Wednesday, December 24, 2008
சத்யம் மிகப்பெரிய சைபர் மோசடி நிறுவனம்
வாஷிங்டன்/மும்பை: சத்யம் நிறுவனத்துக்கு 8 ஆண்டு கால தடை விதித்துள்ளது உலக வங்கி. இதனால் ஒட்டுமொத்தமாக இந்திய பிபிஓ துறையே பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.
சமீப காலமாக சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் அடுத்தடுத்து வீழ்ச்சிகளைச் சந்தித்து வருகிறது. கடந்த வாரம் மேடாஸ் கட்டுமான நிறுவன இணைப்பில் அதன் தலைவர் காட்டிய அவசரம், முதலீட்டாளர்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கியது. இதனால் இந்நிறுவனப் பங்குகள் சர்வதேச அளவில் கடுமையான வீழ்ச்சி கண்டன. செபி அமைப்பின் க டும் கண்டனத்துக்கும் ஆளானது சத்யம்.
இந்தியாவிலும் 35 சதவிகிதம் வரை இந்நிறுவன பங்குகள் விலை சரிந்தது.
இந்நிலையில் மிகப்பெரிய சைபர் மோசடியில் இந்நிறுவனம் சிக்கி, உலக வங்கியிடம் பெயரைக் கெடுத்துக் கொண்டுள்ளது.
உலக வங்கியின் கணிப்பொறி செயல்பாடுகள் முழுவதையும் சென்னையில் இருந்து சத்யம் நிறுவனம் நிர்வகித்து வருகிறது. சத்யம் நிறுவனத்தை சேர்ந்த சிலர் ஒரு மென்பொருளை வாஷிங்டனில் உள்ள உலக வங்கியின் ஒரு கணிப்பொறியில் நிறுவி, உலக வங்கியின் தகவல்களைக் கடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
உலக வங்கி தொடர்பாக கணிப்பொறியில் அவர்கள் என்னவெல்லாம் தட்டச்சு செய்கிறார்களோ அவை அனைத்தையும் ஒரு வேறு ஒருவருக்கு இந்த மென்பொருள் கடத்தியுள்ளது. மேலும் உலக வங்கி தொடர்பான ஆவணங்கள் முறையாகப் பராமரிக்கப்படவில்லையாம். சத்யம் நிறுவனத்தைச் சேர்ந்த தனிப்பட்ட சிலர் இதன் மூலம் ஆதாயமடைந்துள்ளதாக உலக வங்கி புகார் கூறியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம்தான் இந்த உண்மை எஃப்பிஐ மூலமாக உலக வங்கிக்கு தெரிய வந்துள்ளது.
உடனே சத்யம் நிறுவனத்தை உலக வங்கி அடுத்த 8 ஆண்டுகளுக்கு தடைசெய்துள்ளது. ஆனால் இந்த தகவலை வெளியில் வராமல் பார்த்துக் கொண்டது சத்யம் நிறுவனம். இப்போது விஷயம் வெளியில் கசிந்துவிட்டது.
இது சத்யம் நிறுவனத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவில் இருந்தபடி பன்னாட்டு அமைப்புகளுக்கு அவுட்சோர்ஸிங் செய்யும் பல பிபிஓக்களுக்கும் பலத்த அடியாகும். சத்யம் நிறுவனத்தின் இந்த செயல் இந்திய நிறுவனங்கள் மீதான நம்பகத்தன்மையை அடியோடு ஒழித்துவிட்டதாக பலரும் இப்போது கருத்துக் கூறி வருகின்றனர்.
ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது சத்யம் நிறுவனம்.
இந்நிலையில் இந்த தகவல் வெளியில் கசிந்தபிறகு சத்யம் நிறுவனப் பங்குகள் பெரும் சரிவைச் சந்துள்ளன. மேலும் 16 சதவிகிதம் விலை குறைந்து நேற்று ரூ. 140க்கு விற்கப்பட்டன. நியூயார்க் சந்தையிலோ வெறும் 6 டாலருக்குக் கீழ் போய்விட்டது.
சத்யம் தலைவர் ராஜினாமா?:
இதற்கிடையே சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனர் மற்றும் அதன் தலைவர் ராமலிங்க ராஜூ பதவி விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைவர் பதவியிலிருந்து விலகும் கடிதத்தை அவர் இயக்குனர் குழுவுக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும், இயக்குனர் குழுவின் முடிவுக்காகக் காத்திருப்பதாகவும் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் குழுக் கூட்டம் வரும் 29ம் தேதி நடைபெறவுள்ளது.
இதையொட்டி இப்போதே ராஜினாமா கடிதத்தை இயக்குனர் குழுவுக்கு அவர் அனுப்பிவிட்டார் என்கிறார்கள்.
thanks : thatstamil
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment