்தில் இருக்கும்போது அவர்களுக்கு அப்படிச்செய்ய அவசியமிருக்காது.
ஜூன் மாதம் ஆனந்த விகடனுக்கு தான் அளித்த பேட்டியில் இலங்கைப் பிரச்சினையை பற்றி ‘ஆஃப் த ரெக்கார்ட்’ ஆக தன் கருத்துக்களை கவனமாக பேசிய சத்யராஜ் இந்த முறை அப்படியெல்லாம் பயப்படவில்லை, தினமலர் பொறுப்பாசிரியர் ஒரு வேசிமகன் என யாரெல்லாம் ஒத்துக்கொள்கிறீர்கள் என் கேள்வி எழுப்பினார். வேசிமகனுகான அடையாளங்களை சுலபமாக கண்டறியும் திறன் கொண்ட திரையுலகம் ஒட்டுமொத்தமாக கை உயர்த்தியது.
தான் பாதாள சாக்கடையை சுத்தம் செய்ய எந்திரம் செய்யும்படி சொல்லும் காட்சி வைத்ததால்தான் சென்னை மாநகராட்சி அப்படி ஒரு கருவி வாங்கியதாக உளறிய விவேக் எனும் கோமாளி இன்னும் ஒருபடி மேலே போய் பத்திரிக்கையாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படம் கேட்டார். சாதாரணமாகவே நடிகைகளை உள்ளடையுடன் ஆடவிடும் துறையில் இருப்பவரின் புத்தி பத்திரிக்கையாளர்களின் குடும்ப பெண்களுக்கு கிராபிக்ஸில் உள்ளாடை அணிவிக்கும் வகையில் சிந்திப்பதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.
நடிகர்கள் உணர்ச்சிவயப்பட்டெல்லாம் அப்படிப்பேசவில்லை, அவர்கள் இயல்பே அப்படிதான் இல்லாவிட்டால் சக நடிகனுக்கு தனது படத்து வசனத்தின் மூலம் சவால் விட மாட்டார்கள். நடிகர்களின் யோக்கியதை மக்கள் எல்லோரும் அறிந்ததுதான், தாம் எவ்வளவு தூரம் கேவலமானவர்கள் என மக்களுக்கு தெரிவிக்கும் ஒரு வாய்ப்பாக இந்த கூட்டத்தை பயன்படுத்திக்கொண்டார்கள். தனது கட் அவுட்டுக்கு தன் செலவில் ( அல்லது தன் அப்பா செலவில்) பாலாபிசேகம் செய்யும் இவர்கள் நியாயமான முறையில் கோரிக்கை வைக்கமாட்டார்கள். அதன் வெளிப்பாடுதான் முதல்வரை சந்தித்து முறையிடுவது.
நடிகையை அவமானப்படுத்தி செய்தி வெளியிட்டதற்காக நடிகர்சங்கம் போராடுவதுதான் நமக்கு நெருடலாக இருக்கிறது. தமிழாசிரியர்களை இவர்கள் அவமானப்படுத்திய படங்கள் எத்தனை எத்தனை ?. கேரளப் பெண்களை ஒரு படத்திலேனும் இவர்கள் நாகரீகமாக காட்டியதுண்டா ? நடிகர்களைப்பற்றியோ தயாரிப்பாளர்களைப்பற்றியோ புகார் சொன்ன நடிகைகளின் குற்றச்சாட்டுக்களுக்கு இவர்கள் எடுத்த நடவடிக்கை என்ன ? தினமலர் ரமேஷை அக்கா தங்கையோடுதான் பிறந்தாயா என கேட்கும் ஸ்ரீபிரியா, பதின்வயது சிறுமிகளைக்கூட முத்தக்காட்சிகளில் நடிக்கவைக்கும் தன் சக ‘ கலைஞர்களை’ நோக்கி இந்த கேள்வியை எழுப்பியிருப்பாரா?
பஸ்டாண்டில் விபச்சாரத்திற்கு ஆள் பிடிப்பவன் புரோக்கர் என்றால், நடிகைகளின் அவயங்களை காட்டி படத்தை விற்கும் இவர்களை எப்படி அழைப்பது ? இவர்கள் எடுக்கும் நெருக்கமான காட்சிகள் ஒன்று நடிகையின் ஒப்புதல் பெற்ற பாலியல் அத்துமீறலாக இருக்கும் அல்லது நடிகையை கட்டாயப்படுத்தி செய்யப்படும் பாலியல் அத்துமீறலாக இருக்கும். இதைப்பற்றி கொஞ்சமும் வெட்கப்படாமல் கதைக்கு தேவையான கிளாமர் இருப்பதாக சொல்லும் இந்த மாமா கூட்டம் நடிகைகளின் மான அவமானத்தைப்பற்றி கவலைப்பட தகுதியுடையதுதானா ?. இவர்களுக்கும் புவனேஸ்வரிக்கும் என்ன வேறுபாடு?, இவர்கள் சொல்லும் நியாயத்தை அவரும் சொல்லக்கூடும், ஏனெனில் அவரும் விரும்பி வருவோரைத்தான் தொழிலுக்கு அனுப்புகிறார். அல்லது கஸ்டமர் கேட்பதை தருவதாககூட ஒரு நியாத்தை சொல்லலாம், ரசிகன் விரும்புவதைத்தான் படமாக எடுக்கிறோமென இயக்குனர்கள் சொல்வதைப்போல.
மற்றொருபுறம் பத்திரிகையாளர்கள் தங்களை ஒரு குடும்பம் என கூறிக்கொள்வதை தவறாக புரிந்துகொண்ட கலாநிதி மாறன் தனது தினசரியில் நடிகர்களின் கூட்டத்தை முழுப்பக்க செய்தியாக போடுகிறார், பின்னே அவர் குடும்ப சண்டையில் இப்படித்தானே நடந்துகொண்டார் ???. பொதுவாக பத்திரிக்கைத்துறையையே நடிகர்கள் திட்டியதால் இவர்கள் ஒன்று கூடினார்கள், நடிகர் சங்கம் தினமலரை மட்டும் திட்டியிருந்தால் இந்த ஒற்றுமையும் இருந்திருக்காது, ஜெயா ஆட்சியில் நக்கீரன் கோபாலை கைவிட்டதுபோல இப்போதும் நடந்துகொண்டிருப்பார்கள்.( கோபால் கைதை எதிர்த்து நடந்த கூட்டத்தின் புகைப்படத்தில் ராமின் படத்தை ஜாக்கிரதையாக தவிர்த்த ஹிண்டுவின் வீரம் அவ்வளவு சீக்கிரம் மறக்கக்கூடியதா என்ன ?? )
இரண்டு தரப்பும் ஒரு விசயத்தில் கவனமாக இருக்கிறார்கள். தங்கள் வசமுள்ள எதிர்தரப்பின் தவறுகள் பற்றிய தகவல்களை இருவருமே வெளியிடவில்லை. அதனால்தான் வெறும் வசவுகளோடும் வாய்சவாடல்களோடும் நிறுத்திக்கொள்கிறார்கள். ஏனெனில் ஆபாசம் இருவருக்குமே பொதுவான ஒரு மூலதனம், அதில் கைவைக்க இரண்டு வியாபாரிகளும் விரும்பமாட்டார்கள்.
நடிகைகள் தங்களை விபச்சாரிகள் என சொன்ன பத்திரிக்கைக்கு எதிராக போராடுவது கிடக்கட்டும்.. தங்களை விபச்சாரிகளை விட கேவலமாக நடத்தும் ( அல்லது திரையில் அப்படிக்காட்டும் ) திரையுலகிற்கு எதிராக முதலில் சிந்திக்கட்டும். இல்லவிட்டால் எப்போது இந்த மாதிரி செய்தி வந்தாலும் அது மக்களுக்கு ஒரு நினைவூட்டலாகவே அமையும்.
-நன்றி வில்லவன் , வினவு
No comments:
Post a Comment