டெல்லி: லோக்சபா முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் சார்பிலோ அல்லது அதன் ஆதரவுடனோ போட்டியிடலாம் எனத் தெரிகிறது.
லோக்சபா சபாநாயகராக சோம்நாத் பதவியில் இருந்த காலம் அவரால் என்றென்றும் மறக்க முடியாதது.
பிரதமர் மன்மோகன் சிங் கோரிய நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சோம்நாத் சபாநாயகர் பதவியில் இருக்கக் கூடாது என்று சிபிஎம் மேலிடம் உத்தரவிட்டது. ஆனால் அதை ஏற்க அவர் மறுத்து விட்டார். இதையடுத்து கட்சியை விட்டு அவரை நீக்கியது சிபிஎம் பொலிட்பீரோ.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த நாளின்போது பாஜக உறுப்பினர்கள் கோடிக்கணக்கான பணத்தை சபையில் கொட்டி, சமாஜ்வாடிக் கட்சியினர் மாற்றி வாக்களிக்க பணம் கொடுத்ததாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.
இப்படி பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் தனது பதவிக்காலத்தை முடித்த சோம்நாத் லோக்சபா தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி விட்டார்.
இந்தநிலையில் தற்போது சோம்நாத்தை மீண்டும் லைம் லைட்டுக்குக் கொண்டு வர காங்கிரஸ் முயல்வதாகத் தெரிகிறது. அவரை ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட வைக்க காங்கிரஸ் முயன்று வருகிறதாம்.
ராஜ்யசபா உறுப்பினர்களான ஹேமமாலினி, ராம் ஜேட்மலானி, தாராசிங், பிமல் ஜலான், சந்தன் மித்ரா, கஸ்தூரி ரங்கன், நாராயண் சிங் பார்மர் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைகிறது.
இதையடுத்து புதிதாக 7 பேர் தேர்வு செய்யப்படவுள்ளன். அதில் ஒருவராக சோம்நாத்தை சேர்க்க காங்கிரஸ் யோசித்து வருகிறது. இதுதொடர்பாக சோம்நாத்தை காங்கிரஸ் தரப்பில் அணுகியபோது அவர் சம்மதித்து விட்டதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் சார்பிலோ அல்லது சுயேச்சையாகவோ சோம்நாத் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடலாம் எனத் தெரிகிறது.
No comments:
Post a Comment