Saturday, December 5, 2009

லிபரான் சுட்டிக்காட்டியுள்ள வாஜ்பேயி உள்ளிட்ட 68 குற்றவாளிகள் பிணையில் வெளிவர முடியாத வழக்கில் உடனடியாக கைதுச் செய்யப்பட வேண்டும்.


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோரிக்கை

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பத்து தினங்கள் கழித்து அமைக்கப்பட்ட நீதிபதி மன்மோகன் சிங் லிபரான் ஆணையம் 17 ஆண்டுகள் கழித்து 8 கோடி ரூபாய் செலவு செய்து 48 முறை ஆயுள் நீடிப்புப் பெற்று தனது அறிக்கையை சமர்பித்துள்ளது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த அறிக்கை, விடுதலைப் பெற்ற இந்தியாவில் காந்தியடிகள் படுகொலைக்கு பிறகு நடைபெற்ற மிகப் பெரும் பயங்கரவாதச் செயல்களுக்கு காரணமான நாசகர சக்திகளை தெளிவாக அடையாளம் காட்டியுள்ளது. சங் பரிவார் அமைப்புகள் கூறி வந்தது போல் பாபரி மஸ்ஜித் இடிப்பு தற்செயலாக உணர்ச்சி பெருக்கத்தால் நடைபெற்ற நிகழ்வு அல்ல என்பதை லிபரான் ஆணையத்தின் அறிக்கை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான சங்பரிவார் அமைப்புகள் ஒன்றிணைந்து கூட்டாக நடைமுறைப்படுத்திய நன்கு திட்டமிட்ட நடவடிக்கைகளினால் பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டது என்று லிபரான் ஆணையம் தெளிவான முடிவிற்கு வந்துள்ளது. தவறான கட்சியில் உள்ள நல்ல மனிதர் என்று வர்ணிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பேயிக்கும் பாபரி மஸ்ஜித் இடிப்பில் பங்கு உள்ளது என்று லிபரான் ஆணையம் கூறியிருப்பது இந்த அறிக்கையின் சிறப்பு அம்சம் என்று கூறலாம். ஆர்.எஸ்.எஸ். என்ற தாய் அமைப்பின் கீழ் செயல்பட்டு பாபரி மஸ்ஜித் இடிப்பிற்கு காரணமாக இருந்த அரசியல் தலைவர்கள் முதற் கொண்டு அரசு அதிகாரிகள் வரை லிபரான் ஆணையத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளார்கள்.

பாபரி மஸ்ஜித் இடிப்பு நிகழ்ந்த போது உ.பி.யில் ஆட்சியில் இருந்த கல்யான் சிங் அரசு எவ்வாறு பள்ளிவாசல் இடிப்பிற்கு காரணமாக இருந்தது என்பது குறித்து தெளிவான ஆதாரங்களை எடுத்துக் கூறும் லிபரான் ஆணையத்தின் அறிக்கை அன்றைய நரசிம்ம ராவ் தலைமையிலான மத்திய அரசிற்கு இடிப்பில் உள்ள பங்கை தெளிவுப்படுத்தாது வேதனைக்குரியது. பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட அந்த கருப்பு ஞாயிறு அன்று அன்றைய பிரதமர் நரசிம்ம ராவ் துங்கிக் கொண்டிருந்தார். அன்றைய குடியரசு தலைவர் சங்கர் தயாள் சர்மா எச்சரித்த பிறகு தான் அவர் நாட்டு மக்களிடம் துர்தர்ன் வாயிலாக இடிக்கப்பட்ட பள்ளிவாசல் மீண்டும் அதே இடத்தில் கட்டித் தரப்படும் என வாக்குறுதி அளித்தார். பாபரி பள்ளிவாசலை காக்க தவறிய நரசிம்ம ராவின் நடவடிக்கைக்காக முன்னாள் காங்கிரஸ் தலைவர் சீத்தாராம் கேசரியும் திருமதி சோனியா காந்தி அம்மையாரும் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட நிலையில் லிபரான் அறிக்கை காங்கிரஸ்காரர் போர்வையில் இருந்த சங்பரிவார் விசுவாசி நரசிம்ம ராவின் பங்கை அம்பலப்படுத்தாது நீதிபதி லிபரானின் நேர்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

லிபரான் ஆணையத்தின் அறிக்கை பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கை நடத்தி வரும் மத்திய புலனாய்வு துறையிடம் மேல் நடவடிக்கைக்காக ஒப்படைத்துள்ளதை வரவேற்கிறோம். இதே நேரத்தில் பாபரி மஸ்ஜித் இடிப்பு தொடர்பாக ராய் பிரேலி நீதிமன்றத்தில் 17 ஆண்டுகளாக நடைபெற்று வரும் வழக்கு 3 மாதங்களுக்குள் முடிக்கப்படும் வகையில் உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் ஒரு சிறப்பு விரைவு நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும். ஏற்கெனவே சி.பி.ஐ.யினால் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மட்டுமில்லாது லிபரான் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ள வாஜ்பேயி, வகேலா உள்ளிட்டவர்கள் மீதும் வழக்கு தொடுக்கப்பட்டு அவர்களும் கைதுச் செய்யப்படவேண்டும். லிபரான் ஆணையம் குற்றஞ்சாட்டியுள்ள 68 குற்றவாளிகளில் தற்போது பிணையில் இருப்பவர்களின் பிணை ரத்துச் செய்யப்பட்டு இடிப்பு வழக்கில் தீர்ப்பு வரும் வரை அவர்களை சிறையில் அடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாபரி மஸ்ஜித் இடம் யாருக்கு சொந்தம் என்ற சிவில் வழக்கு 60 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்கப்படவும் மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட தினத்தில் அன்றைய காங்கிரஸ் பிரதமர் நரசிம்ம ராவ் வாக்களித்தது போல் இன்றைய காங்கிரஸ் தலைமையிலான அரசு பாபரி மஸ்ஜிதை அதே இடத்தில் கட்டித்தர வேண்டும்.

வலுவான மதசார்பற்ற தலைமை நாட்டிற்கு மிக அவசியம் என்று நீதிபதி லிபரான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மதசார்பின்மையை முன்னிறுத்தி ஆட்சிக்கு வந்தது. நாட்டில் மதசார்பின்மை ஆழமாக வேரூன்றவும், பாபரி மஸ்ஜித் பிரச்னையில் நரசிம்மராவ் செய்த பாவங்களை கழுவுவதற்காகவும் மேற்சொன்ன கோரிக்கைகளை நிறைவேற்ற உடனடியாக மன்மோகன் சிங் அரசு முன்வரவேண்டும்.
இந்த கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 36 இடங்களில் டிசம்பர் 6 அன்று போராட்டம் நடத்த உள்ளோம்.

பேட்டியின் போது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் எஸ். ஹைதர் அலி, துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ். ரிபாயி, மாநிலச் செயலாளர் மௌலா நாசர், மாநில துணைச் செயலாளர் கோவை செய்யது ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments: