Tuesday, September 29, 2009

இப்படியொரு இந்தியா இருப்பது உங்களுக்குத் தெரியாதா?

இப்படியொரு இந்தியா இருப்பது உங்களுக்குத் தெரியாதா?

அப்துல் கலாம் சென்னை வரும்போதெல்லாம் விரும்பிச் சென்று சாப்பிடும் உணவகம் அன்னலட்சுமி. அங்கு ஒரு சாப்பாட்டின் விலை 750 ருபா. எளிமையின் சிகரமான கலாம், அன்னலட்சுமியில் உணவருந்திக் கொண்டிருக்க, 2020-இல் இந்தியாவை வல்லரசாக்க கனவு காணுங்கள் என அவர் கோருகின்ற இந்தியக் குழந்தைகளோ 2 ருபா கொடுத்து ரேசன் அரிசி வாங்க இயலாத வறுமையால் பட்டினியில் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.

“பருவ மழை பொத்து வறட்சி ஏற்பட்டாலும் நமது மக்கள் எவரும் பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட அனுமதிக்க மாட்டோம்” எனக் கடந்த மாதம் மன்மோகன் சிங் முழங்கிக் கொண்டிருந்தபோதே, இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பட்டினிச் சாவுச் செய்திகள் வெளிவரத் தொடங்கியிருந்தன.

மத்தியப் பிரதேச மாநிலத்தில மட்டும் ஜூலை 2008 முதல் ஜனவரி 2009 வரை, சத்தான உணவின்றி உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 676. அங்கு கர்ப்பிணிகளுக்குப் போதிய ஊட்டச்சத்தான உணவு இல்லாததால், ஒவ்வொரு நாலு நிமிடத்திற்கும் ஒரு குழந்தை இறந்தே பிறக்கிறது. தப்பிப் பிழைக்கும் குழந்தைகளில் 14 சதவீதம், தங்களது ஆறு வயதிற்குள் மடிந்து போகின்றன. ஊட்டச் சத்தின்மையால் வாடும் குழந்தைகளின் சதவீதம் 45-இல் இருந்து 60-ஆக இப்போது உயர்ந்துள்ளது.

அம்மாநிலத்தில் கிராமங்களைப் பெயர் சொல்லி அழைக்கும் வழக்கொழிந்து, பசியின் கொடுமையால் அண்மையில் இறந்து போன குழந்தைகளின் எண்ணிக்கையைக் கொண்டு அழைக்கும் வழக்கம் உருவாகி உள்ளது. அவற்றை “ஆறு பிள்ளைகளின் கிராமம்” என்றும் “பத்து பிள்ளைகளின் கிராமம்” என்றும் அழைப்பதைக் கேட்கவே கொடுமையாக உள்ளது. அந்தக் கிராமங்களில் உள்ள குழந்தைகள், உப்பிய வயிறோடும் வதங்கிய கை-கால்களோடும் பிதுங்கிய விழிகளோடும்  அவை மனிதக் குழந்தைகள்தானா என்று சந்தேகம் எழும் அளவு பட்டினியால் ஒடுங்கிப் போக் காணப்படுகின்றன.

இவ்வாறு குழந்தைகள் பட்டினியால் சாவது குறித்து அம்மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசு கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினரான கணேஷ் சிங், “எதற்கெடுத்தாலும் அரசாங்கம்தான் வர வேண்டுமென இந்த மக்கள் ஏன் எதிர்பார்க்கிறார்கள்?”, “தன் கையே தனக்குதவி என இருப்பவர்களுக்குத்தான் அரசு உதவும்” என திமிரோடு கூறுகிறான்.

கணேஷ் சிங்கின் தொகுதியைச் சேர்ந்த மக்கள், எதற்கெடுத்தாலும் அரசை எதிர்பார்த்திருப்பவர்களும் அல்லர். கிராமங்கள் மீது எவ்வித அக்கறையுமில்லாத அரசு, விவசாயம் செய்ய முடியாத நிலையை ஏற்படுத்திவிட்ட பிறகு, சொத்துக்கே வழியில்லாத மக்கள் தங்களது நிலங்களை முதலில் அடமானம் வைத்தார்கள். வேறு வேலையும் கிடைக்காத நிலையில் ஒரு கட்டத்தில் மொத்த கிராமமுமே கடனில் மூழ்கி, பசிப் பிணியால் குழந்தைகள் செத்து மடியும் சூழல். அப்போதுதான் வேறுவழியின்றி அரசின் உதவியை அம்மக்கள் நாடினர். மக்கள் பிரதிநிதிகளாகக் கருதப்படுவோரோ அம்மக்களைப் பிச்சைக்காரர்களைப் போலச் சித்தரிக்கின்றனர்.

“உணவுக்கான உரிமை” என்ற பிரச்சார குழுவைச் சேர்ந்த சச்சின் ஜெயின், “இனம், மொழி, நிற பேதமின்றி அனைத்து தேசங்களிலும், குழந்தைகளுக்கு உணவளிப்பதைத்தான் தமது முதல் கடமையாகப் பெற்றோர்கள் கருதுகின்றனர். இங்கே குழந்தைகள் பஞ்சத்தில் மடிகிறார்கள் எனில், அதுதான் பஞ்சத்தின் உச்சம். இங்கு ஒட்டுமொத்த சமூகமே உணவின்றி வாடுகிறது என்று பொருள்” என்கிறார்.

இப்படியொரு இந்தியா இருப்பது உங்களுக்குத் தெரியாதா

மத்தியப் பிரதேசத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் பட்டினிச் சாவுகள் நடந்தவண்ணம் உள்ளன. நாம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுவிட்டோம், நமது கிடங்குகளில் உள்ள தானிய மூட்டைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கினால் நிலவுக்கே கூட போய் வரலாம் எனப் பொருளாதார மேதைகள் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் போதே, திசைகள் எங்கும் பட்டினிக் கொடுமை நீக்கமற நிறைந்திருக்கிறது. நெல்லின் பிறப்பிடமான ஒரிசாதான் இந்தியாவிலேயே பட்டினிக் கொடுமையில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. இந்தியாவிலேயே அதிகபட்ச இறப்பு விகிதம் உள்ள மாவட்டம் ஒரிசாவின் காலகந்தி ஆகும் (ஒவ்வொரு ஆயிரம் பேருக்கும் 140 பேர் செத்துப் போகிறார்கள்). பட்டினிக் கொடுமையின் இறுதி நிகழ்வான வயிற்றுப் போக்கால் இங்கு மக்கள் மடிந்து போவது வழமையாக உள்ளது. “இந்த கிராமத்தில் ஒருவன் நோயில் படுத்தால் அவன் செத்து போக வேண்டியதுதான்” என்கிறார், தனது மனைவியையும், குழந்தையையும் அடுத்தடுத்து பறிகொடுத்த மதன் நாயக் என்பவர். இவ்வாறு பட்டினியால் மக்கள் சாகும் காலகந்தி-போலன்கிர்-கோராபுட் பகுதியில் இருந்துதான் ஏழு கோடீஸ்வர வேட்பாளர்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டனர் என்பது முரண்நகை.

காலகந்திக்கு அருகிலே உள்ள காசிப்பூர் பகுதியில் விவசாயம் பொத்துப் போனதால், உணவுக்கு வழியின்றி மக்கள் அல்லாடுகின்றனர். ஒரு காலத்தில் தமக்கென சொந்தமாக நிலம் வைத்திருந்த பழங்குடியினரும், சிறு விவசாயிகளும் கொஞ்சம் கொஞ்சமாக பெரு விவசாயிகளிடம் அற்ப விலைக்குத் தமது நிலங்களை விற்று விட்டு விவசாயக் கூலிகளாக மாறிப்போயுள்ளனர். விவசாயம் பொத்துப் போகும் போது உணவுக்கு வழியின்றி மாங்கொட்டைகளை அரைத்து உண்கின்றனர். பூஞ்சை படர்ந்து நஞ்சாகிப் போன மாங்கொட்டைகளை உட்கொண்டதால் 2001-இல் இந்தப் பகுதியில் 54 பேர் வாந்தி-பேதிக்கு பலியானார்கள்.

கடந்த சில வருடங்களில், இதுவரை 540 பேர் வரை பட்டினியால் மடிந்து போனது குறித்து ஒரிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்கிடம் கேட்ட பொழுது “இங்கு பட்டினிச்சாவே இல்லை” என்று ஒரே வரியில் கூறி மழுப்பிவிட்டார். ஆனால் ஒரிசாவின் பழங்குடியினரும், விவசாயிகளும் வயிற்றுப் பிழைப்புக்காக சென்னை, பெங்களூர் போன்ற மாநகரங்களுக்குப் படையெடுக்கும் காட்சியோ, அவர் கூறுவது முற்றிலும் பொ என்பதை நிரூபிக்கிறது. அவர்கள் அந்நகரங்களில் கூலி வேலை பார்த்து சம்பாதிப்பதில் 70 சதவீதத்தை அந்நகரங்களில் செலவழித்தது போக, மிஞ்சும் அற்பத் தொகைதான் ஒரிசாவிலுள்ள அவர்களது குடும்பத்திற்கு உணவுக்குச் செலவிடப்படுகிறது.

நிலச் சீர்திருத்தத்தை முறையாகச் செய்த ஒரே மாநிலம் என சி.பி.எம். கட்சியினர் பெருமையுடன் பீற்றிக் கொள்ளும் மேற்கு வங்கத்தின், மேற்கு மித்னாபூரில் உள்ள அம்லாசோல் கிராமத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டிலிருந்தே பட்டினிச் சாவுகள் நிகழ்ந்து வருகின்றன. மேற்கு வங்க போலி கம்யூனிஸ்டு அரசு பல மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருவதாகக் கதையளந்தாலும், இன்றும் அம்லாசோல் அதே நிலைமையில்தான் உள்ளது. பட்டினிச் சாவுகளை வெளிக் கொணர்ந்த அம்லாசோல்-ஐச் சேர்ந்த சி.பி.எம். கட்சி உறுப்பினரான கைலாஷ் முண்டா என்பவர், கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டார் என்ற ஒரேயொரு மாற்றம் தவிர்த்து, எதுவும் மாறிவிடவில்லை. அதேபோல, லால்கரை ஒட்டிய பகுதிகளில் உணவுப் பற்றாக்குறையும், குழந்தைகள் ஊட்டச்சத்தில்லாமல் தவிப்பதும் நிரந்தரமாக நிலவுகிறது.

இம்மூன்று மாநிலங்களில் மட்டுமல்லாது இன்னும் பிற மாநிலங்களிலும் விவசாயக் கூலிகளும் அவர்களது குழந்தைகளும் பட்டினியால் மரணமடைந்து வருகின்றனர். விஷம் போல ஏறும் விலைவாசி அவர்களது மரணத்தைத் துரிதப்படுத்திவருகிறது. இந்தியாவை ஒரு வல்லரசாக மாற்றிவருவதாக ஆளும் வர்க்கம் கூறி வருகிறது. ஆனால் உண்மையில் “மக்களின் வாழ்கைத் தரத்திலும், சுகாதாரத்திலும், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்திலும் இந்தியா பஞ்சத்தில் அடிபட்ட ஆப்பிரிக்காவின் சஹாராப் பாலைவனப் பிரதேசங்களைப் போன்று நலிவுற்று உள்ளது” என நோபல் பரிசு பெற்ற பொருளாதாரப் பேராசிரியர் அமர்த்யா சென் கூறியுள்ளார். இதுதான் வல்லரசுக் கனவுகளோடு நோஞ்சான் தலைமுறையை அடைகாக்கும் இந்தியாவின் நிலைமை. வயிற்றை நிரப்ப உணவின்றிப் பச்சிளங்குழந்தைகள் ஒவ்வொரு நொடியும் செத்துக் கொண்டிருக்கும்போது நாட்டை வல்லரசாக்குவதையும், சந்திரனுக்கு மனிதனை அனுப்புவதையும் பற்றி மேதாவிகள் அளந்து கொண்டிருக்கின்றனர். கும்பி கூழுக்கு அழுததாம்! கொண்டை பூவுக்கு அழுகிறதாம்!

-புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2009

Thursday, September 24, 2009

தமிழகத்தில் 65% மாணவிகளுக்கு ரத்த சோகை

சென்னை: தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளில் சுமார் 65 சதவீதம் பேருக்கு ரத்தசோகை நோய் இருக்கும் அதிர்ச்சி தகவலை தமிழக சுகாதார துறை முதன்மை செயலாளர் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

இந்திய இளைஞர்களின் சூழ்நிலைகளும், தேவைகளும் என்ற தலைப்பில் நடந்த மாநாட்டில் அவர் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் சர்வதேச மக்கள் தொகை அறிவியல் நிறுவனம் மற்றும் சில அமைப்புகள் சேர்ந்து தமிழகம் [^], ஆந்திரா [^], பீகார், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட 6 மாநிலங்களில் நடத்திய சர்வே முடிவுகள் வெளியிடப்பட்டன.

பின்னர் சுப்புராஜ் பேசுகையில்,

தமிழகம் அடுத்து சந்திக்கவிருக்கும் முக்கிய சுகாதார பிரச்சனையாக ரத்தசோகை மாறியுள்ளது. இதை சமாளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு நாம் ஆளாக்கப்பட்டுள்ளோம்.

தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவியர்களில் 65 சதவீதம் பேருக்கு இந்த நோய் உள்ளது.
தமிழக அரசு மதிய உணவுத் திட்டத்தை 30 ஆண்டுகளாக நல்ல முறையில் நடைமுறைப்படுத்தி வரும் நிலையில் கூட இளம் பெண்கள் [^] ரத்த சோகை நோய்க்கு ஆளாகியுள்ளனர்.

அவர்கள் தாய்மை அடையும் போது அவர்களுக்கு பல பிரச்சனைகள் உருவாகும். இதனால் பிரசவத்தின் போதான இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம். இதை தடுக்க பெண்களிடம் ரத்தசோகை குறித்து போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

தற்போது தமிழகத்தில் இருக்கும் 50 சதவீத மக்களிடம் மட்டுமே ஏய்ட்ஸ் குறித்து போதிய விழிப்புணர்வு இருக்கிறது. மாணவர்கள் [^] மத்தியில் ஏய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்த விரைவில் கல்லூரிகளில் சிவப்பு ரிப்பன் கிளப்கள் துவக்கப்பட இருக்கின்றன.

மேலும், மாணவர்களில் 25 சதவீதம் பேருக்கு குடி மற்றும் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளது. மற்ற தவறான பழக்கங்களுக்கு மது தான் ஆரம்பம் என்பதை அவர்கள் உணரவில்லை. இளமையில் தவறான பழக்கங்களுக்கு ஆளானவர்கள் மூதுமையில் நோய்க்கு எளிதாக ஆளாகிவிடுவார்கள்.

ஒவ்வொரு நாட்டின் முன்னேற்றத்திலும் இளைஞர்களின் பங்களிப்பு அதிகமுள்ளது. எனவே அவர்கள் முக்கிய பிரச்சினைகளில் சரியாக வழிநடத்தப்பட்டு போதிய பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றார் சுப்புராஜ்.

999 அடி நீள திருக்குர் ஆன்


Print E-mail

தேஜாஸ்ரீ என்ற ஹிந்து மாணவி, அரபு மொழியில் திருக்குர்ஆனை 999 அடி நீள தாளில் புத்தகமாக எழுதியதை சில தினங்களுக்கு முன் ஹைதராபாத்தில் நடைபெற்ற இஃப்தார் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டார்.

Tuesday, September 22, 2009

பாபர் மசூதி இடிப்பு வழக்குகள்: சட்டப்படி நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டம்

இந்து மதவெறிக் கும்பலால் பாபர் மசூதி இடித்துத்தள்ளப்பட்ட கிரிமினல் நடவடிக்கையை ஆராய லிபரான்கமிசன் டிசம்பர் 10, 1992 அன்று பாபர் மசூதி இடித்துத்தள்ளப்பட்ட நான்காவது நாளில் மைய அரசால் நியமிக்கப்பட்டது.

மூன்று மாதங்களுக்குள் அறிக்கையைத் தர வேண்டும் என்ற நிபந்தனையோடு நியமிக்கப்பட்ட இக்கமிசன், 16 ஆண்டுகள் 6 மாதங்கள் கழித்து, கடந்த ஜூன் 30, 2009 அன்றுதான் தனது அறிக்கையை மைய அரசிடம் தந்துள்ளது.

இக்கமிசனின் விசாரணைக்கு டெல்லி உயர்நீதி மன்றம் விதித்திருந்த தடை, பாபர் மசூதி இடிப்பில் நேரடியாகத் தொடர்புள்ள கல்யாண் சிங் போன்ற "சாட்சிகள்' கமிசனின் முன் விசாரணைக்கு ஆஜராகாமல் இழுத்தடித்தது போன்றவைதான் இத்தாமதத்திற்கான காரணங்களாகக் கூறப்பட்டாலும், "மசூதியை இடித்துத் தள்ளிய சதிகாரர்கள் யார்?'' என்பது உலகுக்கே தெரிந்த இந்த வழக்கு தொடர்பான விசாரணையை நடத்தி முடித்து அறிக்கை கொடுக்க, நீதிபதி லிபரானுக்கு 16 ஆண்டுகள் " தேவைப்பட்டிருப்பதை ' எந்தவிதத்திலும் நியாயப்படுத்திவிடமுடியாது.

பாபர் மசூதியை இடித்துத் தள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு நடத்தப்பட்ட அத்வானியின் ரத யாத்திரை; மசூதி இடிக்கப்படுவதற்கு முதல் நாள் பஜ்ரங் தள் தலைவர் வினய்கத்தியாரின் வீட்டில் நடந்த சதி ஆலோசனை; அதில் கலந்துகொண்ட அத்வானி உள்ளிட்ட தலைவர்களின் பங்கு; மசூதி இடிக்கப்படுவதற்கு முதல் நாள் அயோத்திக்கு வந்து உரையாற்றி விட்டு, அன்றிரவு ராமஜென்ம பூமி நியாஸின் தலைவர் பரமஹம்ஸர் வீட்டில் நடந்த "கலந்துரையாடலில்' கலந்துகொண்டுவிட்டுச் சென்ற வாஜ்பாயின் பங்கு; பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ படங்கள்; அக்கிரிமனல் நடவடிக்கையைத் தடுக்காமல், அதனை ரசித்துப் பார்த்துப் பெருமிதம் கொண்ட அத்வானி, உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் பல குட்டித் தலைவர்களின் இந்து மதவெறி வக்கிரம்; சிவசேனா தலைவர் பால்தாக்கரே மற்றும் பா.ஜ.க.வைச் சேர்ந்த கல்யாண் சிங், உமாபாரதி ஆகியோர் மசூதி இடிக்கப்பட்டதை நியாயப்படுத்தி வெளியிட்ட அறிக்கைகள் மற்றும் நேர்காணல்கள் இத்துணை அசைக்க முடியாத ஆதாரங்கள் இருக்கும் பொழுது, மசூதியை இடித்துத் தள்ளிய இந்து மதவெறிப் பாசிசக் கும்பலும், அவர்களுக்குத் துணையாக நின்றவர்களும் இந்நேரம் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், லிபரானோ மலையைக் கெல்லி எலியைப் பிடித்த கதையாக, 16 ஆண்டுகள் கழித்துதான் 27 தொகுதிகள் கொண்ட அறிக்கையைக் கொடுத்திருக்கிறார். மைய அரசோ அந்த அறிக்கையை வெளியிட "நல்ல நாள்' பார்த்துக் கொண்டிருக்கிறது. கள்வனிடமே பெட்டிச் சாவியைக் கொடுத்தது போல, பாபர் மசூதி இடிக்கப்பட்டதை வேடிக்கை பார்த்து நின்ற கயவாளி காங்கிரசு கும்பலிடம் லிபரான் அறிக்கை போய்ச் சேர்ந்திருக்கிறது. இதைவிட இந்து மதவெறிக் கும்பலுக்கு வேறு பாதுகாப்பு தேவையில்லை. பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக மையப் புலனாய்வுத் துறை நடத்தி வரும் வழக்கும் 16 ஆண்டுகளாக விசாரணை வாய்தா மேல்முறையீடு என்ற இழுத்தடிப்புகளைத் தாண்ட முடியாமல் முடங்கிப் போய்க்கிடக்கிறது.

லிபரான் கமிசனில் அரசு தரப்பு வழக்குரைஞராகப் பணியாற்றி வந்த பஞ்சாப் ஹரியானா உயர்நீதி மன்றத்தைச் சேர்ந்த மூத்த வழக்குரைஞர் அனுபம் குப்தா, "நீதிபதி லிபரான் விசாரணையின் பொழுது அத்வானிக்கு அதிகபட்ச சலுகைகள் காட்டியதாக''க் குற்றம் சுமத்தி வருவதோடு, மசூதி இடிப்பில் அத்வானியின் பங்கு குறித்து நீதிபதி லிபரானுக்கும் தனக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடே கமிசனில் இருந்து தான் விலகுவதற்குக் காரணமாக அமைந்ததாகக் கூறி வருகிறார்.

அனுபம் குப்தா அத்வானியைக் குறுக்கு விசாரணை செய்தபொழுது, "நாடு சுதந்திரமடைந்த பின் குஜராத்திலுள்ள சோமநாதர் ஆலயத்தைப் புதுப்பிக்கும் பிரச்சினையை ஜவஹர்லால் நேரு எப்படிக் கையாண்டார்'' என்பது தொடர்பாக அத்வானியிடம் கேள்வி எழுப்பியதாகவும், இந்தக் கேள்வியினால் அத்வானியை விட லிபரான் தான் அதிகப் பதற்றமடைந்ததாகவும், அதனால் அத்வானியிடம் தன்னை மன்னிப்புக் கேட்கக் கோரி லிபரான் நிர்பந்தித்தாகவும் அனுபம் குப்தா கூறி வருகிறார்.

இதே போன்று, மசூதி இடிப்பு தொடர்பான உளவுத் துறை அறிக்கையொன்றைச் சுட்டிக் காட்டி அத்வானியை, தான் குறுக்கு விசாரணை செய்தபொழுது, அத்வானி ஆத்திரமடைந்ததாகவும், அதனால், அந்தக் கேள்விக்கு லிபரான் தடை விதித்துவிட்டதாகவும் அனுபம் குப்தா கூறுகிறார். "அத்வானி, ஜோஷி ஆகியோரின் கண் முன்னே மசூதி இடிப்பு நடந்தபோதும், அவர்கள் அதற்குப் பொறுப்பல்ல; நிலைமை அவர்களின் கையை மீறிப் போய் விட்டது'' என்பது தான் பா.ஜ.க.வின் நிலைப்பாடு. இதே நிலைப்பாட்டைத்தான் லிபரான் கொண்டிருப்பதாக அனுபம் குப்தா குற்றம்சாட்டி வருகிறார்.

லிபரான் கமிசன் மீதான இக்குற்றச்சாட்டுக்கள் கிசுகிசு செய்திகளைப் போல அல்லாமல்,"அவுட் லுக்'' என்ற ஆங்கில வாரஇதழில் அனுபம் குப்தாவின் நேர்காணலாகவே வெளிவந்திருக்கிறது. இதனால், நீதிபதி லிபரான் "நடுநிலையாக' விசாரணையை நடத்தி அறிக்கை கொடுத்திருப்பாரா என்ற சந்தேகம் தவிர்க்கமுடியாமல் எழுந்துள்ளது. இந்தசந்தேகத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, நீதிபதி லிபரான் நேர்மையாகவே விசாரணையை நடத்தியிருப்பார் என்று எடுத்துக் கொண்டாலும், அதனால் என்ன விளைவு ஏற்பட்டுவிடும்?

பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து நடந்த மும்பய்க் கலவரத்தை விசாரித்து அறிக்கை அளித்த சிறீகிருஷ்ணா கமிசன்,1982இல் நடந்த மண்டைக்காடு இந்து மதவெறிக் கலவரத்தை விசாரித்து அறிக்கை அளித்த வேணுகோபால் கமிசன், 1969இல் குஜராத் அகமதாபாத்தில் இந்து மதவெறியர்கள் நடத்திய கலவரத்தை விசாரித்து அறிக்கை அளித்த ஜக்மோகன்ரெட்டி கமிசன் ஆகியவற்றுக்கு என்ன கதி நேர்ந்ததோ, அதேநிலை லிபரான் கமிசன் அறிக்கைக்கும் ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது?

லிபரான் கமிசன் அளித்துள்ள அறிக்கை ஒருபுறமிருக்கட்டும். பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக மையப் புலனாய்வுத்துறை நடத்தி வரும் இரு வழக்குகளில், ஒன்றில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, வினய் கத்தியார், அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர், வீ.எச்.டால்மியா, சந்நியாசினி ரிதம்பரா ஆகிய எட்டு பேர் மீது சதிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. இக்குற்றச்சாட்டுக்குப் பூர்வாங்க ஆதாரம் இருப்பதைக் கூடுதல் குற்றவியல் நீதிபதி ஜகதீஷ் பிரசாத் சிறீவத்ஸவா உறுதி செய்துள்ளார்.

எனினும், காலப்போக்கில் இந்து மதவெறிக் கும்பல் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டும், சட்டத்திலுள்ள ஓட்டைகளையும், தலித் "சகோதரி' மாயாவதியின் நட்பையும் பயன்படுத்திக் கொண்டும் அந்த எட்டு பேர் மீதான சதிக் குற்றச்சாட்டை உடைத்தெறிந்து விட்டது. அவர்கள் மீது இக்குற்றச்சாட்டை மீண்டும் சுமத்தி வழக்கு நடத்துவதற்கு சட்டப்படியே வாய்ப்புகள் இருந்தும்கூட, அதை காங்கிரசு உள்ளிட்டு எந்தவொரு மதச்சார்பற்ற கட்சியும் கண்டு கொள்ளவில்லை. தற்பொழுது அவர்கள் மீது மதக் கலவரத்தைத் தூண்டிவிடும்படி நடந்து கொண்டார்கள் என்ற உப்புச்சப்பில்லாத குற்றச்சாட்டுதான் சுமத்தப்பட்டுள்ளது.

இதுவொருபுறமிருக்க, பாபர் மசூதி ராமஜென்ம பூமி வழக்கு தொடர்பான 23 கோப்புகளைக் காணவில்லை என உ.பி. மாநில அரசு அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தி ஆகஸ்டு மாத இறுதிக்குள் அறிக்கை தரும்படி மையப் புலனாய்வுத் துறைக்கு உத்திரவிட்டுள்ளது, அலகாபாத் உயர்நீதி மன்றம். இந்தக் கோப்புகள் எப்பொழுது, எப்படி காணாமல் போயின என்பது கூட "மர்மமாக'த் தான் உள்ளது.

உ.பி.மாநில அரசின் மதக் கலவர தடுப்புப் பிரிவைச் சேர்ந்த சிறப்பு அதிகாரி சுபாஷ் பஹ்ன் சாத், அலுவல் வேலைதொடர்பாக தில்லிக்குச் சென்றுகொண்டிருந்த பொழுது, தில்லியில் உள்ள திலகர் பாலம் தொடர்வண்டிநிலையத்தில் மர்மமான முறையில் இறந்து போனார். சுபாஷ் சாத் இறந்துபோய் ஒன்பது ஆண்டுகள் ஓடிவிட்டன. எனினும், அவர் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டுக் கொல்லப்பட்டாரா அல்லது தடுமாறி விழுந்து இறந்து போனாரா என்பதும் மர்மமாகவே உள்ளது. லிபரான் கமிசன் விசாரணை தொடர்பான விவகாரங்களைக் கவனிக்கும் பொறுப்பு சுபாஷ் சாத்திடம்தான் இருந்துள்ளது என்பதும், அவர் "இறந்து' போன சமயத்தில் மைய அரசில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது காணாமல் போன கோப்புகளை லிபரான் கமிசனிடம் கொடுப்பதற்காக சுபாஷ் எடுத்துச் சென்றதாகக் கூறுகிறது, உ.பி. மாநில அரசு. இது உண்மையென்றால், அந்தக்கோப்புகள் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே "தொலைந்து'போய்விட்டன என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், உ.பி. மாநில அரசோ, லிபரான் கமிசன் தனது அறிக்கையை அளித்த பிறகுதான் கோப்புகள் தொலைந்துபோன விவகாரத்தை வெளியே சொல்லுகிறது. இதனை இவ்வளவுகால தாமதமாக சொல்ல வேண்டிய பின்னணி என்ன என்பதும் மர்மமாக உள்ளது.

லிபரான் கமிசனோ தொலைந்து போய்விட்டதாகக் கூறப்படும் அந்தக் கோப்புகளை அந்தச் சமயத்தில் சுபாஷ் சாத்தை எடுத்துவரச் சொல்லி எந்த உத்தரவும் அளிக்கவில்லை எனக்கூறுகிறது. சுபாஷ் சாத் ஓடும் ரயிலில் இருந்து "விழுந்த' இடத்தைப் புலனாய்வு செய்த டெல்லி போலீசாரோ, "அந்த இடத்தில் சில வெற்றுத் தாள்களையும், அடையாள அட்டைகளையும் தவிர வேறெதுவும் இல்லை'' எனக் கூறிவிட்டனர். சுபாஷ்சாத்தின் தந்தை பிர் பஹ்ன் சாத், தனது மகன் டெல்லிக்குக் கிளம்பிச் சென்றபொழுது தன்னுடன் இத்துணை கோப்புகளை எடுத்துச் சென்றதாகத் தெரியவில்லை எனக் கூறுகிறார். பாபர்மசூதி வளாகத்தினுள் ராமபிரான் ஜெனிக்கவில்லை என்பதை நிரூபிப்பதற்கு அகழ்வராய்ச்சி நடத்தியதைப் போல, இந்தக்"காணாமல்' போன கோப்புகளைக் கண்டுபிடிக்கவும் அகழ்வராய்ச்சி நடத்த வேண்டியிருக்குமோ?

பாபர் மசூதி பிரச்சினையில் முசுலீம்களுக்கு நீதி கிடைத்துவிடக் கூடாது என்பதில் இந்து மதவெறி பாசிசக் கும்பல் குறியாக இருந்து வருவதைப் பாமரர்கள் கூடப் புரிந்து கொள்ளமுடியும். அதே சமயம், தங்களை மதச்சார்பற்றவர்களாகக் கூறிக் கொள்ளும் ஓட்டுக்கட்சிகள் மட்டுமின்றி, சி.பி.ஐ.,போலீசு, நீதித்துறை ஆகிய அரசு உறுப்புகளும் கூட இந்தவழக்கை இத்தனை ஆண்டுகளாக இழுத்தடிக்க வேண்டிய பின்னணி என்ன என்ற கேள்வியை எழுப்பும் பொழுதுதான், மதச்சார்பற்ற இந்திய அரசின் யோக்கியதையைப் புரிந்துகொள்ள முடியும். மதச்சார்பற்ற ஓட்டுக்கட்சிகளின் இரட்டைவேடத்திற்கு எதிராக மட்டுமல்ல; இந்திய அரசின் போலி மதச்சார்பின்மைக்கு எதிராகவும் மக்களைத் திரட்டி போராடினால் மட்டுமே பாபர் மசூதியை இடித்துத் தள்ளிய இந்து மதவெறிபாசிசக் கும்பலைத் தண்டிக்க முடியும்.

· செல்வம்

தேங்க்ஸ் டு :www.tamilcircle.net


கோஷ்டிச் சண்டை முற்றுகிறது! பா.ஜ.க. கனவு நொறுங்குகிறது!

ஒழுங்கும் கட்டுப்பாடும் கொள்கைபிடிப்பும் அர்ப்பணிப்பும் நிறைந்த கட்சி என்றெல்லாம் சித்தரிக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சியில், இன்று கோஷ்டிச் சண்டைகள் புழுத்து நாறுகின்றன. நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியைப் பரிசீலிக்கத் தொடங்கியதிலிருந்தே அக்கட்சிக்குள் கோஷ்டிச் சண்டைகளால் அடுத்தடுத்து பூகம்பம் வெடித்துக் கொண்டிருக்கிறது.

எவ்வளவுதான் மாயத்தோற்றத்தை ஏற்படுத்தினாலும்,பொய்யான நம்பிக்கைகளை ஊட்டினாலும் தீவிரமாகிவிட்ட கோஷ்டிச் சண்டைகளால் அக்கட்சி பலவீனமடைவதைத் தடுக்கவே முடியாது என்கிற நிலைமை நெருங்கிவிட்டது.

பா.ஜ.க.வின் தேர்தல் தோல்விக்குப் பழிபோடப்பட்டு உத்தர்கண்ட் முதல்வர் கந்தூரி அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அருண் ஜேட்லிக்கு நாடாளுமன்ற மேலவையின் பா.ஜ.க. தலைவர் பதவியும், சுஷ்மா சுவராஜுக்கு நாடாளுமன்ற பா.ஜ.க. துணைத் தலைவர் பதவியும் தரக்கூடாது என்று யஷ்வந்த் சின்ஹா,அருண் ஷோரி, ஐஸ்வந்த் சிங் முதலான பழம் பெருச்சாளிகளின் அதிருப்தி கோஷ்ட ிகலகக்கொடி தூக்கியது. அதன் பிறகு, ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்ட தோல்விக்குப் பொறுப்பேற்று, எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு வசுந்தராராஜே சிந்தியாவுக்கு பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டார். இதை ஏற்கமறுத்து வசுந்தரா கோஷ்டி வெளிப்படையாகவே போர்க்கொடி தூக்கியது.

இந்நிலையில், பாகிஸ்தானின் தேசத் தந்தையாகச் சித்தரிக்கப்படும் முகமது அலிஜின்னாவைப் புகழ்ந்து புத்தகம் எழுதியதை வைத்து, பா.ஜ.க. வின் மூத்த தலைவர்களுள் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜஸ்வந்த் சிங் அதிரடியாக அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி ஆகிய இதர மூத்ததலைவர்கள் ஜஸ்வந்த் சிங்குக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.

இதற்கிடையே, 1999ஆம் ஆண்டு இந்திய விமானம் ஆப்கானிஸ்தானிலுள்ள கந்தகாருக்குக் கடத்தப்பட்டு, பயணிகள் மீட்கப்பட்ட விவகாரத்தில், உண்மையில் என்ன நடந்தது என்பதை அத்வானி மறைக்கிறார் என்று வாஜ்பாயியின் வலதுகரமான முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த பிரஜேஷ் மிஸ்ரா பேட்டியளித்தார். முதலில் கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்குக்கு எதிராகக் கிளம்பிய அதிருப்தியாளர்களின் கலகம், இப்போது அத்வானிக்கு எதிராகத் திரும்பியுள்ளது. அத்வானி ஒரு புளுகுணி என்று வெளிப்படையாகக் கேலி செய்தும், அவர் கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்ததால் தான் உட்கட்சிப் பூசல் பெருகியதாகவும் அதிருப்தியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தேர்தல் தோல்வியால் சோர்வடைந்துள்ள கட்சி அணிகளிடம் புது நம்பிக்கையூட்ட செப்டம்பரில் நாடு முழுவதும் ரதயாத்திரை நடத்தப் போவதாக அறிவித்த அத்வானி, தீவிரமாகிவிட்ட உட்கட்சிப் பூசலால் அத்திட்டத்தையே ரத்து செய்துவிட்டார்.

இந்துவெறி பாசிச பயங்கரவாதத் தலைமையகமான ஆர்.எஸ்.எஸ். வேறு; அரசியல் கட்சியான பா.ஜ.க.வேறு என்று ஆடிய நாடகமெல்லாம் முடிவுக்கு வந்து, இப்போது ஆர்.எஸ்.எஸ்.வெளிப்படையாகவே பா.ஜ.க. கோஷ்டிச் சண்டையில் தலையிட்டு சமரசப்படுத்தக் கிளம்பியுள்ளது. பா.ஜ.க.வின் உயிர்நாடியே ஆர்.எஸ்.எஸ்.இடம் இருப்பதால், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நடத்திய கட்டப்பஞ்சாயத்தின்படி, அத்வானி எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகிக் கொள்ள, அப்பொறுப்பில் சுஷ்மா சுவராஜ் நியமிக்கப்படுவார் என்றும்; இவ்வாண்டின் இறுதியில் பா.ஜ.க. தலைவர் பதவிக் காலம் முடிந்து ராஜ்நாத் சிங் விலகியபின், அருண்ஜேட்லி அப்பொறுப்பை ஏற்பார் என்றும் செய்திகள் வந்துள்ளன. இச்சமரசத் தீர்வை இந்துவெறிபாசிசத் தலைமையகத்தின் முடிவை ஏற்று கட்டுப்பாட்டுடன் நடப்பதாக பா.ஜ.க.தலைவர்கள் பசப்பலாம்; ஆனால், பதவிக்கும் அதிகாரத்துக்குமான கோஷ்டிச்சண்டை அக்கட்சிக்குள் ஓயப்போவதில்லை. அத்வானியின் பிரதமர் நாற்காலிக் கனவும் நனவாகப் போவதில்லை.

பாரதிய ஜனதா கட்சி தேர்தல் தோல்விகளாலும், உட்கட்சிப் பூசல்களாலும் பலவீனப்பட்டுக் கிடக்கும் நிலையில், அக்கட்சியை அரசியல் அரங்கிலிருந்தே விரட்டியடிக்க இதுவே சரியான, பொருத்தமான தருணம். இந்துவெறி பாசிசத்தை சித்தாந்தமாகக் கொண்டுள்ள அக்கட்சியின் நாட்டுவிரோத மக்கள்விரோத பொய்கள், சதிகள்,கொலைகள், துரோகங்கள் மற்றும் பாசிச பயங்கரவாத வெறியாட்டங்களை மக்களிடம் அம்பலப்படுத்தவும், பார்ப்பன இந்துவெறி பாசிசம் காலூன்றவே முடியாதபடிமுடமாக்கி அழிக்கவும் இதுவே சரியான தருணம்.

தேங்க்ஸ் டு : www.tamilcircle.net

உன்னைப்போல் ஒருவன் , இந்து தீவிரவாதிகளின் பிரச்சாரபடம்

இந்த படம் வந்ததில் இருந்து அடடா என்ன படம், ஒரு பொது மனிதனின் கோபம் என்ன அழகாக நடித்துள்ளார். என்னே திரைகதை, இசை அதிலும் அபாரம். அப்படி இப்படி என்று ஏகத்திற்கு எழுதி தள்ளுகிறார்கள் நமது வலைஞர்கள்.

இந்த படத்தின் நீதியை நாயகன் விளக்கும் காட்சி, கண்ணுக்கு முன் நடந்த கொடூரங்களும், அந்த கொடூரத்தை நிகழ்த்தியவர்கள் எந்த ஒரு குற்ற உணர்ச்சிகளும் இல்லாமல் சொகுசாக வாழ்கிறார்களே. அவர்களை யார் தான் என்னதான் செய்துவிட முடியும் என்ற கோபம். அப்படி இப்படி என்று எல்லாம் இவர்கள் எழுதுவதை பார்த்தால். என்னே ஒரு இரக்க குணம் இந்த மக்களுக்கு என்று பாராட்ட தோன்றுகிறது.

வெறும் கதையை பார்த்துவிட்டு, அய்யயோ என்று கண்ணீர் வடிக்கும் இந்த கூட்டம் நமது சகோதர்கள் கூட்டம் கூட்டமாக அன்றாடம் மடிந்து கொண்டு இருக்கும் போது. அப்படி எதுவுமே நடக்கவில்லை, புலிகள் செய்வது தீவிரவாதம், பாவம், கொடூரம் என்று எல்லாம் வந்து எங்களது பதிவில் எழுதிவிட்டு சென்றார்கள்.

இந்த படத்தில் நாயகன் செய்ததை தான் விடுதலை புலிகள் இத்தணை ஆண்டுகளாக செய்து வந்தார்கள். ஒரு சில தனி மனிதர்களது கோபம், ஆற்றாமை ஒன்று கூடி எதிர்க்கும் வலிமையாக மாற்றம் பெற்றது.

இந்தியாவில் இசுலாமிய சகோதர்களுக்கு எதிப்பு என்றால் ஆமாம் அவர்களை எல்லம் கொல்ல வேண்டும் என்று கண்களை கட்டிக்கொண்டு ஆதரவு தெரிவிப்பதும். அவர்களால் விளைந்தது மட்டும் தான் தீவிரவாதம் என்றும், மற்றவர்களால் வருவது எல்லாம் தக்காளி சாரு என்று எண்ணும் உங்கள் எண்ணத்தை என்ன என்று சொல்ல.............

எங்கே இந்த படத்தை பிரகாசு ராசை வைத்து எடுத்தால் எதிர்ப்பு கிளம்புமோ என்ற பயத்தில் கமலகாசனை வைத்து எடுத்துள்ளார்கள். மற்ற நடிகர்கள் செய்தால் அது நாட்டு துரோகம், ஆனால் கமலகாசன் செய்தால் அது கலைபடைப்பு ஆகுமே.

கர்னாடகத்தில் பசக ஆட்சியை பிடித்தாகிவிட்டது, ஆகையால் அவர்களுக்கு எல்லாம் பாடம் தேவை இல்லை, ஆனால் தமிழகமும், ஆந்திரமும் அடுத்த கட்ட தலைவர்களை தேடி அலையும் காலம் இது. இப்போது ஏற்றினால் தான் இந்த தீவிரவாதம் போதை அவர்களுக்கு தலைக்கு நேராக ஏறும் என்று கமலகாசனின் முகமூடியில் வைத்து பசக கொடுத்துள்ளது போலும்.

கே ராமில் கமலகாசன் கல்கத்தாவில் நடந்த கலவரத்தை காட்டி காசு செய்யவும், மத உணர்வுகளை தூண்டவும் நினைத்து அந்த படம் அப்படி இப்படி என்று எல்லாம் பேசப்பட்டது. ஆனால், அன்றைக்கு கதையின் தலைவனாக சொன்ன பாடம் ஏற்க தமிழக மக்கள் மறுத்துவிட்டார்கள். ஆனால் இன்றைக்கோ கிட்டத்தட்ட விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் வீர வணக்க நாளான்று விடுக்கு முறையீடுக்கு இணையாக கமலகாசன் முறையீடுகளை செய்துள்ளார்.

விடுதலை புலிகளுக்கு ஆதரவு என்று ஒரு புறம் தெரிந்தாலும், இந்தியர்களுக்குள் சண்டை மூட்டி அதன் மூலம் தெற்கில், தமிழகம்,ஆந்திரம் என்று ஆட்சியை கைகொள்ளும் கள்ள முயற்சியாகத்தான் இந்த படம் தோன்றுகிறது.

தமிழர்களுக்கு இந்த தீவிரவாத பெத்தடின் போதை அவ்வளவு எளிதில் ஏறிவிடுவது இல்லை தான், அதற்காக இப்படியா கொள்ளை கொள்ளையாக கொண்டு வந்து ஏற்றுவது...................

உன்னைப்போல் ஒருவன் , இந்து தீவிரவாதிகளின் பிரச்சாரபடம். எப்படி தடைவிதிக்காமல் விட்டார்கள் என்று தெரியவில்லை.

தேங்க்ஸ் to : பனிமலர்

Thursday, September 17, 2009

சட்டீஸ்கர், ஒரிசாவில் நக்சல்கள் வசம் 40,000 சதுர கிமீ!

Naxalites

டெல்லி: சட்டீஸ்கர், ஒரிசா, ஜார்க்கண்ட் மாநில காட்டு பகுதிகளில் சுமார் 40 ஆயிரம் சதுர கிமீ., நக்சல்கள் வசம் இருப்பதாகவும், அவை அரசு கட்டுப்பாட்டில் இல்லை எனவும் உள்துறை அமைச்சகம் நாடாளுமன்ற நிலை குழுவிடம் தெரிவித்துள்ளது.

நக்சல்கள் தான் இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு அச்சுறுத்தல் என பிரதமர் மன்மோகன் பேசிய மறுநாளே இந்த தகவல் வெளியாகியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இந்நிலையில் நேற்று நடந்த நாடாளுமன்ற நிலை குழு கூட்டத்தில் இந்த பிரச்சனை விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்பட்டது. பாஜக தலைவர் நாயுடு தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரிகள் உள்நாட்டு பாதுகாப்பு [^] மற்றும் நக்சல் நச்சுறுத்தல் குறித்து அறிக்கை வழங்கினர்.

கூட்டத்தில் உள்துறை செயலாளர் ஜிகே பிள்ளை கூறுகையில்,

மாவோயிஸ்ட் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளனர். அவர்கள் வேகமாக பரவி வருகின்றனர். இவர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

முன்னதாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இந்தியாவில் உள்ள 223 மாவட்டங்கள் மற்றும் 2 ஆயிரம் காவல் நிலையம் இருக்கும் பகுதிகளில் நக்சல்களின் ஆதிக்கம் காணப்படுவதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.