Wednesday, August 18, 2010

குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.-இன் பங்கு: வெளிச்சத்துக்கு வரும் புதிய ஆதாரங்கள்




மகாராஷ்டிராவில் மாலேகான், மத்தியப் பிரதேசத்தில் அஜ்மீர், ஆந்திராவில் ஹைதராபாத் மெக்கா மசூதி, கோவாவில் மார்காவோ ஆகிய இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகள் இந்து மதவெறி பயங்கரவாதிகளின் கைங்கர்யம் என்ற உண்மை அம்பலமாகி, இப்பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்திய ‘எழுச்சி கொண்ட இந்துக்கள்’ சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்குண்டு வெடிப்புகளுக்கும் ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார அமைப்புகளுக்கும் தொடர்பில்லை எனக் காட்டிக் கொள்வதற்காக, இக்குற்றவாளிகள் தங்களைத் தனி அமைப்புகளாக – அபிநவ் பாரத், சனாதன் சன்ஸ்தான், இந்து ஜாக்ருதி சமிதி என்ற பெயர்களில் அடையாளப்படுத்திக் கொண்டனர்.

எனினும், ஹெட்லைன்ஸ் டுடே என்ற தனியார் ஆங்கிலத் தொலைக்காட்சி நிறுவனம், இக்குற்றவாளிகளுக்கும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கும் இடையே நடந்த இரகசிய உரையாடல்களை ஒலி-ஒளி பரப்பியிருப்பதும்; இக்குண்டு வெடிப்புகளோடு தொடர்புடைய குற்றவாளிகள் தமக்குள் நடத்திய உரையாடல்கள் மற்றும் இக்குண்டுவெடிப்புகள் தொடர்பாக போலீசாரிடம் உள்ள சாட்சியங்களை தெகல்கா இதழ் (31 ஜூலை, 2010) வெளியிட்டிருப்பதும் இக்குண்டு வெடிப்புகளை நடத்திய குற்றவாளிகளுக்கும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுக்கும் நேரடித் தொடர்பிருப்பதையும் வேறு பல பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்துவது பற்றி அவர்கள் விவாதித்திருப்பதையும் அம்பலப்படுத்தியுள்ளன.

‘‘ஹெட்லைன்ஸ் டுடே” ஒளிபரப்பிய ஒளி-ஒலிப்பேழை ஒன்றில் மாலேகான் குண்டு வெடிப்பு தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள தயானந்த பாண்டே என்ற இந்துச் சாமியார், இந்திய இராணுவத்தில் லெப்டினென்ட் கர்னலாகப் பணியாற்றிக் கொண்டே மாலேகான் குண்டு வெடிப்பை நடத்தியவரான புரோகித், ஆர்.எஸ்.எஸ்.-இன் தீவிர ஆதரவாளரும் பா.ஜ.க.-வின் முன்னாள் கிழக்கு தில்லி நாடாளுமன்ற உறுப்பினருமான பி.எல்.சர்மா ஆகிய மூவரும் முசுலீம்கள் வசிக்கும் பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவது பற்றி விவாதிக்கின்றனர்.

மற்றொரு ஒலிப்பேழையில், தயானந்த பாண்டேயும், ஆர்.பி. சிங் என்ற மருத்துவரும் துணை அரசுத் தலைவர் ஹமித் அன்சாரியைக் கொல்லும் திட்டம் பற்றி விவாதிக்கின்றனர்.
அத்தொலைக்காட்சி ஒலிபரப்பிய இன்னொரு ஒலிப்பேழையில், அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் காலஞ்சென்ற ஆர்.எஸ்.எஸ். ஊழியர் சுனில் ஜோஷி என்பவன், ஆர்.எஸ்.எஸ்.-இன் சியச் செயல் கமிட்டி உறுப்பினரான இந்திரேஷ் குமாரிடம் அக்குண்டு வெடிப்பு நடத்தப்பட்ட விதம் குறித்து விளக்கியுள்ளான்.

துணைக் அரசுத்தலைவரை கொல்லத் திட்டம் போட்ட ஆர்.பி.சிங்கிற்கும் விஷ்வ இந்து பரிசத் தலைவர் அசோக் சிங்காலுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதையும்; மாலேகான் குண்டு வெடிப்பை நடத்திய அபிநவ் பாரத் அமைப்பிற்கும் புனேவைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்.-இன் உயர்மட்டத் தலைவர்களுள் ஒருவரான ஷியாம் ஆப்தேவிற்கு இடையில் நெருக்கமான உறவு இருந்து வந்ததையும்; விஷ்வ இந்து பரிஷத்தின் முக்கியத் தலைவரான பிரவீன் தொகாடியா அபிநவ் பாரத் அமைப்பிற்கு ஒரு இலட்ச ரூபா நன்கொடை அளித்திருப்பதையும் தெகல்கா இதழ் வெளியிட்டுள்ள ஒலிப்பேழை உரையாடல்கள் அம்பலப்படுத்தியுள்ளன.

இவை ஒருபுறமிருக்க, இந்தியா பாகிஸ்தான் இடையே சென்றுவரும் சம்ஜௌதா விரைவுத் தொடர்வண்டியில் நடந்த குண்டுவெடிப்புகூட இந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலாக இருக்கும் என்றும்; சந்தீப் டாங்கே மற்றும் ராம்ஜி என்ற இரு ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களுக்கு இக்குண்டு வெடிப்பில் நேரடியாகத் தொடர்பிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பில் தொடர்புடைய குற்றவாளியான தேவேந்திர குப்தாவிற்கு உத்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள கான்பூர் நகர ஆர்.எஸ்.எஸ். கிளைத் தலைவரான அசோக் வார்ஷ்னேயும், ஆர்.எஸ்.எஸ். இன் தேசிய செயல் கமிட்டி உறுப்பினரான அசோக் பேரியும்தான் அடைக்கலம் கொடுத்துள்ளனர். சங்கப் பரிவார அமைப்புகளுள் ஒன்றான பஜ்ரங் தள் சட்ட விரோதமாகக் குண்டு தயாரிக்கும் வேலைகளைச் செய்து வருவது கான்பூரிலும் நான்டேட்டிலும் நடந்த குண்டு வெடிப்புகளின்போதே அம்பலமாகியிருக்கிறது.

மாலேகான் குண்டு வெடிப்பை நடத்திய கும்பல்தான் மகாராஷ்டிராவிலுள்ள ஜல்னா, பர்பானி, நான்டேட் ஆகிய இடங்களிலும் குண்டு வெடிப்புகளை நடத்தியிருப்பதும் புலனாவில் நிரூபணமாகியுள்ளதால், அக்கும்பல் மீதான வழக்குகளை வழக்கமான இந்தியக் குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்காமல், பொடாவுக்கு இணையான மகாராஷ்டிரா குற்றக் கும்பல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்குமாறு மும்பை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல்களில் பங்குகொண்டு அதிகாரத்தைப் பிடித்து மேலிருந்து இந்து மதவெறித் திட்டங்களை நிறைவேற்ற பா.ஜ.க.; கீழிலிருந்து இந்து மதவெறித் திட்டங்களை நடைமுறைப்படுத்த பஜ்ரங் தள், விஷ்வ இந்து பரிசத் போன்ற அமைப்புகளை இயக்கி வரும் ஆர்.எஸ்.எஸ்., நாடெங்கும் குண்டு வெடிப்புகளை நடத்துவதற்காகவே அபிநவ் பாரத், சனாதன் சன்ஸ்தான் போன்ற அமைப்புகளைத் தமது தலைவர்கள் மூலம் இரகசியாக இயக்கி வருகிறது என்றுதான் இவ்வுண்மைகள் மூலம் முடிவுக்கு வர முடியும்.

எனினும் கடந்த பத்தாண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். இன் ஆசீர்வாதத்தோடு நடந்துள்ள இக்குண்டு வெடிப்புகள் குறித்து போலீசார் ஒருங்கிணைத்த முறையில் விசாரணை நடத்த மறுக்கிறார்கள். மாலேகான் குண்டு வெடிப்பு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இந்து மதவெறியர்களை விசாரணை செய்த பொழுதே, அஜ்மீர், ஹைதராபாத் குண்டு வெடிப்புகளுக்கும் இந்து மதவெறி பயங்கரவாத அமைப்புகள்தான் காரணம் என்பது அம்பலமாகிவிட்டது.

ஆனாலும், மிகத் தாமதமாகத்தான் அக்குண்டு வெடிப்புகளை நடத்திய சதிகாரர்கள் கைது செய்யப்பட்டனர். அதேசமயம், இக்குண்டு வெடிப்புகளின் சூத்திரதாரியாகக் கருதப்படும் ஆர்.எஸ்.எஸ்.-ஐச் சேர்ந்த இராம்நாராயணன் கல்சங்கரா, சுவாமி அசிமானந்தா ஆகியோர் இன்னும் சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்றனர்.

அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பின் முக்கிய குற்றவாளியான சுனில் கோஷி மர்மமான முறையில் கொல்லப்பட்டு விட்டான். குண்டுவெடிப்பு பற்றிய உண்மைகளை மூடிமறைப்பதற்காக ஆர்.எஸ்.எஸ்.குண்டர்கள் அவனை கொன்றிருக்கலாம் எனப் பரவலாக நம்பப்படும் பொழுது, போலீசாரோ “சிமி” அமைப்புதான் அக்கொலையைச் செய்ததாகக் கூறிவருகிறார்கள்.
சம்ஜௌதா விரைவுத் தொடர்வண்டியில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணை வேண்டுமென்றே தாமதப்படுத்தப்படுகிறது.

அபிநவ் பாரத் அமைப்போடு தொடர்பு வைத்துள்ள பல இராணுவ அதிகாரிகள், போலீசு அதிகாரிகள் பற்றிய விவரங்கள் புலன் விசாரணையில் அம்பலமானாலும் அவர்களுள் ஒருவர்கூட விசாரணைக்கு அழைக்கப்படவில்லை.

குண்டு வெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்-ஐத் தொடர்புபடுத்தும் ஆதாரங்கள் கிடைத்தால், மத்தியப் புலனாவுத் துறையைச் சேர்ந்த பார்ப்பன அதிகார வர்க்கம் விசாரணையை அப்படியே அமுக்கிவிடுவதாக அம்பலப்படுத்தியிருக்கிறார், மகாராஷ்டிரா மாநில முன்னாள் போலீசு தலைவர் எஸ்.எம்.முஷ்ரிஃப்.

இந்திய அரசு இந்து மதவெறி பாசத்தோடுதான் இருந்து வருகிறது என்பதற்கான ஆதாரங்கள் இவை. இந்தியாவில் குண்டு வெடிப்புகளை நடத்தி வரும் முசுலீம் பயங்கரவாதிகளுக்குக் கிடைக்காத சாதகமான அம்சம் இது.
__________________________________
- புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2010

Saturday, August 7, 2010

ஹெட் & ஷோல்டர் ஷாம்புக்குத் தடை!


உயிர்க் கொல்லியான கொடிய புற்று நோயை தோற்றுவிக்கக் கூடிய இரசாயனக் கலவை சேர்க்கப் பட்டிருப்பதை கண்டுபிடித்ததைத் தொடர்ந்து ஹெட் & ஷோல்டர் நிறுவனத்தின் இரண்டு உற்பத்தி பொருட்களுக்கு கத்தார் அரசாங்கம் தடைவிதித் துள்ளது. அத்துடன் இந்த தடை தற்காலிகமானதல்ல, அது நீடிக்கும் என்றும் கத்தார் சுற்றுச் சூழல் அமைச்சக ஆய்வுக் கூட பிரிவின் தலைமை அதிகாரி டாக்டர். ஸைஃப் அல் குவைரி தெளிவுபட கூறியுள்ளார்.

ப்ராக்டர் அண்டு கேம்பிள் நிறுவன தயாரிப்பான இருவகை ஹெட் & ஷோல்டர் ஷாம்பூக்களில் புற்று நோயை உண்டு பண்ணக் கூடிய “டயோக்சைடு” எனும் இரசாயனப் பொருள் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் தான் கத்தார் நாட்டு அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண் டுள்ளது.

அழகு சாதனங்களின் மீதான மக்களின் மோகத்தை மூலதன மாக்கி நுகர்வோரை ஈர்க்கும் நோக்கில், சகல விதமான தார்மீக நெறிமுறைகளையும் மீறி & அபாய கரமான பின்விளைவுகளை பற்றிக் கூட கிஞ்சிற்றும் கவலைப் படாமல்தான் பெரும்பாலான இத்தகைய உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளை கவர்ச் சிகரமான விளம்பரங்களுடன் சந்தைப்படுத்தி வருகின்றன.

விளக்கை நோக்கி பாய்ந்து வீழ் ந்து மடியும் விட்டில்களைப் போல, மக்கள் அழகு மோகத்தால் இயற்கை அழகையும் ஆரோக்கியத்தையும் கெடுத்து பாழ்படுத்திக் கொள்வதுடன் கொடிய நோய்களுக்கும் ஆட்பட்டு வருகின்றனர்.

மக்கள் நலனில் அக்கறை காட்டாத அரசாங்கங்களும், அதிகாரிகளும் யார் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்கிற போக்கில் தங்களின் வருவாயில் மட்டுமே குறியாக உள்ளனர்.

எதிர்பாராத வகையில் ஏதேனும் திடீர் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் ஒழிய இத்தகைய மென்விஷப் பொருட்களின் உற்பத்தி & வினியோகம் & பயன்பாடு பற்றியெல்லாம் எவரும் கவலைப்படுவதில்லை என்பதுதான் வேதனைக்குரிய விஷயமாகும்.

எனவே, சமூக நலனில் அக்கறை உள்ளவர்கள் இதுபோன்ற விஷயங்களிலும் கவனம் செலுத்தி மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்ட வேண்டும், மக்களும் விழிப்படைய வேண்டும்.

நீதிக்குத் தண்டனை?

ஊழல் எதிர்ப்புக்கும், உறுதிக்கும் பேர்போன ஐ.ஏ.எஸ் அதிகாரியான உமாசங்கரைத் தமிழக அரசு இடைநீக்கம்(சஸ்பெண்ட்) செய்துள்ளது. இது தமிழக மக்களையும், குறிப்பாக தலித் சமுதாய மக்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது.
உமாசங்கர் ஐ.ஏ.எஸ்&ஸை ஆதரித்தும் தமிழக அரசைச் கண்டித்தும் தமிழகமெங்கும் (தலித்அமைப்புகளால்) சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

ஊழல் எதிர்ப்பால் தமிழக மக்களின் உள்ளத்தில் இடம்பிடித்த உமாசங்கர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக் காரணம் என்ன?

அவரது சாதித் சான்றிதழில் கோளாறு இருப்பதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. உமாசங்க்ர் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகத் தேர்வு பெற்று 28 ஆண்டுகளுக்குப் பிறகு அரசாங்கம் இந்த அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது. இதைவிட வெட்கக் கேடு வேறென்ன இருக்க முடியும்?

பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் போலி மதிப்பெண் அட்டை தயாரித்தவர்களை உடனே பிடித்து விடுகிற அரசு, போலிச் சாதிச் சான்றிதழ் கொடுத்து ஒருவர் 28 ஆண்டுகள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாகப் பணியாற்றியதாகக் கூறுகிறது.

யாரேனும் இதை நம்புவார்களா? ஊழல் எதிர்ப்பு அதிகாரியாக அறியப்படும் உமாசங்கரை திடீரென்று பதவி நீக்கம் செய்ய வேண்டிய அவசியம் என்ன?
அதிமுக ஆட்சியில் சுடுகாடுகளுக்கு கூரை அமைப்பதில் மிகப்பெரிய ஊழல் நடந்ததை வெளிக் கொண்டு வந்தார் உமாசங்கர் ஐ.ஏ.எஸ். இந்த நடவடிக்கையின் மூலம் தான் உமாசங்கரின் பெயர் தமிழக மக்களிடையே பிரபலமானது.

ஜெ.ஆட்சியில் தொட்டில் முதல் சுடுகாடு வரை ஊழல் என்று கலைஞர் முழங்கினார். திமுக தனது பிரச்சாரத்திற்கு சுடுகாட்டுக் கூரை ஊழலைத்தான் முதன்மைத் தலைப்பாகக் கொண்டு அன்று முரசொலித்தது. அந்த ஊழலின் நாயகராக அடையாளம் காணப்பட்ட சேலத்துப் பறவை செல்வகணபதி, இன்று திமுக என்ற வெளிப்பறவைகளின் வேடந்தாங்கலில் அடைக்கலமாகி, திமுகவின் மாநிலங்களவை உறுப்பினராகவும் வேடந்தாங்குகிறது.

அன்று ஊழல் செய்த செல்வகணபதிக்கு இன்று மாநிலங்களவை உறுப்பினர் பதவி. ஊழலைக் கண்டுபிடித்த உமாசங்கருக்கு இன்று பதவி நீக்கத் தண்டனை மற்றும் விசாரணை...

ஆசை வெட்கமறியாது என்ற பழமொழிக்கேற்ப ஆட்சியிலிருப் பவர்கள் ஊழலில் திளைக்க, ஆத்திரம் நியாயம் அறியாது என்ற புதுமொழிப் படைக்க, நேர்மையான அதிகாரியைப் பதவி நீக்கம் செய்து விசாரணையும் நடத்துகிறார்கள்.

உண்மையில் இதன் பின்னணி என்ன? கடந்தகால அதிமுக ஆட்சியில், கேபிள் டி.வி தொழிலை அரசு உடமையாக்க சட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.

நாட்டில் என்ன பிரளயம் ஏற்பட்டாலும் அதற்காக ஆளுநரைச் சென்று சந்திக்காத கலைஞர் தனது நண்பரும், தமிழக ஆளுநருமான சுர்ஜித்சிங் பர்னாலாவை ஆளுநர் மாளிகைக்கே சென்று சந்தித்து, கேபிள் டி.வியை அரசு உடமையாக்கும் சட்டத்திற்கு ஒப்புதல் தரக்கூடாது என மன்றாடி வந்தார்.

2006&ல் ஆட்சி மாற்றம், தயாநிதி மாறன் தாத்தா கலைஞரை நிழலாய் தொடரும் காட்சிகள், கலைஞருக்கு அடுத்து தயாநிதிதான் கட்சி வாரிசு என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சன் டி.வியில் செய்திகள், நிகழ்ச்சிகள்.

முன்னாள் அமைச்சரும், நடிகர் சரத்குமாரின் மைத்துனருமான கே.பி. கந்தசாமியின் தினகரன் குழுமத்தை சன் குழுமம் விலைக்கு வாங்குகிறது. இதனால் கோபமடைந்த சரத்குமார் திமுக&வை விட்டு விலகல். தினகரனின் அதிரடிக் கருத்துக் கணிப்புகள். அதன் உச்சகட்டமாக கருணாநிதியின் அரசியல் வாரிசு யார் என்ற கருத்துக் கணிப்பில் மு.க.அழகிரிக்கு 2% ஆதரவு மட்டுமே என்று முடிவு வெளியாகிறது.

அழகிரியின் கோபப்பார்வையில் மதுரை தினகரன் அலுவலகம் எரிகிறது. 3 உயிர்கள் பலியாகின்றன. சிலப்பதிகாரக் கதையில் எரிந்த மதுரை, அதிகாரப்போட்டியால் நிஜமாகவே எரிகிறது.

கடமை செய்ய வேண்டிய காவல்துறை கைகட்டி நிற்கிறது.

அழகிரியின் அதிரடிகளால் ஆத்திரமடைந்த மாறன் சகோதரர்கள், சன்.டிவியின் மூலமும், தினகரன், குங்குமம் பத்திரிகைகள் மூலமும் தங்கள் பலத்தைக் காட்டுகிறார்கள். சன்.டிவியில் ஜெ.சம்பந்தப்பட்ட செய்திகள் முக்கிய இடம் பிடிக்கின்றன.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சூளுரைகளையும் கருணாநிதியின் கொட்டத்தை அடக்குவேன் என்ற சபதங்களையும் சன்.டிவி நேரடி ஒளிபரப்புச் செய்தது. இதனால் கடுப்பான திமுக கழக உடன்பிறப்புகள் கொந்தளிக்க, அறிவாலயத்திலிருந்து சன்.டிவி வெளியேற்றப்பட்டு, இப்போதுள்ள மந்தைவெளி அலுவலகத்திற்கு வருகிறது.

சன்.டிவியின் முக்கியப் பணியாளர்களை வலைவீசி இழுத்து கலைஞர் டிவி உதயமாகிறது. எஸ்.சி.வி எனப்படும் சுமங்கலி கேபிள் விஷன் தான் சன்குழுமத்தின் பெரும்பலத்திற்கு அடிப்படையானது.

அறிவாலயக் கட்டடத்தை சன்.டிவி&யினர் சேதப்படுத்தி விட்டு சென்றதாக கலைஞர் குற்றம்சாட்டுகிறார் எஸ்.சி.வி&யை பகைத்துக் கொண்டால் எந்த டிவியும் இயங்கமுடியாது என்ற அளவுக்கு, எஸ்.சி.வி&யின் அதிகாரம் கொடிகட்டிப்பறக்கிறது. இதற்கு முடிவுகட்ட, ஜெ.ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட திட்டம் தூசு தட்டி எடுக்கப்பட்டு அரசு கேபிள் டி.வி ஆரம்பிக்கப்படுகிறது. உமாசங்கர் அதற்கு பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். இவர் ஏற்கனவே திருவாரூர் ஆட்சியராக நியமிக்கப்பட்ட போது இந்தியாவின் முதல் கணினிமயமான மாவட்டமாக திருவாரூரை உருவாக்கினார். கலைஞருக்குக் செல்லமான அதிகாரி என்றும் அழைக்கப்பட்டார். கலைஞரின் சொந்த ஊரான திருவாரூரில் தொடர்ந்து திறம்பட பணி செய்தார்.

அதேபோல அரசு கேபிள் டி.வியை திறம்பட செயலாற்றச் சிறந்த முயற்சிகளை உமாசங்கர் முன்னெடுக்கிறார். மாறன் குடும்பம் மட்டும் உண்டு கொழிக்கும் பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாயை, அரசாங்கத்திற்குக் கிடைக்கக் செய்ய உமாசங்கர் அரும்பாடு பட்டார். இதனால் மாறன் சகோதரர்களின் மகா கோபத்திற்கு ஆளானார்.

காட்சிகள் மாறின, மாறன் குடும்பம், கலைஞர் குடும்பத்திற்கிடையே சமசரம் பேசப்பட்டு, உரியவர்களுக்கு உரியது கொடுத்து, ஆவேசங்கள் தணிக்கப்பட்டன.

இதயம் இனித்தது, கண்கள் பனித்தன, குடும்பம் இணைந்தது என கலைஞர் அறிக்கை எழுதினார். குடும்பம் ஒன்று சேர்ந்த பிறகு, சன்.டிவிக்குப் போட்டியாகத் துவங்கப்பட்ட கலைஞர் டிவி இழுத்து மூடப்படவில்லை.

கலைஞர் டிவி வருமானம், சன்.டிவி வருமானம், இவற்றின் கிளை அலைவரிசைகள் தரும் பெரும் வருமானங்கள் எல்லாம், கலைஞர் குடும்பத்தின் சொத்துக் கணக்கை உலகப்பணக்காரர்கள் வரிசையில் உயர்த்திச் செல்கின்றன.

அதேநேரம், அரசு கேபிள் டிவி நிறுவனத்தைப் பலிகொடுத்து மாறன் குடும்பத்தை குளுமைப்படுத்த முடிவெடுக்கப்படுகிறது.

இதற்கு உமாசங்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 1 கோடிக்கும் மேற்பட்ட கேபிள் இணைப்புகள் உள்ளன. ஓர் இணைப்புக்கு நூறு ரூபாய் என்றால், 1 கோடி இணைப்புக்கு மாத வருமானம் 100 கோடி ரூபாய், ஆண்டுக்கு 120 கோடி ரூபாய் வருமானம். அரசுக்கு வரவேண்டிய இந்த வருவாய் ஒரு குடும்பத்திற்குப் போவது கூடாது என்று குரல் கொடுத்தார் உமாசங்கர். உடனே அவரது சாதிச் சான்றிதழில் கோளாறு கண்டு பிடிக்கப்பட்டு விட்டது.

உமாசங்கர் சுடுகாட்டு ஊழலைக் கண்டுபிடித்தபோது, திமுகவுக்கு அது இனித்தது. அரசுக்கு வரவேண்டிய வருவாய் ஒரு குடும்பத்திற்கு மட்டும் போகக் கூடாது என்று எதிர்ப்புக்குரல் கொடுத்தால் கசக்கிறது.

உடனே பணி இடைநீக்கம், விசாரணை, சாதிச் சான்றிதழில் கோளாறு கண்டுபிடிப்பு...

தலித் சம்பந்தி எனப் பெருமைப்படும் கலைஞர், தலித் சமுதாயத்தால் கொண்டாடப்படும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியைப் பழிவாங்குவது, பெரும் எதிர்ப்பலைகளை உண்டாக்கியிருக்கிறது.

Monday, August 2, 2010

காவி பயங்கரவாதம்

சமீபத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகள் அனைத்திலும் சங்பரிவார் சக்திகள் பின்னணியில் இருப்பதாக நாட்டிலுள்ள நடுநிலையாளர்களும் சமூக நல ஆர்வலர்களும் தொடர்ந்து கூறிவருகின்ற நிலையில் அது தொடர்ந்து அலட்சியப்படுத்தப்பட்டு வருகிறது.

பகிரங்கமாகவே 'பாபரி மஸ்ஜித்தை இடிக்க கரசேவகர்களை நாங்கள் அனுப்பினோம் அதற்காக பெருமைப்படுகிறோம் எனக் கூறினார் சிவசேனாத் தலைவர் பால் தாக்கரே.

பாசிஸ குண்டர்களுக்கு திரிசூலம் வழங்கும் விழாவை பகிரங்கமாக நடத்தி திரிசூலத்தின் முதல் சூலம் முஸ்லிம்களையும்இ இரண்டாவது சூலம் கிறித்தவர்களையும்இ மூன்றாவது சூலம் மதசார்பின்மை பேசும் ஹிந்துக்களையும் குத்திக்கிழிக்கும் என வெளிப்படையாகவே வெறித்தன அறிக்கை வெளியிட்டவர் விஸ்வஹிந்து பரிஷத்தின் பிரவீண் தொகாடியா.

இதைப்போன்றே பல எடுத்துக்காட்டுகளை கூறிக்கொண்டே போகலாம். இவையெல்லாம் நாடும் ஏடும் அறிந்த ஒன்றுதான். இவையெல்லாம் பகிரங்கமான வெளிப்படையான பேச்சாக இருந்தும் இதற்காக பாசிஸ சக்திகள் மீது எந்த சட்டமும் பாயவில்லை. 3000 மக்களைக் கொன்ற நரவேட்டை நரேந்திரமோடி மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை.

இதைவிடக் கொடுமை என்னவெனில் பாசிஸசக்திகளின் வாக்கு மூலங்களை நேரடியாக அம்பலப்படுத்தியது தெஹல்கா செய்தி ஏடு. 2007-ம் ஆண்டு தெஹல்கா செய்தி ஏடு குஜராத் கொடூரர்களின் கோர முகத்தை அம்பலப்படுத்தியது. முஸ்லிம் பெண்கள் பழம் போல் இருந்தார்கள் அவர்களை ருசித்து சுவைத்தோம். பள்ளிவாசல்களை பெட்ரோல் டாங்கர்களால் தாக்கி நொறுக்கினோம். இஹ்சான் ஜாஃப்ரியைக் கொன்ற பின்னர் மகாராஜாவைப் போல் உணர்ந்தேன் என்றனர்.

கர்ப்பிணி கவுசர் பீவியை வயிற்றில் சூலாயுதத்தால் குத்திக்கிழித்த கொடூரர்கள் அளித்த வாக்குமூலங்கள் வீடியோ ஆதாரங்களாக தெஹல்கா அம்பலப்படுத்தியும் கூட இந்நாட்டின் நீதி பரிபாலனம் பேணும் அமைப்புகள் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

படுகொலைகள் நடைபெற்றபோது முதலமைச்சர் நரேந்திரமோடி கொலையாளிகளை உற்சாகப்படுத்த சம்பவ இடத்திற்கே வந்ததையும் அவருக்கு பெண்கள் மாலை சூட்டி வரவேற்றதையும் கொலையாளிகள் காமிரா முன் வாக்கு மூலங்களாக தெரிவித்தனர்.

ஆனாலும் இன்றுவரை அந்தக் கொலையாளிகள் மீதோ பாதகத்தை தூண்டியவர்கள் மீதோ எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வில்லை.

பாசிஸவாதிகள் தங்கள் மீது நடவடிக்கை எடுக்க யாருக்கும் துணிச்சல் இல்லை? யாரால் நம்மை என்ன செய்துவிட முடியும்? என்ற ஆணவத்தில் தங்கள் கொடூரங்களை இன்றுவரை தொடர்ந்து வருகின்றனர்.

சமீபகால குண்டுவெடிப்புகளில் சங்பரிவார் கும்பல்களின் தொடர்புகள் சந்தேகமின்றி ஆதாரப் பூர்வமாக ஆவணப்பூர்வமாக ஹெட்லைன்ஸ் செய்தித் தொலைக்காட்சி சென்றவாரம் அம்பலப்படுத்தியது.

குடியரசுத் துணைத்தலைவர் ஹமித் அன்சாரியை கொல்ல சதி செய்ததாகவும்இ அஜ்மீர்இ ஹைதராபாத் பள்ளிவாசல்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் முக்கிய சதியாளர்களாக இருந்ததாகவும்இ சங்பரிவார் சண்டாளர்கள் நேரடி வாக்குமூலம் கொடுத்தும் இன்னும் நடவடிக்கை இல்லையே ஏன்? என்ற வினா நாட்டுமக்களின் உள்ளத்தில் எழுகிறது.

இந்த கயவர்களை கைது செய்யாத இந்நாட்டின் சட்டம் மற்றும் நீதித்துறை தான் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் ராணுவத்திற்கு கேள்வியின்றி சுட்டுக் கொல்லும் உரிமையை வழங்கியிருக்கிறது. சந்தேகம் இருந்தால் கூட சுட்டுக்கொல்லும் ஆயுத சட்டத்தின் மூலம் ஜம்முகாஷ்மீரில் உரிமை வழங்கிய இந்நாட்டின் நீதி பரிபாலனத்துறை சங்பயங்கரவாதிகளை கைது செய்யக்கூட முன்வராதது ஏன்?

இந்த இரட்டை நிலை உடனடியாக சரிசெய்யபட்ட வேண்டும்.