மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், பா.ஜ.க. கும்பல் வழக்கம் போல அயோத்தி பிரச்சினையைக் கையிலெடுத்து இந்துமதவெறியைப் பரப்ப முயற்சிக்கிறது. இந்நிலையில் ராமனுக்காகவோ அல்லது ராமன் கோவில் கட்டுவதற்காகவோ பா.ஜ.க. துரும்பைக் கூட அசைக்கவில்லை என பா.ஜ.க.வின் அரசியல் நாடகத்தைத் திரைகிழித்து, ராமஜென்ம பூமியின் தலைமைப் பூசாரி சத்யேந்திரதாஸ் பேட்டியளித்துள்ளார். “தெகல்கா” ஆங்கில வார ஏட்டில் நிருபர் அஜித் சாகியின் கேள்விகளுக்கு அவர் அளித்துள்ள பதில்கள் இவை:
பா.ஜ.க. ராமன் கோவில் பிரச்சினையில் பின்வாங்கவில்லை; கோவில் கட்டுவதில் உறுதியாக உள்ளது என எல்.கே. அத்வானி கூறியுள்ளாரே?
அவர் புளுகுகிறார். ராமன் கோவில் விவகாரத்தை பா.ஜ.க. அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே பயன்படுத்தியுள்ளது. ராமனுக்காகவோ அல்லது கோவில் கட்டுவதற்காகவோ அவர்கள் துரும்பைக் கூட அசைக்கவில்லை. இந்த விவகாரத்தில் பா.ஜ.க.வும், விஷ்வ ஹிந்து பரிசத்தும் சம்பந்தப்பட்டுள்ளவரை, ஒருபோதும் பிரச்சனை தீராது.
ஆனால், ராம ஜென்ம பூமியை விடுவிக்கத்தானே பாபர் மசூதி இடிக்கப்பட்டது?
பாபர் மசூதியை இடித்தது குழந்தை ராமனுக்கு (மசூதிக்குள் வைக்கப்பட்டிருந்த ராமன் பொம்மை) துயரத்தையே உருவாக்கியுள்ளது. பாபர் மசூதி இருந்தவரை அம்மசூதி, ராமன் சிலையை வெயிலிலும் மழையிலும் பாதுகாத்து வந்தது. ஆனால், இப்போதிருக்கும் தற்காலிகக் கூரையில் மழைத் தண்ணீர் ஒழுகுகிறது. மழைத் தண்ணீரில் இருந்து சிலையைப் பாதுகாக்க நான் ஒரு குடையை
வைக்க வேண்டியதாயிற்று. பாபர் மசூதி இருந்தவரை ராமன் சிலை பட்டாடைகளுடன் ஜொலித்தது. இன்றோ கந்தலாடை உடுத்திப் பிச்சைக்காரனைப்போல நிற்கிறது. மசூதி தகர்ப்புக்கு முன்பு ராமனைப் பக்தர்கள் மிக அருகில் சென்று தரிசிக்க முடியும். ஆனல் இன்று, குறைந்தபட்சம் 16 மீட்டர் தள்ளி நின்றுதான் பக்தர்கள் கும்பிட வேண்டும். வருகின்ற பக்தர்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துவிட்டது. பாதுகாப்புப் படையின் புண்ணியத்தால் கோவிலுக்கு வருபவர்கள் சுற்றிச் சுற்றி நெடுந்தூரம் நடந்துவர வேண்டியுள்ளது. போலீசுத்துறை ஒவ்வொரு பக்தரையும் தீவிரமாகப் பரிசோதிக்கிறது. சாதாரண பூசைப் பொருட்களைக்கூட கொண்டுவர யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. பஜனைப் பாடல்களோ, ராமகாதையோ ஒலிப்பதில்லை. ஒலி பெருக்கிகள் கூட மவுனமாகிவிட்டன. முதல்முறை வருபவர்கள் மறுமுறை வரக்கூடாது என முடிவு செய்து விடுகின்றனர். பாபர் மசூதி இருந்தவரை இப்படியெல்லாம் நடந்ததில்லை. ஆயிரக்கணக்கானோர் வந்து சென்றனர். ஆனால் பாபர் மசூதியை இடித்ததன் மூலம் குழந்தை ராமனின் கோவிலை ராமபக்தர்கள் சிதைத்துவிட்டனர்.
எப்போது ராமர் கோவில் கட்டப்படும் என எண்ணுகிறீர்கள்?
எப்போது இந்துக்களின் உணர்வுகளும் முஸ்லீம்களது உணர்வுகளும் இவ்விசயத்தில் ஒன்றுபடுகிறதோ, அப்போதுதான் அது கட்டப்படும். எப்போது இரு மதத்தவரின் மனதிலும் “உலகிலேயே சிறந்த நாடு நம் இந்தியா - சாரே ஜஹான் சே அச்சா” எனும் கவிஞர் இக்பாலின் வரிகள் பதிகின்றதோ அப்போது.
அயோத்தியில் விஷ்வ இந்து பரிஷத்துக்கு ஆதரவு எப்படி இருக்கிறது?
பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு ஒன்றிரண்டு பழைய ஆட்களைத் தவிர வேறு எந்த சாதுக்களோ, மடாதிபதிகளோ விஷ்வ இந்து பரிஷத்தில் சேரவில்லை. அவர்கள் மதத்தின் பெயரால் இந்தியர்களைத் தவறாக வழிநடத்துகின்றனர் என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். அவர்கள் தில்லி அரியணையைக் கைப்பற்றுவதற்காக ராமனின் நாமத்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.
இதனால் நீங்கள் இந்துத்துவா சக்திகளிடையே எதிரிகளை சம்பாதிக்கவில்லையா?
அவர்கள் என்னைத் தலைமை அர்ச்சகர் பதவியிலிருந்து நீக்கப் பலமுறை முயன்றார்கள். எனக்கு ராமனின் மீது பக்தியில்லை என்றும் சொல்லிப் பார்த்தார்கள். பைசாபாத் ஆணையரிடம் என்னை நீக்கச் சொல்லி மனுக் கொடுத்தனர். ஆனால் மசூதி இடிப்பு வழக்கு முடியும் வரை தற்காலிகக் கோவிலில் எந்தவொரு மாற்றமும் செய்யக் கூடாது என வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பு, எனது தலைமை அர்ச்சகர் பதவியைக் காப்பாற்றி வருகிறது.
யார் ராமர்கோவிலை நிர்வகிக்கின்றனர்?
பைசாபாத் ஆணையாளர்தான் பொறுப்பாளர். எல்லா காணிக்கைகளும் ஒரு வங்கிக் கணக்கில் போடப்படும். அதிலிருந்து ஒரு பகுதி “குழந்தை ராமனின்” பராமரிப்புக்குச் செலவிடப்படும். அதுவும் நான் ஊடகங்களில் முறையிட்டதற்குப் பிறகு, சில நேரங்களில் மிகுந்த இடர்ப்பாடுகளுக்கிடையில்தான் கிடைக்கிறது. மீதமுள்ள பணத்தைத் தொடமுடியாது.
அயோத்தி முஸ்லீம்களைப் பற்றி உங்களது கருத்து என்ன? அவர்களில் ஒருவர் பாபர் மசூதியை மீட்க வேண்டும் என்று வழக்கு தொடுத்துள்ளாரே?
அவர்கள் அயோத்தியின் உண்மையான குடிமக்கள். நமது சிலைகளுக்கு மாலைகட்டிக் கொடுப்பதும், துணிகளைத் தைத்துத் தருவதும் அயோத்தி முஸ்லீம்கள்தான். இந்த முஸ்லீம்கள் கொடியவர்களாக இருந்தால், எங்கள் விழாவுக்கு அவர்கள் கொடுக்கும் பட்டாசுகளில் ஒரு வெடிகுண்டைச் சேர்த்து வைத்து அனுப்பி இருக்க முடியுமே! ஆனால் அவர்கள் இதுவரை அப்படி செய்யவில்லை; இனியும் அப்படிச் செய்யப் போவதில்லை.
இந்தப் பிரச்சனைக்கு என்னதான் தீர்வு?
இந்தப் பிரச்சனைக்கு அரசியல்வாதிகள் என்றைக்கும் தீர்வுகாணப் போவதில்லை. இந்து ஒருவரையும், முஸ்லீம் ஒருவரையும் தேர்வுசெய்து அவர்களிருவரும் பேசி இதற்கு ஒரு தீர்வுகாணச் சொல்லுங்கள். அதனை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் என உறுதி கூறுங்கள். அந்த மட்டில் சுலபமானதுதான்.
இந்துவெறியர்கள் கடவுள் ராமன் மீது பற்றோ, பக்தியோ கொண்டவர்களல்ல. ராமனை வைத்து ‘இந்து’க்களை அணிதிரட்டிக் கொண்டு முஸ்லிம்களைத் தாக்கி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி, இந்துவெறி பாசிச பயங்கரத்தை நிறுவுவதே அவர்களின் நோக்கம். அதனால்தான் ராமன் பொம்மையை அம்போவென விட்டுவிட்டு ராமன் கோயிலைக் கட்டப்போவதாக இன்னமும் வெறியூட்டி வருகிறார்கள். இந்துவெறியர்களின் முகவிலாசத்தையும், மத நம்பிக்கைக்கும் மதவெறிக்கும் உள்ள வேறுபாட்டையும் உலகுக்கு உணர்த்திவிட்டு, கடவுள் ராமன் பொம்மை அயோத்தியில் பிச்சைகாரனாக நின்று கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment