Thursday, March 19, 2009

இந்தியாவில் இஸ்லாம்-9

தொடர்-9 தோப்பில் முஹம்மது மீரான்

கற்பனையான பயண நூல்கள்

சென்ற இதழில் சுலைமான் என்ற பாரசீக நாட்டு வர்த்தகர் எழுதிய சில்சிலத்து தவாரிக் என்ற நூலைக் பற்றி குறிப்பிட்டிருந்தோம்.

சுலைமானுடைய நூலில் அவருடைய சொந்த அனுபவங்கள் மட்டுமின்றி கி.பி. 851-க்கு முன் அரேபியர்கள் இந்தியாவைப் பற்றி தெரிந்துள்ள தகவல்கள் முழுவதும் அதில் காணப்படுகின்றன. அதனாலேயே சில வரலாற்று அறிஞர்கள் சுலைமான் இந்தியாவுக்கு விஜயம் செய்யவில்லை என்று ஊகிக்கின்றனர். (பயணிகளும் வரலாற்று ஆசிரியர்களும் - வேலாயுதன் பணிக்கச்சேரி - பாகம் 1, பக்கம் 78-79)

சுலைமானுடைய நூலை மட்டும் ஆதாரம் காட்டி இந்தியாவிலோ குறிப்பாக தென்னிந்தியாவிலோ இஸ்லாம் கி.பி 851-க்குப் பிறகுதான் வந்திருக்கக் கூடும் என்று நம்புபவர்கள் அந்தப் பயண நூலில் வேறு ஒரு இடத்தில் காணும் செய்தியை அப்படியே விட்டுவிடவோ அல்லது கவனம் செலுத்தாமலோ இருந்துவிட்டனர்.

“He (the king of Jutz) is unfriendly to the Arabs, still he acknowledges that the King of Arabs is the greatest of Kings. Among the princess of India there is no greater friend of Mohammedam faith than he.” (History of India as told by its own Historians! Elliot and Dowsan VoL.1 page 4)

இந்தியாவிலுள்ள பிற அரசர்களை விட ஜர்ஸில் உள்ள அரசர்களுக்கு இஸ்லாத்தின் மீது பகைமை இருந்ததாக கூறியுள்ளாரே? இஸ்லாம் இங்கு பரவி இருந்ததாலும்-வளர்ந்து வருவதாலும் தானே இப்படி பகைமை வைத்திருக்க முடியும். கி.பி.851க்குப் பிறகுதான் இஸ்லாம் மேற்கு, கிழக்கு கடற்கரை பகுதிகளில் தோன்றிவிருக்க வேண்டும், அல்லது தோன்றியது என்று வாதம் தொடுப்பவர்கள் சுலைமானுடைய பயண நூலை மேற்கோள் காட்டுவது எவ்விதம் பொருத்தமாக இருக்க முடியும்? இன்னும் அதையே நாடுவது, மூழ்கி இறக்கப் போகும் ஒருவர் காகிதத் தோணியை எட்டிப் பிடிப்பதற்கு ஒப்பாகும்.

இதைப் போல் சுலைமானுடைய கூற்றில் மேலும் பல முரண்பாடுகள் இருப்பதையும் காண முடிகின்றன. அவருடைய சில்சிலத்து தவாரிக் எனும் பயண நூலில் வேறு ஓர் இடத்தில் கூறப்பட்டிருப்பதை Roland-E-Miller தம்முடைய -Mappila Muslims of Kerala” எனும் நூலில் சுட்டிக் காட்டுகிறார்.

“Most of the princess….. believe that the length of their and their reigns is granted in recompense for their Kindness to the Arabs. In truth there are no princess more heartily affectionate to their Arabs, and their subjects profess the same friendship for us” (page 46)

A.D.943ல் மசூதி (Masudi) எனும் அரபி பயணி ஒருவர் இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்தார். இவர் ஒருவரைத் தவிர 10-வது நூற்றாண்டிற்கு முன் எந்த முஸ்லிம் பயணியும் இந்தியாவுக்கு விஜயம் செய்யவில்லை. இதை மில்லரும் உறுதிப்படுத்துகிறார். ஆனால் மசூதி தென் இந்தியாவுக்கு விஜயம் செய்யவில்லை என்று சில கருத்துக்கள் நிலவுகின்றன. மசூதியுடைய பயண நூலான அல்தன்பிஹ் வல் இஷ்றாப் (Al Tanbih wal-Ishraf)ல் தென் இந்தியாவைப் பற்றியச் செய்திகள் சுலைமானுடைய நூலிலிருந்து எடுத்தாளப்பட்டவை என்று மில்லர் கருத்து தெரிவிக்கின்றார்.

இந்தியாவுக்கு வந்த அல்மசூதி, தென்னிந்தியாவை நேரடியாகப் பார்த்தாரோ இல்லையோ இதை இங்கு சர்ச்சைக்குட்படுத்த வேண்டாம். அல்மசூதி, சுலைமானுடைய பயண நூலிலிருந்தும், வேறு சில அரபி வர்த்தகரிடமிருந்தும் கேட்டுத் தெரிந்து கொண்டதாகவுமிருக்கலாம் அல்லது நேரடியாக பார்த்து அப்பயண நூல் எழுதியதாகவுமிருக்கலாம். தம்முடைய நூலில் அவர் குறிப்பிட்டிருக்கும் சில தகவல்கள் உண்மையின் பக்கம் வெளிச்சம் காட்டுகின்றன.

“islam is flourishing in the country of the Balhara” - என்று “மசூதி” குறிப்பிட்டிருப்பதாக மில்லர் கூறுகிறார் (பக்கம் 46) ‘பல்ஹரா’ என்பது தென்மேற்கு கடற்கரைப் பகுதியை ஆண்டு வந்த அரசர் பெயராகும். இவருடைய தலைநகரம் கொங்கன் என்றும் கூறுகின்றார். இவர் ஒரு சேர அரசர் என்பதில் சந்தேகமில்லை என்று மில்லர் குறிப்பிடுகிறார். “கொங்கனில்” ‘சவுன்’ நகரத்தில் மட்டும் பத்தாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் வாழ்ந்திருந்ததாக” மசூதியின் பயணக் குறிப்பிலிருந்து எடுத்தாளுகின்றார் வேலாயுதன் பணிக்கச்சேரி என்ற வரலாற்று ஆசிரியர். (பயணிகளும் வரலாற்று ஆசிரியர்களும் எனும் நூலில் - பாகம் 3 பக்கம் 42)

நாம் சொல்லவரும் விஷயத்திற்கு சாதகமாகவும், பாதகமாகவும் சாட்சியம் கூறும் இந்த பயணக் குறிப்புகள் எல்லாம் நம்பகமான ஆவணங்களாக ஏற்றுக் கொள்வதற்கு முடியாத முரண்பாடுகள் நிறைந்த கற்பனைக் கதைகளாகும்.

14-வது நூற்றாண்டில் இந்தியா வந்திருந்த இபுனு பதூதாவின் பயண நூலும் இதற்கு விதிவிலக்கு அல்ல. கருங்கக்கூறின்: இந்தப் பயணிகள் (10வது நூற்றாண்டிற்கு முன்பு வந்தவர்கள்? யாருமே நேரடியாக தென்னகம் விஜயம் செய்யவில்லை. அவ்வப்போது இங்கு வந்துபோகும் அரபி வர்த்தகரிடமிருந்து கேட்டு தெரிந்து கொண்ட கேட்டறிவைக் கொண்டு, கற்பனையில் பயணம் செய்து இவர்கள் பயண நூல்கள் இயற்றிவிட்டனர் என்பதை பிற்கால வரலாற்று ஆசிரியர்கள் பலர் இந்நூல்களில் காணப்படும் முரண்பாடுகளை சுட்டிக்காட்டி நிருபணம் செய்துள்ளனர்.

இபுனு பதூதாவும் இதைத்தான் செய்தார். இந்தியா வரும் முன் நடந்த சில வரலாற்று நிகழ்ச்சிகளைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொண்ட அறிவோடு கற்பனையும் கலந்து அவர் எழுதிய பயண நூலை மத்திய கால இந்திய வரலாற்றுக்கு ஆவணமாக எடுத்துக் கொண்ட நூல்தான் மாபெரும் அறிஞரான முஹம்மது பின் துக்ளக் வரலாற்றில் ஒரு முட்டாள் மன்னராக்கப்பட்டான். (உண்மையின் வெளிச்சத்தில் முஹம்மது பின் துக்ளக் எனும் தலைப்பில் ‘முஸ்லிம் முரசில்’ நான் எழுதிய தொடர் கட்டுரையைப் பார்க்க ஜூலை 89-ஜூன் இதழ்கள்)

ஒரு நாட்டையே பார்க்காமல் அந்த நாட்டைப் பார்த்ததாக கற்பனையில் புணையப்பட்ட பயண நூல்களை மேற்கோள்காட்டி இஸ்லாம் இங்கு 9வது நூற்றாண்டிற்கு முன் நுழையவில்லை என்று திட்டவட்டமாக கூறிவருகின்றனர். மேற்குறிப்பிட்டுள்ள பயண நூல்களில் சொல்லப்பட்ட விஷயங்களின் அடிப்படையில் இஸ்லாம் இங்கு தோன்றியதைப் பற்றி ஆராய்வதை விட மக்கள் அவர்களுடைய கலாச்சாரம், தொழில், தண்டிக்கப்பட்ட முறை, பழக்கத்திலிருந்த நாணயங்கள், செப்பேடுகள் ஆகிய வரலாற்றிற்கு அடிப்படையான ஆவணங்களை முன்வைத்துதான் இவ்வரலாற்று உண்மையை ஆராய வேண்டும்.

- தோப்பில் முஹம்மது மீரான்

தொடரும்..

மக்கள் உரிமை: அக் 21 - 27, 2005

No comments: