Thursday, November 19, 2009

துபாய்: 15 ம‌ணி நேர‌ம் பயணிகளை ப‌ரித‌விக்கவிட்ட ஏர் இந்தியா!

துபாய்: துபாயிலிருந்து திருச்சி வ‌ழியாக சென்னை செல்ல‌ வேண்டிய‌ 150க்கும் மேற்ப‌ட்ட‌ ப‌யணிக‌ள் ஏர் இந்தியா எக்ஸ்பிர‌ஸ் நிர்வாக‌த்தின் மோச‌மான‌ ந‌ட‌த்தை கார‌ண‌மாக‌ ந‌ள்ளிர‌வில் குழ‌ந்தைக‌ளுட‌ன் அவ‌திப்ப‌ட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது.

துபாயிலிருந்து புத‌ன்கிழ‌மை மாலை 6.15 ம‌ணிக்கு புற‌ப்ப‌ட‌ வேண்டிய‌ விமான‌ம் தாம‌தமாக‌ புற‌ப்ப‌ட்ட‌து. புற‌ப்ப‌ட்டு ர‌ன்வேயில் விமானி விமான‌த்தை செலுத்திய‌ சில‌ நிமிட‌ங்க‌ளில் திடீரென‌ பிரேக் போட்டு நிறுத்தினார். இதில் ப‌ய‌ணிக‌ள் த‌ங்க‌ள‌து இருக்கையினை விட்டு இழுத்துச் செல்ல‌ப்ப‌ட்ட‌ன‌ர். குழ‌ந்தைக‌ள் என்ன‌ ந‌ட‌க்கிற‌து என்ப‌தை அறியாது தவித்தனர்.

இதையடுத்து என்ன ஏது என்று விளக்கம் தராமலேயே பயணிகள் அனைவரையும் கீழே இறக்கிவிட்டனர். விமானத்தில் என்ன பிரச்சனை, ஏன் நிறுத்தப்பட்டது, எப்போது கிளம்பும் என்ற விவரத்தை சொல்லாமல் தவிக்க விட்டனர்.

இதுகுறித்து இந்த விமான‌த்தில் திருச்சிக்கு ப‌ய‌ணித்த‌ ஹுசைன் என்ப‌வ‌ர் கூறிய‌தாவ‌து: மாலை மூன்று விமான‌ நிலைய‌ம் சென்றோம். 6.15க்கு புற‌ப்ப‌ட‌ வேண்டிய‌ விமான‌ம் மிக‌வும் தாம‌த‌மாக‌க் கிள‌ம்பிய‌து. தொழில்நுட்ப‌க் கோளாறு கார‌ண‌மாக‌ புற‌ப்ப‌ட்ட‌ சில நிமிட‌ங்க‌ளிலேயே விமான‌ம் நிறுத்த‌ப்ப‌ட்டு விட்ட‌து.

இது குறித்து ப‌ய‌ணிக‌ள் துபாய் ஏர் இந்தியா எக்ஸ்பிர‌ஸ் விமான‌ நிலைய‌ பெண் அதிகாரி ஷெட்டியிட‌ம் விளக்கம் கேட்டபோது, அவ‌ர் ப‌ய‌ணிக‌ளின் குறைக‌ளைக் கேட்காம‌ல் அவ‌ர்க‌ளை மிர‌ட்டுவ‌திலேயே குறியாக‌ இருந்தார். மேலும் இது குறித்த‌ புகார் அளித்த‌ ஒரு ப‌ய‌ணியின் பாஸ்போர்ட்டை காவ‌ல்துறை மூல‌ம் வாங்கி மிர‌ட்ட‌ல் போக்கினை க‌டைப்பிடித்தார் என்றார்.

ப‌ய‌ணிக‌ள் அனைவ‌ரும் ஒட்டு மொத்த‌மாக‌ இந்த‌ விமான‌த்தில் தாங்க‌ள் செல்ல‌ மிக‌வும் ப‌ய‌மாக‌ இருக்கிற‌து. வேறு ஏற்பாடு செய்யுங்க‌ள் என‌க்கூறியும், இதே விமான‌த்திலேயே செல்ல‌ வேண்டும் என‌வும் க‌ட்டாய‌ப்ப‌டுத்தியுள்ளார்.

ந‌ள்ளிர‌வு 12.30 ம‌ணிவ‌ரையிலும் விமான‌ம் தயாராக‌வில்லை. ப‌ய‌ணிக‌ளுக்கு எவ்வித‌ மாற்று வ‌ச‌தியும் செய்து த‌ர‌ப்ப‌ட‌வில்லை. குழ‌ந்தைக‌ளுட‌ன் சென்ற‌ ப‌ய‌ணிக‌ள் விமான‌ நிலைய‌த்தில் மிகுந்த‌ அல்ல‌லுக்குள்ளாகின‌ர்.

க‌டைசியாக‌ கிடைத்த‌ த‌க‌வ‌லின்ப‌டி வியாழ‌க்கிழ‌மை இன்று காலை 5.30 ம‌ணிக்கு விமான‌ம் திருச்சி புற‌ப்பட்ட‌து. கிட்ட‌த்த‌ட்ட‌ 15 மணி நேரம் ஏர் இந்தியா எக்ஸ்பிர‌ஸ் நிர்வாக‌த்தின‌ரால் எந்த வ‌ச‌தியும் செய்து த‌ர‌ப்ப‌டாம‌ல் விமான‌ நிலைய‌ வ‌ளாக‌த்திலேயே த‌ங்க‌ள‌து இர‌வுப் பொழுதை க‌ழித்துள்ளனர் பயணிகள்.

தொட‌ர‌ட்டும்‌ இந்திய‌ தேசிய‌ விமான‌ நிறுவ‌ன‌த்தின் 'சேவை'!

No comments: