Sunday, December 6, 2009

பாபர் மசூதி இடிப்பும் - சங் பரிவார் வகையறாக்களும்



திமிரடி என்பது இதுதான்!

1992 டிசம்பர் 6 ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளில் பா.ஜ.க. சங் பரிவார் காவிக் கும்பல் 450 ஆண்டு கால வரலாறு படைத்த சிறுபான்மை மக்கள் வழிபாட்டுத் தலமான பாபர் மசூதியை அயோத்தியில் இடித்துத் துவம்சம் செய்து குதூகலித்தது. உலகமே இது கண்டு நகைத்தது. இந்தியாவின் மதச் சார்பின்மையின் கண்ணியம் இதுதானோ என்று ஏளனம் செய்தது.

ஆண்டுகள் 17 ஓடிவிட்டன. குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. அன்றைய பிரதமர் பி.வி.நரசிம்மராவ் வாக்குறுதி அளித்தபடி இடிக்கப்பட்ட இடத்தில் மசூதி மீண்டும் கட்டிக் கொடுக்கப்படவில்லை.

குதிரை கீழே தள்ளியதும் அல்லாமல் குழியும் பறித்த கதையாக, பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து நாடெங்கும் மதக் கலவரங்களை உண்டாக்கி சிறுபான்மை மக்களின் உயிரைக் குடித்தார்கள்.

இந்த அளவில் பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்களான முஸ்லிம்கள், தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தித் தங்களின் உணர்வுகளைத் தெரிவிக்கவும், பாபர் மசூதி இடிக்கப்பட்ட அதே நாளில் நியாயம் கேட்டுக் குரல் எழுப்புவதிலும் அர்த்தம் உண்டு.

அதே நேரத்தில் அந்த நாளில் நாங்களும் போராட்டம் நடத்துவோம் என்று இந்து முன்னணி வகையறாக்கள் கூறுவது அவர்களின் மதவெறித் தனத்தின் கேவலத்தைப் பறைசாற்றுவதாகும்.

பாதிக்கப்பட்டவர்கள் உரிமைக்குரல் கொடுக்கிறார்கள் என்றால், அந்தப் பாதிப்புக்குக் காரணமானவர்கள் அதற்கு எதிராகக் குரல் கொடுக்க முனைவது எந்த வகையில் நியாயம்?

அடிபட்டவனுக்கு அழக்கூட உரிமையில்லையா? எந்த அளவுக்கு அராஜக புத்தியிருந்தால், இப்படியெல்லாம் செயல்பட முன்வருவார்கள்?

இந்துக்கள் பெரும்பான்மையினர்; முஸ்லிம்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினர்தானே என்ன வேண்டுமானாலும் செய்துவிடலாம் என்கின்ற கொழுப்பா ஆணவமா?

இந்துக்களின் பிரதிநிதிகள் என்று இந்து முன்னணி வகையறாக்களை யார் ஏற்றுக் கொண்டார்கள்? இந்துக்களில் எத்தனை எத்தனை பிரிவுகள் உண்டு? காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோயிலில் யானைக்கு எந்த நாமம் போடுவது என்று சில நாள்களுக்கு முன்பு கூட தகராறு ஏற்பட்டதே, சில ஆண்டுகளுக்கு முன் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டு தெருவில் கட்டிப் புரண்டார்களே!

ராமன் கோயில் விவகாரம் வைணவர்களைப் பொறுத்தது. இதில் சங்கராச்சாரியார் ஏன் தலையிடுகிறார் என்று கூட எதிர்க் குரல் கேட்டதே! திருப்பதி ஏழுமலையான் கோயில் கருவறைக்குள் காஞ்சி சங்கராச்சாரியார் சென்றது கூட பெரிய பிரச்சினையாக புயலாக வெடித்துக் கிளம்பியதே! இந்த நிலையில் இந்து முன்னணிக் கூட்டம் இந்துக்களுக்கெல்லாம் ஏகப் பிரதிநிதிகள் போல வஸ்தாதுக் காட்டுகிறார்களே!

இதுபோல் அடாவடித்தனமாகப் பேசுவது என்பது ராமகோபாலனுக்குக் கைவந்த கலை. அதன் மூலம் ஒரு தற்காலிக விளம்பரம் கிடைக்கும் அல்லவா? அதற்குத்தான் இந்தச் சில்லறை அறிக்கைகள்.

இந்திய அரசு ஒன்றை உணரவேண்டும். பாபர் மசூதி இடிப்பு என்பது மாபெரும் குற்றமாகும். இந்தியாவின் ஒட்டுமொத்த மரியாதையைக் கேவலப்படுத்தக் கூடிய செயலாகும். உலகில் மிகப் பெரிய எண்ணிக்கையில் இருக்கக்கூடிய இசுலாமியர்கள் மத்தியில் இந்தியாவுக்கு எதிரான உணர்வுகளை ஏற்படுத்தக்கூடியதாகும்.

குற்றவாளிகள் தண்டிக்கப்படாத காரணத்தால் இந்து முன்னணி உள்ளிட்ட சங் பரிவார் வகையறாக்கள், நம்மைத் தட்டிக் கேட்க ஆளில்லை என்ற மனப்பான்மையில், இது போன்ற வல்லடி வழக்குகளில் ஈடுபடுகிறார்கள். வீண் வம்புக்கு வரும் விஷம வேலைகளில் குதிக்கிறார்கள். இதனை அனுமதிக்கக்கூடாது.

எவ்வளவு விரைவாக பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத் தரமுடியுமோ, அவ்வளவு விரைவாக அந்தக் கடமையைச் செய்தால்தான் இந்த நச்சுக் கூட்டத்தினரின் விஷமத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். பாதிக்கப்பட்டவர்களிடத்திலிருந்து தீவிர உணர்வோடு இளைஞர்கள் உருவாகாமல் இருப்பதற்கும் இதுதான் சரியான மார்க்கமுமாகும்.

------------------------"விடுதலை" தலையங்கம் 5-12-2009

No comments: