ஊர்ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள். முஸ்லிம்கள் பிளவுபட்டால் அரசியல்வாதிகளுக்குக் கொண்டாட்டம்! அரை நூற்றாண்டுக்கும் மேலாக இந்திய/தமிழக முஸ்லிம்கள் இப்படித்தான் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். மத்திய/மாநில ஆட்சியைப் பிடித்திருக்க வேண்டியவர்கள் பிறருக்காகக்கொடி பிடித்து கோஷம்போடப் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்!
எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் புதிதாகத் தோன்றியுள்ள சிலகட்சிகளும் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளன. இதுவரையிலும் முஸ்லிம்களுக்கு ஒரேயொரு சீட்டைக் கொடுத்து என்றும் நிரந்தரமாக இதயத்தில் இடம் கொடுக்கும் ராஜதந்திரம் இனியும் எடுபட வாய்ப்பில்லை என்று அண்மையில் அரசியல் கட்சியாகப் பரிணமித்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவு (ம.ம.க) மாறுபட்ட சிந்தனை உறுதியுடன் இருக்கிறது.
"எங்காளுக்குக் கருப்பு செவப்பத் தவிர வேற கலரே தெரியாம இருந்துச்சி" என்று தொடங்கிய பழனி பாபாவிலிருந்து செல்லரிக்கத் தொடங்கிய திமுகவின் முஸ்லிம் அடிமைப் பத்திரம், ததஜவில் தொடர்ந்து, வியப்பூட்டும் வகையில் தற்போது த.மு.மு.கவின் கைமாறி இருக்கிறது என்பதை, அதன் தலைவர் பேரா.ஜவாஹிருல்லாஹ்வின் வெகுஅண்மைக்கால நேர்முக/ அறிக்கைகள் தெளிவு படுத்துகின்றன. 'உரிய மரியாதை' கிடைத்தால் அதிமுகவுடன் கூட்டணியமைத்தும் தேர்தலைச் சந்திக்கப் போவதாக மனித நேய மக்கள் கட்சி காய்நகர்த்தி வருகிறது.
திமுகவைப் பொருத்தவரையில் இத்தேர்தலில் காங்கிரஸுக்கு முன்பைவிட அதிகத்தொகுதிகளை வழங்கி மதிமுக,பாமக மற்றும் கம்யூனிஸ்டுகளின் வெற்றிடத்தைக் காங்கிரஸுக்குக் கொடுத்து மத்திய அரசை ஆட்டுவிக்கப் போதுமான குறைந்தபட்ச தொகுதிகளில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளது.
ஈழத்தமிழர் பிரச்சினையில் திமுகவின் முரண்பட்ட நிலைப்பாட்டால் இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்குக் கணிசமான இடங்கள் பறிபோகுமென எதிர்பார்க்கப்படுகிறது.எனவே காங்கிரஸுக்கு ஒதுக்கிய தொகுதிகளில் இருந்து தேமுதிகவுக்கு 4லிருந்து 6 தொகுதிகள்வர ஒதுக்கி, அடிக்கடி குடைச்சல் கொடுக்கும் பாமகவுக்கு செக் வைக்கப்படலாம் (பாமகவுக்கு அம்மா பக்கமிருந்தும் அழைப்பிருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்).
திமுக=15, காங்கிரஸ்=12, காதர் முஹைதீன்=1, திருமாவளவன்=1 அல்லது 2, தேமுதிக=6லிருந்து 8 போக மனிதநேய மக்கள் கட்சி திமுக கூட்டணிக்கு வரும் பட்சத்தில் அதிகபட்சம் 2 அல்லது 3 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஏனெனில், மனித நேய மக்கள் கட்சிக்கு திமுக-காங்கிரஸ் கூட்டணியை தவிர வேறுவழியில்லை என்ற உறுதியான நம்பிக்கையில் கலைஞர் அதிகபட்சம் 2 அல்லது 3 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என்று சொல்லக்கூடும். (15+12+1+2+7+3).
இதுபோக,"எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்க எங்களின் கதவுதிறந்தே உள்ளது" என மனிதநேய மக்கள்கட்சி அறிவித்து அதிமுக அழைப்பையும் எதிர்பார்த்துள்ளது. திமுக-காங்கிரஸ் கூட்டணியின் தோல்விக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் ஜெயலலிதா,மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 அல்லது 4 தொகுதிகளுடன் ஒரு ராஜ்யசபா உறுப்பினர் என்றும் ஆசை காட்டியிருப்பதாகச் செய்திகள் கசிந்துள்ளன.
அதிமுகவைப் பொருத்தவரை இத்தேர்தலில் இருபது சீட்டுகளை வைத்துக் கொண்டு, கம்யூனிஸ்டுகளுக்குத் தலா நான்கு தொகுதிகளும் மதிமுகவுக்கு 4-5 தொகுதிகளும் வழங்கக்கூடும். அன்புச்சகோதரி ஜெயலலிதாவின் அன்பு அழைப்பை ஏற்று, தமிழினத்திற்கு துரோகமிழைத்த திமுக-காங்கிரஸ் கூட்டனியைத் தோற்கடிக்க வேண்டிய கட்டாயத்தில் பாமக, அதிமுக கூட்டணிக்கு வந்தால் பாமகவுக்கு ஆறு தொகுதிகளையும் ஒதுக்கக்கூடும். மனிதநேய மக்கள்கட்சியும் அதிமுக கூட்டணிக்குள் வந்தால் மதிமுகவிடம் இருந்து (Mr.வைகோ! உங்கள் கட்சியில் முன்பிருந்த மூத்தத் தலைவர்கள் தற்போது இல்லையே....) அல்லது அதிமுகவுக்கான தொகுதிகளிலிருந்து 1-2 ஐச்சேர்த்து மூன்று தொகுதிகள்வரை முஸ்லிம்களுக்கு வழங்கக்கூடும்! (19+4+4+4+6+3).
இதுவரை ஒரேயொரு தொகுதியைப் பரிசாகப்பெற்று பாராளுமன்றத்தில் தமிழக முஸ்லிம்களின் குரலை ஒலித்த (?) கலாச்சாரத்தை மாற்றியமைத்து இம்முறை 4-6 தொகுதிகளில் கூட்டணியாக அல்லது தனித்து தேர்தலைச் சந்திக்கப்போவதாக மமக முனைப்புடன் உள்ளது. தனித்துப் போட்டியிட்டாலும் கூட்டணியாகப் போட்டியிட்டாலும் 'உள்குத்து' அரசியலுக்கு வெளியாட்களின் தேவை மமகவுக்கு இருக்காது. "தேர்தலில் போட்டியிட மாட்டோம்" என்று சொல்லிவந்த தமுமுக தற்போது அரசியல் சாக்கடையில் இறங்கிவிட்டதாக முன்னாள் சகாக்களின் 'இனிய' பிரச்சாரம் நடக்கலாம்.
போதாதென்று இந்திய தேசிய மக்கள் கட்சியும் பத்து இடங்களில் போட்டி இடப்போவதாகச் சொல்லி வருகிறார்கள். (சட்டமன்றத் தேர்தலுக்கே இதேமகவுக்குப் பத்து தொகுதிகள் அதிகம்!;-) முஸ்லிம்லீக்,மனிதநேய மக்கள் கட்சி,இந்திய தேசிய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் குறிவைத்துள்ள தொகுதிகளில் வேலூர், ராமநாதபுரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகியவை உள்ளன.எதிரெதிர் கூட்டனியாக அல்லது தனித்து நின்றால் வேலூரில் முஸ்லிம் வேட்பாளரை எதிர்த்து இன்னொரு முஸ்லிம் வேட்பாளரே போட்டியிடும் நிலை ஏற்படும்.(உள்ளதும் போச்சடா நொள்ளைக்கண்ணா!)
இருபத்தேழு லட்சம் (8%) வாக்காளர்களைக் கொண்டிருக்கும் தேமுதிகவை விட, தமிழக முஸ்லிம்கள் சற்று அதிகமாகவே உள்ளனர். அரசுப்பூர்வமற்ற புள்ளிவிபரப்படி 13-15 சதவீதம் அல்லது ஒருகோடிக்கும் மேலாக தமிழக முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். முஸ்லிம்கள் பிரிந்து நின்று பிறகட்சிக் கூட்டணிக்கு ஏங்கி,பரஸ்பரம் எதிர்த்து நிற்பதை விடுத்து, தமிழகத்திலுள்ள அனைத்து முஸ்லிம் கட்சிகளும் ஓரணியாக தனித்துப் போட்டியிடலாம்.
தமிழகத்தில் எந்தக் கட்சியாக இருந்தாலும் ஜாதிவாரி வெற்றிவாய்ப்புள்ள வேட்பாளர்களையே தொகுதிக்கேற்ப நிறுத்துகின்றனர். எந்தக் கட்சியில் இருந்தாலும் தன்ஜாதிக்காரர்களுக்குக் குரல்கொடுக்கும் சட்ட/நாடாளுமன்ற உறுப்பினர் உறுதியாகக் கிடைக்கிறார். தேர்தலில் வெற்றி பெறும்வரைதான் கட்சிக்காரர் வென்றபிறகு அந்தந்த ஜாதிக்காரராகவே நமது உறுப்பினர்கள் இருக்கிறார்கள்! இலட்சங்களாகப் பிரிந்துள்ள ஜாதிக்காரர்கள் தங்களுக்கென உறுப்பினரை பெறும்போது ஒருகோடிக்கும் அதிகமுள்ள முஸ்லிம்கள் ஓரணியில் நின்றால் அவர்களைவிட அதிகமாகவே உறுப்பினர்களைப்பெற முடியும்!
தமிழக சட்டமன்றத் தொகுதிகளில் 40-60 தொகுதிகள் 80,000க்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்டுள்ளன. இவற்றில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகள் மட்டும் 20-30 தொகுதிகள் தேறும்! பெரும்பாலான தேர்தலில் 20,000-30,000 வாக்காளர்களே வெற்றியைத் தீர்மானிக்கிறார்கள். சென்ற சட்டசபைத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு புதிதாகப் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர்கள் அதிமுகவின் 8000-15000 வாக்குகளைப் பிரித்ததே காரணமென்பதை நினைவில் கொண்டால் வரும் தேர்தல்களில் முஸ்லிம்கள் ஓரணியில் நின்று வெற்றி/தோல்வியை நிர்ணயிக்க முடியும்!
எந்தக் கட்சியுடனும் கூட்டணியின்றி தனித்து நின்றாலும் 1-2 தொகுதிகளில் கொஞ்சம் சிரத்தை எடுத்து, திட்டமிட்டுத் தேர்தல் களப்பணியாற்றினால் முஸ்லிம்கள் வெல்லக் கூடிய சூழல் உள்ளது. தோற்றாலும் இவர்களுக்கு இழப்பில்லை. திமுக-அதிமுக யார் வென்றாலும் எதிரணியின் தோல்விக்கு முஸ்லிம்களே காரணம் என்பதை இணைந்து நின்று உணர்த்தினால் இன்ஷா அல்லாஹ் அடுத்தடுத்தத் தேர்தலிகளில் முஸ்லிம்கள் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்து இருப்பார்கள்!
ஒற்றுமையாக ஓரணியில் நிற்க மற்றவர்களுக்கு இருக்கும் காரணங்களை விட 'முஸ்லிம்' என்ற காரணமே போதும்.முஸ்லிம் பெரும்பான்மையுள்ள அல்லது வெற்றி/தோல்வியை நிர்ணயிக்கத் தேவையான வாக்குகளைக் கொண்ட தொகுதிகளில் எந்தக் கட்சியும் முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தும் பட்சத்தில் கட்சியினரின் ஒட்டுக்களுடன் முஸ்லிம்களின் ஓட்டுக்களும் சிந்தாமல் சிதறாமல் கிடைக்கும்.முஸ்லிம்களிடம் ஜாதிவாரி பிரிவினை இல்லையென்பதால் எந்தக்கட்சியின் வெற்றிக்கும் முஸ்லிம்கள் ஓட்டு அவசியமாகிறது. இதை அனைத்து அரசியல்கட்சிகளுமே உணர்ந்துள்ளன.
"இருவர் பிணங்கிக் கொள்ளும்போது அவர்களைச் சமாதானப் படுத்துபவரே சிறந்தவர்" என்ற ஒற்றுமை முழக்கம் முஸ்லிம்களைவிட வேறுயாருக்குப் பொருந்தும்? அல்லாஹ் அக்பர் என்றதும் ஓரணியாக தொழுகையில் நிற்க முடியும்போது உரிமைகளை வென்றெடுப்பதற்கும் ஓரணியில் நிற்கலாமே!
"வேதமாகிய அல்லாஹ்வின் கயிற்றை ஒற்றுமையாகப் பற்றிப்பிடியுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்...." (திருக்குர்ஆன் 003:103)
- நல்லடியார்!
No comments:
Post a Comment