அண்ணா பல்கலைக் கழகத்தில் இந்த ஆண்டு, பொறியியல் படிப்பிற்கான சான்றிதழ் வழங்கிய மாணவர்களில் 41 பேரும், மருத்துவப் படிப்பிற்கு சான்றிதழ் வழங்கிய மாணவர்களில் 10க்கும் மேற்பட்டவர்களின் மதிப்பெண் சான்றிதழ், போலி என கண்டறியப்பட்டுள்ளது.
பொதுத் தேர்வில், தாங்கள் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கப் பெறாத மாணவர்கள், குறிப்பிட்ட பாடத்தில் தங்களுக்கு மதிப்பெண்கள் அதிகம் இருக்கும் என்ற எண்ணத்தில், மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீடு செய்கின்றனர். இது வழக்கமான ஒன்று தான். யார், யார் மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்கின்றனர் என்பது, கல்வித் துறையில் உள்ள கறுப்பு ஆடுகள் மூலம், ஏஜன்டுகள் கைக்குச் செல்கிறது.
அவர்கள் மாணவர்களை அணுகி, 10 ஆயிரம் முதல், பல லட்சம் ரூபாய் வரை லஞ்சமாக பெற்று, "கல்வித் துறையின் கம்ப்யூட்டரில் மதிப்பெண் மாற்றியமைக்கப்படும்' என்ற உறுதிமொழியுடன், கடந்த 2000 ஆண்டு முதல், மதிப்பெண் சான்றிதழ்களை போலியாக வாரி வழங்கியுள்ளனர். இதில் பலர், பல லட்சம் சம்பாதித்தும், ஓய்வு பெற்றும், வேறு துறைக்கும் போய்விட்டனர். இந்த ஆண்டு மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்ய, 66 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
கல்வித் துறையில் உள்ள கறுப்பு ஆடுகள் மூலம், அவர்களின் முகவரி அறிந்த ஏஜன்டுகள், 10 அல்லது 5 சதவீத மாணவர்களையாவது அணுகி இருப்பர் என வைத்துக் கொண்டால் கூட, மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், போலி மதிப்பெண் சான்றிதழ்களை இந்த ஆண்டு பெற்றிருப்பர். இதில், ஒரு சில மாணவர்களின் மதிப்பெண், கல்வித் துறையில் உள்ள கம்ப்யூட்டரில், சரியான தருணத்தில் திருத்தப்படாத காரணத்தால், இன்று சிலர் மட்டும் மாட்டிக் கொண்டனர். 2000ம் ஆண்டிலிருந்து, இதுபோன்ற போலி மதிப்பெண் சான்றிதழ்கள் பெற்ற மாணவர்கள், இன்று காலரை தூக்கிக் கொண்டு, பல உயர் பதவிகளில் அமர்ந்து, தங்களின், "கடமை'யை செய்து கொண்டிருக்கின்றனர்.
இந்த மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டில், பணம் கொடுத்து தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல மதிப்பெண் பெற்றவர்கள் எல்லாம், வசதியானவர் அல்லது ஓரளவு வருமானம் உள்ளவர்கள். ஏழை, எளிய கிராமப்புற மக்கள் இதில் சிக்கவில்லை என்பது, கவனிக்க வேண்டிய ஒன்று.
பண வசதியில்லாத, தன் கிராமத்தில் பள்ளி இல்லாத ஏழை மாணவன், இரண்டு மணி நேரத்திற்கு முன்னரே பள்ளிக்கு புறப்பட வேண்டும். அங்கு பாடம் படித்து, தனிப் பயிற்சி எனும் டியூசன் இல்லாமல், மாலை வீடு வந்து, பெற்றோருக்கு சில உதவிகள் செய்ய வேண்டும். மின் வசதி கூட இல்லாத நிலையில் படித்து, தேர்வில் வெற்றி பெறுவதே சாதனையாக உள்ள நிலையில், பணம் உள்ளவர்கள், இப்படி குறுக்கு வழியில், போலி மதிப்பெண்கள் மூலம் சாதனை மதிப்பெண்கள் பெற்று, சன்மானம் பெறுகின்றனர். போலிகள், இன்று நமக்கு விடப்பட்ட சவால்களில் பெரும் சவாலாக உள்ளது. போலி டாக்டர், போலி வக்கீல், போலி காவல் அதிகாரி என பலர், இன்று நாட்டில் உலா வருகின்றனர்.
மனிதனுக்கு முக்கியம் உயிர். அதில் கூட விளையாட, போலிகள் துணிந்து விட்டனர். ஊசி போட தெரிந்தால் போதும், மருத்துவ பிரதிநிதிகள் மூலம் நான்கு மாத்திரைகள் பெயரை தெரிந்து வைத்து, போலி டாக்டர்கள் உலா வர துவங்கி விட்டனர். போலி கல்வி நிறுவனங்களில், தங்களின் வாழ்வை தொலைத்து, பலர் நடுத்தெருவில் நிற்கின்றனர்.
போலி முத்திரை தாள்கள், போலியாக தயாரித்த விற்பனை பத்திரம், கள்ள நோட்டுகள், போலி தபால் தலைகள் என, பல போலிகள் வந்துவிட்டன. தமிழகத்தில், அண்ணா பல்கலைக் கழக கலந்தாய்வில் பங்கு பெற்ற மாணவர்களின், போலி மதிப்பெண் சான்றிதழ்கள் கண்டறியப்பட்டன. வேறு கலைக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள், வேறு மாநிலத்திற்குச் சென்ற மாணவர்களின் போலி மதிப்பெண் சான்றிதழ் என்னவானது?
தமிழக அரசின் சிறப்பு முத்திரை வில்லை ஒட்டப்பட்ட, போலி மதிப்பெண் சான்றிதழ், கல்வித் துறையில் பணிபுரியும் பலரின் துணை இல்லாமல் எப்படி கிடைத்தது? சரி... ஒவ்வொரு மதிப்பெண்ணும், ஒவ்வொரு மாணவனுக்கும் உயிர். ஒரு மதிப்பெண் குறைந்தால் கூட, விரும்பிய பாடமோ, கல்லூரியோ கிடைக்காமல் போய்விடும். ஒரு மதிப்பெண்ணுக்கு இத்தனை ரூபாய் என்று பணத்தை கறந்துள்ளனர்.
மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்த 66 ஆயிரம் மாணவர்களின் விடைத்தாள்களை சரிபார்த்து, சான்றிதழ்களை சரிபார்த்தால், இந்த ஆண்டில் நடந்த ஊழலில் உண்மை, உலகுக்குத் தெரியும்.
o மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டை கண்காணிக்க, தனியாக ஒரு துறை ஏற்படுத்த வேண்டும்.o கடந்த 2000 ஆண்டு முதல், மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்த மாணவர்களின் எண்ணிக்கையை வெளியிட வேண்டும்.
o விடைத்தாள்கள் திருத்தும் ஆசிரியர்களுக்கு, நல்ல ஓய்வு தரப்பட வேண்டும். ஒரு சில ஆசிரியர்கள், விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு தினமும் 100 கி.மீ., பயணம் செய்கின்றனர். காரணம், விடைத்தாள்களை திருத்தும் மையத்திற்கு தங்கும் வசதி போதிய அளவில் இல்லை.
o விடைத்தாள் திருத்தும் இடங்களில் போதிய மின் வசதி, தண்ணீர் வசதி செய்து தர வேண்டும். கத்திரி வெயில் காலத்தில், விடைத்தாள் திருத்துபவர்களுக்கு கஷ்டம் தவிர்க்கப்பட வேண்டும்.நன்கு படித்து, தேர்வு எழுதி, எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காத ஏழை, எளிய மக்கள் என்ன செய்வர்? தன் பிள்ளை நல்ல மதிப்பெண் பெற்று வாழ வேண்டும் என்று எண்ணி, மூட்டை தூக்கும் தொழிலாளி, கூலித் தொழிலாளி, விற்பனை பிரதிநிதிகள், ரிக்ஷா ஓட்டுபவர்கள் என, ஏழை மக்கள் எல்லாம் வாய் பேச முடியாத ஊமைகள். இவர்களின் வாய்ப்பை பறித்து, தங்கள் வாழ்வை வசந்தமாக மாற்றிய போலி மதிப்பெண் சான்றிதழ் பெற்றவர்களை, எந்த சட்டத்தின் மூலம் தண்டிப்பது?
கடந்த 2009ம் ஆண்டு, மேல்நிலைப்பள்ளி பொதுத் தேர்வில், 1,179 மதிப்பெண் பெற்ற மூன்று மாணவர்கள், மாநிலத்தில் முதல் மாணவர்களாக அறிவிக்கப்பட்டனர். தனக்கு மதிப்பெண்கள் மிகவும் குறைந்துள்ளது என்று எண்ணிய ஊத்தங்கரை தனியார் பள்ளியைச் சேர்ந்த பாலமுருகன், மறு மதிப்பீடு செய்தான். விடைத்தாள்களின் நகல்களை வாங்கிய போது தான் தெரிந்தது, சில விடைகள் திருத்தப்படவே இல்லை என்று. அந்த மாணவனுக்கு, 1,184 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, சத்தமில்லாமல் சாதனை அமுக்கப்பட்டது. ஒருவேளை அந்த மாணவனுக்கும், பெற்றோருக்கும், பள்ளிக்கும் போராடும் திறன் இல்லையென்றால், அந்த மாணவனின் திறமை வெளியே தெரிந்திருக்காது. இதுபோல் எத்தனை மாணவர்கள், காணாமல் போயினர்.
மொரார்ஜி தேசாயின் மகள், மருத்துவக் கல்லூரி தேர்வில் தோல்வியடைந்தார். "மறு மதிப்பீடு செய்ய வேண்டும்' என மகள் கூறியதை, மொரார்ஜி தேசாய் மறுத்தார். "மறு மதிப்பீட்டில் மகள் வெற்றி பெற்றால், என் அதிகாரத்தை நான் தவறாக பயன்படுத்தி, இந்த வெற்றி கிடைத்தது என கூறுவர். எனவே, மீண்டும் தேர்வை எழுதி வெற்றி பெறு' என அறிவுரை கூற, மனமுடைந்த தேசாயின் மகள், தற்கொலை செய்து கொண்டார். இருப்பினும் தேசாய், தன் மீது தவறில்லை என வாதிட்டார். தேசாய் நினைத்திருந்தால், தன் மகளுக்கு ஒரு மருத்துவமனையே கட்டித் தந்திருக்க முடியும். தேசாய் எங்கே... இவர்கள் எங்கே...
நவீன கம்ப்யூட்டர் உலகில், தவறுகள் நடக்காது என்று எல்லாரும் எண்ணினோம். கம்ப்யூட்டரில் திருத்தி, ஊழல் செய்ய முடியும் என்றால், உண்மையான குடிமகன் ஒவ்வொருவனும், போலி நாட்டில் வாழும் போலி மக்கள் போல் உள்ளனர்.
சிராஜ் சுல்தானா - முதுகலை ஆசிரியர்
நன்றி: தினமலர்
No comments:
Post a Comment