Saturday, December 20, 2008
கர்கரே இல்லாத மாலேகான் வழக்கு-விசாரணை தேங்கும் அச்சம்
மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்டு விட்டதால், மாலேகான் வழக்கு விசாரணை முன்பு போல துடிப்புடன் இருக்குமா என்று, அந்த வழக்கை விசாரித்து வரும் தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் அஞ்சுகின்றனர்.
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியவர் கர்கரே. மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு தலைவராகப் பொறுப்பேற்றவுடன் மாலேகான் வழக்கை துப்பு துலக்குவதில் தீவிரம் காட்டினார்.
அவரது தீவிரமான, ஆழமான விசாரணையில், பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. பெண் தீவிரவாதி(துறவி) பிரக்யா சிங் தாக்கூர், தீவிரவாதி (சாமியார்) பான்டே உள்ளிட்ட பல இந்து தீவிரவாதிகள்தான் இதில் கைதாகினர்.
இந்து தீவிரவாதிகள்தான் இந்த செயலுக்குக் காரணம் என்பதையும் வெட்ட வெளிச்சமாக்கினார் கர்கரே.
வழக்கு துரித கதியில் போய்க்கொண்டிருந்த நிலையில்தான் துரதிர்ஷ்டவசமாக மும்பை தீவிரவாதத் தாக்குதலில் பலியானார் கர்கரே.
இதனால் மாலேகான் வழக்கை விசாரித்து வரும் தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் பெரும் சோகத்தில் உள்ளனர். வழக்கு இனி எப்படிப் போகும், முன்பு போல தீவிரம் இருக்குமா, அரசிடமிருந்து போதிய ஆதரவு கிடைக்குமா என்ற சந்தேகம் மற்றும் அச்சத்தில் அவர்கள் உள்ளனர்.
கர்கரேவும் இல்லை, கர்கரே கேட்ட உதவிகளையெல்லாம் செய்து கொடுத்த உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் இல்லை. இந்த நிலையில் இந்த வழக்கின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
முன்பு போல தங்களுக்கு ஆதரவு கிடைக்காது என்ற அச்சமும் அவர்களிடம் உள்ளது. இதுகுறித்து அவர்கள் பகிரங்கமாக பேசாவிட்டாலும் கூட, போலீஸ் வட்டாரத்தில் இந்த வழக்கு குறித்த கவலைகள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றனவாம்.
இருப்பினும், கர்கரே கடுமையாக பாடுபட்டதற்கு உரிய பலனை அடையாமல் விடக் கூடாது என்ற உறுதியில் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் உள்ளனராம்.
தீவிரவாத தடுப்புப் பிரிவு கூடுதல் ஆணையர் சுக்வீந்தர் சிங் கூறுகையில், விசாரணையின் இறுதி கட்டத்தில் நாங்கள் உள்ளோம் என்றார்.
மும்பை தீவிரவாதத் தாக்குதல் வழக்கை தற்போது குற்றப் பிரிவு விசாரித்து வருகிறது. மாலேகான் வழக்கை தீவிரவாதத் தடுப்புப் பிரிவு விசாரித்து வருகிறது. மும்பைத் தாக்குதல் வழக்கை தீவிரவாதத் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைத்தால் மாலேகான் வழக்கு விசாரணை பாதிக்கப்படும் என்பதால் இப்போதைக்கு அது ஒப்படைக்கப்படவில்லையாம்.
குண்டுவைக்க ரூ. 10 லட்சம் நிதி:
இதற்கிடையே, தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம், மாலேகான் குண்டுவெடிப்புக்குக் காரணமான இந்து தீவிரவாத அமைப்பான அபினவ் பாரத் பொருளாளர் அஜய் ரஹிர்கர் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், குண்டுவெடிப்பை நிகழ்த்துவதற்காக பாரத் அமைப்பிலிருந்து ரூ. 10 லட்சம் வழங்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை இந்தூரில் உள்ள ஒரு ஹோட்டலில் ரஹிர்கர், 2 அறைகளை புக் செய்துள்ளார். இந்த அறைகள் ரஹிர்கர், எச்.வி. ஆப்தே, கர்னல் பி.எஸ். ராவ் பல்வந்த் ஆகியோரது பெயர்களில் புக் ஆகியுள்ளது. இதை ஹோட்டல் ஊழியரான கெளரவ் சர்மா உறுதிப்படுத்தியுள்ளார்.
சிங்காகாட்டில் ஆயுதப் பயிற்சி:
மேலும், இந்த செயலில் ஈடுபட்டவர்களுக்கு சிங்காகாட் என்ற இடத்தில் வெடிகுண்டுகளைப் பயன்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டதாக கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான ராகேஷ் தாவ்டே கூறியுள்ளார்.
இவருக்கும், நான்டெட் குண்டுவெடிப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதால், சிபிஐ தனியாக விசாரணை நடத்தி வருகிறது.
மாலேகான் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை, ராம்ஜி கலஸ்கரே என்பவர்தான் தனது மெக்கானிக் ஷாப்புக்கு கொண்டு வந்ததாக, இந்தூரைச் சேர்ந்த மெக்கானிக் கடை உரிமையாளரான ஜிதேந்திரா சர்மா வாக்குமூலம் அளித்துள்ளார்.
கலஸ்கரே-டேங்களேவுக்கு வலைவீச்சு:
இந்த கலஸ்கரே தற்போது தலைமறைவாக உள்ளார். மேலும் குண்டுகளை வைத்ததாக கருதப்படும் சந்தீப் டேங்களே என்பவரும் தலைமறைவாக உள்ளார். இவர்கள் இருவரும் இந்த வழக்கில் அதி முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்பதால் இவர்களைப் பிடிக்க தற்போது தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
கர்கரே இல்லாவிட்டாலும் கூட அவர் ஏற்படுத்தி வைத்து விட்டுப் போயுள்ள வேகத்தைப் பிடித்துக் கொண்டு தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் மாலேகான் வழக்கில் மீண்டும் மும்முரமாகியுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment