மும்பை: மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று மகாராஷ்டிர முதல்வர் விலாஸ் ராவ் தாஷ்முக்கும், துணை முதல்வர் ஆர்.ஆர். பாட்டீலும் பதவி விலகி விட்டனர்.
மும்பை தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் விலகி விட்டார். அடுத்து மகாராஷ்டிர முதல்வர் விலாஸ் ராவ் தேஷ்முக் மற்றும் துணை முதல்வரும், அம்மாநில உள்துறை அமைச்சருமான ஆர்.ஆர்.பாட்டீல் ஆகியோர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை பாட்டீல் தனது பதவியை ராஜினாமா செய்தார். முதல்வர் தேஷ்முக்கை சந்தித்து அவர் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார்.
மனசாட்சிக்கு கட்டுப்பட்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஆர்.ஆர்.பாட்டீல், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். டெல்லியில் நடந்த இக்கட்சிக் கூட்டத்தில் பாட்டீலை ராஜினாமா செய்ய கேட்டுக் கொள்வது என முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து கட்சித் தலைவர் சரத்பவார், பாட்டீலை ராஜினாமா செய்யுமாறு உத்தரவிட்டார். இதையடுத்தே ராஜினாமா முடிவை அறிவித்துள்ளார் பாட்டீல்.
மும்பை தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து என்.எஸ்.ஜி கமாண்டோக்கள் மக்களை மீட்கும் முயற்சியில் உயிரைப் பணயம் வைத்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, செய்தியாளர்களிடம் பேசிய பாட்டீல், இது சாதாரண சம்பவம்தான், பெரிய விஷயமல்ல என்று முட்டாள்தனமாக உளறினார் என்பது நினைவிருக்கலாம்.
தேஷ்முக்கும் விலகினார்
இதைத் தொடர்ந்து முதல்வர் தேஷ்முக்கும் விலகுவார் என எதிர்பார்க்கப்பட்டது.அதன்படி தேஷ்முக்கும் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் காரியக் கமிட்டிக்கு அவர் அனுப்பி விட்டார். இன்னும் 48 மணி நேரத்தில் புதிய முதல்வர் தேர்வு செய்யப்படுவார் என தெரிகிறது.
செளகான் அல்லது ஷிண்டே
தேஷ்முக்குக்குப் பதில் மத்திய அமைச்சர் பிருத்வி ராஜ் செளகான் அல்லது ஏற்கனவே முதல்வராக இருந்த சுஷில் குமார் ஷிண்டே ஆகியோரில் ஒருவர் முதல்வர் பதவிக்கு அமர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment