Sunday, November 30, 2008

உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ராஜினாமா



டெல்லி: ஒரு வழியாக ராஜினாமா செய்துள்ளார் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல். நாட்டில் கடந்த நாலரை ஆண்டுகளாக நடந்த பல்வேறு தீவிரவாதத் தாக்குதல்களுக்கு உளவுப் பிரிவின் தோல்வியே காரணம் என்று மீண்டும் மீண்டும் உறுதியான நிலையில் அந்தப் பிரிவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த உள்துறை அமைச்சகமும் அதன் அமைச்சருமான சிவராஜ் பாட்டீல் தனது பதவியைக் காப்பதிலேயே தீவிரமாக இருந்தார். தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்தில் முன்னிலையில் நிற்க வேண்டிய இந்தத் துறை பெரும் தோல்வியை அடைந்த நிலையில் பாட்டீல் மீதான கோபம் நாடு முழுவதும் அதிகரித்து வந்தது. ஆனாலும் சோனியா காந்தி குடும்பத்துடனான தனது நல்லுறவை பயன்படுத்திக் கொண்டு பதவியை தக்க வைத்து வந்தார் பாட்டீல்.

இந் நிலையில் வந்தது மும்பை தாக்குதல். இதுவரை இந்தியா கண்டிராத மிகப் புதிய வகையிலான தாக்குதல் இது. கடல் வழியே வந்து தீவிரவாதிகள் நடத்திய இந்தத் தாக்குதல் நாட்டை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. இதில் கொடுமை என்னவென்றால் கடல் வழியே பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் வந்து போவது குறி்த்தும், ஆயுதங்கள் வருவது குறித்தும் மகாராஷ்டிர, குஜராத் மீனவர்கள் அந்த மாநிலங்களின் போலீசாருக்கு தகவல் தந்துள்ளனர். ஆனால், இரு மாநில அரசுகளும் செயல்படத் தவறியுள்ளன. இந்த மாநிலங்களின் செயல்படும் மத்திய உளவுப் பிரிவான இன்டெலிஜென்ஸ் பீரோவும் இந்த தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்து தகவல்களை திரட்டத் தவறியுள்ளது. இவர்களுக்கு எதிர்க் கட்சித் தலைவர்களை உளவு பார்க்கவே நேரம் போதாது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல உள்துறையின் கட்டுப்பாட்டில் வரும் கடலோரக் காவல் படையும் (கடற் படை அல்ல) இந்த விஷயத்தில் பெரும் தோல்வி அடைந்துள்ளது. இதையடுத்து உள்துறைக்கு தலைமை வகிக்கும் பாட்டீலுக்கு எதிரான கோபம் மீண்டும் வெடித்தது. தாக்குதல் நடந்து 4 நாட்களாகிவிட்ட நிலையில் அவரை மும்பையிலும் பார்க்க முடியவில்லை, டெல்லியிலும் வெளியில் தலை காட்டவில்லை. மூத்த அதிகாரிகளுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டு வந்தது. ஆனால், நேற்று பிரதமர் நடத்திய மிக முக்கியமான உயர் மட்டக் கூட்டத்துக்கு பாட்டீல் அழைக்கப்படவில்லை. மேலும் நேற்று கூடிய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திலும் சிவராஜ் பாட்டீல், மகாராஷ்டிர முதல்வர் தேஷ்முக் ஆகியோருக்கு எதிராக பல்வேறு தலைவர்களும் கடும் கருத்துத் தெரிவித்தனர். அவரை உடனே நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந் நிலையில் இன்று பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ள நிலையில் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமருக்கு அனுப்பியுள்ளார் சிவராஜ் பாட்டீல்.

No comments: