Monday, January 5, 2009
தமுமுக தீர்மானம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை பொதுக்குழுக் கூட்டம் திருச்சி காஜா நகரில் காஜா மியான் திடலில் தலைவர் பேராசிpரியர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் எஸ் ஹைதர் அலி, பொருளாளர் ஒ.யூ. ரஹ்மதுல்லாஹ், துணைப் பொதுச் செயலாளர் ஜே. எஸ். ரிபாயி, மாநிலச் செயலாளர்கள் எம். தமீமுன் அன்சாரி, பி. அப்துஸ் ஸமது, காஞ்சி ஜூனைத்,
கே. முஹம்மது கவுஸ், துணைச் செயலளார்கள் ஹாருன் ரஷீத், ஹாஜா கனி, கோவை சாதிக் அலி, டி. எஸ். இஸ்மாயில், சேட்கான், ஜே. அவுலியா உள்பட 2000க்கும் மேற்பட்;ட பொதுக்குழு உறுப்பினர்கள் இப்பொதுக் குழுவில் பங்குக் கொண்டனர். இப்பொதுக் குழுவில் பின்வரும் தீர்மானங்கள் வருமாறு:
தீர்மானம் 1
முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு 6 சதவிகிதமாக உயர்த்தப்பட வேண்டும்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின்; முதன்மை கோரிக்கையும், தமிழக முஸ்லிம்களின் ஜீவாதாரக் கோரிக்கையுமான கல்வி, வேலை வாய்ப்புகளில் தனி இடதுக்கீடு என்பதைப் பரிவோடு பரிசீலித்து, கல்வி, வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கியதை நன்றியுடன் நினைவு கூறும் அதே வேளையில் 3.5 சதவிகித இடஒதுக்கீடு என்பது முஸ்லிம்களின் பின்தங்கிய நிலைமையை சீர் செய்யப் போதுமானதல்ல என்பதால், 6 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்கி சமூக நீதியை வலுப்படுத்த தமிழக முதல்வர் கலைஞர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு கோருகிறது.
தீர்மானம் 2
மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரை ஏற்கப்பட்டு அனைத்திந்திய அளவில் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்
2004ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது முஸ்லிம்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் தேசிய அளவில் இடஒதுக்கீடு வழங்குவோம் என்று காங்கிரஸ், திமுக உள்ளிட்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் வாக்குறுதி அளித்தன. இதே வாக்குறுதி ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் குறைந்தபட்ச பொதுச் செயல் திட்டத்திலும் இடம்பெற்றுள்ளது.
முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீட்டைப் பல்வேறு முறையான ஆய்வுகளுக்கு பிறகு நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் பரிந்துரைத்துள்ளது. பிரதமரிடம் 2007 ஆகஸ்ட் 22 அன்று மிஸ்ரா ஆணையம் தனது அறிக்கையை சமர்பித்து விட்டது. இந்த ஆணையப் பரிந்துரையை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து, அவற்றை உடனடியாக மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 3
இஸ்ரேலுடன் உறவை இந்தியா துண்டிக்க வேண்டும்
பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது அராஜகத் தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கும் பயங்கரவாத இஸ்ரேலை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. பயங்கரவாத இஸ்ரேலுடனான உறவை இந்தியா உடனடியாகத் துண்டிக்கக் கோரியும், பாலாஸ்தீனத்தின் மீதானத் தாக்குதலைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் ஜனவரி 8 அன்று கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துவது என இப்பொதுக் குழு தீர்மானிக்கிறது. வர்ணிக்க முடியாத துன்பங்களை அனுபவித்து வரும் காஸா மக்களுக்கு இந்திய அரசு உடனடியாக நிவாரண உதவிகளைச் செய்ய வேண்டுமென இப்பொதுக் குழு கோருகின்றது.
தீர்மானம் 4
வேலூர் கோட்டைப் பள்ளிவாசலில் தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும்
வேலூர் கோட்டை பள்ளிவாசலில் தொழுகை நடத்த இது வரை அனுமதி மறுத்து சிறுபான்மை மக்களுக்கு அரசியல் சாசனச் சட்டம் அளித்துள்ள வழிப்பாட்டு உரிமையை நசுக்கி வரும் மத்திய அரசை இப்பொதுக் குழு வன்மையாக கண்டிக்கின்றது.
வேலூர் கோட்டைப் பள்ளிவாசலில் தொழுகை நடத்த இந்தியத் தொல்பொருள் ஆய்வு நிறுவனம் உடனடியாகத் அனுமதிக்க வேண்டும். இதே போல் நாடெங்கும் தொல்லியல் துறையால் தொழுகை தடுக்கப்பட்டுள்ள பள்ளிவாசல்களில் தொழுகை நடத்த அனுமதிக்கப்பட வேண்டும். இந்தப் பள்ளிவாசல்களை முஸ்லிம்களே பராமரிக்க அனுமதிக்க வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 5
மனிதநேய மக்கள் கட்சியை வாழ்த்தி வரவேற்கிறது
நாடாளுமன்றம் முதல் உள்ளாட்சி மன்றங்கள் வரை முஸ்லிம்களின் வெற்றிடத்தை நிரப்பும் வகையிலும் ஊழலற்ற அரசியலை உருவாக்கவும் மலரவுள்ள மனிதநேய மக்கள் கட்சியை இப்பொதுக்குழு வாழ்த்தி வரவேற்கிறது.
பிப். 7 அன்று சென்னை தாம்பரத்தில் நடைபெறவுள்ள மனிதநேய மக்கள் கட்சியின் தொடக்க விழா மாநாட்டில் பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 6
இடஒதுக்கீடு அமுலாக்கத்தை கண்காணிக்க குழு
தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள தனி இடஒதுக்கீட்டின் முழு பயன் சமுதாயத்திற்குக் கிடைக்காத வகையில் அதிகாரிகள் முட்டுக்கட்டைகள் போட்டு வருகின்றனர். எனவே இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவதை கண்காணிக்க அரசு அலுவலர் அல்லாத சமுதாயப் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவை அரசு உருவாக்க வேண்டும் என இப்பொதுக்குழு கோருகிறது.
தீர்மானம் 7
இராமநாதபுரம் காவல்கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை வேண்டும்
இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்வேலன் தொடர்ச்சியாக முஸ்லிம் விரோத மனப்பான்மையுடன் பாரபட்சமாக செயல்பட்டு வருகிறார். பரமக்குடி மாணவர் ராஜா மஸ்தான் மர்மமான முறையில் படுகொலைச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த மரணத்தை தற்கொலை என்று முடிப்பதற்கு அவர் முனைந்தார். தமுமுக வலியுறுத்தல் காரணமாக இந்த வழக்கு சிபிசிஐடி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு அவரது முஸ்லிம் விரோத போக்கு அதிகரித்துள்ளது. இதன் உச்சக்கட்டமாக டிசம்பர் 6 அன்று நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் பங்குக் கொண்ட ராமநாதபுரம் மத்திய மாவட்டத்தின் தலைவர் சலிமுல்லாஹ் கான், ராமநாதபுரம் வடக்கு மாவட்டத்தின் தலைவர் தொண்டி சாதிக் பாஷா உள்ளிட்ட நிர்வாகிகள் உட்பட 24 பேர் மீது எஸ்.பி. செந்தில்வேலன் அபாண்டமான பொய் வழக்கு பதிவுச் செய்துள்ளளார். தமுமுகவின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு திருச்சியில் ஜனவரி 3 மற்றும் 4 அன்று நடைபெறவுள்ள நிலையில் தமுமுகவின் ராமநாதபுரம் மத்திய மாவட்டத் தலைவர் சலிமுல்லாஹ் கானை ஜனவரி 2 அன்று மாலை கைதுச் செய்து தனது வஞ்சக உள்ளத்தை வெளிப்படுத்தியுள்ளார் ராமநாதபுரம் எஸ்.பி. செந்தில்வேலன். நடுநிலை தவறி பழிவாங்கும் போக்கில் செயல்படும் ராமநாதபுரம் காவல்கண்காணிப்பாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து உடனடியாக அவர் இடமாற்றம் செய்ய வேண்டும் என இப்பொதுக்குழு கோருகின்றது. தமுமுகவினர் மீதும் எமனேஸ்வரம் ஜமாஅத்தினர் மீதும் இவர் போட்ட பொய் வழக்குகள் வாபஸ் பெறப்பட வேண்டுமெனவும் இப்பொதுக் குழு கோருகின்றது.
தீர்மானம் 8
பள்ளிவாசல் கட்டுவதற்குள்ள தடைகள் நீக்கப்பட வேண்டும்
தமிழகத்தில் பள்ளிவாசல் கட்டுவதற்குத் தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிப்பதை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. பள்ளிவாசல் கட்டத் தடையில்லாச் சான்றிதழ் பெறக் கூறி அலைக்கழித்தல் போன்ற செயல்களை அரசுத் துறையினர் கைவிட வேண்டும் என இப்பொதுக்குழு எச்சரிக்கிறது.
தீர்மானம் 9
வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளில் பள்ளிவாசல்களுக்கு இடம் வேண்டும்
தமிழக அரசு வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமானக் குடியிருப்புப் பகுதிகளில், வழிபாட்டுத் தலங்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படும் போது ஓரவஞ்சனையாக பள்ளிவாசல்களுக்கு மட்டும் இடம் ஒதுக்காத இழிசெயல் நடந்து வருகிறது. இதை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. கோயில்கள், தேவாலாயங்களுக்கு இடம் ஒதுக்கியுள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளில் பள்ளிவாசல்களுக்கும் இடம் ஒதுக்க வேண்டும் என இப்பொதுக்குழு கோருகிறது.
தீர்மானம் 10
குடிசைமாற்று வாரிய வீடுகள் ஒதுக்கீட்டில் முஸ்லிம்கள் புறக்கணிப்பு
குடிசைமாற்று வாரியத்தின் வீடுகளை ஒதுக்கீடு செய்வதில் முஸ்லிம்கள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டு வருவதை இப்பொதுக்குழு அரசுக்கு சுட்டிக்காட்டுகிறது. குடிசைமாற்று வாரிய வீடுகளை ஒதுக்குவதில் முஸ்லிம்களுக்கு உரிய பங்கீடு கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இப்பொதுக்குழு கோருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment