Tuesday, August 4, 2009

கூடங்குளம் கடற்கரையில் ரஷ்ய என்ஜீனியர் மீது தாக்குதல்- மகளிடம் செக்ஸ் சில்மிஷம்

Koodankulam power plant
கூடங்குளம் (நெல்லை): நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணு மின் நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ரஷ்ய நாட்டு என்ஜீனியரைத தாக்கி அவரது மகளிடம் பாலியல் சேஷ்டைகள் புரிந்து அட்டகாசம் செய்துள்ளது ஒரு ரவுடிக் கும்பல்.

இந்த சம்பவத்தால் கூடங்குளத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டின் ஒத்துழைப்புடன் அணு மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களில் ரஷ்ய நாட்டு அணு என்ஜீனியர் அலெக்சாண்டர் செர்னோவும் ஒருவர்.

இவர் நேற்று தனது மகள் விக்டோரியாவுடன் (21) கடற்கரையில் வாக்கிங் போய்க் கொண்டிருந்தார். அப்போது 20 வயதுக்குட்பட்ட 7 பேர் அடங்கிய ஒரு கும்பல் வந்தது.

அவர்கள் செர்னோவைத் தாக்கி அவர் வைத்திருந்த கேனான் கேமராவைப் பிடுங்கிக் கொண்டனர். பின்னர் விக்டோரியாவிடம் தவறாக நடந்து கொண்டனர்.

அதன் பின்னர் அக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. இதுகுறித்து செர்னோவ் போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸார் அந்த கும்பலை தேடி வருகிறார்கள்.

கூடங்குளத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அணு மின் நிலையப் பணிகளில் ஈடுபட்டுள்ளோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பொறியாளர் செர்னோவ், அனு விஜய் காலனியில் தங்கி பணியாற்றி வருகிறார். கூடங்குளம் மின் நிலையப் பணிகளில் கிட்டத்தட்ட 100 ரஷ்ய என்ஜீனியர்கள் பங்கெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்து.

கொள்ளையர்கள் அதிரடி:ஏடிஎம் மெஷின் திருட்டு

சண்டிகரிலிருந்து 140 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஷிம்லா பஹடி. இங்கு ஐசிஐசிஐ வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் உள்ளது.


அதிகப்படியான மக்கள் பயன்படுத்தும் மிகவும் முக்கியமான இந்த ஏடிஎம்மில் 5 லட்சம் பணம் இருந்தது. கடந்த வெள்ளிக்கிழமையன்று இது காணாமல் போனது.

இரண்டு நபர்கள் ஏடிஎம்முக்கு வந்தனர். அவர்களைத் தொடர்ந்து மேலும் சிலர் வந்தனர். அவர்கள் என்னை தாக்கிவிட்டு, ஏடிஎம்மை அடியோடு பெயர்த்து எடுத்துக் கொண்டு காரில் தப்பி விட்டனர் என பாதுகாப்பு பணியில் இருந்த சந்தீப் சிங் காவல் துறையில் புகார் செய்தார்.

உடனடியாக காவலரும் தன்னார்வ தொண்டர் ஒருவரும் கொள்ளைகளை துரத்திச் சென்றனர். தப்பிக்க முடியாத சூழலில், அவர்கள் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனால் ஏடிஎம்மில் இருந்த பணம் திருடு போகவில்லை.

மேலும் காரில், செல்போன், காஸ் சிலிண்டர் மற்றும் வெல்டிங் மெஷின் ஆகியவையும் இருந்ததாக காவல் துறை தெரிவித்துள்ளது. கொள்ளையர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

காங். சார்பில் சோம்நாத் ராஜ்யசபா தேர்தலில் போட்டி?

Somnath Chatterjee
டெல்லி: லோக்சபா முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் சார்பிலோ அல்லது அதன் ஆதரவுடனோ போட்டியிடலாம் எனத் தெரிகிறது.

லோக்சபா சபாநாயகராக சோம்நாத் பதவியில் இருந்த காலம் அவரால் என்றென்றும் மறக்க முடியாதது.

பிரதமர் மன்மோகன் சிங் கோரிய நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சோம்நாத் சபாநாயகர் பதவியில் இருக்கக் கூடாது என்று சிபிஎம் மேலிடம் உத்தரவிட்டது. ஆனால் அதை ஏற்க அவர் மறுத்து விட்டார். இதையடுத்து கட்சியை விட்டு அவரை நீக்கியது சிபிஎம் பொலிட்பீரோ.

நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த நாளின்போது பாஜக உறுப்பினர்கள் கோடிக்கணக்கான பணத்தை சபையில் கொட்டி, சமாஜ்வாடிக் கட்சியினர் மாற்றி வாக்களிக்க பணம் கொடுத்ததாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.

இப்படி பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் தனது பதவிக்காலத்தை முடித்த சோம்நாத் லோக்சபா தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி விட்டார்.

இந்தநிலையில் தற்போது சோம்நாத்தை மீண்டும் லைம் லைட்டுக்குக் கொண்டு வர காங்கிரஸ் முயல்வதாகத் தெரிகிறது. அவரை ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட வைக்க காங்கிரஸ் முயன்று வருகிறதாம்.

ராஜ்யசபா உறுப்பினர்களான ஹேமமாலினி, ராம் ஜேட்மலானி, தாராசிங், பிமல் ஜலான், சந்தன் மித்ரா, கஸ்தூரி ரங்கன், நாராயண் சிங் பார்மர் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைகிறது.

இதையடுத்து புதிதாக 7 பேர் தேர்வு செய்யப்படவுள்ளன். அதில் ஒருவராக சோம்நாத்தை சேர்க்க காங்கிரஸ் யோசித்து வருகிறது. இதுதொடர்பாக சோம்நாத்தை காங்கிரஸ் தரப்பில் அணுகியபோது அவர் சம்மதித்து விட்டதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் சார்பிலோ அல்லது சுயேச்சையாகவோ சோம்நாத் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடலாம் எனத் தெரிகிறது.

Saturday, August 1, 2009

யார் தனிவிமான நிறுவனங்களுக்கு நிதியுதவி கிடையாது: மத்திய அரசு


தனியார் விமான நிறுவனங்களுக்கு நிச்சயமாக நிதியுதவி கிடையாது என விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரபுல் படேல் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 18ம் தேதி வேலை நிறுத்தம் செய்யப்போவதாக தனியார் விமான நிறுவனங்கள் அறிவித்துள்ள நிலையில் எந்த ஒரு மிரட்டலுக்கும் அரசு பணியாது என்றும், மீறி ஸ்டிரைக்கில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

Monday, July 27, 2009

குடும்பங்களைக் கூறுபோடும் லேகிய டாக்டர்கள்

குறிப்பு: இந்தக்கட்டுரை விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கைக்காகவுமே தவிற கிளுகிளு அல்ல நமது நோக்கம். விகடனில் படித்தது நீதியின் குரல் வாசகர்களுக்காக....
________________________________________________
'இளமை இதோ இதோ!' என்று சிறகு அடித்துப் பறக்கும் பருவத்தில்தான் மனதை உருட்டிப் புரட்டும் சஞ்சல சுனாமியும் இளைஞர்களைப் பாடாய்ப்படுத்தும். சமயங்களில் நண்பர்களிடமே பகிர்ந்துகொள்ள முடியாத 'உடல் இயக்கச் சிக்கல்'களை அவர்கள் மனம் திறந்து பேசுவது 'அஜால் குஜால்' வார்த்தைகளில் ஊரை ஏமாற்றும் போலி லேகிய வியாபாரிகளிடம்...

27 வயது சந்திரசேகருக்கு இளமைப் பருவத்துக்கே உள்ள விடலைப் பழக்க வழக்கங்கள் உண்டு. ஒருநாள் பேப்பர் விளம்பரத்தைப் பார்த்துப் பதறுகிறார். தனது திறமையைச் சோதிக்க ஒரு விலைமாதுவிடம் செல்கிறார். முதல் அனுபவம் பெரிய ஏமாற்றமாக முடிய... யோசிக்காமல் விளம்பரத்தில் வசீகரித்த வைத்தியரிடம் ஓடுகிறார். 'ஸ்பெஷல் செட்' என்று டப்பா நிறைய கேப்சூல்களைக் கொடுத்து 6 ஆயிரம் ரூபாய் வசூலிக்கிறார் வைத்தியர். வருடக் கணக்கில் மாத்திரைகளைச் சாப்பிட்டாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை. வீட்டில் சந்திரசேகருக்குப் பெண் பார்க்க ஆரம்பிக்க, வேறு வழி இல்லாமல் தற்கொலை செய்துகொள்கிறார்.

அந்த லாரி டிரைவரின் மனைவிக்கு 'கணவன் தன்னைப் போதுமான அளவுக்கு திருப்திப்படுத்துவது இல்லை' என்று ஆதங்கம். கணவனை செவ்வாய்க்கிழமை அந்தக் குறிப்பிட்ட லாட்ஜுக்கு அழைத்துச் செல்கிறார். லாரி டிரைவரே மேற்கொண்டு தொடர்கிறார்... ''அந்த டாக்டர்(!) என் சம்சாரம் முன்னாடியே என்னை நிர்வாணப்படுத்திச் சோதிச்சாரு. 'உங்களுக்கு இருக்குறது சின்ன சிக்கல்தான். இதுக்கு மூணு மண்டலம் களிம்பு தடவுங்க. தூங்கப் போறதுக்கு அரை மணி நேரம் முன்னாடி இந்த லேகியத்துல ஒரு உருண்டை சாப்பிடுங்க'ன்னு சொல்லி 3ஆயிரம் ஃபீஸ் வாங்கிட்டாரு. வாராவாரம் செக்கிங் போக வர்ற இருந்தப்ப, என் சம்சாரம் அந்த ஆளுகூட ரொம்ப நெருக்கம் ஆயிட்டா. இப்போ என் பொண்டாட்டி என்கூட இல்லை. அதுக்குக் காரணம் அந்தப் படுபாவி. என்னை மாதிரி எத்தனையோ குடும்பங்களை அவன் சீரழிச்சு இருக்கான். வெட்கம், மானத்துக்குப் பயந்து நான் யார்கிட்டயும் சொல்லலை!''

இவர் கதை இப்படி என்றால் கொளத்தூர் மகேந்திரனுடையது வித்தியாசமானது. ''நான் சினிமாவில் லைட்மேனா வேலை பாக்குறேன். அதிக எடையை ஏற்றி, இறக்குவதால் 12 வருஷமாகவே எனக்கு முதுகுவலி. எந்த மருத்துவமும் பலன் இல்லை. அப்பதான் ஒரு சேட்டிலைட் சேனல்ல திருவாங்கூர் சித்த வைத்தியசாலை விஜயகுமாரோட நிகழ்ச்சி பார்த்தேன். அவர்கிட்ட போய் நின்னேன். 'மூணு மாசம் ட்ரீட்மென்ட். மாசம் 50 ஆயிரம் ரூபாய் ஃபீஸ். பூசணிக் காய், பாவக்காய் ஆகாது. காபி, டீ கூடாது. மது, சிகரெட் கூடவே கூடாது. தங்கபஸ்ப பவுடர்லாம் கொடுத்தாரு. மூணு மாசத்துக்குப் பிறகும் அதே நிலைமைதான். கேட்டால், 'கண்டிப்பா குணமாகும்னு நான் கான்ட்ராக்ட்ல கையெழுத்தா போட்டு ருக்கேன்!'னு எகத்தாளம் பேசுனார். நம்ம உடம்பு வாகுக்கு ஒத்துக்கலைன்னு நினைச்சு ஒன்றரை லட்ச ரூபாய் போனாப் போகட்டும்னு அவர்கிட்ட இருந்து தப்பிச்சு வந்தேன்!'' பத்திரிகை, டி.வி-க்களில் வரும் பந்தா விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டு, பண பண்டல்களுடன் வந்து போலி வைத்தியர்களிடம் சிக்கிச் சீரழிந்த குடும்பங்கள் எத்தனையோ!
தாம்பத்திய நிகழ்வுகளில் இயல்பான ஆரம்பக் கூச்சத் தயக்கங்களுக்குப் பயந்து பதறி, இது போன்ற போலி லேகிய வியாபாரிகளிடம் தஞ்சம் புகுந்தால்... அதோகதிதான். மனைவியுடன் சிநேகமும் புரிதலும் ஏற்பட்டால் மழை மேகமாக விலகிவிடும் சிக்கல்களுக்கு அவர்களின் வைத்திய முறைகள் இருக்கின்றனவே... தங்கபஸ்பம், லேகியம், களிம்பு, அக்குளில் வைத்துக்கொள்ளும் மாத்திரை... என அஜால் குஜால் வைத்தியர்களின் வைத்திய முறைகள் அத்தனையும் விபரீத வில்லங்கங்கள். பழக்கத்தில் மறைந்துவிடக் கூடிய சின்ன பிரச்னைகளை இவர்களின் 'வைத்திய முறை'கள் விஸ்வ ரூபமாக்கி தம்பதிகளிடையே மனஸ்தாபங்களை உண்டாக்கிவிடுகின்றன.

இது போன்ற லேகிய வியாபாரிகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் நாமக்கல்லைச் சேர்ந்த டாக்டர் ஆனந்த், ''எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிச்சுட்டோம்னு சேலம், நாமக்கல் மாவட்டங்கள்ல ஏராளமான ஆளுங்க பலரை ஏமாத்திட்டு இருக்காங்க. ஹெச்.ஐ.வி. கிருமியால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு லேகிய மருந்துகள் கொடுத்து, 'உனக்கு எல்லாம் சரியாயிடுச்சு. இனி நீ தைரியமா கல்யாணம் பண்ணிக்கலாம்'னு சொல்லி அப்பாவிகளுக்கு எய்ட்ஸ் பரவக் காரணமா இருக்காங்க. அவங்ககிட்ட ஏமாந்தவங்களைத் தேடிப் பிடித்து திரும்ப மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி அவங்களுக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு இருக்குன்னு புரியவெச்சோம். அது சம்பந்தமான டாக்குமென்ட்ரியை லோக்கல் கேபிள் சேனல்களில் ஒளிபரப்பியதும், அந்த லேகிய வியாபாரிகள் பக்கமிருந்து எனக்குக் கொலை மிரட்டல்கூட வந்தது. ஆனா, அதைப் பத்தியெல்லாம் நான் கவலைப்படலை.

தமிழ்நாடு முழுக்க இது மாதிரி டுபாக்கூர் போலி டாக்டர்கள் 900 பேர் இருக்காங்க. அவங்களைப் பத்தி நான் தயாரிச்சுட்டு இருக்கும் பட்டியல் தயாரானதும் சுகாதாரத் துறை அமைச்சகத்தில் சேர்ப்பித்து தக்க நடவடிக்கை எடுக்கச் சொல்லணும்!'' என்றார்.

சமூக சமத்துவத்துக்கான மருத்துவச் சங்கத்தைச் சேர்ந்த டாக்டர் எழிலன் கூறுகையில், ''ப்ளஸ் டூவுக்குப் பிறகு என்ட்ரன்ஸ் தேறி சைக்காலஜி, அனாடமி, பயோ கெமிஸ்ட்ரி என மருத்துவக் குழு அங்கீகரித்த பாடங்களை 4 ஆண்டுகள் படித்து 5-வது வருடம் மருத்துவமனைகளில் பணியாற்றிய அனுபவங்கள் பெற்ற பிறகே நாங்கள் எம்.பி.பி.எஸ்., பட்டம் பெறுகிறோம். 'ராஜராஜ சோழனுக்கே வைத்தியம் பார்த்தவர் எங்கள் பாட்டன். பரம்பரை பரம்பரையாக மருத்துவம் பார்த்து வருகிறோம்' என்பார்கள். 'சோழனுக்கு வைத்தியம் பார்த்ததற்கு என்ன ஆதாரம்?' என்று கேட்டால் காதில் விழாதது போல வேறு வேலை பார்க்கச் சென்றுவிடுவார்கள்.

உடனடி நிவாரணம் தேவைப்படும் மாரடைப்பு போன்ற நோய்களுக்கு இவர்கள் மருத்துவம் பார்க்க மாட்டார்கள். ஆனால், நீண்ட நாள் சிகிச்சை தேவைப்படும் முடக்கு வாதம், பிறவி ஊனம் போன்றவற்றுக்கு வைத்தியம் பார்க்க ஆர்வமாக இருப்பார்கள். அந்த சிகிச்சைகளில்தானே கொள்ளை கொள்ளையாகப் பணம் பறிக்க முடியும்.

தமது வீட்டில் ஒருவர் நீண்ட நாட்கள் நோய் குணம் அடையாமல் போராடினால், அவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்றுதான் குடும்ப உறுப்பினர்களிடம் பெரும் போராட்டம் நடக்கும். எதை விற்றாவது அவரைக் காப்பாற்ற முயல்வார்கள். அந்தப் பாசத்தைப் பணமாக்கும் இது போன்ற போலி லேகிய வியாபாரிகளிடம் இருந்து நம்மை நாம்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்!'' என்று எச்சரிக்கிறார்.

ஒரு முறையேனும் கீழே விழாமல் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்ள முடியாது. அது போலத்தான் தாம்பத்யமும். ஆரம்பத் தள்ளாட்டங்கள் இதிலும் சகஜம்தான். அதைத் தம்பதிகள் தங்களுக்குள் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்வதன் மூலமே பிரச்னைக்குத் தீர்வு காண முடியும். உடலின் கோளாறுகளுக்கு நிவாரணம் தேட தகுந்த மருத்துவர்களோ, நிபுணர்களோதான் பக்கபலமாக இருப்பார்கள். ஒரு சினிமா பார்க்க வேண்டும் என்றால்கூட ஏ.சி, டி.டி.எஸ், குஷன் ஸீட் என்று வசதிகளைப் பட்டியலிடுபவர்கள், தங்கள் உடல் பராமரிப்புக்கும் அத்தகைய கவனத்தைச் செலுத்துவதுதானே சரி!
நன்றி: விகடன்

கியூபாவிடம் நாம் பாடம் கற்க வேண்டும்: பிரகாஷ் காரத்

பெங்களூர்: கியூபாவிடம் நாம் பாடம் கற்றுக்கொண்டு மீண்டு எழ வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கியூபா நாட்டு புரட்சியின் 50ம் ஆண்டையொட்டி பெங்களூரில் கியூபா ஒற்றுமைக் குழு சார்பில் நடந்த விழாவில் காரத் பேசுகையில்,

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நாம் பெரும் தோல்வியைச் சந்தித்தோம். ஆனால், இடதுசாரிகளா நாம் கியூபாவைப் பார்த்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அந்நாடு பல இக்கட்டான கால கட்டங்களில் பல்வேறு இன்னல்களைச் சந்தித்தபோது, அந்நாட்டு மக்கள் துவண்டு விடாமல் பிரச்னைகளை சமாளித்தார்கள். முடியாத காரியங்களை நடத்திக் காட்டினார்கள்.

அதேபோல நாமும் கியூபாவைப் போல வேகத்துடன் ஊக்கம் பெற்று மீண்டு எழ வேண்டும். தோல்விடம் சரணாகி விடக்கூடாது.

மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின் மார்க்சிஸ்டை சேர்ந்த ஏராளமான நண்பர்கள் என்னிடம் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடுவதை நிறுத்திவிடுமாறும், 21ம் நூற்றாண்டில் அது தேவையற்றது என்றும் கூறுகின்றனர். அதை நாங்கள் செய்ய மாட்டோம். ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தை தொடர்வோம்.

கியூபா மக்கள் மிகுந்த மன உறுதி, தைரியத்துடன் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடி வெற்றி கண்டவர்கள். அவர்கள், ஏகாதிபத்தியத்தால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணம்.

வெறும் 1.1 கோடி மக்கள் தொகையைக் கொண்ட கியூபாவில் ஒரே ஆண்டில் கல்வியறிவின்மை ஒழிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி அடிப்படைக் கட்டமைப்பு, மருத்துவம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்த நாடுகளைவிட முன்னிலையில் உள்ளது.

கியூபாவில் உள்ள மருத்துவ முறையை நம் நாட்டில் கனவு கூட காண முடியாது என்றார்.

நிகழ்ச்சியில் கியூபா நாட்டு அமைச்சர் எடுர்டோ இக்லெசியாஸ் குயின்டானாவும் பங்கேற்றார்.

இரண்டு பெண்கள் பாலியல் பலாத்காரம் விவகாரம் -காஷ்மீர்-சபாநாயகர் மீது மைக் வீசிய மெஹ்பூபா

Mehbooba Mufti
ஸ்ரீநகர்: காஷ்மீர் சட்டசபையில் சபாநாயகரை தாக்க முயன்றார் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரான மெஹ்பூபா முப்தி.

முன்னாள் முதல்வர் முப்தி முகம்மத் சயீதின் மகளான இவர் எதிர்க் கட்சித் தலைவராக உள்ளார். இந் நிலையில் இன்று காஷ்மீர் சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்கியது.

அப்போது மாநிலம் சோபியானில் இரண்டு பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தின் மீது சட்டசபையி்ல் மெஹ்பூபா ‌பிரச்சனை கிளப்பினார்.

அப்போது சபாநாயகர் முகம்மத் லோனுக்கும், மெஹபூபாவுக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது.

அப்போது ஆவேசமான மெஹ்பூபா சபாநாயகரை நோக்கிச் சென்று அவரது மேஜையில் இருந்த மைக்கைப் பிடுங்கி அவர் மீது வீசினார். ஆனால், அது அவர் மீது படவில்லை.

இதையடுத்து அவைக் காவலர்கள் ஓடிவந்து மெஹ்பூபாவை வெளியே இழுத்துச் சென்றனர். இச் சம்பவத்தால் சட்டசபையில் பெரும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து மக்கள் ஜனநாயக கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டு சபை இன்று முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.