Thursday, March 19, 2009
காங்கிரஸ் குடும்பத்தில் கோட்சேவின் சிந்தனையாளரா?
இந்துக்கள் நல்லவர்கள்.நாட்டின் நலனில் அக்கறை உள்ளவர்கள் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.அதே நேரத்தில், இந்துத்துவாக்கள் எனப்படுபவர்கள் தங்களின் சுயநலத்திற்காக, பதவி அரசியலுக்காக எதையும் பேசவும், எழுதவும், செய்யவும் தயங்கமாட்டார்கள். இப்படிப்பட்ட இந்த கும்பலில், காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்து, அகிம்சையை போத்தித்த காந்தியின் பெயரை தன்பெயரோடு ஒட்டிக்கொண்டு மதவாத பா.ஜ.க வில் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் வருண்காந்தி என்பவர் பா.ஜ.க சார்பாக நாடாளுமன்ற வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.
மேற்படி வருண்காந்தி தேர்தல் பிரச்சாரத்தின்போது, இது எனது கை. காங்கிரஸின் சின்னம் அல்ல. இது பா.ஜ.கவின் பலம். இந்துக்களுக்கு எதிராக யாராவது விரலை நீட்டினாலோ, இந்துக்கள் பலவீனமடைந்து விட்டதாக, தலைமை இல்லாமல் போய்விட்டதாக நினைத்தாலோ, ஓட்டுக்காக இந்துதலைவர்கள் காலில் விழுவார்கள் என்று நினைத்தாலோ, பகவத் கீதையின்மீது சத்தியம் செய்து அத்தகையவர்களின் கையை வெட்டுவேன் என்று பேசியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வருணின் இந்த பேச்சை காங்கிரஸ் மட்டுமல்ல பா.ஜ.க. சேர்ந்த முக்தார் அப்பாஸ் நக்வி, ஷானவாஸ் ஹுசைன் உள்ளிட்டோர்கூட கண்டித்துள்ளனர்.
மேலும், வருணின் பேச்சை ஆய்வு செய்த தேர்தல் கமிஷன், ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவின் கீழ் வருணின்மீது வழக்கு தொடுக்க காவல்துறைக்கு உத்தவிட்டதையடுத்து இ.பி.கோ.153 [ஏ],மற்றும் 188 .பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. வருண்காந்தி கைது செய்யப்படலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன. இதில் வருன்மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் கம்பி எண்ணுவதோடு, தேர்தலிலும் போட்டியிடமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறமிருக்க, வருணை போன்றவர்கள் இவ்வாறு பொது இடத்தில் பேசும் துணிச்சல் எங்கிருந்து கிடைத்தது எனில், கடந்த காலங்களில் மட்டுமல்ல வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மத துவேஷத்தோடு பேசி வரும் இந்துத்துவாக்களின்மீது நடவடிக்கை எடுக்கப்படாததுதான்.
*ரத யாத்திரை என்ற பெயரில் செல்லுமிடமெல்லாம் முஸ்லிம்விரோத கருத்துக்களை பேசி ரத்த யாத்திரை நடத்திய அத்வானிமீது நடவடிக்கை இல்லை.
*தனது பேச்சுக்களாலும், 'தலையங்கங்களாலும்' மும்பையில் சுமார் மூவாயிரம் முஸ்லிம்கள் கொள்ளப்பட காரணமான பால்தாக்கரே மீது நடவடிக்கை இல்லை.
*வட இந்தியர்களுக்கெதிரான தொடர் துவேஷத்தை கடைபிடிக்கும் ராஜ்தாக்கரே மீது நடவடிக்கை இல்லை.
*திரிசூலத்தில் உள்ள மூன்று சூலங்களின் ஒருமுனை முஸ்லிம்களையும், மறுமுனை கிறிஸ்தவர்களையும்,மற்றொரு முனை நாத்திகர்களையும் கருவறுக்கும் என்று பேசிய பிரவீன் தொகாடியா மீது நடவடிக்கை இல்லை.
*ராமர் பாலம் விஷயத்தில் எந்தெந்த அதிகாரிகள் ஈடுபடுகிறார்கள் என்று கணக்கெடுத்து வருகிறோம்.ராமர் பாலத்தை காக்க எங்கள் உயிரையும் கொடுக்க தயங்கமாட்டோம். எவரது உயிரையும் எடுக்கவும் தயங்கமாட்டோம் என்று பேசிய உமாபாரதி மீது நடவடிக்கை இல்லை.
*ராமர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார் என்று கருத்து சொன்னதற்காக, தமிழக முதல்வரின் தலையை கொண்டுவருபவர்களுக்கு சன்மானம் என்று அறிவித்த சாமியார் வேதாந்தி மீது நடவடிக்கை இல்லை.
இப்படி இந்துத்துவாக்களின் மத,மனிதநேய,சமூகத்திற்கெதிரான பேச்சுக்களை அடுக்கிகொண்டே போகலாம். இவ்வாறு அவர்கள் பேசும்போது உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், வருணுக்கு இவ்வாறு பேசும் துணிவு வந்திருக்காது. என்ன செய்ய! நம்ம நாட்டு சட்டம் ஏழைகள்/பலவீனர்களிடத்தில், ஐ.எஸ்.ஐ. தரச்சான்றிதல் பெற்ற 'முறுக்கு கம்பி' போல் விறைப்பாக நடந்து கொள்வதும், அதிகார வர்க்கம் விசயத்தில் 'நாணல்'போல வளைவதும் வாடிக்கைதானே! சட்டம் வருணுக்கு கருணை காட்டுமா அல்லது கடமையை செய்யுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment