Monday, July 27, 2009

கியூபாவிடம் நாம் பாடம் கற்க வேண்டும்: பிரகாஷ் காரத்

பெங்களூர்: கியூபாவிடம் நாம் பாடம் கற்றுக்கொண்டு மீண்டு எழ வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கியூபா நாட்டு புரட்சியின் 50ம் ஆண்டையொட்டி பெங்களூரில் கியூபா ஒற்றுமைக் குழு சார்பில் நடந்த விழாவில் காரத் பேசுகையில்,

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நாம் பெரும் தோல்வியைச் சந்தித்தோம். ஆனால், இடதுசாரிகளா நாம் கியூபாவைப் பார்த்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அந்நாடு பல இக்கட்டான கால கட்டங்களில் பல்வேறு இன்னல்களைச் சந்தித்தபோது, அந்நாட்டு மக்கள் துவண்டு விடாமல் பிரச்னைகளை சமாளித்தார்கள். முடியாத காரியங்களை நடத்திக் காட்டினார்கள்.

அதேபோல நாமும் கியூபாவைப் போல வேகத்துடன் ஊக்கம் பெற்று மீண்டு எழ வேண்டும். தோல்விடம் சரணாகி விடக்கூடாது.

மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின் மார்க்சிஸ்டை சேர்ந்த ஏராளமான நண்பர்கள் என்னிடம் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடுவதை நிறுத்திவிடுமாறும், 21ம் நூற்றாண்டில் அது தேவையற்றது என்றும் கூறுகின்றனர். அதை நாங்கள் செய்ய மாட்டோம். ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தை தொடர்வோம்.

கியூபா மக்கள் மிகுந்த மன உறுதி, தைரியத்துடன் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடி வெற்றி கண்டவர்கள். அவர்கள், ஏகாதிபத்தியத்தால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணம்.

வெறும் 1.1 கோடி மக்கள் தொகையைக் கொண்ட கியூபாவில் ஒரே ஆண்டில் கல்வியறிவின்மை ஒழிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி அடிப்படைக் கட்டமைப்பு, மருத்துவம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்த நாடுகளைவிட முன்னிலையில் உள்ளது.

கியூபாவில் உள்ள மருத்துவ முறையை நம் நாட்டில் கனவு கூட காண முடியாது என்றார்.

நிகழ்ச்சியில் கியூபா நாட்டு அமைச்சர் எடுர்டோ இக்லெசியாஸ் குயின்டானாவும் பங்கேற்றார்.

No comments: