Sunday, November 22, 2009

துறவறம்/கலப்புத் திருமணம் v/s கண்ணிய மார்க்கம்!

முகவை எஸ்.அப்பாஸ்

அல்லாஹ்வின் திருப்பெயரால்... அகிலத்தை படைத்து, அதில் மனிதனை படைத்து, மனிதன் வாழ்வின் வழிகாட்டியாக வேதத்தையும் -தூதரையும் தந்த இறைவன் மனிதனின் எல்லாவிதமான விஷயங்களுக்கும் இவ்விரண்டின் மூலம் வழிகாட்டியிருப்பதை காணலாம். அந்த வகையில் உணர்வுகளோடும்-உணர்ச்சிகளோடும் மனிதனை படைத்த இறைவன், அந்த உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் சரியான வடிகால் தேவை என்பதால்தான் திருமணம் என்ற பந்தத்தையும் உருவாக்கினான்.இத்திருமணத்தின் மூலம் தான் மனிதனுக்கு மன அமைதி ஏற்படும் என்று அல்லாஹ் கூறுகின்றான்;

وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِّتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ

இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.(30:21)

இந்த வசனம் திருமணம் மட்டுமே அனைத்துவகையான மன சுமைகளையும் நீக்கி ஆறுதல் அளிக்கும் அருமருந்து என்று கூறுவதை உண்மையான தம்பதிகளால் உணர்ந்து கொள்ளமுடியும். எங்கோ வெவ்வேறு இடத்தில் வெவ்வேறு தாயின் வயிற்றில் பிறந்த ஆணும்-பெண்ணும் திருமணம் எனும் பந்தத்தின் மூலம் இணைந்தவுடன் ஒருவர் மற்றொருவருடன் கலந்துவிடுகிறார்கள் உடலால் மட்டுமல்ல உள்ளத்தாலும் தான்.

மனைவி மற்றும் அவள் மூலம் பெற்றெடுக்கும் தன் பிள்ளைகளின் அனைத்து வகையான தேவைகளை நிறைவேற்றும் கடமையில் அது கஷ்டமாகவே இருந்தாலும் அதில் ஈடுபடுவதில் ஒரு உண்மையான குடும்பத் தலைவனுக்கு ஏற்படும் இன்பம் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதவை .

அதுபோல் தனது கணவனின் உடல் தேவைக்கு மட்டுமன்றி, அவன் உள்ளத்தால் காயம்பட்டாலும் அவனது அனைத்து வலிகளுக்கும் அற்புதமான நிவாரணியாக இருக்கும் ஒரு உண்மையான குடும்பத்தலைவிக்கு அவளது இந்த பணியில் கிடைக்கும் இன்பமும் வார்த்தையால் வர்ணிக்க முடியாதவை. இதை தான் அல்லாஹ் ரத்தின சுருக்கமாக கூறுகின்றான்;

அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். (2:187)

ஆடை என்பது எப்படி மனிதனின் மானத்தை மறைக்கும் காரணியாக இருக்கிறதோ , அது போன்று கணவனின் கண்ணியத்தை காப்பவளாக மனைவியும்- மனைவியின் கண்ணியத்தை காப்பவனாக கணவனும் எல்லா நேரமும் இருக்கவேண்டும் என்று இஸ்லாம் சொல்லிகாட்டுகிறது. மேலும் இந்த திருமண பந்தம் முறித்து துறவறம் எனும் நிலை மேற்கொள்ள ஆரோக்கியமான எந்த ஒரு முஸ்லிமுக்கும் அனுமதியில்லை என்பதை இஸ்லாம் திட்டவட்டமாக தெரிவிக்கிறது.

ஸஅத் இப்னு ஆபி வக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்; உஸ்மான் இப்னு மழ்வூன் ரளியல்லாஹு அன்ஹு துறவறம் மேற்கொள்ள நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுமதியளிக்கவில்லை. (அப்படி) துறவறம் மேற்கொள்ள அவருக்கு (மட்டும்) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுமதியளித்திருந்தால் (ஆண்மை நீக்கம் செய்துகொள்வதற்காக) நாங்கள் காயடித்துக் கொண்டிருப்போம். (புகாரி எண் 5074)

இன்றைய நவீன உலகில் சிலர் குடும்ப வாழ்க்கை என்பது இறை நினைவை விட்டும் தடுத்துவிடும். மேலும் துறவறம் மட்டுமே மன அமைதியை தரும் என்று கூறி துறவறம் மேற்கொள்வதை பார்க்கிறோம். அப்படி துறவறம் மேற்கொண்டவர்களால் தனது உணர்வை கட்டுப்படுத்தி அவர்களால் இருக்கமுடிந்ததா என்றால் இல்லை.

பல்வேறு மத குருமார்கள் பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டது உலகறிந்த உண்மையாகும். இது ஒரு புறமிருக்க துறவறம் மன அமைதியை தராது என்ற இஸ்லாத்தின் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் துறவறம் மேற்கொண்டு பின்பு மன வாழ்க்கையில் சங்கமித்து மன அமைதிகண்ட ஒருவரின் கூற்று உண்மை படுத்துவதை பாரீர்;

மூன்றாண்டுக்கு முன் "மாயமான' துறவி, இப்போது துறவறத்தை துறந்து, விவசாயியாகி விட்டார்.

இது குறித்து சுவாமி கூறுகையில்,"ஒரு மத நிறுவனத்தில் பணம் சேரும் போது, தங்களது சொந்த ஆதாயங்களுக்காக பக்தர்கள் அதில் நுழைகின்றனர். சீர்கேடு ஆரம்பிக்கிறது.

என் மனசாட்சிப்படி, மடத்தை விட்டு வெளியேறுவதற்கு முன், அதன் கணக்குகளை மக்கள் முன் வெளியிட தீர்மானித்தேன்.

துறவு வாழ்வில் கிடைக்காத அமைதி, நிம்மதி இல்லறத்தில் எனக்குக் கிட்டியது. இனி மடத் துக்குத் திரும்புவதற்கு வாய்ப்பில்லை.

சுவாமி பஸவேஸ்வரரின் "காயகதர்ம'த்தை கடைப்பிடிப்பதன் மூலம் இப் போது தான் அவரது உண்மையான சீடனாக நான் வாழ்கிறேன்' என்று மனம் திறந்து பேசினார்.

அவர் மனைவி கீதா,"நான் இனி வேறு எந்தப் பணியிலும் ஈடுபடப் போவதில்லை. இல்லத்தரசியாகவே இருக்க விரும்புகிறேன். நானும் என் கணவரும் எதிர்கொண்ட பிரச்னைகளே இந்த உலகுக்கு நாங்கள் கொடுக்க விரும்பும் செய்தி' என்று கூறுகிறார். [தினமலர்]

எனவே இஸ்லாம் கூறும் இல்லற வாழ்க்கையே சிறந்தது என்பதை மேற்கண்ட செய்தி வலுவாக உறுதிப்படுத்துகிறது. இது ஒருபுறமிருக்க, சில அதிமேதாவிகள் சாதி வேறுபாடு ஒழிய கலப்புத் திருமணமே சிறந்தது என்ற தத்துவத்தை முன்வைத்து பிரச்சாரம் மேற்கொள்வதையும், அத்தகைய திருமணத்தை அரசே அங்கீகரித்துள்ளதையும் பார்க்கிறோம் . ஆனால் இஸ்லாம் ஒருபோதும் கலப்பு திருமணத்தை ஆதரிக்கவில்லை. ஒரு முஸ்லிம் ஆணாயினும்- பெண்ணாயினும் முஸ்லிமல்லாத ஒரு ஆணையோ- முஸ்லிமல்லாத பெண்ணையோ திருமணம் செய்வதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை.

அல்லாஹ் கூறுகின்றான்;

أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا جَاءكُمُ الْمُؤْمِنَاتُ مُهَاجِرَاتٍ فَامْتَحِنُوهُنَّ اللَّهُ أَعْلَمُ بِإِيمَانِهِنَّ فَإِنْ عَلِمْتُمُوهُنَّ مُؤْمِنَاتٍ فَلَا تَرْجِعُوهُنَّ إِلَى الْكُفَّارِ لَا هُنَّ حِلٌّ لَّهُمْ وَلَا هُمْ يَحِلُّونَ لَهُنَّ وَآتُوهُم مَّا أَنفَقُوا وَلَا جُنَاحَ عَلَيْكُمْ أَن تَنكِحُوهُنَّ إِذَا آتَيْتُمُوهُنَّ أُجُورَهُنَّ وَلَا تُمْسِكُوا بِعِصَمِ الْكَوَافِرِ وَاسْأَلُوا مَا أَنفَقْتُمْ وَلْيَسْأَلُوا مَا أَنفَقُوا ذَلِكُمْ حُكْمُ اللَّهِ يَحْكُمُ بَيْنَكُمْ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ

ஈமான் கொண்டவர்களே! முஃமினான பெண்கள் ஹிஜ்ரத் செய்து (நாடு துறந்தவர்களாக) உங்களிடம் வந்தால், அவர்களை நீங்கள் பரிசோதித்துக் கொள்ளுங்கள், அல்லாஹ் அவர்கள் ஈமானை நன்கறிந்தவன், எனவே அவர்கள் முஃமினான (பெண்கள்) என நீங்கள் அறிந்தால், காஃபிர்களிடம் அவர்களைத் திருப்பியனுப்பி விடாதீர்கள், ஏனெனில், அந்த பெண்கள் அந்த ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை. அந்த ஆண்கள் இந்தப் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை. (ஆனால், இப் பெண்களுக்காக) அவர்கள் செலவு செய்திருந்ததை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள், அன்றியும் நீங்கள் அப்பெண்களுக்குரிய மஹரை கொடுத்து அவர்களை விவாகம் செய்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை, மேலும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பெண்களின் விவாக பந்தத்தை நீங்கள் பற்றிப்பிடித்துக் கொள்ள வேண்டாம், அன்றியும், நீங்கள் செலவு செய்திருந்ததை (அவர்கள் போய்ச் சேருவோரிடம்) கேளுங்கள், (அவ்வாறே ஈமான் கொண்டு உங்களிடம் வந்து விட்டோருக்காகத்) தாங்கள் செலவு செய்ததை அவர்கள் (உங்களிடம்) கேட்கலாம் - இதுவே அல்லாஹ்வுடைய கட்டளையாகும், உங்களிடையே அவன் (இவ்வாறே) தீர்ப்பு வழங்குகிறான் - மேலும், அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.(60:10)

இந்த வசனத்தில் ஒரு முஸ்லிம் முஸ்லிமல்லாதவர்களை திருமணம் செய்வது கூடாது என்று அல்லாஹ் தெளிவாகவே கூறுகின்றான். காரணம் பலவாக இருந்தாலும் கலப்பு திருமணம் பெரும்பாலும் நிலைப்பதில்லை. அதில் ஒன்று ஆணும்-பெண்ணும் வெவ்வேறு மதத்தவராக இருந்தால் அவர்கள் காதலித்து கலப்பு திருமணம் செய்யும்போது, எந்த மதத்தின் அடிப்படையில் திருமணம் செய்வது, பிறக்கும் பிள்ளையை எந்தமதத்தில் அடிப்படையில் வளர்ப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் வரும். அப்போது கணவன் விட்டுக்கொடுத்தால் கணவனின் உரிமை அங்கே பாதிக்கப்படும். மனைவி விட்டுக்கொடுத்தால் அங்கே மனைவியின் உரிமை பதிக்கப்படும். வெளிப்படையாக கணவனோ-மனைவியோ விட்டுக்கொடுத்து ஏதாவது ஒரு மதத்தின் சாயலில் வாழ முற்ப்பட்டாலும் அங்கே மனதளைவில் இருவரில் ஒருவர் குமைந்துகொண்டு போலித்தனமான வாழ்க்கை வாழ நேரிடும். எனவேதான் இஸ்லாம் மணவாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதற்கே! எனவே ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமைத்தான் திருமணம் செய்ய வழிகாட்டுகிறது. இந்த கலப்பு திருமணம் என்பது கதைக்கு உதவாததுஎன்பதற்கு நிகழ்கால சம்பவம் ஒன்று சான்றாக உள்ளது.

திண்டுக்கல் : ஒன்றரை ஆண்டு காதலித்து திருமணம் செய்வதற்காக வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி, எந்த மத சம்பிராயப்படி திருமணம் செய்வது என்ற தகராறில் பிரிந்து சென்றனர்.

திண்டுக்கல் லட்சுமணபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (27). கோவையில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது தோழி ஒருவர் மூலம் அறிமுகம் ஆன சென்னை அசோக்நகர் முகமது என்பவர் மகள் ரியாஸ்பாத்துமாவை (19) ஒன்றரை ஆண்டுகளாக காதலித்தார்.

ரியாஸ் பாத்துமாவிற்கு வீட்டில் திருமண ஏற்பாடு செய்யவே, அவர் வீட்டை விட்டு வெளியேறி காதலன் தங்கியிருந்த கோவைக்கு சென்றார். அங்கிருந்து இந்த ஜோடி திருமணம் செய்ய திண்டுக்கல் வந்தது. இதற்கிடையில் ரியாஸ்பாத்துமாவை காணவில்லை என அசோக்நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இதனால் இந்த ஜோடி திண்டுக்கல் மகளிர் போலீஸ் எஸ்.ஐ.,கீதாதேவியிடம், தாங்கள் திருமணம் செய்ய விரும்புவதாக தெரிவித்தனர்.

ஆனால் இந்து முறைப்படி திருமணம் செய்வதா, முஸ்லிம் முறைப்படி திருமணம் செய்வதா என ஸ்டேஷனில் காதல் ஜோடிகளுக்குள் விவாதம் நடந்தது. இது தகராறாக மாறி இருவரும் பிரிந்து தங்களது வீட்டிற்கு திரும்பினர்.(தினமலர்)

திருமணத்திற்கு முன்பே இங்கே கருத்து வேறுபாடு எனில் வருங்காலம் எப்படி இருக்கும் என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை. இதுதான் எதார்த்தம்! எனவே இன்றைய காலத்து ஆசாபாசங்களுக்கு கட்டுப்பட்டு காதல்-கத்திரிக்காய் என்று மனதை அலைபாயவிட்டு அந்நிய மதத்தவரை திருமணம் செய்து அல்லல்படுவதை விட்டு அல்லாஹ் அனுமதித்த வகையில் அருமையான திருமண பந்தத்தில் இணைய சமுதாயம் முன்வரவேண்டும். அதுதான் நிரந்தர மகிழ்ச்சிக்கும் மறுமை வெற்றிக்கும் வழிவகுக்கும்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்

No comments: