Saturday, August 7, 2010

நீதிக்குத் தண்டனை?

ஊழல் எதிர்ப்புக்கும், உறுதிக்கும் பேர்போன ஐ.ஏ.எஸ் அதிகாரியான உமாசங்கரைத் தமிழக அரசு இடைநீக்கம்(சஸ்பெண்ட்) செய்துள்ளது. இது தமிழக மக்களையும், குறிப்பாக தலித் சமுதாய மக்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது.
உமாசங்கர் ஐ.ஏ.எஸ்&ஸை ஆதரித்தும் தமிழக அரசைச் கண்டித்தும் தமிழகமெங்கும் (தலித்அமைப்புகளால்) சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

ஊழல் எதிர்ப்பால் தமிழக மக்களின் உள்ளத்தில் இடம்பிடித்த உமாசங்கர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக் காரணம் என்ன?

அவரது சாதித் சான்றிதழில் கோளாறு இருப்பதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. உமாசங்க்ர் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகத் தேர்வு பெற்று 28 ஆண்டுகளுக்குப் பிறகு அரசாங்கம் இந்த அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது. இதைவிட வெட்கக் கேடு வேறென்ன இருக்க முடியும்?

பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் போலி மதிப்பெண் அட்டை தயாரித்தவர்களை உடனே பிடித்து விடுகிற அரசு, போலிச் சாதிச் சான்றிதழ் கொடுத்து ஒருவர் 28 ஆண்டுகள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாகப் பணியாற்றியதாகக் கூறுகிறது.

யாரேனும் இதை நம்புவார்களா? ஊழல் எதிர்ப்பு அதிகாரியாக அறியப்படும் உமாசங்கரை திடீரென்று பதவி நீக்கம் செய்ய வேண்டிய அவசியம் என்ன?
அதிமுக ஆட்சியில் சுடுகாடுகளுக்கு கூரை அமைப்பதில் மிகப்பெரிய ஊழல் நடந்ததை வெளிக் கொண்டு வந்தார் உமாசங்கர் ஐ.ஏ.எஸ். இந்த நடவடிக்கையின் மூலம் தான் உமாசங்கரின் பெயர் தமிழக மக்களிடையே பிரபலமானது.

ஜெ.ஆட்சியில் தொட்டில் முதல் சுடுகாடு வரை ஊழல் என்று கலைஞர் முழங்கினார். திமுக தனது பிரச்சாரத்திற்கு சுடுகாட்டுக் கூரை ஊழலைத்தான் முதன்மைத் தலைப்பாகக் கொண்டு அன்று முரசொலித்தது. அந்த ஊழலின் நாயகராக அடையாளம் காணப்பட்ட சேலத்துப் பறவை செல்வகணபதி, இன்று திமுக என்ற வெளிப்பறவைகளின் வேடந்தாங்கலில் அடைக்கலமாகி, திமுகவின் மாநிலங்களவை உறுப்பினராகவும் வேடந்தாங்குகிறது.

அன்று ஊழல் செய்த செல்வகணபதிக்கு இன்று மாநிலங்களவை உறுப்பினர் பதவி. ஊழலைக் கண்டுபிடித்த உமாசங்கருக்கு இன்று பதவி நீக்கத் தண்டனை மற்றும் விசாரணை...

ஆசை வெட்கமறியாது என்ற பழமொழிக்கேற்ப ஆட்சியிலிருப் பவர்கள் ஊழலில் திளைக்க, ஆத்திரம் நியாயம் அறியாது என்ற புதுமொழிப் படைக்க, நேர்மையான அதிகாரியைப் பதவி நீக்கம் செய்து விசாரணையும் நடத்துகிறார்கள்.

உண்மையில் இதன் பின்னணி என்ன? கடந்தகால அதிமுக ஆட்சியில், கேபிள் டி.வி தொழிலை அரசு உடமையாக்க சட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.

நாட்டில் என்ன பிரளயம் ஏற்பட்டாலும் அதற்காக ஆளுநரைச் சென்று சந்திக்காத கலைஞர் தனது நண்பரும், தமிழக ஆளுநருமான சுர்ஜித்சிங் பர்னாலாவை ஆளுநர் மாளிகைக்கே சென்று சந்தித்து, கேபிள் டி.வியை அரசு உடமையாக்கும் சட்டத்திற்கு ஒப்புதல் தரக்கூடாது என மன்றாடி வந்தார்.

2006&ல் ஆட்சி மாற்றம், தயாநிதி மாறன் தாத்தா கலைஞரை நிழலாய் தொடரும் காட்சிகள், கலைஞருக்கு அடுத்து தயாநிதிதான் கட்சி வாரிசு என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சன் டி.வியில் செய்திகள், நிகழ்ச்சிகள்.

முன்னாள் அமைச்சரும், நடிகர் சரத்குமாரின் மைத்துனருமான கே.பி. கந்தசாமியின் தினகரன் குழுமத்தை சன் குழுமம் விலைக்கு வாங்குகிறது. இதனால் கோபமடைந்த சரத்குமார் திமுக&வை விட்டு விலகல். தினகரனின் அதிரடிக் கருத்துக் கணிப்புகள். அதன் உச்சகட்டமாக கருணாநிதியின் அரசியல் வாரிசு யார் என்ற கருத்துக் கணிப்பில் மு.க.அழகிரிக்கு 2% ஆதரவு மட்டுமே என்று முடிவு வெளியாகிறது.

அழகிரியின் கோபப்பார்வையில் மதுரை தினகரன் அலுவலகம் எரிகிறது. 3 உயிர்கள் பலியாகின்றன. சிலப்பதிகாரக் கதையில் எரிந்த மதுரை, அதிகாரப்போட்டியால் நிஜமாகவே எரிகிறது.

கடமை செய்ய வேண்டிய காவல்துறை கைகட்டி நிற்கிறது.

அழகிரியின் அதிரடிகளால் ஆத்திரமடைந்த மாறன் சகோதரர்கள், சன்.டிவியின் மூலமும், தினகரன், குங்குமம் பத்திரிகைகள் மூலமும் தங்கள் பலத்தைக் காட்டுகிறார்கள். சன்.டிவியில் ஜெ.சம்பந்தப்பட்ட செய்திகள் முக்கிய இடம் பிடிக்கின்றன.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சூளுரைகளையும் கருணாநிதியின் கொட்டத்தை அடக்குவேன் என்ற சபதங்களையும் சன்.டிவி நேரடி ஒளிபரப்புச் செய்தது. இதனால் கடுப்பான திமுக கழக உடன்பிறப்புகள் கொந்தளிக்க, அறிவாலயத்திலிருந்து சன்.டிவி வெளியேற்றப்பட்டு, இப்போதுள்ள மந்தைவெளி அலுவலகத்திற்கு வருகிறது.

சன்.டிவியின் முக்கியப் பணியாளர்களை வலைவீசி இழுத்து கலைஞர் டிவி உதயமாகிறது. எஸ்.சி.வி எனப்படும் சுமங்கலி கேபிள் விஷன் தான் சன்குழுமத்தின் பெரும்பலத்திற்கு அடிப்படையானது.

அறிவாலயக் கட்டடத்தை சன்.டிவி&யினர் சேதப்படுத்தி விட்டு சென்றதாக கலைஞர் குற்றம்சாட்டுகிறார் எஸ்.சி.வி&யை பகைத்துக் கொண்டால் எந்த டிவியும் இயங்கமுடியாது என்ற அளவுக்கு, எஸ்.சி.வி&யின் அதிகாரம் கொடிகட்டிப்பறக்கிறது. இதற்கு முடிவுகட்ட, ஜெ.ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட திட்டம் தூசு தட்டி எடுக்கப்பட்டு அரசு கேபிள் டி.வி ஆரம்பிக்கப்படுகிறது. உமாசங்கர் அதற்கு பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். இவர் ஏற்கனவே திருவாரூர் ஆட்சியராக நியமிக்கப்பட்ட போது இந்தியாவின் முதல் கணினிமயமான மாவட்டமாக திருவாரூரை உருவாக்கினார். கலைஞருக்குக் செல்லமான அதிகாரி என்றும் அழைக்கப்பட்டார். கலைஞரின் சொந்த ஊரான திருவாரூரில் தொடர்ந்து திறம்பட பணி செய்தார்.

அதேபோல அரசு கேபிள் டி.வியை திறம்பட செயலாற்றச் சிறந்த முயற்சிகளை உமாசங்கர் முன்னெடுக்கிறார். மாறன் குடும்பம் மட்டும் உண்டு கொழிக்கும் பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாயை, அரசாங்கத்திற்குக் கிடைக்கக் செய்ய உமாசங்கர் அரும்பாடு பட்டார். இதனால் மாறன் சகோதரர்களின் மகா கோபத்திற்கு ஆளானார்.

காட்சிகள் மாறின, மாறன் குடும்பம், கலைஞர் குடும்பத்திற்கிடையே சமசரம் பேசப்பட்டு, உரியவர்களுக்கு உரியது கொடுத்து, ஆவேசங்கள் தணிக்கப்பட்டன.

இதயம் இனித்தது, கண்கள் பனித்தன, குடும்பம் இணைந்தது என கலைஞர் அறிக்கை எழுதினார். குடும்பம் ஒன்று சேர்ந்த பிறகு, சன்.டிவிக்குப் போட்டியாகத் துவங்கப்பட்ட கலைஞர் டிவி இழுத்து மூடப்படவில்லை.

கலைஞர் டிவி வருமானம், சன்.டிவி வருமானம், இவற்றின் கிளை அலைவரிசைகள் தரும் பெரும் வருமானங்கள் எல்லாம், கலைஞர் குடும்பத்தின் சொத்துக் கணக்கை உலகப்பணக்காரர்கள் வரிசையில் உயர்த்திச் செல்கின்றன.

அதேநேரம், அரசு கேபிள் டிவி நிறுவனத்தைப் பலிகொடுத்து மாறன் குடும்பத்தை குளுமைப்படுத்த முடிவெடுக்கப்படுகிறது.

இதற்கு உமாசங்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 1 கோடிக்கும் மேற்பட்ட கேபிள் இணைப்புகள் உள்ளன. ஓர் இணைப்புக்கு நூறு ரூபாய் என்றால், 1 கோடி இணைப்புக்கு மாத வருமானம் 100 கோடி ரூபாய், ஆண்டுக்கு 120 கோடி ரூபாய் வருமானம். அரசுக்கு வரவேண்டிய இந்த வருவாய் ஒரு குடும்பத்திற்குப் போவது கூடாது என்று குரல் கொடுத்தார் உமாசங்கர். உடனே அவரது சாதிச் சான்றிதழில் கோளாறு கண்டு பிடிக்கப்பட்டு விட்டது.

உமாசங்கர் சுடுகாட்டு ஊழலைக் கண்டுபிடித்தபோது, திமுகவுக்கு அது இனித்தது. அரசுக்கு வரவேண்டிய வருவாய் ஒரு குடும்பத்திற்கு மட்டும் போகக் கூடாது என்று எதிர்ப்புக்குரல் கொடுத்தால் கசக்கிறது.

உடனே பணி இடைநீக்கம், விசாரணை, சாதிச் சான்றிதழில் கோளாறு கண்டுபிடிப்பு...

தலித் சம்பந்தி எனப் பெருமைப்படும் கலைஞர், தலித் சமுதாயத்தால் கொண்டாடப்படும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியைப் பழிவாங்குவது, பெரும் எதிர்ப்பலைகளை உண்டாக்கியிருக்கிறது.

No comments: