Showing posts with label அயோத்தி. Show all posts
Showing posts with label அயோத்தி. Show all posts

Thursday, October 21, 2010

அயோத்தி: இராமர் பிறந்த பூமியா? சீதை மறித்த பூமியா?

உத்தரபிரதேச மாநிலம் ஃபைசாபாத் மாவட்டத்திலுள்ள அயோத்தியில், சங் பரிவார் அமைப்புகளால் இடித்துத் தள்ளப்பட்ட பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்ற இந்துக்களின் நம்பிக்கையை ஏற்றுக் கொண்டு, பாபர் மசூதி - இராமர் ஜென்ம பூமி வழக்கில் அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்ட நிலையில், அங்கு இராமர் பிறந்திருக்க முடியுமா? அல்லது அங்கு இராமருக்கு கோயில் இருந்திருக்க முடியுமா? என்பது குறித்து ரகு வம்சத்தை எடுத்துக் காட்டி ஒரு எதிர் விளக்கத்தை தருகிறார் சத்தியமங்கலம் என். நாகராஜன்.

FILE
84 வயதாகும் திரு. எஸ்.என், நாகராஜன் பொதுவுடைமை இயக்கதில் நீண்ட காலம் பணியாற்றியவர். கீழை மார்க்சிய சிந்தையாளர். அதுமட்டுமின்றி, ஆழ்வார்களின் தென் கலை வைணவப் பின்னணியும், அதில் மிகுந்த ஈடுபாடும் கொண்டவர். இன்றைக்கு விவசாயத்தையும், சுற்றுச் சூழலையும் காப்பாற்ற தொடர்ந்து பணியாற்றி வருபவர். நமது நாட்டின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் அறிந்த ஒரு சீரிய சிந்தனையாளர்.

இவர் அயோத்தியில் இராமர் பிறந்திருக்க முடியாது என்று வாதிடுகிறார். அவருடைய வாதம் வருமாறு:

“அயோத்தி அரசன் தசரதனின் மனைவியான கோசலை, குசால இராஜ்யத்தின் இளவரசியாவார். இவரை தசரதன் கடத்திச் சென்றோ அல்லது கடி மனமோ (காந்தர்வ விவாஹம்) புரியவில்லை, முறைப்படியே மணம் புரிந்துள்ளார். எனவே, தொன்று தொட்டு இந்நாட்டில் நிலவிவரும் மரபுப் படி, நிறைமாத கர்பினியான ஒரு பெண், தனது தாய் வீட்டிற்குச் சென்று பிள்ளை பெறுவதைப்போல, தசரதனின் மனைவியான கோசலையும் தனது தாய் வீடான (இராஜ்யமான) குசால மன்னன் அரண்மனைக்குச் சென்று அங்குதான் இராமனை பிரசவித்திருக்க முடியும்.

எனவே, அயோத்தியில்தான் இராமன் பிறந்தார் என்பதற்கு அடிப்படையேதுமில்லை. எந்தப் புராணத்திலும் அதற்கான ஆதாரமும் இல்லை.

இரண்டாவதாக, அயோத்தி புண்ணிய பூமியா? என்ற கேள்வியும் உள்ளது. இராவணனின் பிடியில் இருந்து சீதையை காப்பாற்றி வந்த இராமன், அவளுடைய கற்பின் தூய்மையை நிரூபிக்க அக்னி பிரவேசம் செய்ய முற்பட்டபோது, இராமன் தடுக்கவில்லை. சீதை அக்னி பிரவேசத்தை நிறைவேற்றிய இடம் அயோத்தியாகும். இந்த விவரம் வால்மீகி இராமயணத்தில் உள்ளது. அக்னிப் பிரவேசத்தின் போது சீதையை அவளுடைய தாயான பூமிதேவி தன்னுள் எடுத்துக் கொண்டாள் என்று அனைத்துப் புராணங்களும் கூறுகின்றன.

இதில் குறிப்பிடத்தக்கது ரகு வம்சம். காளிதாசர் எழுதிய ரகு வம்சத்தில் அயோத்தி ஒரு புனித தலமாக சித்தரிக்கப்படவில்லை. அதை சீதை மறித்த பூமியாகவே காட்டுகிறார் காளிதாசர். ரகு வம்சத்தில் உத்தர காண்டம் மிக முக்கியமானது. அதில் இந்த விவரம் உள்ளது.

தனது மனைவி சீதை மீது இராமன் சந்தேகம் கொண்ட நிலையிலேயே, சீதையை தனது ஆசிரமத்திற்கு அழைத்துச் செல்கிறார் வால்மீகி. இராமனின் பிள்ளைகளான லவ, குசா இருவரும் வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில்தான் பிறந்தனர். அங்குதான் வளர்ந்தும் வந்தனர். அவர்கள் 6 வயதைக் கடந்த நிலையில் அவர்களை இலக்குவன் அயோத்திக்கு அழைத்து வருகிறார். அப்போது வால்மீகியும் உடன் வருகிறார்.

அப்போது லவ, குசா இருவரும் யாருக்குப் பிறந்தவர்களோ என்ற சந்தேகத்தை ஒருவன் எழுப்ப (வண்ணான் என்று கூறுகின்றனர்), சீதை அக்னி பிரவேசம் செய்ய முற்படுகிறார். அதை இராமன் தடுக்கவில்லை. சீதை அக்னி பிரவேசம் செய்த நிலையில், அவளுடைய தாயான பூமிதேவி சீதையை தன்னோடு அழைத்துக் கொண்டு பூமிக்குள் சென்று விடுகிறாள்.

தங்களது தாய் மறித்த இடத்தில் நாங்கள் வாழ் மாட்டோம் என்று கூறிவிட்டு, லவ, குசா இருவரும் அயோத்தியை விட்டு வெளியேறுகின்றனர். அவர்களோடு அயோத்தி மக்களும் வெளியேறி விடுகின்றனர். அத்துடன் அயோத்தியே காலியாகிவிடுகிறது.

அயோத்தியை விட்டு வெளியேறி, வேறொரு இடத்தில் வாழ்ந்துவந்த குசாவின் கனவில் வரும் அயோத்தியின் தேவதை, “உனது தந்தை ஆண்ட பூமி இன்று வனமாகிவிட்டது. அங்கு புலிகளும் மற்ற கொடிய விலங்குகளும் தான் வாழ்கின்றன. அங்கு நீங்கள் வந்து மீண்டும் அயோத்தியை புனர் நிர்மாணம் செய்யுங்கள” என்று கூறியதா காளிதாசர் எழுதியுள்ளார்.

இந்த விவரத்தை ரகு வம்சத்தில் 13வது சர்க்கத்தில் காளிதாசர் வர்ணிக்கிறார். “அதேதரே சப்த ரகுப்பிரவீராக... என்று தொடங்குகிறது அந்த பாடல்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டப் பிறகு டெல்லியில் தீனதயாள் உபாத்தியாய ஆய்வு மையத்தில் ‘அக்டோபர் புரட்சியும் அதன் விளைவுகளும்’ என்ற தலைப்பில் பாரதிய ஜனதா கட்சி ஏற்பாடு செய்து, ஜே.டி.சேத்தி துவக்கி வைத்த கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு பேசியபோது இதை நான் தெரிவித்தேன். 13வது சர்க்கத்தை அப்படியே அங்கு நான் மனப்பாடமாக ஒப்பித்து விளக்கமும் அளித்தேன். அந்த நிகழ்ச்சியில் பின்னாளில் பிரதமராக வந்த ஐ.கே.குஜ்ரால், நேபாள நாட்டின் இந்திய தூதராக இருந்த பீமல் மிஸ்ரா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.பி.பர்தன், சுப்ரத்தா பானர்ஜி, இமிதியாஸ் அகமது, சுபாஷ் சந்திர போசின் சகோதரர் போஸ், பாரதிய ஜனதா கட்சியின் நானாஜி தேஷ்முக், எம்.எம்.ஜோஷி, கே.ஆர்.மசானி ஆகியோரெல்லாம் இருந்தனர். நான் கூறியதற்கு ஒருவரும் எதிர்க்கருத்து கூறவில்லை.

ரகு வம்சத்தில் உத்தர காண்டத்தில் கூறப்பட்டுள்ள விவரம் இது. ஆனால் கம்ப இராமாயணத்தில் இந்த உத்தரகாண்டம் பகுதியே இருக்காது. அதனை கவி கம்பர் தவிர்த்துவிடுகிறார். ஏனெனில் உத்தரகாண்டத்தைக் கூறினால், சீதை மறித்ததைக் கூற வேண்டும், அது இராமனுக்கு இழுக்காக ஆகுமல்லவா?

மீனவன் குகனோடு ஐவரானோம் என்று கூறியவன் இராமன், ஜடாயுவிற்கு அண்ணனாக நின்று ஈமக் கிரியை செய்தவர் இராமன். சபரியின் எச்சிலை உண்கிறார். அவளைத் தாயாராக பாவிக்கிறார். சுக்ரீவனையும், விபீடனனையும் தம்பிகளாக ஏற்றுக் கொள்கிறார். இப்படிப்பட இராமனுக்கு, உத்தரகாண்டத்தைக் கூறுவதால் பெருமை குறைந்துவிடாதா? எனவே தவிர்த்து விடுகிறார் கம்பர்.

கம்பன் காட்டிய இந்த இராமனைத்தான் தமிழ்நாட்டு மக்கள் வழிபடுகின்றனர். இதனை தமிழும், சமஸ்கிருதமும் அறிந்த ஒரு உபய வேதாந்தியால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். நான் அந்த பாரம்பரியத்தில் வந்தவன். இந்த அறிதலை அத்வானியிடமிருந்தோ அல்லது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரிடமிருந்தோ எதிர்பார்க்க முடியாது” என்று கூறுகிறார் திரு.எஸ்.என். நாகராஜன்.

Sunday, October 3, 2010

இந்திய மக்கள் அனைவரும் சட்டத்தின் முன் சமம் அல்ல -- பாபர் மசூதி தீர்ப்பு

1. இராமன் இந்தியாவில் நம்பப்படும் ஆயிரக்கணக்கான சாமிகளில் ஒருவன். ஆனாலும், இராமனே முதன்மையான நாயகன் என்பதுபோல பிற்காலத்தில் நம்பவைக்கப்பட்டான். (இந்தியவின் பெரும்பான்மை மக்களுக்கு இன்றும் இராமன் ஒரு முதன்மை தெய்வம் அல்ல).

2. அயோத்தி இராமர் கோவிலை இசுலாமிய மன்னர்கள் எவரும் இடிக்கவில்லை. இராமர் கோவில் இடிக்கப்பட்டதாகக் கூறப்படும் காலத்தில் வாழ்ந்தவர் துளசி தாசர். அவர் எழுதிய ஆவாதி மொழி இராமாயணத்தில் - கோவில் இடிக்கப்பட்டது பற்றி எந்த குறிப்பும் இல்லை.

3. குறிப்பிட்ட அந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்பது இந்துத்வ சங்கப்பரிவாரம் உருவாக்கிய ஒரு கட்டுக்கதை. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

4. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மதச்சண்டையை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் இசுலாமிய மன்னர்கள் இந்துக்கோவிலை இடித்ததாக கட்டுக்கதைகளை பரப்பினர். அதனை பின்னர் இந்துத்வ தீவிரவாதிகளும் பயன்படுத்தி வருகின்றனர். (ஒருமன்னன் மற்றொரு நாட்டின்மீது படையெடுக்கும்போது அங்குள்ள கோவில்களை இடிப்பதோ, எரிப்பதோ, கொள்ளையடிப்பதோ வழக்கம். இதனை பல இந்து மன்னர்களும் செய்துள்ளனர்.)

எனினும், பாபரின் வரலாற்றைக் கூறும் ‘பாபரிநாமா’ ஏன்ற அரிய வரலாற்று நூலில் அவர் இந்துக் கோவில்களை இடித்ததாகச் செய்திகளோ, குறிப்புகளோ இல்லை. அதே நூலில் கி.பி 11.01.1527 அன்று தனது புதல்வர் ஹூமாயூனுக்கு விட்டுச் சென்ற புகழ்பெற்ற உயிலில் பாபர் பின்வருமாறு கூறுகிறார் :

‘‘அருமை மகனே! வகை வகையான மதங்களைப் பின்பற்றுபவர்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள். இத்தகைய நாட்டின் அரசாட்சியை மன்னாதி மன்னராம் கடவுள் உன்னிடம் ஒப்படைத்ததற்கு நீ நன்றி செலுத்த வேண்டும். ஆகவே நீ பின்வருவனவற்றைக் கடமைகளாக அமைத்துக் கொள்”

“நீ உனது மனதைக் குறுகிய மத உணர்வுகள், தப்பெண்ணங்கள் பாதிக்க அனுமதிக்கக் கூடாது. மக்களின் எல்லா பிரிவினர்களும் பின்பற்றுகின்ற மதசம்பந்தமான மென்மையான உணர்ச்சிகளுக்கும் மதப்பழக்கங்களுக்கும் நீ உரிய மதிப்புக் கொடுத்து பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க வேண்டும்.”

“நீ மற்ற சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்களை ஒரு போதும் இடித்துச் சேதப்படுத்தக் கூடாது. நீ எப்போதும் நியாயத்தை நேசிப்பவனாக விளங்க வேண்டும். இதனால் மன்னருக்கும் மக்களுக்குமிடையே சுமுகமான இனிய உறவு நிலவ முடியும். அப்போதுதான் அமைதியும் திருப்தி உணர்வும் நிலைபெறும்.”

5. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பாபர் மசூதிக்குள் 1949 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ராம் லல்லா சிலைகள் சட்டவிரோதமான முறையில் வைக்கப்பட்டன. இந்த அநீதியான செயலை இந்திய அரசு தடுக்கத்தவறியது மட்டுமின்றி, திருட்டுத்தனமாக வைக்கப்பட்ட சிலைகளை அப்புறப்படுத்தவும் தவறிவிட்டது.

6. ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதக் கூட்டத்தின் திட்டமிட்ட சதிச்செயலால், 1992 டிசம்பர் 6 அன்று, இந்திய அரசின் பாதுகாப்பில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

7. அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த அலகாபாத் நீதிமன்றம் - அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரான இந்துத்வ பயங்கரவாதிகளின் அநீதியான செயல்களை அங்கீகரித்துள்ளது.

படிப்பினை: இந்திய மக்கள் அனைவரும் சட்டத்தின் முன் சமம் அல்ல.

ஒரு குற்றச்செயல் தண்டனைக்குறியதா அல்லது போற்றுதலுக்குறியதா என்பது குற்றமிழைப்பவர் சார்ந்திருக்கும் சாதி, மதத்தைப் பொறுத்தது.

தேங்க்ஸ் டு : பசுமை பக்கங்கள்...

Wednesday, April 8, 2009

அயோத்தி: முஸ்லீம்கள் பராமரித்த இராமன், துரோகம் செய்த பா.ஜ.க - தலைமை பூசாரி பேட்டி

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், பா.ஜ.க. கும்பல் வழக்கம் போல அயோத்தி பிரச்சினையைக் கையிலெடுத்து இந்துமதவெறியைப் பரப்ப முயற்சிக்கிறது. இந்நிலையில் ராமனுக்காகவோ அல்லது ராமன் கோவில் கட்டுவதற்காகவோ பா.ஜ.க. துரும்பைக் கூட அசைக்கவில்லை என பா.ஜ.க.வின் அரசியல் நாடகத்தைத் திரைகிழித்து, ராமஜென்ம பூமியின் தலைமைப் பூசாரி சத்யேந்திரதாஸ் பேட்டியளித்துள்ளார். “தெகல்கா” ஆங்கில வார ஏட்டில் நிருபர் அஜித் சாகியின் கேள்விகளுக்கு அவர் அளித்துள்ள பதில்கள் இவை:

பா.ஜ.க. ராமன் கோவில் பிரச்சினையில் பின்வாங்கவில்லை; கோவில் கட்டுவதில் உறுதியாக உள்ளது என எல்.கே. அத்வானி கூறியுள்ளாரே?

ராமஜென்ம பூமியின் தலைமைப் பூசாரி சத்யேந்திரதாஸ்.

ராமஜென்ம பூமியின் தலைமைப் பூசாரி சத்யேந்திரதாஸ்.

அவர் புளுகுகிறார். ராமன் கோவில் விவகாரத்தை பா.ஜ.க. அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே பயன்படுத்தியுள்ளது. ராமனுக்காகவோ அல்லது கோவில் கட்டுவதற்காகவோ அவர்கள் துரும்பைக் கூட அசைக்கவில்லை. இந்த விவகாரத்தில் பா.ஜ.க.வும், விஷ்வ ஹிந்து பரிசத்தும் சம்பந்தப்பட்டுள்ளவரை, ஒருபோதும் பிரச்சனை தீராது.

ஆனால், ராம ஜென்ம பூமியை விடுவிக்கத்தானே பாபர் மசூதி இடிக்கப்பட்டது?

பாபர் மசூதியை இடித்தது குழந்தை ராமனுக்கு (மசூதிக்குள் வைக்கப்பட்டிருந்த ராமன் பொம்மை) துயரத்தையே உருவாக்கியுள்ளது. பாபர் மசூதி இருந்தவரை அம்மசூதி, ராமன் சிலையை வெயிலிலும் மழையிலும் பாதுகாத்து வந்தது. ஆனால், இப்போதிருக்கும் தற்காலிகக் கூரையில் மழைத் தண்ணீர் ஒழுகுகிறது. மழைத் தண்ணீரில் இருந்து சிலையைப் பாதுகாக்க நான் ஒரு குடையை

குழந்தை ராமனின் கொட்டகை. அருகில் செல்ல இயலாத காரணத்தால் பின்புரத்திலிருந்து எடுத்த படம்

குழந்தை ராமனின் கொட்டகை. அருகில் செல்ல இயலாத காரணத்தால் பின்புரத்திலிருந்து எடுத்த படம்

வைக்க வேண்டியதாயிற்று. பாபர் மசூதி இருந்தவரை ராமன் சிலை பட்டாடைகளுடன் ஜொலித்தது. இன்றோ கந்தலாடை உடுத்திப் பிச்சைக்காரனைப்போல நிற்கிறது. மசூதி தகர்ப்புக்கு முன்பு ராமனைப் பக்தர்கள் மிக அருகில் சென்று தரிசிக்க முடியும். ஆனல் இன்று, குறைந்தபட்சம் 16 மீட்டர் தள்ளி நின்றுதான் பக்தர்கள் கும்பிட வேண்டும். வருகின்ற பக்தர்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துவிட்டது. பாதுகாப்புப் படையின் புண்ணியத்தால் கோவிலுக்கு வருபவர்கள் சுற்றிச் சுற்றி நெடுந்தூரம் நடந்துவர வேண்டியுள்ளது. போலீசுத்துறை ஒவ்வொரு பக்தரையும் தீவிரமாகப் பரிசோதிக்கிறது. சாதாரண பூசைப் பொருட்களைக்கூட கொண்டுவர யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. பஜனைப் பாடல்களோ, ராமகாதையோ ஒலிப்பதில்லை. ஒலி பெருக்கிகள் கூட மவுனமாகிவிட்டன. முதல்முறை வருபவர்கள் மறுமுறை வரக்கூடாது என முடிவு செய்து விடுகின்றனர். பாபர் மசூதி இருந்தவரை இப்படியெல்லாம் நடந்ததில்லை. ஆயிரக்கணக்கானோர் வந்து சென்றனர். ஆனால் பாபர் மசூதியை இடித்ததன் மூலம் குழந்தை ராமனின் கோவிலை ராமபக்தர்கள் சிதைத்துவிட்டனர்.

இயல்பான மதச்சாபின்மை: இந்துக்களுக்கு தனிச்சிறப்பான கண்ணாடி வளையல் மற்றும் வழிபாட்டுக்கான பொருட்களை விற்கும் அயோத்தியிலுள்ள முஸ்லிம் கடை.

இயல்பான மதச்சாபின்மை: இந்துக்களுக்கு தனிச்சிறப்பான கண்ணாடி வளையல் மற்றும் வழிபாட்டுக்கான பொருட்களை விற்கும் அயோத்தியிலுள்ள முஸ்லிம் கடை.

எப்போது ராமர் கோவில் கட்டப்படும் என எண்ணுகிறீர்கள்?

எப்போது இந்துக்களின் உணர்வுகளும் முஸ்லீம்களது உணர்வுகளும் இவ்விசயத்தில் ஒன்றுபடுகிறதோ, அப்போதுதான் அது கட்டப்படும். எப்போது இரு மதத்தவரின் மனதிலும் “உலகிலேயே சிறந்த நாடு நம் இந்தியா - சாரே ஜஹான் சே அச்சா” எனும் கவிஞர் இக்பாலின் வரிகள் பதிகின்றதோ அப்போது.

அயோத்தியில் விஷ்வ இந்து பரிஷத்துக்கு ஆதரவு எப்படி இருக்கிறது?

பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு ஒன்றிரண்டு பழைய ஆட்களைத் தவிர வேறு எந்த சாதுக்களோ, மடாதிபதிகளோ விஷ்வ இந்து பரிஷத்தில் சேரவில்லை. அவர்கள் மதத்தின் பெயரால் இந்தியர்களைத் தவறாக வழிநடத்துகின்றனர் என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். அவர்கள் தில்லி அரியணையைக் கைப்பற்றுவதற்காக ராமனின் நாமத்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

இதனால் நீங்கள் இந்துத்துவா சக்திகளிடையே எதிரிகளை சம்பாதிக்கவில்லையா?

அவர்கள் என்னைத் தலைமை அர்ச்சகர் பதவியிலிருந்து நீக்கப் பலமுறை முயன்றார்கள். எனக்கு ராமனின் மீது பக்தியில்லை என்றும் சொல்லிப் பார்த்தார்கள். பைசாபாத் ஆணையரிடம் என்னை நீக்கச் சொல்லி மனுக் கொடுத்தனர். ஆனால் மசூதி இடிப்பு வழக்கு முடியும் வரை தற்காலிகக் கோவிலில் எந்தவொரு மாற்றமும் செய்யக் கூடாது என வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பு, எனது தலைமை அர்ச்சகர் பதவியைக் காப்பாற்றி வருகிறது.

யார் ராமர்கோவிலை நிர்வகிக்கின்றனர்?

பைசாபாத் ஆணையாளர்தான் பொறுப்பாளர். எல்லா காணிக்கைகளும் ஒரு வங்கிக் கணக்கில் போடப்படும். அதிலிருந்து ஒரு பகுதி “குழந்தை ராமனின்” பராமரிப்புக்குச் செலவிடப்படும். அதுவும் நான் ஊடகங்களில் முறையிட்டதற்குப் பிறகு, சில நேரங்களில் மிகுந்த இடர்ப்பாடுகளுக்கிடையில்தான் கிடைக்கிறது. மீதமுள்ள பணத்தைத் தொடமுடியாது.

அயோத்தி ராமஜென்ம பூமி அருகே இந்து சன்னியாசிகளுக்கு பாதரட்சைகளை தயாரித்து விற்கும் முஸ்லிம்: அயேத்தியின் உண்மையான குடிமகன்.

அயோத்தி ராமஜென்ம பூமி அருகே இந்து சன்னியாசிகளுக்கு பாதரட்சைகளை தயாரித்து விற்கும் முஸ்லிம்: அயேத்தியின் உண்மையான குடிமகன்.

அயோத்தி முஸ்லீம்களைப் பற்றி உங்களது கருத்து என்ன? அவர்களில் ஒருவர் பாபர் மசூதியை மீட்க வேண்டும் என்று வழக்கு தொடுத்துள்ளாரே?

அவர்கள் அயோத்தியின் உண்மையான குடிமக்கள். நமது சிலைகளுக்கு மாலைகட்டிக் கொடுப்பதும், துணிகளைத் தைத்துத் தருவதும் அயோத்தி முஸ்லீம்கள்தான். இந்த முஸ்லீம்கள் கொடியவர்களாக இருந்தால், எங்கள் விழாவுக்கு அவர்கள் கொடுக்கும் பட்டாசுகளில் ஒரு வெடிகுண்டைச் சேர்த்து வைத்து அனுப்பி இருக்க முடியுமே! ஆனால் அவர்கள் இதுவரை அப்படி செய்யவில்லை; இனியும் அப்படிச் செய்யப் போவதில்லை.

இந்தப் பிரச்சனைக்கு என்னதான் தீர்வு?

இந்தப் பிரச்சனைக்கு அரசியல்வாதிகள் என்றைக்கும் தீர்வுகாணப் போவதில்லை. இந்து ஒருவரையும், முஸ்லீம் ஒருவரையும் தேர்வுசெய்து அவர்களிருவரும் பேசி இதற்கு ஒரு தீர்வுகாணச் சொல்லுங்கள். அதனை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் என உறுதி கூறுங்கள். அந்த மட்டில் சுலபமானதுதான்.

இந்துவெறியர்கள் கடவுள் ராமன் மீது பற்றோ, பக்தியோ கொண்டவர்களல்ல. ராமனை வைத்து ‘இந்து’க்களை அணிதிரட்டிக் கொண்டு முஸ்லிம்களைத் தாக்கி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி, இந்துவெறி பாசிச பயங்கரத்தை நிறுவுவதே அவர்களின் நோக்கம். அதனால்தான் ராமன் பொம்மையை அம்போவென விட்டுவிட்டு ராமன் கோயிலைக் கட்டப்போவதாக இன்னமும் வெறியூட்டி வருகிறார்கள். இந்துவெறியர்களின் முகவிலாசத்தையும், மத நம்பிக்கைக்கும் மதவெறிக்கும் உள்ள வேறுபாட்டையும் உலகுக்கு உணர்த்திவிட்டு, கடவுள் ராமன் பொம்மை அயோத்தியில் பிச்சைகாரனாக நின்று கொண்டிருக்கிறது.