Saturday, January 3, 2009
'சங்கீதா'வா இருந்த நான் 'ஆயிஷா' ஆனேன்
''ஓட்டம்... ஓட்டம்... ஓட்டம்னு 10 வருஷமா ஓடிக்கிட்டேதான் இருந்தேன்!'' - அத்தனை அலுப்புடன் ஆரம்பிக்கிறார் ஆயிஷா. கோவை குண்டுவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து 'பர்தா பயங்கரவாதப் பெண்' என்று வர்ணிக்கப்பட்ட அதே பிரபல ஆயிஷா என்கிற சங்கீதா! 4 வருட சிறைத் தண்டனையின் இடையே பெயிலில் வெளிவந்திருக்கும் ஆயிஷாவை சென்னை பிராட்வேயின் நெருக்கடியான குடியிருப்பு ஒன்றில் சந்தித்தேன். சில மாதங்களுக்கு முன்பு வரை ஒரு பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்தவர், சமீபத்தில்தான் இரண்டாவது ஆண் குழந்தையைப் பிரசவித்திருக்கிறார்.
''பேட்டி எடுத்துக்கலாம். ஆனா, முகம் தெரியுற மாதிரி போட்டோ மட்டும் வேண்டாம் சார். பக்கத்து வீட்டுக்காரவுகளுக்குக்கூட நான்தான் 'அந்த பர்தா பொண்ணு!'ன்னு தெரியாது. ஒண்ணுக்குள்ள ஒண்ணாப் பழகிட்டு இருக்குறவங்க, அப்புறம் மெரண்டுருவாங்க!'' - வார்த்தைகளைக் காட்டிலும் ஆயிஷாவின் கண்கள் உணர்த்தும் வேதனை இன்னும் கூர்மையானது.
ராஜபாளையம் பக்கத்து மம்சாபுரம்தான் என் சொந்த ஊரு. டிப்ளமோ படிக்கும்போது இஸ்லாம் மதம் மீது திடீர்னு ஈர்ப்பு. இஸ்லாம் பற்றின விஷயங்களை ஆர்வமா தேடித் தேடிப் படிச்சேன். 'சங்கீதா'வா இருந்த நான் 'ஆயிஷா' ஆனேன். வீட்ல பயங்கர வசவுகள், சண்டை. அந்தச் சமயம் த.மு.மு.க. விருதுநகர் மாவட்டச் செயலாளரா அறிமுகமான இப்ராஹிம் எனக்கான ஆறுதலை தன்னிடம் வெச்சிருந்தார். காதல், திருமணம்னு அடுத்தடுத்து யோசிக்க ஆரம்பிச்சோம். ரெண்டு பேர் வீட்லயும் எதிர்பார்த்த எதிர்ப்பு. விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுத்துட்டு அவரோட சென்னைக்கு வந்துட்டேன். 'எப்படியும் பொழச்சுக்கலாம்'னு நம்பிக்கை. அவரோட உறவினர் ரஃபீக் எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தார். அவர் 'அல்உம்மா' அமைப்பில் இருக்கார்னு அப்ப எங்களுக்குத் தெரியாது. ரஃபீக்கால் எங்களுக்கு வேலை எதுவும் ஏற்பாடு செய்ய முடியலை. அவரோட நண்பர் உசேன் மூலமா முயற்சி செய்தோம். கோடம்பாக்கத்துல ஒரு வீடு பார்த்துத் தங்கவைக்க முடிஞ்சதே தவிர, அவராலும் எங்களுக்கு வேலை வாங்கித் தர முடியலை. இதுக்கிடையில் குண்டு தயாரிக்கும்போது விபத்து ஏற்பட்டு ரஃபீக் இறந்த விஷயமே எங்களுக்குத் தெரியாது. அப்பதான் 1998-ல் கோவை குண்டுவெடிப்பு.
கோவை உக்கடம் தொடங்கி டெல்லி வரைக்கும் பரபரப்பாகிருச்சு. திடீர்னு குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஆட்கள் நாங்க தங்கியிருந்த வீட்டுக்கு வந்து போக ஆரம்பிச்சாங்க. எங்களுக்கு எதுவும் புரியலை. ரஃபீக்கையும் காணோம், வேலையும் கிடைக்கலைங்கிற ஒருவித நிர்க்கதியான சூழல். திரும்பத் திரும்ப உசேனை நச்சரிக்கவும், அரும்பாக்கத்தில் வேற வீட்டில் தங்கவெச்சார். அதுவரை கோவை குண்டுவெடிப்பு தொடர்பான செய்திகளைப் பத்திரிகைகளில் படிச்சுத் தெரிஞ்சுக்கிற பார்வையாளராத்தான் இருந்தோம். ஆனா, அந்தச் சம்பவத்தில் நாங்களும் பங்கேற்பாளர் ஆகிற மாதிரி சூழல் கூடிய சீக்கிரமே உருவாச்சு. நாங்க செஞ்ச ஒரே தப்பு, அரும்பாக்கத்துக்கு வீடு மாறும்போது கோடம்பாக்கத்து வீட்டிலேயே என் டைரியை விட்டுட்டு வந்ததுதான். அந்த டைரியில் நாங்க காதலிச்சது, கல்யாணம் செய்துக்கிட்டது, ரஃபீக் அடைக்கலம் கொடுத்ததுன்னு எல்லா விவரங்களும் இருந்தது. என் போட்டோவும் அதில் இருந்தது. போலீஸ் கைக்கு அந்த டைரி கிடைக்கவும் வாழ்க்கையே போச்சு.
'ஆயிஷா என்கிற சங்கீதா - முஸ்லிம் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய பர்தா பெண்', '100 கிலோ வெடிகுண்டுகளோடு தமிழகத்தில் தலைமறைவாக நடமாடுகிறார்'னு அன்னிக்கு ஆரம்பிச்சது பரபரப்புச் செய்திகள்! சின்னக் கோடு போட்டாங்க போலீஸ். அதுல ரோடே போட்டு புல்டோசர் ஓட்டிட்டுச்சு பிரஸ். அவங்களைப் பொறுத்தவரை அது அன்றைக்கான நியூஸ். ஆனா, எங்களுக்கோ அது உயிர்ப் போராட்டம்!'' - மௌனங்கள் படர்ந்த சில விநாடிகளுக்குப் பிறகு மீண்டும் தொடர்கிறார் ஆயிஷா.
'' 'இப்ப சூழ்நிலை சரி இல்லாததால், உடனே போலீஸ்ல சரண்டராக வேண்டாம். கொஞ்சம் பரபரப்பு அடங்கட்டும்'னு சொன்னார் உசேன். ஆனா, நிலைமை இன்னும் தீவிரமடையவும் ஆந்திரா கூட்டிட்டுப் போனார். டி.வி, பத்திரிகைகள் எல்லாத்திலும் பரபரப்பு அடங்கவே இல்லை.
ஆந்திராவில் இருக்கப் பிடிக்காம இந்திய எல்லை ஓரம் இருக்கிற நேபாள குக்கிராமத்துக்குப் போனோம். அங்கே ஒரு நர்சரி ஸ்கூலில் டீச்சர் வேலை பார்த்தேன். அவருக்கு பலசரக்குக் கடையில் வேலை. கொஞ்சம் நிம்மதியா மூச்சுவிட்ட சமயம், தமிழகத்தில் உசேன் கைதானாரு. தகவல் நேபாளம் வரை எட்டி என் ஸ்கூல் வேலை போயிருச்சு. இன்னொரு ஸ்கூல்ல சேர்ந்து வேலை பார்த்தேன். தமிழகப் பரபரப்புகள் அடங்கி அவருக்கும் ஓரளவு வருமானம் வர ஆரம்பிச்ச நேரம் எங்களுக்கு முதல் மகன் பிறந்தான். 3 வருஷம் ஓடிருச்சு. 'இவ்வளவு நாளுக்குப் பிறகு பிரச்னை இருக்காதே'ன்னு இவர் அவங்க வீட்டுக்குப் போன் பண்ணிப் பேசியிருக்காரு. மோப்பம் பிடிச்சுட்டாங்க போலீஸ்காரங்க.
பீகார் போலீஸ் மூலமா எங்களை ட்ரேஸ் செஞ்சு கைது செய்து தமிழ்நாட்டுக்கு அழைச்சுட்டு வந்தாங்க. அவங்களே தயாரிச்ச ஒரு வாக்குமூலத்தில் எங்ககிட்ட கையெழுத்து வாங்கிட்டாங்க. அதில் 'நாங்கதான் ரஃபீக்குக்கும் அவரோட நண்பர்களுக்கும் அடைக்கலம் கொடுத்து, பயங்கரவாதச் செயல்களுக்குத் துணை போனதா'ப் பதிவாகியிருந்தது வேதனையான வேடிக்கை.
முழுசா 3 வருடங்கள். நானும் அவரும் தனித்தனி செல்லில் இருந்தோம். மகன் சிவகாசியில் வளர்ந்தான். எங்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் போலீஸிடம் இல்லைங்கவும் பெயில் கிடைச்சது.
இப்போ எனக்கு டீச்சர் வேலை. அவருக்குச் சின்னச் சின்னதாப் பல வேலைகள். ஆகஸ்ட் 15, டிசம்பர் 6, ஜனவரி 26 தேதிகளை நாங்க மறந்தாலும், வீட்டுக்கதவைத் தட்டும் போலீஸ் அதை ஞாபகப்படுத்திருவாங்க. தங்கி இருக்கிற இடத்துல நான்தான் ஆயிஷான்னு தெரிஞ்சதும் ரெண்டு பேருக்கும் வேலை போயிடும். வீட்டைக் காலி பண்ணச் சொல்லிருவாங்க. இதுவரை 4 வீடு காலி பண்ணிட்டோம். இப்ப குடியிருக்கிற வீட்டோட ஓனர், வேலை பார்க்கிற கடை முதலாளி யாருக்கும் நான்தான் ஆயிஷான்னு தெரியாது. இந்த 10 வருஷங்களைத் திரும்பிப் பார்த்தா, கண்ணீரும் ஓட்டமும்தான் மிஞ்சியிருக்கு. இனிமேதான் வாழ்க்கையை ஆரம்பிக்கணும். இன்னும் ஒரு வருஷத் தண்டனை பாக்கி இருக்கு. அப்பீல் பண்ணியிருக்கோம். விடுதலை கிடைக்கும்னு நம்புறோம். நீதியையும் இறைவனையும் நம்புறோம்!'' - கைகோத்திருக்கும் 5 மாத மகனின் விரல்களைப் பிரித்து நீவும் ஆயிஷாவிடம் அந்தக் கேள்வியைக் கேட்க எனக்கும் தயக்கமாகத்தான் இருந்தது.
''இன்றைய சூழ்நிலையில் நீங்க இஸ்லாம் மதத்துக்கு மாறியதால்தான் இத்தனை பிரச்னைகளும் என்ற நினைப்பு ஏற்பட்டது உண்டா?''
ஆயிஷாவின் கண்கள் அவசரமாக மறுத்தன. ''எப்பவுமே இல்லை. நானாகத்தான் இஸ்லாத்தை விரும்பித் தேர்ந்தெடுத்தேன். 'போர்க்காலங்களில்கூட குழந்தைகள், வயதானவர்கள், பெண்கள் பாதிக்கப்படக் கூடாது'ங்கிறதுதான் குர்-ஆன் வாசகம். குண்டுவெடிப்புகளில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக் கொல்லப்படுவதை மட்டும் குர்-ஆன் அனுமதிக்குமா என்ன? 'வாழ்க்கையைத் திட்டமிடாமலே கல்யாணம் பண்ணிக்கிட்டது சரியா?'ங்கிற கேள்வி மட்டும்தான் என்னை உறுத்திக்கிட்டே இருக்கு, அதுதான் எங்க எல்லாப் பிரச்னைகளுக்கும் காரணம். எந்த மதத்தவரா இருந்தாலும் தீவிரவாதி என்பவன் தீவிரவாதிதான். அவனுக்கும் மதக் கோட்பாடுகளுக்கும் சம்பந்தமே இல்லை!''
விடைபெறும் சமயம், மெல்லிய குரலில் கூறுகிறார் ஆயிஷா, ''என் பசங்களை ஐ.ஏ.எஸ்., படிக்கவைக்கணும்னு ஆசை. அம்மாதான் 'டெரரிஸ்ட்'னு பேர் எடுத்தாச்சு. பிள்ளைகளாவது 'அதிகாரிகள்'னு பேர் எடுக்கட்டுமே... இன்ஷா அல்லாஹ்!''
நன்றி: ஆனந்த விகடன் தேதி: 07-01-2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment