சென்னை: தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளில் சுமார் 65 சதவீதம் பேருக்கு ரத்தசோகை நோய் இருக்கும் அதிர்ச்சி தகவலை தமிழக சுகாதார துறை முதன்மை செயலாளர் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
இந்திய இளைஞர்களின் சூழ்நிலைகளும், தேவைகளும் என்ற தலைப்பில் நடந்த மாநாட்டில் அவர் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் சர்வதேச மக்கள் தொகை அறிவியல் நிறுவனம் மற்றும் சில அமைப்புகள் சேர்ந்து தமிழகம் , ஆந்திரா , பீகார், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட 6 மாநிலங்களில் நடத்திய சர்வே முடிவுகள் வெளியிடப்பட்டன.
பின்னர் சுப்புராஜ் பேசுகையில்,
தமிழகம் அடுத்து சந்திக்கவிருக்கும் முக்கிய சுகாதார பிரச்சனையாக ரத்தசோகை மாறியுள்ளது. இதை சமாளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு நாம் ஆளாக்கப்பட்டுள்ளோம்.
தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவியர்களில் 65 சதவீதம் பேருக்கு இந்த நோய் உள்ளது.
தமிழக அரசு மதிய உணவுத் திட்டத்தை 30 ஆண்டுகளாக நல்ல முறையில் நடைமுறைப்படுத்தி வரும் நிலையில் கூட இளம் பெண்கள் ரத்த சோகை நோய்க்கு ஆளாகியுள்ளனர்.
அவர்கள் தாய்மை அடையும் போது அவர்களுக்கு பல பிரச்சனைகள் உருவாகும். இதனால் பிரசவத்தின் போதான இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம். இதை தடுக்க பெண்களிடம் ரத்தசோகை குறித்து போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
தற்போது தமிழகத்தில் இருக்கும் 50 சதவீத மக்களிடம் மட்டுமே ஏய்ட்ஸ் குறித்து போதிய விழிப்புணர்வு இருக்கிறது. மாணவர்கள் மத்தியில் ஏய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்த விரைவில் கல்லூரிகளில் சிவப்பு ரிப்பன் கிளப்கள் துவக்கப்பட இருக்கின்றன.
மேலும், மாணவர்களில் 25 சதவீதம் பேருக்கு குடி மற்றும் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளது. மற்ற தவறான பழக்கங்களுக்கு மது தான் ஆரம்பம் என்பதை அவர்கள் உணரவில்லை. இளமையில் தவறான பழக்கங்களுக்கு ஆளானவர்கள் மூதுமையில் நோய்க்கு எளிதாக ஆளாகிவிடுவார்கள்.
ஒவ்வொரு நாட்டின் முன்னேற்றத்திலும் இளைஞர்களின் பங்களிப்பு அதிகமுள்ளது. எனவே அவர்கள் முக்கிய பிரச்சினைகளில் சரியாக வழிநடத்தப்பட்டு போதிய பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றார் சுப்புராஜ்.
No comments:
Post a Comment