Thursday, March 26, 2009

இந்தியாவில் இஸ்லாம்-15

தொடர்-15: தோப்பில் முஹம்மது மீரான்

மாலிக் இப்னு ஹபீப் கட்டிய பள்ளிவாசல்கள்

மாலிக் இபுனு ஹபீப் இபுனு மாலிக் தம்முடைய மனைவி மக்களோடு கொல்லத்திற்குச் சென்றார். அங்கு ஒரு பள்ளிவாசல் கட்டினார். மனைவியையும் பிள்ளைகளையும் கொல்லத்தில் தங்கவைத்து விட்டு அவர் ஹேலி மாறாலி (ஏழு மலை)க்குப் போனார். அங்கேயும் ஒரு பள்ளிவாசலைக் கட்டினார். பிறகு, ஃபாக்கனூர் (பார்க்கூர்) மஞ்சூர் (மங்கலாபுரம்) காஞ்சர் கூந்து (காசர்கோடு) முதலிய இடங்களுக்குச் செல்லவும் அவ்விடங்களில் ஒவ்வொரு பள்ளிவாசல் கட்டினார். அதன் பின் ஹேலி மாறாலி (ஏழு மலை)க்கு புறப்படவும், ஏறத்தாழ மூன்று மாதங்கள் அங்கு ஓய்வெடுத்துக் கொண்டார். பிறகு அவர் ஜீர்பத்தன் (ஸ்டிகண்டபுரம்) தஹ்ஃபந்தன் (தர்மமடம்) ஃபந்தரீனா (பந்தலாயணி) சாலியாத்து (சாலியம்) ஆகிய இடங்களில் பயணம் மேற் கொண்டு அங்கெல்லாம் ஒவ்வொரு பள்ளிவாசல் நிறுவியபின் சாலியத்தில் ஐந்து மாதங்கள் தங்கினார்.

பிறகு, தமது சிறிய தகப்பனாரான மாலிக் இபுனு தீனாரை சந்திப்பதற்காக கொடுங்கல்லூருக்குச் சென்றார். சில நாட்கள் அவருடன் தங்கியிருந்தபின் தாம் கட்டிய அனைத்து பள்ளிவாசல்களுக்கும் சென்று தொழுகை நடத்தவும், முஸ்லிம் அல்லாதவரைக் கொண்டு நிரம்பிய ஒரு நாட்டில் இஸ்லாத்தின் கொள்கையைப் பரப்பியதில் பூரிப்படைந்து அல்லாஹ்வை புகழ்ந்துவிட்டு மீண்டும் கொடுங்கல்லூருக்கு திரும்பி வந்தார்.

மாலிக் இபுனு தீனார், மாலிக் இபுனு ஹபீப், தோழர்கள், சேவகர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து கொல்லத்திற்குச் சென்றனர். மாலிக் இபுனு தீனாரும் சில நண்பர்களும் நீங்கலாக, ஏனையோர்களை கொல்லத்தில் தங்கவைத்துவிட்டு இவர்கள் ஸஹருக்கு திரும்பிப் போனார்கள், ஸஹரில் வைத்து மறுமை எய்த மன்னரின் கபரிடத்தில் மாலிக் இபுனு தீனாரும் தோழர்களும் விஜயம் செய்தனர்.

அதற்குப் பின் குராசானுக்கு அவர்கள் சென்றனர். அங்குதான் மாலிக் இபுனு தீனார் மரணமடைந்தார். மாலிக் இபுனு ஹபீப் இபுனு மாலிக் சில பிள்ளைகளை கொல்லத்தில் தங்க வைத்துவிட்டு மனைவியுடன் கொடுங்கல்லூருக்கு திரும்பிச் சென்றார். அங்கு அவரும் மனைவியும் இறைவனடி சேர்ந்தனர். மலபாரில் முதல்முதலாக நடந்த இஸ்லாம் மார்க்கப் பிரச்சாரத்தின் வரலாறு இதுவாகும்.

இது எந்த ஆண்டில் நிகழ்ந்தது என்று குறிப்பாக சொல்வதற்கு தகுந்த தடயங்கள் ஏதுமில்லை. ஹிஜ்ரி 200ஆம் ஆண்டிற்குப் பின் நிகழ்ந்திருக்கலாமென்பது பெரும்பான்மையோரின் கருத்தாகும்.

மேற்குறிப்பிட்ட மன்னரின் இஸ்லாம் மத மாற்றம் நபிகள் நாயகத்தின்(ஸல்) காலத்தின் என்றும், ‘சந்திரப்பிளப்பை’ மன்னர் நேரடியாகப் பார்த்ததாகவும், அவர் திருத்தூதரிடத்தில் சென்றதாகவும், திருத்தூதரை சந்தித்த பின் ஒரு முஸ்லிம் குழுவுடன் மலபாருக்கு திரும்பிவரும் வழியில் ஸஹரில் வைத்து இறந்ததாகவும் நிலவிவரும் ஊகம் முற்றிலும் ஆதாரமற்றவையாகும்.

இன்று மக்களிடையே பரவி இருப்பது போல் மன்னரின் கபர் ஸஹரில் அல்ல, ஏமன் நாட்டிலுள்ள ‘ஸஃபரி’யிலாகும். ‘சாமூரிக் கபர்’ என்ற பேரில் அறியப்படும் அந்த இடத்தை பாதுகாக்கப்பட்ட இடமாக அந்த நாட்டு மக்கள் கருதி வருகின்றனர்.

அரசர் காணாமல் போன நிகழ்ச்சி மலபாரிலுள்ள ஹிந்துக்கள் மத்தியிலும் முஸ்லிம்கள் மத்தியிலும் அதிகம் பிரச்சார மிகுந்த கதையாகும். மன்னர் மேல் உலகிற்கு (வான உலகிற்கு) ஏறிச் சென்றதாகவும், ஒரு நாள் இறங்கிவருவார் என்றும் ஹிந்துக்கள் நம்பிவருகின்றனர். இதன் அடிப்படையில் தான் கொடுங்கல்லூர் நகரில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சில விசேஷ தினங்களில் மிதியடியும் தண்ணீரும் தயார் செய்து வைப்பதும் விளக்கு ஏற்றுவதும் ஆகும்.

(திரு.வேலாயுதன் பணிக்கச்சேரி என்ற வரலாற்று ஆசிரியர் “கேரளா 15-ம் 16-ம் நூற்றாண்டுகளில்” என்ற தலைப்பில் மலையாளத்தில் மொழிபெயர்த்த நூலின் 57-71 வரையான பக்கங்களின் தமிழாக்கம்)

சேரமான் பெருமாள் இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டது முதல் இஸ்லாம் இங்கு தோன்றியதாக சிலர் கூறிவருகின்றனர். இங்கு இஸ்லாம் தோன்றியதோடு சேரமான் பெருமாள் கதையை இணைத்து வருவதால் சிலர் பெருமாள் காலத்தையே குழப்பி விடுகின்றனர். ஏதோ ஒரு பெருமாள் என்பதை அனைத்து ஆசிரியர்களும் ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் அந்த பெருமாளுடைய காலம் 10-வது நூற்றாண்டிற்கு பிற்பட்ட காலமாக இருக்கலாம் என்று குழப்புகின்றனர்.

இங்கு சேரமான் பெருமாள் நாயனாரோ, பள்ளி - பாண பெருமாள் என்ற பெளத்த அரசரோ இஸ்லாத்தைத் தழுவியதன் அடிப்படையில் இஸ்லாத்தின் தோற்றத்தையும் அதன் வளர்ச்சியையும் பார்க்க வேண்டியதில்லை, இவர்களுடைய மத மாற்றம் இதற்கு ஒரு காரணமல்ல. இவர்களுடைய மத மாற்றம் இஸ்லாத்தின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் ஒரு முக்கிய திரும்புமுனை என்ற அடிப்படையில் இதை ஆராய்வோமானால் ஆண்டு தேதிகளிலும் பெயர்களிலும் காணப்படும் குளறுபடிகளால் உண்மையை சரிவர ஆராய முடியாது. இவ்விரு பெருமாள்களைப் பற்றித் தனியாக ஆராய்வோம். தற்போது கையிலிருக்கும் மறுக்க முடியாத வரலாற்றுச் சான்றின் அடிப்படையில் உண்மையின் வேர்களைத் தேட வேண்டும்.

தொடரும்..

நன்றி: மக்கள் உரிமை - டிசம்பர், 23 - 29, 2005

No comments: