Showing posts with label பயங்கரவாதம். Show all posts
Showing posts with label பயங்கரவாதம். Show all posts

Saturday, December 6, 2008

கஞ்சாக்குடியன் பாரதியும் அவனது மத வெறியும்

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்தியாவில் 1925 ஆம் ஆண்டு விஜயதசமி தினத்தன்று தொடங்கப்பட்டது. பாரதியார் மறைந்ததோ 11.9.1921இல். ஆக ஆர்.எஸ்.எஸ்.எஸ் அமைப்பு உருவாகும் முன்பே பாரதி மறைந்து விட்டார்.

ஆனால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இன்று என்ன என்ன கொள்கைகள் மேற்கொண்டிருக்கிறதோ, அவை அனைத்தையும், அவ்வியக்கம் உருவாகும் முன்பே எடுத்துக் கூறி ஆர்,எஸ்.எஸ் அமைப்பு உருவாக அடித்தளம் அமைத்தவர் பாரதியே ஆவார்.

அவற்றை ஒவ்வொன்றாகக் காணலாம்.“இருபது கோடி ஹிந்துக்களையும் ஒரே குடும்பம் போலச் செய்து விட வெண்டும் என்பது என்னுடைய ஆசை. இந்த ஆசையினாலே ஒருவன் கைக்கொள்ளப்பட்டால் அவன் ராஜாங்கம் முதலிய சகல காரியங்களைக் காட்டிலும் இதனை மேலாகக் கருதுவான் என்பது என்னுடைய நம்பிக்கை.

எல்லா தர்மங்களைக் காட்டிலும், வேதத்தை நிலைநிறுத்தும் தர்மம் சிறந்ததென்று நான் நினைக்கிறேன். ஹிந்துக்களைத் திரட்டி ஒற்றைக் கருவியாகச் செய்து விட வேண்டும். இதற்குரிய உபாயங்களைச் சரியான காலத்தில் தெரிவிக்கிறேன்.” (1)“இந்திரன், அக்கினி, வாயு, வருணண் என்ற மூர்த்திகளே வேதத்தில் முக்கியமானவை.

பின்னிட்டு இந்த மூர்த்திகளை தாழ்ந்த தேவதைகளாக மதிக்கத் தொடங்கி விட்டார்கள். இந்த அலங்கோலங்களெல்லாம் தீர்ந்து, ஹிந்துமதம் ஒற்றுமை நிலையெய்தி, ஹிந்துக்கள் ஒற்றுமையும் வைதீக ஞானமும் எய்தி, மேம்பாடு பெற்று பூமண்டலத்தின் ஆசார்ய பதவி கொண்டு வாழ வேண்டுமாயின் அதற்கு நாம் கையாள வேண்டிய உபாயங்கள் பின்வருவன” என பாரதி கூறுகிறார்.1.

“வேதம், உபநிஷத்துகள், புராணங்கள் இவற்றை இக்காலத்தில் வழங்கும் தேச பாஷைகளில் தெளிவாக மொழி பெயர்க்க வேண்டும்.2.

புராணங்களில் தத்தம் தேவர்களை மேன்மைப்படுத்தும் அம்சங்களையும், மேற்படி பொதுவேதக் கொள்கைகளாகிய தவம், உபாஸனை, யோகம் முதலியவற்றை விளக்கும் அம்சங்களையும் மாத்திரமே ப்ராமணமாகக் கொண்டு, இதர தேவ தூஷணை செய்யும் அம்சங்களையும் பிராணமில்லாதன என்று கழித்துவிட வேண்டும்

3. வேதத்தின் உண்மைக் கருத்தை உணர்ந்தோரும் ஸமரஸ ஞானிகளுமான பண்டிதர் மூலமாக நாடு முழுவதும் புஸ்தகம், பத்திரிகை, உபந்யாஸங்கள் முதலியவற்றால் பிரமாண்டமான பிரச்சாரத் தொழில் நடத்த வேண்டும். ஹிந்துக்களே, பிளவுண்டு மடியாதீர்கள்! வேதத்தின் பொருளை உணர்ந்து மேம்பட்டு வாழ வழி தேடுங்கள்.”

(2)மதமாற்றம் குறித்து அப்போதே பாரதி மிகவும் கவலைப்பட்டார்.“இந்த மாதம் முதல் தேதி, சென்னைத் தலைமைப் பாதிரி எல்லூரில் ஆணும் பெண்ணும், குழந்தைகளுமாக ஏறக்குறைய முந்நூறு பேரைக் கிறித்துவ மதத்தில் சேர்த்துக் கொண்டார் என்று தெரிகிறது.

இந்த விஷயம் நமது நாட்டில் பல இடங்களில் அடிக்கடி நடந்து வருகிறது. இது ஹிந்து மதத்தில் அபிமானமுடையவர்களுக்கெல்லாம் மிகுந்த வருத்தத்தை விளைவிக்கத் தக்கது...ஆம் ... ஹிந்துக்கள் வருத்தப்படத்தக்க செய்திதான் அது.

ஹிந்துக்கடைய ஜனத்தொகை நாளுக்கு நாள் குறைபட்டு வருகிறது. கவிதையிலுள்ள மலைப்பாம்பு போல வாலில் நெருப்பு பிடித்தெரியும்போது தூங்கும் வழக்கம் இனி ஹிந்துக்களுக்கு வேண்டாம். விழியுங்கள். ஜனத்தொகை குறையும்போது பார்த்துக்கொண்டே சும்மா இருப்போர் விழித்திருக்கும்போது தூங்குகிறார்கள்.

அவர்கள் கண்ணிருந்தும் குருடர்” (3) என்றார் பாரதி. பொருளாதார வளர்ச்சிக்கு வழி சொல்லாமல் மதக் கண்ணோட்டத்தில் மக்களைப் பெருக்க வேண்டும் என்கிறார்.மேலும் இவர் இந்து தர்மத்தைப் பற்றிக் கூறும்போது, “ஹிந்துக்களுக்குள்ளே இன்னும் ஜாதி வகுப்புகள் மிகுதிப்பட்டாலும் பெரிதில்லை அதனால் தொல்லைப்படுவோமேயன்றி அழிந்து போய் விட மாட்டோம்.

ஹிந்துக்களுக்குள் இன்றும் வறுமை மிகுதிப்பட்டாலும் பெரிதில்லை. அதனால் தர்ம தேவதையின் கண்கள் புண்படும். இருந்தாலும் நமக்குச் சர்வ நாசம் ஏற்படாது. ஹிந்து தர்மத்தை கவனியாமல் அசிரத்தையாக இருப்போமேயானால் நமது கூட்டம் நிச்சயமாக அழிந்து போகும். அதில் சந்தேகமில்லை” (4) என்கிறார் பாரதியார்.

1917 ம் ஆண்டு நவம்பர் 19 ம் தேதி சுதேசமித்திரன் ஏட்டில் பாரதியார் உலகம் முழுவதும் ஹிந்து தர்மத்தைப் பரப்ப வேண்டும் என எழுதியுள்ளார். சோவியத்தில் அக்டோபர் (நவம்பர்) புரட்சி ஏற்பட்ட பிறகுதான் பாரதி இதை எழுதுகிறார் என்பது குறிப்படத்தக்கது.“வாரீர் நண்பர்களே, ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் ஹிந்து தர்மம் பரவும்படிச் செய்ய வேண்டுமானால் அதற்கு இதுவே மிகவும் ஏற்ற தருணம்.

ஆஹா, ஸ்வாமி விவேகானந்தரைப் போலப் பத்துப் பேர் இப்போது இருந்தால் இன்னும் ஒரு வருஷத்துக்குள் ஹிந்து தர்மத்தின் வெற்றிக்கொடியை உலகமெங்கும் நாட்டலாம்... சண்டை காலந்தான் நமக்கு நல்லது (முதல் உலகப்போர் 1914 முதல் 1918 வரை நடைபெற்றது. அந்தச் சமயத்தில்தான் பாரதி இதை எழுதியுள்ளார்).

இவ்விஷயத்தை ஆழ்ந்து யோசனை பண்ணி இங்கிருந்து வெளிநாடுகளுக்கு நூற்றுக்கணக்கான பிரசங்கிகளை அனுப்பும்படி ராஜாக்களையும், ஜமீன்களையும், செட்டியார்களையும், மடாதிபதிகளையும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.” (5)சண்டை காலந்தான் நமக்கு நல்ல காலம்.

மதத்தை வெளிநாடுகளில் நிலைநாட்ட இதுவே ஏற்ற தருணம் என்கிறார் பாரதியார். அவரைப் பின்பற்றித்தான் இன்றைய இராமகோபாலன் போன்றோர் “மூன்றாம் உலகப்போர் மூளுகிறது என்று நினைத்துக் கொள்வோம். அந்த வேளையில் ஆசிய நாடுகள் தங்களைக் காத்துக்கொள்ள ஒன்றுபட்டு நிற்க வேண்டி வரும்.

அப்போது இயல்பாகவே பாரதம் ஆசியக் கூட்டமைப்பின் தலைமை ஏற்கும். அந்த நிலையில் அகண்ட பாரதமோ, அதற்குச் சமமான நிலவரமோ உதயமாவது சாத்தியம்” என எழுதியுள்ளார் போலும்.மேலும், “இப்பொழுது நம்முடைய தேசத்தில் இருக்கும் தாழ்ந்த ஜாதியார்களையெல்லாம் கிறிஸ்துவர்கள் தங்கள் பக்கம் சேர்த்துக் கொண்டு வருகிறார்கள்.

இதுதான் நம்முடைய குடியைக் கெடுக்கக் கோடாலியாய் இருக்கும்” (6) என்கிறார் பாரதியார்.இந்தியாவிற்குப் பாரததேசம் என்ற பெயர்தான் வேண்டும் என்பதற்கான காரணத்தை பாரதி கூறுகிறார். “பாரதம் பரதன் நிலைநாட்டியது. இந்தப் பரதன் துஷ்யந்த் ராஜாவின் மகன்.

இமயமலை முதல் கன்னியாகுமரி முனை வரையிலுள்ள நமது நாட்டை இவன் ஒன்றுசேர்த்து அதன்மிசை முதலாவது சக்ராதிபத்தியம் ஏற்படுத்தியபடியால் இந்நாட்டிற்கு ‘பாரததேசம்’ என்ற பெயர் உண்டாயிற்று.” (7)இன்றைக்கும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இந்தப் பெயர் தான் வேண்டும் என்கின்றனர்.

பாரதி கூறுவதுபோல் இந்தியா முழுவதையும் பரதன் ஆண்டதாக வரலாற்றுச் சான்று ஏதும் இதுவரை நமக்குக் கிடைக்கவில்லை. இந்தியாவில் 56 தேசம் இருந்ததாகவும், 56 அரசர்கள் ஆண்டதாகவும் தான் பாரதக் கதையிலும் காண முடிகிறது. ஆங்கிலேயர் வருவதற்கு முன் இந்தியா என்ற ஒரே நாடு இருந்ததற்கான சான்று எதுவுமே இல்லை.

இசுலாமியர்கள் இந்தியாவை ஆண்ட பொழுது மதமாற்றம் ஏற்பட்டது குறித்துப் பாரதியார் குறிப்பிடுவதாவது: “திப்பு சுல்தான் காலத்தில் முகமதிய சேனாதிபதியொருவன் சிறிய படையுடன் வந்து பாலக்காட்டுக் கோட்டையின் முன்னே சில பிராமணர்களை மேல் அங்கவஸ்திரத்தை உரித்து நிற்கும்படிச் செய்வித்து, பிராமணர்களை அவமானப்படுத்திய கோரத்தைச் சகிக்க மாட்டாமல் யாதொரு சண்டையுமின்றி தம்பிரான் இனத்தார் கோட்டையை விட்டுப் போய்விட்டார்கள்.

திப்பு சுல்தான் கோழிக்கோட்டில் ஹிந்துக்களை அடக்க ஆரம்பித்த போது இருநூறு பிராமணரைப் பிடித்து முசுலீம் ஆக்கி கோமாமிசம் புசிக்கச் செய்தான்” (8) என்கிறார் பாரதியார்.ஆனால் உண்மையில் திப்புசுல்தான் அவ்வாறு செய்ததற்குச் சான்றாதாரம் நமக்குக் கிடைக்கவில்லை. மாறாக, திப்புசுல்தான் பார்ப்பனர்களை ஆதரித்த செய்திகள்தான் நமக்குக் கிடைக்கின்றன.

திப்புவின் ஆட்சியின் 45,000 முதல் 50,000 பார்ப்பனர்கள் அரசுப் பணியில் இருந்துள்ளனர். அவர்கள் தவறு செய்தால் தண்டிக்கும் உரிமையைக் கூட அவன் ஏற்றுக்கொள்ளாமல் சிருங்கேரி சங்கராச்சாரியாரிடமே ஒப்படைத்துள்ளான். திப்பு சிருங்கேரி சங்கரமடத்திற்கு 1791இல் எழுதிய கடிதம் மூலம் இதை அறிய முடிகிறது.

There are more than 45 to 50 thousand Brahmins in our service it is wondered if the Government alone is bestowed with judiciary powers of handing their cases and punishing them for offences like theft, liquor and Brahmahati. Hence the authority to punish such offences in your premises is given to you. You could punish them in any manner as given in sastras. (9)

இன்னும் ஒருபடி மேலே சென்று திப்புவின் ஆட்சி நிலைத்திருக்கச் சாஸ்தரா சண்டி ஜபம் நடத்த திப்பு சிருங்கேரி சங்கராச்சாரியைக் கேட்டுக் கொண்டார். ஓராயிரம் பார்ப்பனர்கள் 40 நாட்கள் ஜபம் செய்தார்கள். அந்தச் செலவு முழுவதையும் திப்புவே ஏற்றுக் கொண்டார். (10)இப்படிப்பட்ட திப்புவா, பாரதி கூறுவது போல, பார்ப்பனரைக் கொடுமைப்படுத்தியிருப்பார்? பாரதிக்கு இஸ்லாமியரின் மீது இருந்த வெறுப்பையே இது காட்டுகிறது.

பறையர்களின் பேரில் பாரதி இரக்கங்காட்டுவதாகப் பலர் எழுதுகிறார்கள். ஏன் பாரதி அவ்வாறு செய்தார் என்றால், அவர்கள் கிறிஸ்துவ மதத்திற்குப் போய்விடுகிறார்கள் என்ற எண்ணத்தில்தான்.“1200 வருஷங்களுக்கு முன்பு, வட நாட்டிலிருந்து மதம் மாறியவர்கள் பஞ்சாப் நாட்டில் பிரவேசித்தபோது, நம்மவர்களின் இம்சை பொறுக்க முடியாமல் வருத்திக் கொண்டிருந்த பின்னர், பறையர் எதிரிகளுக்கு நல்வரவு கூறி அவர்களுடன் கலந்து கொண்டதாக இதிகாசம் சொல்கிறது.

அப்போது நமது ஜாதியைப் பிடித்த நோய் இன்னும் தீராமலிருக்கிறது.”“... எங்கிருந்தோ வந்த ஆங்கிலேயப் பாதிரிகள் பஞ்சம் பற்றிய ஜனங்களுக்குப் பலவித உதவிகள் செய்து நூற்றுக்கணக்கான மனிதர்களையும், முக்கியமாக திக்கற்ற குழந்தைகளையும், கிறிஸ்தவ மதத்திலே சேர்த்துக் கொள்கிறார்கள்.

ஹிந்து ஜனங்களின் தொகை வருஷந்தோறும் அதிபயங்கரமாகக் குறைந்து கொண்டு வருகிறது. மடாதிபதிகளும், ஸந்திதானங்களும் தமது தொந்தி வளர்வதை ஞானம் வளர்வதாகக் கண்டு ஆனந்தமடைந்து வருகின்றனர். ஹிந்து ஜனங்கள், ஹிந்து ஜனங்கள்! நமது ரத்தம், நமது சதை, நமது எலும்பு, நமது உயிர்.

கோமாமிசம் உண்ணாதபடி அவர்களைச் சுத்தப்படுத்தி, அவர்களை நமது சமூகத்திலே சேர்த்து, அவர்களுக்குக் கல்வியும் தர்மமும் தெய்வமும் கொடுத்து நாமே ஆதரிக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர்களெல்லாரும் நமக்குப் பரிபூரண விரோதிகளாக மாறி விடுவார்கள். (11)சாதிக் கொடுமையினால் ஒடுக்கப்பட்டவர்கள் அதிக அளவில் மதம் மாறிய காரணத்தால் பாரதியார் கிழச்சாம்பன் கூறுவதைப் போல மதமாற்றம் வேண்டாம் என்பது பற்றி எழுதியுள்ளார்.

கிழச்சாம்பான் சொல்லுகிறார்: “ஹிந்து மதத்திலே எங்களுடைய நிலைமை தாழ்ந்திருக்கிறதென்றும், கிறிஸ்து மதத்தில் சேர்ந்தால் எங்களுடைய நிலைமை மேன்மைப்படுமென்றும் சொல்லி கிறிஸ்துவப் பாதிரிகள் எங்களிலே சிலரைக் கிறிஸ்து மதத்தில் சேர்த்தார்கள். அதில் யாதொரு பயனையும் காணவில்லை.

நூற்றிலொருவனுக்குப் பத்துப் பதினைந்து ரூபாய் சம்பளத்தில் ஒரு வேலை கிடைக்கிறது. மற்றவர்களெல்லாரும் துரைமாரிடத்தில் சமையல் வேலை பண்ணுதல், பயிரிடுதல், குப்பை வாருதல் முதலிய பழைய தொழில்களைதான் செய்து வருகிறார்கள். எனக்கு முன்னோருடைய மதமே பெரிது. கிறிஸ்துவர்களுடன் எங்களுக்குக் கொடுக்கல் வாங்கல், சம்மந்தம், சாப்பாடு ஒன்றுமே கிடையாது.

என்ன கஷ்டமிருந்தாலும் நாங்கள் ஹிந்து மதத்தை விடமாட்டோம்.” (12)பாரதி இந்து மதத்தை நிலைநிறுத்த எப்படியெல்லாம் சிந்திக்கிறார் என்பதை இதன்மூலம் அறிய முடிகிறது. ஆக முகமதியர்களையும், கிறித்துவர்களையும் எதிரிகள் என்றே பாரதியார் குறிப்பிடுகிறார். இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். போடுகின்ற பசுவதைத் தடுப்புச் சட்டம் என்ற கூச்சலை அன்றே போட்டவர் பாரதியார் ஆவார்.

1917 நவம்பர் 8ஆம் தேதி சுதேசமித்திரன் ஏட்டில் பாரதியார் பசுவதைத் தடுப்பைப் பற்றி எழுதியுள்ளதாவது:“பசுவின் சாணத்துக்கு நிகரான அசுத்த நிவாரண மருந்து உலகத்தில் அக்னியைத்தான் சொல்லலாம். வீட்டையும், யாகசலையையும், கோவிலையும், நாம் பசுவின் சாணத்தால் மெழுகிச் சுத்தப்படுத்துகிறோம்.

அதனைச் சாம்பல் ஆக்கி அச்சாம்பலை வீபூதி என்று ஜீவன் முக்தியாக வழங்குகிறோம். பசுமாடு பத்தினிக்கும் மாதாவுக்கும் ஸமானம். அதன் சாணமே வீபூதி. அதன் பால் அமிர்தம், வைத்தியரும், யோகிகளும் பசுவின் பாலை அமிர்தம் என்கிறார்கள். வேதமும் அப்படியேதான் சொல்கிறது.

பசுவை இந்துக்களாகிய நாங்கள் தெய்வமாக வணங்குவதால், நாங்கள் பெரும்பகுதியாக வாழ்வதும், எங்களுடைய பூர்வீக சொத்தாகிய இந்தத் தேசத்தில் பஹிரங்கமாகப் பசுவின் கொலையை யாரும் செய்யாமல் இருப்பதே மரியாதையாகும். இதைத்தான் ஆப்கானிஸ்தானத்து அமீர் சாஹெப், தமது தேசத்து முஸல்மான்களிடம் சொல்லிவிட்டுப் போனார்.

ஹிந்துக்களின் கண்ணுக்குப் படாமல் என்ன எழவு வேண்டுமானாலும் செய்து கொண்டு போங்கள்” (13) என்கிறார் பாரதியார்.இன்றைக்குக் கிறித்துவ மிஷனரி பாடசாலைகளில் பிள்ளைகளைச் சேர்க்கக் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ். கூறுவதை, பாரதியார், 18.8.1906 இலேயே மிஷின் பாடசாலைகளை விலக்கி வைத்தல் வேண்டும் என்று கூறி இந்தியா ஏட்டில் தலையங்கம் எழுதியுள்ளார்.

“அதில் படிப்பவர்கள் இந்து மதக் கடவுள்களைப் பற்றித் தெரிந்து கொள்ள மாட்டார்கள். அதனால் அவர்களுக்கு தேசபக்தி வராது. கிறிஸ்துவர்களாக மாறிவிடுவார்கள். எனவே அவர்களை அப்பள்ளிகளில் சேர்க்க வெண்டாமெனக் கேட்டுக் கொண்டுள்ளார்.” (14)1906 முதலே பாரதியார் கிறித்தவர்களைத் தேசபக்தி அற்றவர்கள்; இந்து மதத்தைக் கெடுக்க வந்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

1909இல் இசுலாமியர்கள் தேசபக்தி அற்றவர்கள் என்றும் ‘இந்தியா’ ஏட்டில் கருத்துப் படம் போட்டு எழுதியுள்ளார். இன்றைய ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், “இந்தியாவிற்குப் பொது மொழிப்பிரச்சனை தீர ஒரேவழி - சமசுகிருதம்தான் இந்தியாவின் பொது மொழியாக வேண்டும்” (15) என்கின்றனர். இதே கருத்தைப் பாரதி, இந்தியாவிற்குப் பொது மொழியாக சமசுகிருதம்தான் வரவேண்டும் என்று 1920இலேயே எழுதியுள்ளார். (16)ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சமசுகிருதம் மட்டும்தான் (தேவ பாஷை)தெய்வமொழி என்கின்றனர்.

பாரதியும் இதே கருத்தைத் தான் கூறியுள்ளார். (17) பாரதி, இன்னும் ஒரு படி மேலே போய், இந்தியாவிற்குச் சுதந்திரம் ஏன் தேவையென்றால் இந்து தர்மத்தைக் காப்பாற்றவே என்று, 1921இல் ‘லோக குரு பாரதமாதா’ என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.“எத்தனையோ நூற்றாண்டுகளாக இந்தியாவின் நெஞ்சில் வேதாந்தக் கொள்கை ஊறிக் கிடக்கிறது.

ஆனால் இக்கொள்கையை முற்றும் அனுஷ்டித்தல் அன்னிய ராஜ்ஜியத்தின் கீழே ஸாத்யப்படவில்லை. ஆதலால் நமக்கு ஸ்வராஜ்யம் இன்றியமையாதது. இந்தியா ஸ்வராஜ்யம் பெறுவதே மனித உலகம் அழியாது காக்கும் வழி. (18)பாரதி அகன்ற பாரதக் கொள்கை உடையவர். என்றைக்கும் இந்தியா உடையக் கூடாது என்பதில் மிகவும் உறுதியானவர்.

பாரதியின் காலத்திலேயே 1917இல் தெலுங்கர்கள் தங்களுக்குத் தனி மாகாணம் தேவை என்ற கொள்கையை முன்வைத்தார்கள். அப்போது பாரதி கீழ்க்கண்ட கருத்துகளை முன் வைக்கிறார்:“என்னுடைய அபிப்ராயத்தில் மேற்கண்ட கொள்கையெல்லாம் நியாயமென்றே தோன்றுகிறது.

ஆனாலும் அந்தச் சமயத்தில் ஆந்திரத்தைத் தனிப்பிரிவாக ருஜுபடுத்துவதைக் காட்டிலும், ஆப்கான் முதல் குமரி வரை உள்ள ஹிந்துக்களெல்லாம் ஒரே கூட்டம், வேதத்தை நம்புவோரெல்லாம் ஸஹோதரர், பாரத பூமியின் மக்களெல்லாம் ஒரே தாய் வயிற்றுக் குழந்தைகள், நமக்குள் மதபேதம், ஜாதிபேதம், குலபேதம், பாஷாபேதம் ஒன்றும் கிடையாது.

இந்தக் கொள்கைதான் இந்தக் காலத்துக்கு யுக்தமானது. ஹிந்து மதத்தை உண்மையாக நம்புவோரெல்லாம் ஒரே ஆத்மா, ஒரே உயிர், ஒரே உடம்பு, ஒரே ரத்தம், ஒரே குடல், ஒன்று.” (19)பாரதி பாப்பா பாட்டில் கூட,சேதமில்லாத இந்துஸ்தானம் அதைதெய்வமென்று கும்பிடடி பாப்பாஎன்றுதானே கூறியுள்ளார்?இன்றைய ஆர்.எஸ்.எஸ்.காரர்களைப் போலவே பாரதியும் உடன்கட்டை ஏறி இறந்து போனவர்களை உத்தமிகள் என்று கூறுகிறார். (20) இன்றைய ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் கொள்கைகளை அன்றைக்கு வகுத்துக் கொடுத்தவர் பாரதியார் என்று ஆணித்தரமாக நாம் சொல்லலாம்.

சுருங்கக் கூறின் இந்துக்களின் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருதல், இசுலாமியரும் கிறித்துவரும் மதமாற்றத்தில் ஈடுபடுகிறார்கள், அவர்கள் தேசபக்தி அற்றவர்கள், கிறித்தவர் பள்ளிகளில் இந்து மாணவர்களைச் சேர்க்கக் கூடாது, முகமதியர்களும் கிறித்துவர்களும் இந்துக்களின் விரோதிகள், இந்தியா முழுவதும் ஒரே நாடாக இருக்க வேண்டும்.

உலகம் முழுவதும் இந்து மதத்தைப் பரப்ப வேண்டும்; இந்துக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்; பிளவுண்டு மடியக் கூடாது, வேதத்தையும், தர்மத்தையும் நிலைக்கச் செய்ய வேண்டும், மீண்டும் நால்வருணம் வரவேண்டும், வகுப்புரிமை கூடாது, ஆரியர், திராவிடர் என்பது பொய், பாரதமாதா லோக குரு, பசுவதை கூடாது, சமஸ்கிருதம் உயர்ந்த மொழி; அது இந்தியாவிற்குப் பொதுமொழியாக வரவேண்டும்.

முதலான ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் எல்லாக் கொள்கைகளையும் வகுத்துக் கொடுத்து, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு அன்றே கெட்டியான அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர் பாரதியாரே என்பதை அவரது எழுத்துகளிலிருந்து அறிய முடிகிறது.


அடிக்குறிப்பு:

1. பாரதியார் கட்டுரைகள், வானதி பதிப்பகம்,ப.4232. மேற்படி நூல், ப.121-1233. மேற்படி நூல், ப.3794. மேற்படி நூல், ப.3815. பாரதி தமிழ் (தொ,ஆ) பெ.தூரன், வானதி பதிப்பகம்,ப.281-2826. பாரதியார் புதையல் பெருந்திரட்டு,(தொ.ஆ) ரா.அ. பத்மநாபன், வானதி பதிப்பகம், சென்னை 1982,ப.4787. பாரதியார் கட்டுரைகள்,ப.538. மேற்படி நூல், ப.1769. Tippu Sulran,A Fanatic? V.Jalaja Sakthidasan, Ninhyananda jothi nilayam, P25, chennai-28.10. மேற்படி நூல், ப11. பாரதியார் கட்டுரைகள்,ப.334,33512. பாரதி தமிழ் (தொ,ஆ) பெ.தூரன், வானதி பதிப்பகம்,ப.24113. மேற்படி நூல், ப.278-28014. பாரதி தரிசனம் தொகுதி 1,நி.செ.பு.நி, ப.25815. M.S.Golwaker Bunch of Thoughts. Page 15016. பாரதியார் புதையல் பெருந்திரட்டு, ப.274,27517. பாரதியார் கட்டுரைகள்,ப.4618. பாரதியார் புதையல் பெருந்திரட்டு, ப.500,50119. பாரதி தமிழ் (தொ,ஆ) பெ.தூரன்,ப.25520. பாரதியார் புதையல் பெருந்திரட்டு, ப.331,332

(வாலாசா வல்லவன் எழுதிய ‘திராவிட இயக்கப் பார்வையில் பாரதியார்’ நூலின் எட்டாம் அத்தியாயம்)

வெளியீடு: தமிழ்க் குடியரசு பதிப்பகம்.

Monday, December 1, 2008

மோடியிடம் ஆட்சியை ஒப்படைக்க சொல்லி ஓலமிடும் தெருநாய்!!

மும்பாயைச் சொல்லி யுத்தம் கவியுமா? மும்பாயில் நடந்த தாக்குதல்களைத் தொடர்ந்து,பார்ப்பனியப் பண்டாரங்கள் பதைபதைத்துப் பாரதத்தின் படைகளிடம்-இராணுவத்திடம் ஆட்சியை ஒப்படைக்கக்கோருவதும் அல்லது முஸ்லீம்களை குஜராத்தில் நரவேட்டையாடிய மோடியிடம் ஆட்சியை ஒப்படைக்கச் சொல்வதிலிருந்து நாம் பார்ப்பனியத்தின் பக்கச் சார்பைக் கணிக்கமுடியும்.இந்தியத் தேசவிரோதப் பார்ப்பனியம் இந்தியத் தேசத்தை அந்நியச் சக்திகளிடம் கையளித்து, ஆரிய நாமத்தை இந்தியமக்களுக்குப் போடுவதற்குப் பெயர்"இந்திய-பாராத தேச நலம்"என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.இந்தத் தேச விரோதப் பார்ப்பனிய மற்றும் பனியா நலன்களின்பின்னே கைகோர்த்திருக்கும் அந்நியத் தேசங்களினது அரசியல் இலக்கு என்ன?அது குறித்து எவர்-எப்படிப் புரிந்து கொள்கிறார் என்பதிலிருந்தே இந்தியப் பிராந்தியத்தில் சமாதானத்துக்கான முன்னெடுப்பு அமையும்.இது குறித்துப் புரிய முனைவோம்.









"பயங்கரவாதத்தின்" இன்னொரு முகத்தை நாம் மிக மெலினப்படுத்தப்பட்ட மொழிவுகளால் உய்துணர முடியாது! இதைப் புரிக முதலில்-புரிக!இந்தத் தருணத்தில் இந்தியாவின்மீது கவிந்திருக்கும் பார்ப்பனிய-பனியா ஆளும் வர்க்கத்தின் அரசியல் மோசடிகள் மிகவும் கெடுதியானவொரு சூழலை முழுமொத்த இந்திய உழைக்கும் வர்க்கத்துக்கு வழங்கப் போகிறது.கடந்தபல நூற்றாண்டுகளாக இந்தியாவைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பார்ப்பனிய-பனியா ஆளும் வர்க்கங்கள் காலனித்துவக்காலத்தில்கூட அந்நியர்களைத் தமது ஏஜமானர்களாக்கி, முழுமொத்த இந்தியாவையும் சுரண்டிக் கொழுத்தார்கள்.அவர்களில் மிக முக்கியமான டாட்டா போன்ற தரகு முதலாளித்துவ நிறுவனங்கள் அன்று, நிபந்தனையற்ற உதவிகளை காந்திக்கு வழங்கிப் போலிச் சுதந்திரத்துக்குப் பின்பான இந்தியாவைத் தமது காலடிக்குள் வைத்துச் சுரண்டிக் கொழுத்தார்கள்.இது,இந்தியப் போலித் தேசியத்துள் மறைக்கப்பட்ட வரலாறு.இதைக் காந்தியைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ்.காரன் கோட்சேயின் மொழியில் நாம் இனம் காணமுடியும்.இந்தியாவின் மிக முக்கியமான கல்வியாளரும் சமூகவியலாளருமான திரு.அஸீஸ் நந்தியைக் கற்றவர்களுக்கு இதுள் சந்தேகம் வரமுடியாது.





இன்றும், இதே கதையோடு தலைமுறை கடந்த "டாடட்டா"நிறுவன அதிபர் திருவாளர் இராற்றான் டாடா தனது தாஜ்மால் கோட்டலின் சிதைவுகளுக்கு மத்தியில் ஆத்திரத்தோடு இந்தியப் பாதுகாப்புக்குறித்துத் தமது எஜமானர்களின் தொலைக்காட்சிச் சேவையான சி.என்.என்.க்குப் பதிலளிக்கையில், இந்தியப் பாதுகாப்புக்குறித்து கேள்வி எழுப்புகிறார்.தமது கோட்டலுக்குப் பாதுகாப்பு வழங்குவதிலுள்ள குறைபாடுகளைக்குறித்து மூச்சுவிடும் இந்தக் களவாணிப்பயல் மோடியின் தலைமையில் அழித்தொழிக்கப்பட்ட அப்பாவி முஸ்லீங்கள் மூவாயிரம் பேர்கள் குறித்தோ, அவர்களது வாழ்வாதாரங்களின் சிதைப்புக் குறித்தோ மூச்சு விடவில்லை அன்று!இப்போது இத்தகைய துரோகிகளின் மூச்சுத் திணறல் தமது எஜமானர்களின்(அமெரிக்க-மேற்குலக) நாடுகளினது பொருளாதார இருப்போடு சம்பந்தப்படுகிறது.மும்பையில் நடந்தேறிய தாக்குதல்களைத் தொடர்ந்து, இந்தியாவினதும் பாகிஸ்த்தானினதும் அரசியல் நடாத்தையில் பல மாற்றங்களை வேண்டி, உலகம் எதிர்பார்க்கிறது.அதற்கேற்ற சதிவேலைகளை உருவாக்கியவர்கள் மும்பாயில் நடந்தேற்றிய ஒரு நாடகம் பல நூறு மக்களைப் பலியெடுத்துள்ளது.இதன் உண்மை மிக விரைவாக அம்பலத்துக்கு வரும்-வரவேண்டும்!பாகிஸ்த்தானும்,இந்தியாவும் போருக்குச் செல்வதை உலகம் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிடக்கிறது.இதற்கு மும்பாயில் நடத்திமுடிக்கப்பட்ட தாக்குதல் வழிவகுக்குமென அவர்கள் ஏலவே திட்டமிட்டார்கள்.அது அவர்களது பொருளாதார நலனுக்குமட்டுமல்ல,இந்தியாவின் வளர்ந்துவரும் பொருளாதாரத்தைத் திட்டமிட்டுச் சிதைப்பதற்கும் இதுவே அவர்களது இறுதி முடிவாகவும் இருக்கிறது.மேற்குலகம் திட்டமிட்டபடி இத்தாக்குதலுக்குப் பாகிஸ்தானும் அதனால் வளர்த்தெடுக்கப்படும் காஸ்மீரிய விடுதலை கோரும் அமைப்பான Jaish-i-Mohammed மற்றும் Lashkar-i-Toiba அடிப்படைவாத அமைப்புகளுக்குத் தொடர்பிருப்பதாகச் சொல்லும் கருத்துகளுக்குள் தமது பொருளாதாரத்துக்கு வலுச் சேர்க்கும் ஆயுதத் தளபாடவுற்பத்திச் சாலைகளுக்கான புதிய ஓப்பந்தங்கள் குறித்த நோக்கு இருக்கிறது என்பதை நாம் இனம் காணவேண்டும்

அமெரிக்க-ஐரோப்பியப் பங்குச் சந்தைகளில் தமது பெரும் மூலதனத்தை இழந்த இத்தேசங்களின் ஆளும் வர்க்கங்களுக்கு மிக அவசியமாக ஒரு பாரிய யுத்தம் தேவையாக இருக்கிறது.யுத்தங்களில் அழிக்கப்படும் இராணுவத் தளபாடங்களால் ஆயுத உற்பத்தி தொடர்ந்து மேல் நிலைக்கு வரும்போது, அத்தகைய தொழிலில் முதலீடு செய்த இந்த ஆளும் வர்க்கம் ஓரளவாவது அழிந்த மூலதனத்தை; மிக விரைவாகத் திரட்ட முடியும்.இது,பொருளாதாரத்தின் அரிச்சுவடியாகத் திருவாளர்.கெய்னிஸ் குறித்துரைப்பதிலிருந்து நாம் விளங்க முடியும்.நவ லிபரல்களின் பொருளாதார இலக்குள் யுத்தம் மிக அவசியமானது.இதனால் அவர்கள் செய்த பற்பல யுத்தங்களை நாம் வரலாற்றில் கண்டோம்.

இன்று,மேற்குலகப் பொருளாதாரச் சரிவைக்குறித்து யுத்தமொன்றை நேரடியாகச் செய்வதற்கு மேற்குலக நாடுகளின் மக்கள் தடையாக இருக்கிறார்கள்.அதேபோன்று, அமெரிக்கா இருக்கும் பொருளாதாரச் சூழலில் அது இன்னொரு யுத்தத்தில் ஈடுபட்டுத் தமது எஜமானர்களைக் காக்கும் நிலையில் இல்லை!இதன் தாக்கம் மிகவிரைவாக மூன்றாந்தரப்பால் யுத்தம் நடாத்தப்பட்டுத் தமது ஆயுத உற்பத்தியால் வளங்களைப் பெருக்குவதற்கு ஏதாவதொரு இழிச்சிவாய்த் தேசங்கள் அவசியமாக இனம் காணப்பட்டது.அங்கே,மிகப் பலமான முரண்பாடுகளைக் கொண்ட யுத்தமுனைப்புத் தேசங்களாக இருப்பவை தென்கிழக்காசியாவில் இந்தியாவும்,பாகிஸ்த்தானுமாகவே இனம் காணப்படுகிறது.இதற்குப் பல தசாப்தங்களாக இந்துமதப் பரிவாரங்கள் முகாந்திரம் அமைத்துள்ளார்கள் கூட்டாக!

இவ்விரண்டு தேசங்களினதும் முரண்பாடுகள் வெறுமனவே பொருளாதார இலக்குகளாக நீர்த்துப்போவதைத் தடுத்து, அவற்றுக்கு "இந்து-முஸ்லீம்"எனும் மிகப் பெரிய மத முரண்பாடு உருவகப்படுத்தி அடுத்த பல தசாப்தத்துக்கு அதையே யுத்தமாக நடந்தேற்றுவதற்கு அவசியமான தத்துவார்த்த அடித்தளதைக் கோரிக் கொள்கிறது மேற்குலகமும் அமெரிக்காவும்.இது மிக அவசியமான அரசியற் சூழ்ச்சியோடு அடுத்த தசாப்த வியூகமாக அமெரிக்க-மேற்குலக அரசியல்-பொருளாதாரச் சூழலில் விரிகிறதென்பதை மூன்றாம் உலகத்தவர்களின் அரசியல் புரிந்துகொள்வது மிக அவசியமானது.

அண்மைக் கிழக்குத் தேசங்களின் மூலதன இருப்பினது வளப் பிரிப்புப் போட்டியானது மேற்குலகத்தோடு மிகக்கெடுதியான பகை முரண்பாட்டைக் கொண்ட இஸ்லாமிய அடிப்படை வாதமாக முன்னே தள்ளுகிறது.இதனால்,மூலதனத்தைத் தொடர்ந்து கையகப்படுத்தும் அரசியல் வியூகமானது மேற்குலகத்தின் முற்றத்துக்கு இஸ்லாமியக் குண்டுதாரிகளைக் கையோடு கூட்டிவருகிறது.இது தமது தேசத்தின் உள்நாட்டு அரசியலில் பாரிய பின்னடைவுகளை இத்தேசங்களுக்குள் ஏற்படுத்திவருகிறது. இப்போது,இந்த இஸ்லாமியக் குண்டுகளை இந்தியாவை நோக்கித் திசை திருப்பிவிடும்போது,மிகவும் சாதகமான பொருளாதார வளர்ச்சியை மேற்குலக மற்றும் அமெரிக்கா மூலதனம் எட்டிவிடும்.

ஈராக் யுத்தத்துக்குப் பின்னான அரசியல்-பொருளாதார மற்றும் உள் நாட்டுப் பாதுகாப்புச் சூழல் மிகவும் கெடுதியாக மேற்குலகைப் பாதிக்கிறது.என்றுமில்லாதவாறு பெரும் பாதுகாப்புச் செலவீனங்களும் பொருளாதார நெருக்கடிகளையும் இத்தேசங்கள் சந்திக்கும்போது,இந்தியா மற்றும் சீனா போன்ற தேசங்கள் மிக இலகுவாக உலகத்தில் தமது சந்தைகளை வரிவுப்படுத்திப் பொருளாதார ஸ்த்திரத்தைக்கொண்டியங்குவது சகிக்கமுடியாத அச்சத்தை இந்தத் தேசங்களுக்கு ஏற்படுத்தியதைக் கடந்தகால மேற்குலகத் தகவல் மற்றும் ஊடகங்களில் பயிற்சியுடையவர்கள் அறிந்திருக்க முடியும்.

இன்று,"கிறிஸ்த்துவ-இஸ்லாம்" பகை முரண்பாட்டைத் திசை திருப்பி "இந்து-இஸ்லாம்" பகை முரண்பாடாக்கிய பெருமைக்கு மேற்குலகத்தோடு சேர்ந்து-கள்ளக்கூட்டுவைத்து இயங்கும் ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்திய மக்களின் எதிரிகளுக்கே சேரும்.

இந்தப் பார்ப்பனிய-பனியாச் சகதிகள் பாரத தேசத்தின் பாதுகாப்பு என்று கூலிக்குக் குரல் கொடுத்துப் பாகிஸ்த்தானுக்கும், இந்தியாவுக்குமானவொரு யுத்தத்தை மேற்குலகோடிணைந்து உருவாக்க முனையுந்தருணங்கள் தென்படுகின்றன.இங்ஙனம் யுத்தம் மேல் நிலைக்கெழுந்தால் இந்தியாவும் பாகிஸ்தானும் அப்பாவி மக்களின் வரிப்பணத்தை யுத்தத்துக்குள் கொட்டித் தமது மக்களில் பலரைப் பலியாக்கும்.இதனால் தேசம் தனது பொருளாதார ஸ்த்திரத்தை இழந்து,அனைத்து வளங்களையும் மேற்குலக ஆயுத உற்பத்தியாளர்களிடம் தாரவார்த்துவிடும்.இதுவே இன்றைய மேற்குலக-அமெரிக்க அரசியல்-பொருளியல் வியூகமாக எதிர்காலத்து அரசியல் இலாபங்களையும் அதனூடாகச் சந்தை விரிவாக்கத்தையும் தக்கவைக்க முனைகிறது.

இதையெல்லாம் ஒருங்கே நிறைவேற்றத் தகுந்த மாதிரிகளை உருவாக்கத் தமிழ்நாட்டுப் பார்ப்பனியக்கூட்டமும் தம்மாலான முயற்சியல் கூக்குரலிடுகிறது.அதில் ஒன்றுதாம் யூதர்களிடம் ஆலோசனை மற்றும் இந்திய இராணுவத்திடம்-மோடியிடம் ஆட்சியை ஒப்படை என்று ஓலமிடுகிறது.இத்தகையத் தெரு நாய்கள் இந்தியத் தேசத்தையும்,இந்திய உழைப்பாளர்களையும் அந்நியத் தேசங்களுக்குக் காட்டிக் கொடுத்து, கொலை செய்து வருகிறது.இதன் ஆரம்பம் மும்பையில் தொடரவில்லை.அது, ஏலவே மோடி தலைமையில் அயோத்திக்கான கொலைகளாக நடந்தேறியது.

அந்நிய ஆர்வங்களுக்கும் அமெரிக்க-மேற்குலக உளவுப்படைகளுக்கும் ஏஜென்டுக்களாக மாறியுள்ள இந்தப் பார்ப்பனியத்தை(சுப்பிரமணியசுவாமி மற்றும் சோ,சிதம்பரம் போன்றவர்களை மனதில் நிறுத்தவும்) வேரோடு சாய்பதற்கு மேற்குலகமே முட்டுக்கட்டையாக இருக்கும்.ஏனெனில், அடுத்தகட்ட யுத்த முனைப்பும்,பகை முரண்பாடும் மையங்கொள்வது இந்தியப் பிராந்தியத்தில் என்பது முடிந்த முடிவாகும்.அது,"இந்து-இஸ்லாம்"மதவாத யுத்தமாக உலகம் தகவமைக்கிறது!

இது குறித்து,இந்திய வம்சாவழியாகிய ஒவ்வொரு மனிதரும் மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.பாப்பனிய மற்றும் மேற்குலக உறவுகளை அம்பலப்படுத்தி,இவர்களைத் தோற்கடிக்காமால் தென்கிழக்காசியப் பிராந்தியத்தை சமாதான பூமியாக்கமுடியாது.

ப.வி.ஸ்ரீரங்கன்
30.11.2008
நன்றி : அகதி