Wednesday, September 9, 2009

உலகளாவிய சமயக் கருத்தரங்கு

உலக முஸ்லிம் கழகம்சஊதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாஹ் அவர்களின் முனைப்பான முயற்சியால், வருகிற செப்டம்பர் 30ஆம் தேதியன்று ஜெனிவா நகரில் இக்கருத்தரங்கு இன்ஷா அல்லாஹ் மாபெரும் மாநாடுபோல் நடக்க இருக்கின்றது. இரண்டு நாட்கள் நடக்கவிருக்கும் இக்கருத்தரங்கில் சஊதி அரேபியா, எகிப்து, இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஜப்பான், பிரான்சு, இத்தாலி, பிலிப்பைன்ஸ் முதலிய நாடுகளின் பல்சமய அறிஞர்களும் விற்பன்னர்களும் கலந்துகொள்ள இருக்கின்றனர்.



"மானிட மதிப்புயர்வை உயர்த்திப் பிடிக்கும் மக்கா-மதீனாவின் காவலர் அப்துல்லாஹ்வின் முன்முயற்சி" என்பதுவே இவ்விரண்டு நாள் கருத்தரங்கின் கருப்பொருளாகும். இதற்காகவென்றே வலைத்தளம் ஒன்றை 'ராபித்தா' எனும் அனைத்துலக இஸ்லாமியக் கழகம் (Muslim World League) தொடங்கிவைத்துள்ளது. இக்கருத்தரங்கின் ஏற்பாட்டாளரே இந்த 'ராபித்தா'தான். மேற்கண்ட தலைப்பையொட்டி, பல்சமயக் கருத்துப் பரிமாற்றம், மீடியாக்களின் பங்கு, மதங்களிடையே புரிந்துணர்வு, தவறான முன்மாதிரிகளை அடையாளப்படுத்துவது போன்ற துணைத் தலைப்புகளிலும் இக்கருத்தரங்கில் விவாதங்கள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சஊதி மன்னர் அப்துல்லாஹ்வின் முயற்சியால் நடைபெறும் நான்காவது கருத்தரங்கமாகும் இது. இதன் முதல் கருத்தரங்கு, மக்காவிலும், இரண்டாவது ஸ்பெயின் நாட்டுத் தலைநகர் மாட்ரிடிலும், மூன்றாவது நியூ யார்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் அவைத் தலைமையகத்திலும் நடந்துள்ளன.

மக்காவில் 2008 ஜூன் நான்காம் தேதியன்று நடந்த முதலாவது மாநாட்டில் உலக முழுவதிலிருந்தும் 500க்கு மேற்பட்ட இஸ்லாமிய அறிஞர்கள் கலந்து கொண்டனர். இக்கருத்தரங்கில்தான், முஸ்லிம்கள் இதர மதத்தினருடன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றிய வழிகாட்டலுக்கான திட்டம் வகுக்கப்பட்டது. அதற்கடுத்த மாதம் ஜூலை 16, 2008 அன்று 'ராபித்தா' அமைப்பு உலகின் 50 நாடுகளிலிருந்தும் சுமார் 300 பல்சமய அறிஞர்களையும் அறிவியல் மேதைகளையும் அரசியல் தலைவர்களையும் மாட்ரிடுக்கு வரவழைத்துக் கருத்துப் பரிமாற்றத்திற்கு வழி வகுத்தது.

"வரலாற்றுப் புகழ் மிக்க இந்த மாநாடு வெற்றிபெற வேண்டுமாயின், உலக மக்கள் அனைவரையும் இணைக்கும் பாலம் எது என்பதை நாம் கண்டறிய வேண்டும். நமது ஆழிய இறைநம்பிக்கை, சிறந்த கோட்பாடுகள், மதங்களின் அடிப்படையான உயர்ந்த நீதி ஆகியவையே நம் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும்" என்ற அடிப்படையில் மன்னர் அப்துல்லாஹ்வின் இம்மாநாட்டுத் தலைமையுரை அமைந்தது.

  • அமெரிக்காவின் அமைதிக்கான கிருஸ்தவ-முஸ்லிம்கள் கூட்டமைப்பின் தலைவர் வில்லியம் பேக்கர்,

  • அமெரிக்க யூதக் கமிட்டியின் இயக்குநரான டேவிட் ரோசன்,

  • முஸ்லிம்-கிரிஸ்தவப் புரிந்துணர்வமைப்புத் தலைவரான ஜான் எஸ்போசிட்டோ,

  • சமாதானக் கழகத் தலைவரான தெர்ஜி ரீட் லார்சன்,

  • அமெரிக்க இஸ்லாமிய உறவுக் குழுவின் (CAIR) தலைவரான லேரி ஷா,

  • இந்தியத் துணை ஜனாதிபதி முஹம்மத் ஹாமித் அன்சாரி,

  • 'யுனெஸ்கோ' தலைவர் கொய்ச்சீரோ மட்சூரா,

  • ஜெர்மனியின் கிரிஸ்தவ-முஸ்லிம் கூட்டமைப்புத் தலைபவர் தாமஸ் லெம்மன்,

  • டெல்லி குருத்துவாராவின் தலைவர் பிரேம்ஜித் சிங் சர்னா

ஆகிய உலகளாவிய பிரபல புள்ளிகளோடு சஊதி அரேபியாவின் 19 பல்துறை அறிஞர்களும் இம்மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

- தகவல் : அதிரை. அஹ்மது

No comments: