Monday, June 14, 2010

நித்யானந்தா பெண்களைக் காரில் அழைத்துச் செல்லுவது ஏன்? எதற்காக?





சாமி-யார்?

மக்களைச் சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி நாள்தோறும் காமக் களியாட்ட சொர்க்கத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நித்யானந்தா என்ற ஆசாமி சிறை என்னும் நரகத்தில் வாசஞ் செய்து இப்பொழுது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இவருக்கு ஜாமீன் கேட்டு, அவரின் வழக்குரைஞர் பி.வி. ஆச்சாரியார் நீதிமன்றத்தில் வாதாடினார்.

சாமியார் என்று கூறிக் கொள்ளும் நித்யானந்தா தன்னுடன் பெண்களைக் காரில் அழைத்துச் செல்லுவது அவருடைய பக்தர்களின் மனதைக் காயப்படுத்தாதா? என்று நீதிபதி சுபாஷ் கேட்டார்.

அதற்கு நித்யானந்தாவின் வழக்குரைஞர் சொன்ன பதில் அனைவரையும் தூக்கி வாரிப் போடச் செய்தது. இந்தக் காவி வேட்டிகளின் கபடத்தனத்தையும் ஒரு வகையில் தோலுரித்தும் காட்டியது.

அப்படி என்னதான் சொன்னார் நித்யானந்தாவின் வழக்குரைஞர்?

நித்யானந்தா சாமியார் அல்ல. அவர் தன்னை ஒருபோதும் சாமியார் என்று சொல்லிக் கொண்டதும் கிடையாது. சில ஆசிரமங்களில் குடும்ப வாழ்க்கை ஏற்றுக் கொள்ளப்படுகிறது. எனவே, நித்யானந்தாவையும் சாதாரண மனிதராகத்தான் ஏற்றுக் கொள்ளவேண்டும். இந்த வழக்கையும் சாதாரண விஷயமாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம்.

இதுவரை நித்யானந்தாவை ஆண்டவனிடத்தில் வைத்துப் பார்த்தனர் அவர் சாதாரண மனுஷன்தான் என்று அவரது வழக்குரைஞரே முகத்திரையைக் கிழித்துக் காட்டிவிட்டார்.

பக்தி சமாச்சாரங்கள் இந்த யோக்கியதையில்தான் உள்ளன என்று பக்தர்கள் என்றுதான் புத்தியைப் பயன்-படுத்தி உணரப் போகிறார்களோ என்று தெரியவில்லை.

ஏதோ நித்யானந்தாதான் இப்படி என்று இல்லை. ரமண மகரிஷி ரமண மகரிஷி என்று பூதாகரப்படுத்துகிறார்களோ, அந்தப் பெரிய மனுஷன் என்ன செய்தார் தெரியுமா?

தொடக்கத்தில் முற்றும் துறந்த முனிவர்போல, பற்றற்றவர்போல காட்டிக்கொண்ட இந்த வெங்கட ரமண பார்ப்பனருக்குச் சொத்துக்கள் குவியக் குவிய சொந்த பந்தங்களும் சுற்றி வந்து சூழ்ந்துவிட்டன.

கடைசியில் என்ன செய்தார்? தன் தம்பிக்குச் சொத்துக்களை எழுதி வைத்து-விட்டார்.

ரமண ரிஷியின் அந்தரங்கச் சீடராகவிருந்த பெருமாள்சாமி என்பார் நீதிமன்றம் சென்றார்.

நித்யானந்தாவின் வழக்குரைஞர் நித்யானந்தா சாமியாரே இல்லை என்று சொன்னதுபோல ரமண ரிஷியின் விஷயத்திலும் நடந்தது.

நீங்கள் சந்நியாசியாயிற்றே, எப்படி அண்ணன், தம்பி பாசமெல்லாம்? என்ற கேள்வியை நீதிபதி எழுப்பியபோது, நான் எப்பொழுது சந்நியாசம் வாங்கினேன்? என்று எதிர்க்கேள்வியைப் போட்டாரே பார்க்கலாம், இதுதான் சாமியார்களின், ரிஷிகளின் யோக்கியதை!

பூரி சங்கராச்சாரியார் மனைவி மக்களுடன் குடும்பம் நடத்துகிறாரே, காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதிகூட அதிகாரப்பூர்வமாகக் குடும்பம் நடத்தாவிட்டாலும், ஏராளான வைப்புகளை வைத்துக்கொண்டு சல்லாபம் செய்யவில்லையா? சிறைக் கம்பிகளை எண்ணி ஜாமீனில் நடமாடவில்லையா?


சாமியார்களில் காமியார்கள் என்ற பெயரில் ஒரு சங்கத்தைக் கூட ஆரம்பிக்கலாமே!

இதற்கு மேலும் பக்தியா? ஆன்மீகமா? வெண்டைக்காயா?

---------------- மயிலாடன் அவர்கள் 14-6-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை


No comments: