Tuesday, August 11, 2009

ரியாலிட்டி ஷோக்களும் அம்பலமாகும் அந்தரங்கமும்!





‘‘உங்களுக்கு இந்த நிகழ்ச்சி பிடிக்கவில்லை என்றால் நீங்கள் பார்க்காதீர்கள். டி.வி.யை ஆஃப் செய்துவிடுங்கள். ஏன் இந்த கோர்ட் அதை தடைசெய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? சமுதாயத்தின் ஒழுக்கத்தைப் பாதுகாப்பது கோர்ட்டின் வேலை கிடையாது! இதைவிட சீரியஸான வேறு பல பிரச்னைகளை நாங்கள் கவனிக்க வேண்டியிருக்கிறது!’’


-ஸ்டார் பிளஸ் சேனலில் ஒளிபரப்பாகும் சர்ச்சைக்குரிய ‘சச் கா சாம்னா’ (உண்மையை சொல்லும் கணம்!) நிகழ்ச்சிக்கு தடைவிதிக்கக் கோரிய மனுவை டிஸ்மிஸ் செய்துவிட்டு, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஏ.பி.ஷாவும் மன்மோகனும் கூறிய ‘பொறுப்புள்ள’ வார்த்தைகள் இவை. இப்போதெல்லாம் நீதிபதிகளுக்கு, சேது பாலத்தை ராமர்தான் கட்டினாரா என்று வரலாற்று ஆராய்ச்சி செய்வதற்கு நேரமிருக்கிறது. ‘உங்க பொண்டாட்டி எது சொன்னாலும் அதுக்கு தலையாட்டுங்க; அதுதான் குடும்பத்துக்கு நல்லது’ என்று யோசனை சொல்வதற்கு நேரமிருக்கிறது. ‘தினமும் வீட்டில் தேசியக்கொடியை ஏற்றுங்கள்’ என்று தேசபக்தியையே தண்டனையாகத் தருவதற்கு நேரமிருக்கிறது. சமூக சேவை செய்யுமாறு ஜாமீன் கேட்பவர்களுக்கு நிபந்தனை விதிக்கவும் நேரமிருக்கிறது... இவை எதையுமே நாம் தவறு என்று சொல்லவில்லை. ஆனால், இவை எல்லாமே இந்தியாவின் எந்த சட்டத்துக்கும் உட்படாத விஷயங்கள்;


தங்கள் வரம்புக்கு உட்படாத இப்படிப்பட்ட எத்தனையோ விஷயங்கள்மீது கட்டுப்பாடு செலுத்தும் நீதிபதிகள், ‘சச் கா சாம்னா’வை ஏன் விட்டார்கள்? இத்தனைக்கும் மற்ற எல்லா விஷயங்களையும்விட இது பயங்கரம்! இந்தியா மீது சீனா போர் தொடுத்து சேதம் விளைவிப்பதைவிட, மிக மோசமான கலாசார படையெடுப்பு இது. சாம்பிளுக்கு இந்த நிகழ்ச்சியில் கேட்கப்படும் கேள்விகளை கவனியுங்கள்... -


* ஸ்மிதா மத்தாய் இரண்டு குழந்தைகளின் தாய். அமைதியான, பொறுப்பான குடும்பத் தலைவி. அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி, ‘‘என்றைக்காவது நீங்கள் உங்கள் கணவரைக் கொன்றுவிட நினைத்தீர்களா..?’’ ஸ்மிதாவின் கணவர் டோனியும் மாமியாரும் சற்று தூரத்தில் ஆடியன்ஸ் வரிசையில் புன்சிரிப்போடு உட்கார்ந்திருக்கிறார்கள். ஸ்மிதா கொஞ்சமும் யோசிக்கவில்லை. ‘‘ஆமாம்... அவர் மொடாக்குடியராக இருந்தபோது அவரை சாகடித்துவிடலாம் என நினைத்தேன்’’ என்கிறார். திடீரென அந்த இடம் நிசப்தமாகிறது. எல்லா கண்களும் ஸ்மிதாவின் கணவர் டோனியையும் மாமியாரையும் நோக்குகின்றன. அவர்கள் வேதனையோடு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறார்கள். டோனி கண்கலங்குகிறார்.


* ஆல்வின் டிசோஸா சில நாட்களுக்கு முன்புதான் திருமணம் செய்துகொண்டவர். ஜாலியாக ஹனிமூன் போய்விட்டு நேராக ஸ்டுடியோவுக்கு வந்திருக்கிறார். ‘‘உங்கள் மனைவியோடு படுக்கையில் நெருக்கமாக இருக்கும்போது, இன்னொரு பெண்ணின் நினைப்பு உங்களுக்கு வந்திருக்கிறதா?’’ என்ற கேள்வியைக் கேட்டபோது டிசோஸா நிலைகுலைந்தார். கொஞ்சம் அவஸ்தையோடு, ‘‘ஆமாம்’’ என்று ஒப்புக்கொண்டார். ‘‘இப்போ இருக்கற மனைவிமாதிரி இல்லாம வேற அழகான, வித்தியாசமான இன்னொரு பெண் உங்களுக்கு மனைவியா வந்திருக்கணும்னு கனவு கண்டீங்களா?’’ & இது அடுத்த கேள்வி. அவர் இதற்கும் ‘‘ஆமாம்’’ என்று பதில்சொல்ல, ஆடியன்ஸோடு உட்கார்ந்து எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த அவர் மனைவி பூர்வஸ்ரீ தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார்.


-‘சச் கா சாம்னா’ நிகழ்ச்சி ஏற்படுத்தி இருக்கும் அதிர்ச்சி போலவே, அதற்குக் கிடைத்திருக்கும் வரவேற்பும் அதிகம். அறிவையும் திறமையையும் சோதிக்கும் ‘குரோர்பதி’ போன்ற நிகழ்ச்சிகளுக்கு வரவேற்பு குறைந்துவிட்டது. முறையற்ற உறவுகளும் சதிகார பெண்களுமாக நகரும் மெகா சீரியல்கள் டி.ஆர்.பி. ரேட்டிங்கை நிலையாக வைத்திருந்தாலும், திடீரென இந்தியில் பொழுதுபோக்கு சேனல்கள் பல போட்டியில் குதித்தன. எல்லோருமே ரேட்டிங்கை காப்பாற்ற நடத்திய போட்டியில், வழக்கமான நிகழ்ச்சிகளைத் தாண்டிய விபரீத சிந்தனைகள் உள்ளே குதித்தன. மெகா சீரியல்களில் முறைகேடான உறவுகளும், சதிகளும்தான் எப்போதுமே ஹாட் டாபிக். அதையே மனிதர்களின் நிஜவாழ்க்கையிலிருந்து எடுத்தால்? இப்படி தனி மனிதர்களின் அந்தரங்க அசிங்கத்தை அம்பலமாக்கும் நிகழ்ச்சி வந்துவிட்டது!


உண்மையை அப்பட்டமாகச் சொல்லிவிட்டார்கள் என்றாலும், இதன்பிறகு டோனியால் தன் மனைவி ஸ்மிதா மத்தாயோடு நிம்மதியாகத் தூங்கமுடியுமா? குழந்தைகள் ஸ்மிதாவோடு எப்படி இயல்பாக பழகுவார்கள்? ஆல்வின் டிசோஸாவும் அவரது மனைவி பூர்வஸ்ரீயும் சேர்ந்து வாழ்வது சாத்தியமா? அறிமுகமில்லாத யாராவது ஒருவர் உங்களிடம் இப்படிக் கேட்டால், உங்களுக்கு கோபம் எந்த அளவுக்கு வரக்கூடும் என்பதை நீங்களே அறியமாட்டீர்கள்!


ஆனால் 3 கோடி பேர் பார்க்கும் ஒரு டி.வி. நிகழ்ச்சியில் இப்படி சிக்கலான கேள்விகளைக் கேட்கிறார்கள். பரிசுப்பணத்துக்காக ஆசைப்பட்டு, மக்களும் தங்கள் அந்தரங்க ரகசியங்களைத் துப்புகிறார்கள்!


‘நெருங்கிய நண்பரான சச்சின் தனக்கு இன்னும் உதவியிருக்கலாம்’ என வினோத் காம்ளி சொன்னது சர்ச்சையானதே... அந்த நிகழ்ச்சிதான் இது! காம்ளியிடம் கேட்கப்பட்டது சச்சின் பற்றிய கேள்வி மட்டுமில்லை! ‘நீங்கள் எத்தனை பெண்களை படுக்கையில் சந்தித்தீர்களோ, அவர்கள் எல்லோரது பெயரும் உங்களுக்குத் தெரியுமா?’, ‘நீங்கள் எந்தப் பெண்ணுடனாவது உறவு வைத்து, அவள் வயிற்றில் குழந்தை உருவாகி, அதைக் கலைத்துவிடச் சொன்னீர்களா?’ என்ற இரண்டு அதிரடிக் கேள்விகளும் கேட்கப்பட்டன... இரண்டுக்குமே அவர் ‘ஆமாம்!’ என்றார். காம்ளியின் மனைவி சிரித்தபடி நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தார்.


அமெரிக்காவில் பிரபலமான ‘தி மொமென்ட் ஆஃப் ட்ரூத்’ என்ற ரியாலிட்டி ஷோவின் அப்பட்டமான காப்பி இது. இதே நிகழ்ச்சியைக் காப்பியடித்து, இதுவரை 24 நாடுகளில் வேறு வேறு பெயர்களில் ஷோ நடத்தியிருக்கிறார்கள். எல்லா நாடுகளிலும் பிரச்னை! கிரீஸ் நாட்டில் ஒரு டி.வி.யில், ‘என் பொண்டாட்டியைவிட, அவளோட தம்பி மேல எனக்கு அட்ராக்ஷன் அதிகம்’ என தனது விபரீத ஆசையை அப்பட்டமாக வெளியில் சொல்ல, ‘என்னடா இது வேறு டிராக்கில் போகிறதே...’ என அரண்டு போன அரசாங்கம் நிகழ்ச்சியைத் தடைசெய்துவிட்டது. கொலம்பியாவில் ஒரு பெண், ‘ஆக்சுவலா என் கணவரை கூலிப்படை வைத்துக் கொலை செய்ய முடிவு பண்ணினேன். இதுக்காக ஒரு கேங்குக்கு அட்வான்ஸ்கூட கொடுத்தேன்’ என அதிரடியாக உண்மையைச் சொன்னார். விபரீதம் புரிந்து அரசு தடைவிதித்தது. இப்படி மேற்கத்திய கலாசாரத்துக்கே சரிவராத ஒரு விஷயத்தை, குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நம் மண்ணுக்கு இறக்குமதி செய்திருக்கிறார்கள்.


‘அப்பட்டமான உண்மையை சொல்லவேண்டும்’ என்பதுதான் இந்த ரியாலிட்டி ஷோவின் அடிப்படையான நிபந்தனை. நிகழ்ச்சியில் பங்கேற்கிற எல்லோரிடமும், அவர்களது சொந்தவாழ்க்கை பற்றிய அந்தரங்கமான 50 கேள்விகள் முதல்கட்டமாக கேட்கப்படும். குற்றவாளிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கு போலீசார் பயன்படுத்தும் பாலிகிராப் சோதனையில், அவர்களது பதில்கள் சோதிக்கப்படும். பிறகு லைவ் புரோகிராமில் இதிலிருந்து மிக மோசமான 21 கேள்விகளை ஆடியன்ஸ் முன்னிலையில் திரும்பவும் கேட்பார்கள். நிகழ்ச்சியைப் பார்க்கும் 3 கோடிக்கும் மேற்பட்டவர்கள் மத்தியில், அவர்களின் அந்தரங்கம் அம்பலமாகும். கேள்விக்கு ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்று ஒற்றைவார்த்தை பதில்தான் சொல்லவேண்டும். தப்பாக பதில் சொன்னால், பாலிகிராப் காட்டிக்கொடுத்துவிடும். இப்படித்தான் ஒரு பெண்ணிடம், ‘உங்கள் கணவரைத் தவிர வேறு ஆண்கள் யாருடனாவது உறவு வைத்துக்கொள்ள நீங்கள் ஆசைப்பட்டீர்களா?’ என்று கேள்வி கேட்டார்கள். அவர், ‘இல்லை’ என்றார். ஆனால் பாலிகிராப், ‘அவர் சொல்வது பொய்’ என்றது. ஆடியன்ஸ் வரிசையில் உட்கார்ந்திருந்த கணவரும் மாமியாரும் அந்தப் பெண்ணை உஷ்ணப்பார்வை பார்த்தார்கள். வீட்டுக்குப் போனபிறகு என்ன ஆனதோ?! அவர் இன்னமும் கணவரோடு சேர்ந்துதான் வாழ்கிறாரா என்பது தெரியவில்லை...


எதற்காக இதையெல்லாம் சகித்துக்கொள்கிறார்கள்? நிகழ்ச்சியில் எல்லா கேள்விகளுக்கும் சரியாக பதில் சொல்லும் நபருக்கு முதல் பரிசு ஒரு கோடி ரூபாய். ஒரு வருஷமாக இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடக்கும் அமெரிக்காவிலேயே இன்னும் யாரும் முதல் பரிசை வாங்கவில்லை. இங்கு அதிகபட்சமாக காம்ளி பத்து லட்ச ரூபாய் ஜெயித்திருக்கிறார்.
ஆண்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க, ‘எப்போதாவது நீங்கள் விபசாரி வீட்டுக்குப் போய் சுகம் அனுபவித்திருக்கிறீர்களா?’, ‘உங்கள் மனைவியைத் தவிர வேறு யார் வயிற்றிலாவது உங்கள் குழந்தை வளர்ந்திருக்கிறதா?’ என்பது போன்ற கேள்விகள் கேட்கிறார்கள். பெண்களிடமும் இதேமாதிரி அஸ்திரம்... ‘உங்கள் கணவருக்குக் கண்டிப்பாகத் தெரிய வாய்ப்பில்லை என்றால், ரகசியமாக வேறொரு ஆணோடு சுகம் அனுபவிப்பீர்களா?’


காம்ளி போன்ற பிரபலங்கள் என்றில்லை... முன்பின் அறிமுகமில்லாத எளிய மனிதர்களின் அந்தரங்கம் வெட்டவெளிச்சமாவதைக்கூட, கூசாமல் இப்படி மூன்று கோடிக்கும் மேற்பட்டவர்கள் பார்க்கிறார்கள். பொதுவாகவே இந்தியர்கள் கிசுகிசு பிரியர்கள் என்றாலும், நிகழ்ச்சியில் கேட்கப்படும் இதேமாதிரி கேள்விகளை அடுத்த விட்டைப் பார்த்து மானசீகமாகக் கேட்க ஆரம்பித்தால் வக்ரமான விபரீதம் தீனி போடாமலே வளர்ந்துவிடும் ஆபத்து இருக்கிறது என்பதுதான் இதில் பிரச்னை!


ஆனால் இந்த நிகழ்ச்சியை அநியாயத்துக்கு நியாயப்படுத்துகிறார் இதன் தயாரிப்பாளர் சித்தார்த் பாசு. ‘‘எல்லா உண்மைகளையும் மனசுக்குள் போட்டுப் புதைப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது? இப்படிப்பட்ட ஆசைகள் மக்களின் அடிமனசில் பதுங்கியிருக்கிறது என்பதை வெளிச்சத்தில் காட்டும் முயற்சிதான் இந்த நிகழ்ச்சி. மாயத்திரையை விலக்கி, சமூகத்தின் நிஜத்தைக் காட்டும் கண்ணாடி. மக்கள் தங்கள் உறவுகளை, ஆசைகளை உண்மையோடு மதிப்பிடு செய்துபார்க்கிறார்கள். இப்படி உண்மையைச் சொன்னபிறகு அவர்கள் மன பாரம் இறங்கியதால் ஆறுதலடைகிறார்கள்’’ என்கிறார் அவர்.


ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஆட்களே கிடைக்கவில்லை. ஆனால் நிகழ்ச்சி ஒளிபரப்பாக ஆரம்பித்த பிறகு, ஒரே வாரத்தில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்து குவிந்திருக்கின்றனவாம். ஆனால் காம்ளி போன்ற சிலரைத் தாண்டி பிரபலங்கள் பலர் இதில் பங்கேற்க மறுத்துவிட்டனர். ஆளாளுக்கு ஒரு காரணம்... ‘சில உண்மைகளைச் சொன்னால் என் எதிரிகள் மட்டுமில்லை.. நண்பர்களும் செத்துப்போய்விடுவார்கள்’ என்று தான் பங்கேற்க மறுத்ததற்குக் காரணம் சொல்கிறார் இயக்குனர் மகேஷ் பட்.


இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் நீண்ட நேரம் விவாதப் பொருளானது. ராஜ்ய சபாவில் கட்சி வித்தியாசமின்றி பல எம்.பி.க்கள் கவலையோடு இதைப் பற்றிப் பேசினார்கள். சமீபத்திய நாடளுமன்ற வரலாற்றில் தனிநபர் குற்றச்சாட்டுகளோ, கூச்சல்களோ இல்லாமல் நிகழ்ந்த ஒரு விவாதமாக இது இருந்தது. இதைத் தொடர்ந்து நிகழ்ச்சி தயாரிப்பாளருக்கு தகவல் தொடர்பு அமைச்சகம் நோட்டீசும் அனுப்பியது. ஆனாலும் ஒரு நிகழ்ச்சியை தடை செய்யும் அதிகாரம் அரசுக்குக் கிடையாது என்பதால் அதற்குமேல் போகமுடியாது.


ராஜ்ய சபா முன்னாள் துணைத் தலைவர் நஜ்மா ஹெப்துல்லா இந்த நிகழ்ச்சியை கடுமையாக எதிர்க்கிறார். ‘‘உண்மைகளை ஒப்புக்கொள்ளச் செய்வது நல்ல விஷயம்தான்... கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்கிற ஒரு தொழிலதிபரைக் கூப்பிட்டு, அவர் செய்த மோசடியை ஒப்புக்கொள்ளச் செய்யுங்கள். பல கொலைகளைச் செய்த ஒரு தீவிரவாதியைக் கூப்பிட்டு, அவன் செய்த குற்றங்களை ஒப்புக்கொள்ளச் செய்யுங்கள். இப்படியெல்லாம் செய்தால் அது சமூக சேவை. அதைவிட்டு இப்படிக் குடும்பங்களை சீரழிப்பது அட்டூழியம். உண்மையை ஒப்புக்கொண்டு பன பாரத்தை யாராவது இறக்கிவைக்க விரும்பினால், அவர்கள் சர்ச்சுக்குப் போய் பாவமன்னிப்பு கேட்டுக்கொள்ளட்டும். டி.வி.யில் எதையும் அம்பலமாக்க வேண்டாம்’’ என்கிறார் அவர்.


எளிய மக்களின் அந்தரங்க அசிங்கத்தை அம்பலமாக்கி ‘ஸ்டார் பிளஸ்’ காசு பார்க்கிறது; ‘என்.டி.டி.வி. இமாஜின்’ சேனலின் ரேட்டிங்கை உயர்த்த இன்னொரு பக்கம் ராக்கி சாவந்த் மாபெரும் புரட்சியைச் செய்திருக்கிறார். ஆமாம்... ‘ராக்கி கா சுயம்வர்’ என்ற நிகழ்ச்சியை நடத்தி, டி.வி. வழியாக தனக்கு மாப்பிள்ளை தேடுகிறார். இதற்கும் 12 ஆயிரம் பேர் அப்ளிகேஷன் போடுகிறார்கள்; ஏற்கனவே திருமணமானவர்கள் உட்பட. இந்து திருமணச் சட்டத்தின்படி, இரண்டாவது திருமணம் சட்டவிரோதம்; இப்படி செய்பவர்களை உடனடியாக சிறையில் அடைக்கலாம் என்பதைத் தெரிந்தே, சேனல் இப்படிப்பட்டவர்களை பங்கேற்க அனுமதிக்கிறது. ஆடியன்ஸுக்கு போரடிக்காமல் இருக்கவேண்டும் என்பதற்காக, ராக்கி தன் அம்மாவையும் சகோதரனையும் ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் பேசுகிறார். அநேகமாக அடுத்து ஏதாவது ஒரு நடிகை தனது டைவர்ஸை டி.வி. மூலமாக வாங்கி, தன் கணவரை அசிங்கமாகத் திட்டி, அவர் தன்னை என்னவெல்லாம் செய்தார் என்று ‘லைவ் புரோகிராமில்’ கதறியபடி சொல்லக்கூடும். யார் கெட்டால் என்ன... டி.வி.க்கு ரேட்டிங்தானே முக்கியம்.


இன்னொருபக்கம் ‘கலர்ஸ்’ சேனல் ‘பாலிகா வது’ என்ற தொடர்மூலம் பால்ய விவாகத்தை அப்பட்டமாக ஆதரிக்கிறது. ஆனந்தி என்கிற குட்டிப்பெண் ஜெகதீஷ் என்கிற சிறுவனை திருமணம் செய்துகொள்ளும் கதை இது. இந்தத் தொடரைப் பார்க்கிற குழந்தைகள் மத்தியில் ஒரு தொண்டு நிறுவனம் கருத்துக்கணிப்பு செய்தது. ‘சின்னவயசுல கல்யாணம் பண்ணிக்கறது நல்லது... ஸ்கூல்ல எனக்குத் தர்ற ஹோம் ஒர்க்கை செய்யறதுக்கு ஒரு பொண்ணு கிடைப்பாளே!’ என்று பையன்கள் பலர் சொன்னார்களாம். ‘கல்யாணம் பண்ணிக்கிட்டா நிறைய நகை கிடைக்கும்; அழகழகா டிரஸ் கிடைக்கும்’ என்று சிறுமிகள் சந்தோஷமாக சொல்லியிருக்கிறார்கள். திருமணம் என்பது நகைகளும் ஆடைகளும் ஹோம் ஒர்க்கும் மட்டும்தான் என்கிறமாதிரியான கருத்தை விதைப்பது எவ்வளவு ஆபத்தானது?


திரைப்படங்களில் மோசமாக ஏதாவது ஒரு விஷயம் நுழைந்தால், அதை தடுத்து கத்தரி போடுவதற்கு சென்சார் இருக்கிறது. சென்சார் போர்டு முழுமையாக அதன் வேலையைச் செய்வதில்லை என்ற குறை இருந்தாலும்கூட, அது இருக்கிறதே என்ற பயத்திலாவது பலர் மோசமான விஷயங்களைத் தராமல் தவிர்க்கிறார்கள். டி.வி.க்கு எந்த சென்சாரும் கிடையாது. இதற்கும் கட்டுப்பாடுகள் போடவேண்டும் என்ற விவாதம் இப்போதுதான் எழ ஆரம்பித்திருக்கிறது. இப்படி கட்டுப்பாடுகள் இல்லாத ஒரு விஷயத்திற்கு லகானாக நீதிமன்றம்தான் இருக்கவேண்டும் என நினைத்து வழக்கு போட்டிருக்கிறார்கள்.


ஆனால் தங்கள் பொறுப்பை தட்டிக்கழிக்கும் தவறைச் செய்திருக்கிறார்கள் நீதிபதிகள். இதே விதியை அப்படியே சினிமாவுக்கும் பொருத்திப் பார்த்தால் விபரீதமாக இருக்காதா... ‘பிடிக்காத சீன்கள் இருக்கும் படத்தை விரும்பாதவர்கள் தியேட்டருக்குப் போகவேண்டாம்; சென்சார் போர்டைக் கலைத்துவிடுங்கள்; அவர்கள் ஏன் சமூக ஒழுக்கத்துக்கு காவல் புரியவேண்டும்?’ என்று சொல்வார்களா இந்த நீதியரசர்கள்?!
- நாடோடி
தேங்க்ஸ் டு : http://www.thenaali.com/thenaali.aspx?A=608

No comments: