சமீபத்தில் அரசியல் பயணத்தைத் துவக்கிய அஸ்ஸாம் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் (AUDF) தலைவர் பதுருத்தீன் அஜ்மலுக்கு பல மாநில முஸ்லிம் அமைப்புகள் வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, ஐக்கிய ஜனநாயக முன்னணியில் அங்கம் வகிக்கவும் இசைவு தெரிவித்துள்ளனர்.
திங்களன்று, டெல்லியிலுள்ள 'ப்ரஸ் கிளப் ஆஃப் இந்தியா' வில் AUDF ஐ அறிமுகப்படுத்திய அதன் தலைவர் பதுருத்தீன் அஜ்மல், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தேசிய அளவில் குறைந்தது ஆறு மாநிலங்களில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் எனக் குறிப்பிட்டார்.
அத்தோடு, தேசிய அளவில் முஸ்லிம்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் சமூகத்தின் அனைத்து அடித்தட்டு மக்களுடன், மதசார்பற்ற கட்சிகளும் தனது முன்னணியில் இணையுமாறு கோரிக்கையும் விடுத்தார்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மில்லி இத்திஹாத் பரிஷத்தின் தலைவர் சித்தீக்குல்லாஹ் சவுத்ரி, AUDF அறிமுக நிகழ்ச்சியில் பதுருத்தீன் அஜ்மலுடனான தனது கலந்துரையாடலை, நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
புதிய தேசிய அரசியல் கட்சியின் அறிவிப்பை, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் டாக்டர்.பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் வரவேற்றுள்ளார்.
நம்மிடம் பேசிய AUDF இன் செயல் தலைவர் ஹாபிஸ் ரஷீத் அவர்கள், 'தேர்தல் ஆணைய விதிகளின் அடிப்படையில், பொதுத் தேர்தல் நெருங்கி வரும் இந்த சந்தர்ப்பத்தில், தேசிய அளவிலான அரசியல் கட்சி பற்றிய அறிவிப்பு செய்ய இயலாத நிலையில் உள்ளோம். எனவே வெவ்வேறு மாநிலங்களில் ஐக்கிய ஜனநாயக முன்னணி UDF என்ற பதாகையின் கீழ் பல்வேறு பெயர்களில் நாம் இயங்குவோம். எதிர்வரும் 17.02.09 அன்று டெல்லியில் கூட உள்ள 'அகில இந்திய அரசியல் விவகார குழு' இதன் சாத்தியங்களைக் குறித்து ஆலோசித்து இறுதி செய்யும். அவ்வாலோசனைக் கூட்டத்தில் மேற்கு வங்கத்தின் MIP (மில்லி இத்திஹாத் பரிஷத்) உம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தமுமுக (TMMK)வும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்' எனக் குறிப்பிட்டார்.
தகவல் : டூசர்க்கில்ஸ் டாட் நெட்
தமிழில்: அபூஹாஜர்
No comments:
Post a Comment