Saturday, December 5, 2009

டி.எடப்பாளையம்: அரசு மேப்பில் இல்லாத கிராமம்!

விழுப்புரம் மாவட்ட திருக்கோவிலூர் தாலுகாவில்... கடலூரிலிருந்து திருவண்ணாமலை போகும் சாலையில் இருக்கும் கிராமம்தான் டி.எடப்பாளையம். இங்கு 3500 பேர் வசித்துவர.. இவர்களில் 1500 பேர் வாக்குரிமை உள்ளவர்கள். இந்த கிராமத்திற்கு மட்டும் 850 ரேசன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அப்படியிருந்தும் வருவாய்த்துறை... இப்படி ஒரு ஊரே எங்கள் மேப்பில் இல்லை என கைவிரித்திருக்கிறது.
டி.எடப்பாளையம் ஊராட்சித் தலைவரான அப்துல் கபூரோ, எங்க ஊர் நிலபுலன்கள் மூலம் கிடைக்கும் வரி வருவாயும், பத்திரப் பதிவுகள் மூலம் கிடைக்கும் வருவாயும் எங்க ஊராட்சிக்கு கிடைப்பதில்லை. காரணம் வருவாய்த்துறை கெசட்படி... டி.எடப்பாளையம் என்ற கிராமமே வருவாய்த் துறையிடம் இல்லை. எங்க கிராமத்தை நாலா பங்கு போட்டு... சுற்றி இருக்கும் சித்தலிங்கமடம், வடமருதூர், எல்ராம்பட்டு, கொடியூர் ஆகிய 4 கிராமங்களோடும் சேர்த்து வச்சிருக்காங்க.

நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் எங்க கிராமத்தில் இருக்கும் குளத்தை தூர் வாரலாம்னு பார்த்தா... சித்தலிங்கமடத்துக்காரங்க ஓடிவந்து... எங்க ஊராட்சி லிமிட்ல இருக்கும் குளத்தை நீங்க எப்படி தூர்வாரலாம்னு தடுக்குறாங்க. சரி ரோடு போட்டுக் கொடுங்க... குடிதண்ணீர் வசதி பண்ணிக் கொடுங்கன்னு அந்த ஊராட்சிகளைக் கேட்டா... உங்க ஊர்தான் தனி ஊராட்சியாச்சே நீங்களே பண்ணிக்கங்கன்னு கை விரிக்கிறாங்க என்கிறார் கலக்கமாய்.

எடப்பாளையத்தை வருவாய்த்துறை ஒரு கிராமமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என குரல் கொடுத்துவரும் த.மு.மு.க. மாவட்ட நிர்வாகி பைசல் முகமது, எங்கள் கிராமத்துக்கு உண்டான உரிமையைக் கொடுக்கும்வரை வாக்களிக்க மாட்டோம் என சமீபத்திய நாடாளுமன்றத் தேர்தலின் போது அறிவித்தோம்.

இதன்பிறகு ஓடிவந்த அதிகாரிகள். தேர்தல் முடிந்தததும் கிராமத்தின் எல்லைகளை அளந்து தனி ரெவின்யூ கிராமமாக அறிவிக்கிறோம் என வாக்குறுதி கொடுத்தனர். நேர்மையான அதிகாரியான திருக்கோவிலூர் கோட்டாட்சியர் கோதண்டராம குப்தா... சொன்னபடியே கிராமத்தை அளக்கச் செய்தார்.

இந்த நிலையில் அவர் மாற்றலாகிப் போக... வேலைகள் நின்றுபோய் விட்டன. என்ன நடந்தாலும் சரி... எங்க டி.எடப்பாளையம் கிராமத்தை வருவாய் கிராமமாக அறிவிக்கும்வரை நாங்க ஓயப் போவதில்லை என்கிறார் உறுதியான குரல்.

No comments: