த.மு.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம், ஜன. 10: கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பாக த.மு.மு.க. சார்பில் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அமைப்பின் மத்திய மாவட்டத் தலைவர் எஸ். சலிமுல்லாகான் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர்கள் (வடக்கு) சாதிக்பாட்ஷா, சம்சுதீன் சேட் (தெற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் தஸ்பீக்அலி வரவேற்றார்.
முஸ்லிம்கள் மீது காவல் துறை பொய் வழக்கு போடுதல், இந்த வழக்குகளை சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைத்து உண்மையைக் கண்டறிய அரசை வலியுறுத்துதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
த.மு.மு.க. அமைப்பின் மாநில பொதுச் செயலர் ஹைதர்அலி கண்டன உரையாற்றினார்.
இதில் மாவட்டப் பொருளாளர் சல்மான், துணைத் தலைவர் கபீர், ஒன்றியச் செயலர் ருகைபு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஹைதர் அலி கூறியது:
தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது. லஞ்சம் வாங்கும் அலுவலர்கள் பெருகி விட்டனர்.
நீதிமன்றத்தில் சில தீர்ப்புகள் கூட நியாயமாக வழங்கப்படுவதில்லை.
அரசியல்வாதிகளை மக்கள் நம்பத் தயாராக இல்லை.
அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் வகையில், மனிதநேய மக்கள் கட்சியைத் தொடங்க உள்ளோம்.
மனிதநேயத்தை வளர்க்கும் வகையில், பழைய இயல்பான உணர்வுகளைக் கொண்டு வரவே கட்சி தொடங்கப்பட்டுள்ளது.
காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இல்லை. முக்கியப் பிரச்னைகளை முதல்வர் கவனத்துக்கு அதிகாரிகள் கொண்டு செல்வதில்லை.
மக்களின் மனநிலையை அறிந்து செயல்படுபவரே சிறந்த அதிகாரி.
குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். அதேநேரம், காவல்துறை அதிகாரிகள் மனித நேயத்துடனும், சமூக அக்கறையுடனும் செயல்பட வேண்டும்.
முஸ்லிம்கள் மீது பொய் வழக்குகள் போடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றார் ஹைதர்அலி.
No comments:
Post a Comment