FILE
பாபர் மசூதியை இடிப்பதற்கு இர(த்)த யாத்திரை மேற்கொண்டு, அந்த இடிப்பிற்கு தலைமை தாங்கி, உற்சாகப்படுத்தி நடத்தி முடித்த இந்த நாட்டின் முன்னாள் துணைப் பிரதமர் லால் கிஷண் அத்வானி முதல் குஜராத்தில் மிகப்பெரிய கலவரத்தை ‘வெற்றிகரமாக’ நடத்தி முடித்த நரேந்திர மோடி வரை, அமைச்சர் சிதம்பரம் மீது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுகமாக பாய்ந்து பாய்ந்து தாக்கிக்கொண்டிருக்கின்றனர்.
ரெய்பூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்தியத் தலைவர் நித்தின் கட்கரியும் தன் பங்கிற்கு சிதம்பரத்தை கடித்துக் குதறியுள்ளார். அவர் கூறிய குற்றச்சாற்றுதான் சற்று வேடிக்கையானது. “காவி பயங்கரவாதம் என்று கூறியதன் மூலம் உள்துறை அமைச்சர் இந்தியப் பண்பாட்டை இழிவுபடுத்தியுள்ளார்” என்று குற்றம் சாற்றியுள்ளார்.
அதுமட்டுமல்ல, நமது நாட்டின் தலைவர்கள் அனைவரும் - பிரதமரில் இருந்து முதல்வர்கள் வரை - கூறுவதை கட்கரியும் கூறியுள்ளார். அதாவது, பயங்கரவாதத்திற்கு நிறமும் இல்லை, மதமும் இல்லை, சாதியும் இல்லை என்று தனது தெளிவை வெளி்ப்படுத்தியுள்ளார்.
நமது நாட்டின் பண்பாட்டுக் காப்பாளர்களான சங் பரிவாரின் அரசியல் கிளையின் தலைவர்கள் இந்த அளவிற்கு கடிந்து குற்றம் சாற்றுவதற்கு அமைச்சர் சிதம்பரம் என்னதான் சொல்லிவிட்டார்? என்பதை முதலில் பார்க்க வேண்டும். அவர் கூறியதில் உண்மையேதும் இருக்கிறதா என்பதை அடுத்து ஆராய வேண்டும்.
மதத்தின் பெயரால் இளையோரை...
ஆகஸ்ட் 25ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நடந்த காவல் துறை இயக்குனர்கள், தலைமைக் ஆய்வாளர்கள் மாநாட்டில் பேசிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், “இதுவரை நடந்துள்ள பல்வேறு குண்டு வெடிப்புக்களை புலனாய்வு செய்ததில் காவி பயங்கரவாதம் எனும் புதிய வடிவம் தலையெடுத்துள்ளது தெரியவந்துள்ளது” என்று பேசினார்.
இந்தியாவின் உள்துறை அமைச்சராகவுள்ள சிதம்பரம், இவ்வாறு பேசியதற்கு அடிப்படையென்ன? பல்வேறு குண்டு வெடிப்புகளில் சில சாமியார்களும், அவர்களின் தொடர்புகளும் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதும், அந்த ஆதாரங்களின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதும், அந்த ஆதாரங்களின் அடிப்படையில் நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பதுமே காரணமாகும்.
2007ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்ற சம்ஜெளதா விரைவு இரயிலில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 68 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். இந்தக் குண்டு வெடிப்பிற்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகளே காரணமாக இருப்பார்கள் என்று ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்டது. ஆனால் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. ஓராண்டுப் புலனாய்விற்குப் பிறகு தெரியவந்த தகவல்தான் நாட்டையே திடுக்கிட வைத்தது.
மராட்டிய மாநிலம் மாலேகானிலுள்ள மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் ஈடுபட்டவர்களே, சம்ஜெளதா இரயிலிற்கும் குண்டு வைத்தவர்கள் என்பதே அந்த உண்மையாகும். மாலேகான் குண்டு வெடிப்பில் இந்திய இராணுவத்தில் பணியாற்றி வந்த லெப்டினென்ட் கர்னல் பிரசாத் புரோகித் என்பவர்தான் குண்டுகளில் பயன்படுத்தப்பட்ட ஆர்டிஎக்ஸ் வெடிபொருளை தருவித்துத் தந்தவர் என்பதும், இவர் அபினவ் பாரத் என்ற அமைப்பில் செயல்பட்டு வந்தவர் என்பதையும் கண்டு பிடித்தனர்.
இவர் யாரோடு சேர்ந்து இந்த குண்டு வெடிப்புச் சதித் திட்டம் தீட்டினார் என்பைத மராட்டிய காவல் துறையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர். அவர்கள் மட்டும் தனியாக அல்ல, உத்தரப் பிரதேச காவல்துறையுடன் இணைந்த பல்வேறு குண்டு வெடிப்புகள் குறித்து புலனாய்வு செய்தபோது தெரிந்த உண்மையே நாட்டை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
“பிரக்யான் தாக்கூர், தயானந்த் பாண்டே (இவர்கள் இருவரும் காவி தரித்த சாமியார்கள்) ஆகியோருடன் சேர்ந்தே பிரசாத் புரோகித் சதித் திட்டம் தீட்டி செயல்பட்டுள்ளார். மாலேகான் மட்டுமல்ல, பல குண்டு வெடிப்புக்களில் இவர்கள் தொடர்புடையவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது” என்று நாசிக் நீதிமன்றத்தில் அவர்களின் விசாரணைக் காவலை நீட்டிக்கக் கோரி வாதிட்ட மராட்டிய காவல் துறையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவிற்கு வாதிட்ட அரசு வழக்கறிஞர் அஜய் மிசார் கூறியுள்ளார்.
பிரசாத் புரோகித் காஷ்மீருக்குச் சென்று 60 கி.கி. ஆர்டிஎக்ஸ் வெடிபொருளை பெற்றுக் கொண்டு வந்ததாகவும், அதனை பக்வான் என்பவரிடம் கொடுத்ததாகவும் விசாரணையில் கூறியுள்ளார். அவர் கொடுத்த சரக்கை பயன்படுத்தித்தான் சம்ஜெளதா விரைவு இரயிலில் குண்டு வைக்கப்பட்டுள்ளது.
சம்ஜெளதா விரைவு இரயில் குண்டு வெடிப்பு, ஹைதராபாத்திலுள்ள மெக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு, மாலேகான் குண்டு வெடிப்பு, ஆஜ்மீர் தர்க்கா குண்டுவெடிப்பு ஆகியன அபினவ் பாரத் எனும் இந்த சாமியார் கும்பலின் சதி வேலை என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாகியுள்ளது.
ஆனால் காவி உடை தரித்தவர்கள் இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபட்டிருந்தால் அது கண்டிக்கப்பட வேண்டியது என்று கூட பாரதிய ஜனதா கட்சி கண்டனம் வெளியிடவில்லை. மாறாக, அவர்களை கைது செய்தது தவறு என்று நாடாளுமன்றத்திலேயே குரல் கொடுத்தது.
அபினவ் பாரத் என்கிற இந்த அமைப்பில் உள்ளவர்களுக்கும் ஆர்.எஸ்.எஸ். விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் ஆகிய சங் பரிவார் அமைப்புகளில் உள்ளவர்களுக்கும் தொடர்பு உள்ளதும் தெரியவந்துள்ளது. இவர்களுக்கு இடையே நடந்த தொலைபேசி உரையாடலை ஒலி பரப்பிய காரணத்தினால்தான் ஹெட்லைன்ஸ் டுடே தாக்கப்பட்டது. இதே ஆதாரத்தை டெஹல்கா இணையத் தளமும் வெளியிட்டது.
ஆக தாக்குதல் நடத்துவதற்காக துவக்கப்பட்டுள்ள ஒரு அமைப்புதான் அபினவ் பாரத் என்று தெரிகிறது.
இதைக் குறிப்பிடும் வகையில்தான் காவி பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது, எச்சரிக்கையாய் செயல்படுங்கள் என்று காவல் துறை இயக்குனர்களையும், தலைமை ஆய்வாளர்களையும் உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரம் எச்சரித்துள்ளார். இதில் என்ன தவறு உள்ளது?
இவர்கள் கூறியதை இப்படி எடுத்துக் கொள்ளலாம். எங்களின் துணை அமைப்புகளோடு தொடர்புடைய சில காவிகளை வைத்து ஏன் ஒட்டுமொத்தமாக காவியை தொடர்புபடுத்திப் பேசிகிறீர்கள் என்று கேட்கிறார்களா அத்வானியும் கட்கரியும் மோடியும்?
அப்படியென்றால் சரிதான். காவி பயங்கரவாதம் என்று கூறுவதற்கு பதிலாக காவி தரித்த பயங்கரவாதிகள் என்று இவர்களை குறிப்பிடலாம். பசுத்தோல் போர்த்திய புலி என்பதுபோல் காவி தரித்த பயங்கரவாதிகள்.
பயங்கரவாதத்தை அரசியலாக்கக் கூடாதா?
மற்றொரு குற்றச்சாற்றையும் கட்கரி கூறியுள்ளார். உள்துறை அமைச்சர் பயங்கரவாதத்தை அரசியல் ஆக்குகிறார் என்று கூறியுள்ளார். அதில் என்ன தவறு? பயங்கரவாதம் இந்த நாட்டின் அமைதியையும் பாதுகாப்பையும் அச்சுறுத்தும் ஒரு பிரச்சனை என்றாகிவிட்டப் பிறகு அதனை ஏன் அரசியலாக்கக் கூடாது?
FILE
ஜனநாயகம், சமூக நீதி, மத நல்லிணக்கம், மதச் சார்ப்பற்ற அரசியல் என்ற நாகரீக பொது அரசியல் கோட்பாடுகள் எதையும் மதிக்காத ஒரு கொள்கை கொண்ட வன்முறை அரசியலாளர்கள், பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்குத் தகுதி பெற்றவர்கள்தானா?
இந்தியாவிற்கு இன்றைக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள பயங்கரவாத செயல்களுக்கு தங்களுடைய மதவாத நடவடிக்கைகளால் வித்திட்ட கட்சியும் அதற்கு அடித்தளமாக உள்ள அமைப்புகளும் பயங்கரவாதத்தைப் பற்றிப் பேசுவதை விட வேறு என்ன வேடிக்கை விநோதம் இருக்க முடியும்?
No comments:
Post a Comment