Tuesday, July 14, 2009

கூகுளின் புதிய சவால்!

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு நீண்ட புகழ்மிக்க வரலாறு உண்டு. பலவகையிலும், கணினி உலகத்தை அந்த நிறுவனம்தான் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. தனிக்கணினிகளில் 90 சதவீதத்தை மைக்ரோசாஃப்ட் மென்பொருள்கள்தான் ஆக்கிரமித்துக் கொண்டிருக் கின்றன. இணையத்திலும் இவர்களின் ஆதிக்கம்தான். மைக்ரோசாஃப்டின் தனி ஆவர்த்தனத்துக்கு முதல் போட்டியாக வந்தது யாகூ. அப்புறம் கூகுள்.

கூகுளைத் தெரியாதவர்களுக்கு இணையத்தைப் பற்றி எதுவுமே தெரியாது என்றுதான் கூற வேண்டும். தேடுபொறிச் சந்தையை முழுமையாகக் கைப்பற்றிவிட்ட கூகுள், யாகூவை போட்டியிலிருந்து எப்போதோ வெளியேற்றிவிட்டது. கூகுளின் அடுத்த இலக்கு மைக்ரோசாஃப்ட். மைக்ரோசாஃப் டின் சந்தையைக் கொஞ்சம் கொஞ்சமாக அபகரிப்பதுதான் கூகுளின் திட்டம் என்பது தெளிவாகத் தெரிகிறது.

மைக்ரோசாஃப்டின் இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு போட்டியாக குரோம் என்ற பிரவுசரை கடந்த ஆண்டு கூகுள் வெளியிட்டது. வழக்கம்போல் இலவசமாக. ஆனால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், மோசில்லா பிரவுசர்களுடன் போட்டியிடும் அளவுக்கு குரோம் இன்னும் வளரவில்லை. கூகுளின் இதர இணையப் பயன்பாடுகளில் மட்டுமே குரோம் பிரவுசர் நன்றாகச் செயல்படுவதாக ஒரு கருத்து இணையத்தை மேய்பவர்கள் மத்தியிலும் உருவாகிவிட்டது.

உண்மையை மறைக்காமல் சொல்வதென்றால் பிரவுசர் விஷயத்தில் கூகுளுக்கு முழுத் தோல்விதான் என நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால், அதையெல்லாம் இப்போதே தீர்மானித்து விடாதீர்கள் என்கிறது கூகுள். அங்கு தொட்டு, இங்கு தொட்டு இப்போது மைக்ரோசாஃப்டின் தலையிலேயே கைவைத்திருக்கிறது கூகுள். மைக்ரோசாஃப்டின் விண்டோஸ் இயக்க அமைப்புக்கு (ஆப ரேட்டிங் சிஸ்டம்) போட்டியாக குரோம் என்கிற புதிய இயக்க அமைப்பை அடுத்த ஆண்டு வெளியிடப் போவதாக கூகுள் அறி வித்திருக்கிறது. நிச்சயமாக மைக்ரோசாஃப்டின் அடிமடியில் கைவைக்கும் சமாசாரம் தான். மைக்ரோசாஃப்டின் எல்லா முன்னேற்றங்களுக்கும் பின்னால் விண்டோஸ் இயக்க அமைப்புத்தான் இருக்கிறது. உலகின் 90 சதவீத தனிக்கணினிகளில் விண்டோஸ் நிறுவப்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.

ஒரு கணினியில் விண்டோஸ் நிறுவப்படுவது, மைக்ரோசாஃப்டின் ஆபீஸ் போன்ற மற்ற மென்பொருள்களின் விற்பனைக்கு அடிப்படை. குரோம் இயக்க அமைப்பு மூலம் இந்த அடிப்படையை ஆட்டிப் பார்க்க கூகுள் முயற்சிக்கிறது. அதென்ன அவ்வளவு எளிதா? அதற்கும் ஏற்கெனவே ஒரு வெள்ளோட்டம் விட்டுப் பார்த்திருக்கிறது கூகுள். ஸ்மார்ட்போன்களில் பயன்படும்வகையில் ஆந்த்ராய்ட் என்ற இயக்க அமைப்பை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது. ஆச்சரியப்படத்தக்க அளவில், பயனாளர்கள் மத்தியில் மைக்ராசாஃப்டின் ஸ்மார்ட்போன் இயக்க அமைப்பைவிட நல்ல பெயர் எடுத்திருக்கிறது. அந்த உற்சாகத் தில்தான் இந்த குரோம் முயற்சி. குரோம் பிரவுசரின் மேம்படுத்தப் பட்ட நீட்சிதான் இந்த குரோம் இயக்க அமைப்பு எனலாம். வேகம், எளிமை, பாதுகாப்பு ஆகியவையே இதன் தாரக மந்திரங்கள்.

இப்போதிருக்கும் இயக்க அமைப்புகளெல்லாம் இணையம் இல்லாத காலத்தில் உருவாக்கப்பட்டவை. அந்த அடிப்படையையே திரும்பத் திரும்பப் பதிப்பித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று மற்ற இயக்க அமைப்புகளைப் பார்த்து நையாண்டி செய்திருக்கிறது கூகுள். நீங்கள் என்ன செய்யப் போகிறீர்களாம் என்று கேட்டால், "அடிப்ப டையை மாற்றப் போகிறோம்' என்கிறார்கள். இணையத்தை மையமாகக் கொண்டு இயக்க அமைப்பை உருவாக்குவதுதான் அந்த மாற்றமாம்.

இந்த ஆண்டு இறுதிக்குள்ளாகவே விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டாவுக்கு மாற்றாக விண்டோஸ் 7 பதிப்பை வெளியிட மைக்ரோசாஃப்ட் முடிவெடுத்திருக்கும் வேளையில், குரோம் அறிவிப்பு அந்த நிறுவனத்துக்கு நிச்சயம் அதிர்ச்சியாகத்தான் இருந்தாக வேண்டும். ஆனால், குரோம் இயக்க அமைப்பைத் தாங்கள் ஓர் அச்சுறுத்தலாகக் கருதவில்லை என்கி றது மைக்ரோசாஃப்ட். தனிக்கணினிகளுக் கான ஆபரேட்டிங் சிஸ்டத்தை உருவாக்கு வது மிகச் சிக்கலான வேலை என்பதை கூகுள் விரைவிலேயே புரிந்து கொள்ளும் என மைக்ரோசாஃப்ட் அதிகாரிகள் சொல்கிறார்கள். அப்படி என்ன சிக்கல் இருக்கிறது என்பது புரியவில்லை.

ஆனால், கூகுளுக்கு ஒரு பெரிய சவால் இருக்கிறது. இயக்க அமைப்பை ஒரு தனிப் பட்ட மென்பொருளாகக் கருத முடியாது. அதில் இயங்கும் மென்பொருள்களும் இயக்க அமைப்பின் பயன்பாட்டைத் தீர்மானிக்கின்றன. அந்த வகையில், விண்டோஸ் இயக்க அமைப்பில் செயல்படும் வகையில் ஆயிரக்கணக்கான மென்பொருள்கள் உரு வாக்கப்பட்டிருக்கின்றன. கோரல், அடோப் போன்ற பல்வேறு பெரிய மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள்கூட விண்டோஸýக்கான மென்பொருள் பதிப்புகளை பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடர்ச்சியாக வெற்றிகரமாக வெளியிட்டு வருகின்றன.

குரோம் இயக்க அமைப்பில் செயல்படும் வகையிலான மென்பொருள்களை இந்த நிறுவனங்களெல்லாம் வெளியிடுமா என்பது சந்தேகமே. இவற்றையெல்லாம் கூகுளே தயாரிப்பதும் சாத்தியமில்லை. அப்படியே தயாரிக்க முடிந்தாலும் மைக்ரோசாஃப்ட் அளவுக்கு பிரபல மாவதும் கஷ்டம்தான். உதாரணத்துக்கு எம்எஸ் ஆபீஸ். எத்த னையோ இலவச வேர்ட் பிராசசர்களும், ஸ்பிரட் ஷீட்களும் வந்த பிறகும் எம்எஸ் வேர்டையும் எக்ùஸல்லையும் அடித்துக் கொள்ள முடியவில்லையே. சாதிக்கப் போகிறதோ இல்லையோ, பெரிய எதிர்பார்ப்பை கூகுள் கிளப்பி விட்டிருக்கிறது. தேடுபொறி சந்தையைக் கைப்பற்றியதைப் போன்று சாதனை செய்யுமா அல்லது பிரவுசர் வெளியிட்டது போல மண்ணைக் கவ்வுமா என்பது குரோம் சந்தைக்கு வந்த பிறகே தெரியும்.

நன்றி: பூலியன், தினமணி

No comments: