Tuesday, April 7, 2009

பாதிரியார் மீது கட்டாய மதமாற்றம்-ரூ.5 கோடி மோசடி புகார்

சென்னை: சென்னையில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்தி ரூ. 5 கோடி வரை மோசடி செய்தது, கட்டாய மதமாற்ற்த்தில் ஈடுபட்டது போன்ற குற்றங்கள் புரிந்ததாக பாதிரியார் ஒருவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணாசாலை மற்றும் தியாகராய நகரில் பாதிரியார் ஸ்டீபன் லூயிஸ் என்பவர் வேலை வாய்ப்பு அலுவலகம் நடத்தி வந்தார். அதன்மூலம் வெளிநாட்டு வேலை வாய்ப்பு வாங்கி தரப்படும் என விளம்பர செய்திருந்தார்.

இதை பார்த்த சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சண்முகவேல் என்பவர் தனது இரு மகன்கள் சுகுமாறன், சுரேஷ்குமார் ஆகியோருக்கு வெளி நாட்டில் வேலை வாங்கி தரும்படி கேட்டுள்ளார்.

அப்போது பாதிரியார் ஒரு நபருக்கு ரூ 2 லட்சம் கொடுத்தால் பைபிள் மெடிலின் என்ற அறக்கட்டளை மூலம் இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகளில் ஒன்றில் வேலை வாங்கிவிடலாம் என கூறியுள்ளார்.

இதையடுத்து சண்முகவேல் ரூ. 4 லட்சத்தை பல தவணைகளில் அவரிடம் கொடுத்துள்ளர். அதற்கு ஒரு ரசீதும் தந்துள்ளார். பணம் முழுமையாக கொடுத்து பல மாதங்கள் ஆகியும் அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. அதற்கான அறிகுறியும் தெரியவில்லை.

இதையடுத்து சண்முகவேல் பாதிரியாரிடம் சென்று முறையிட்டுள்ளார். அப்போது பாதிரியார் நீங்கள் கிறிஸ்துவர்களாக மாறினால், எளிதாக வேலை கிடைத்துவிடும் என கூறியுள்ளார். ஏற்கனவே அவர் வசம் ரூ. 4 லட்சம் கொடுத்திருப்பதால் அவர்களும் வேறு வழியில்லாமல் மதம் மாறியுள்ளனர்.

ஆனாலும், அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. தொடர்ந்து அவரிடம் சண்முகவேல் வற்புறுத்த, அவர் பணத்தை திருப்பி பெற்றுகொள்ளுங்கள் போலி செக் கொடுத்தார். மீண்டும் அவரை சென்று பார்த்த போது தனக்கு பெரிய புள்ளிகளை தெரியும் இனியும் இங்கு வந்தால் கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதையடுத்து பாதிரியார் மீது பண செய்தது, மதமாற்றம் செய்தது, போலி செக் கொடுத்தது ஆகிய புகார்களுடன் சென்னை போலீஸ் கமிஷ்னர் ராதாகிருஷ்ணனை அணுகினார் சண்முகவேல்.

இவரை போல மேலும் பலரும் மோசடி பாதிரியார் மீது புகார் கொடுத்துள்ளனர். அவர் மொத்தம் ரூ. 5 கோடி வரை மோசடி செய்திருக்கலாம் என தெரிகிறது.

இதையடுத்து போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

No comments: