Wednesday, July 8, 2009

யுஎஸ் பங்கு நிறுவன சர்வர்களை 'ஹேக்' செய்த 3 தமிழர்கள்

நியூயார்க்: ஆன்-லைன் பங்கு வர்த்தக நிறுவனங்களின் சர்வர்களை 'ஹேக்' செய்து மற்றவர்களது கணக்கில் பங்குகளை வாங்கி தங்கள் கணக்கில் விற்று கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக 3 தமிழர்கள் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

இதில் ஒருவர் ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டு அமெரிக்கா கொண்டு வரப்பட்டுள்ளார். இன்னொருவர் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டுவிட்டார். மூன்றாவது நபர் தலைமறைவாக உள்ளார்.

சென்னையைச் சேர்ந்த ஜெய்சங்கர் மாரிமுத்து (34) என்பவர் கடந்த மாதம் 20ம் தேதி ஹாங்காங்கி்ல் கைது செய்யப்பட்டு அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டுள்ளார். இவர் அமெரிக்க ஆன்-லைன் பங்கு வர்த்தக நிறுவனங்களின் சர்வர்களை 'ஹேக்' செய்ததாக நெப்ராஸ்கா மாகாண நீதிமன்றத்தில் கடந்த 25ம் தேதி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ஆனால், தான் தவறு செய்யவில்லை என அவர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஆனால், இதே 'ஹேக்கிங்' காரணத்துக்காக இவர் இதற்கு முன்பும் ஹாங்காங் போலீசாரால் கைது செய்யப்பட்டவராம்.

இன்னொருவரான திருஞானம் ராமநாதன் என்பவர் தான் செய்த தவறை ஒப்புக் கொண்டுவிட்டார். இவர் கடந்த ஆண்டு செப்டம்பரில் கைது செய்யப்பட்டு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டார். ஆனால், இவரது முழு தண்டனைக் காலம் முடியும் முன்னரே நாடு கடத்தப்பட்டுவிட்டாக அமெரிக்க நீதித்திறை செய்தித் தொடர்பாளர் லேன் மெக்காலெப் இப்போது தகவல் வெளியிட்டுள்ளார்.

இவர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது.

மூன்றாவது நபரான சொக்கலிங்கம் ராமநாதன் இன்னும் தலைமறைவாகவே உள்ளார்.

இந்த மூவரும் இ.டி. டிரேட், டி.டி. அமெரிடிரேட் உள்ளிட்ட 9 ஆன்லைன் பங்கு வர்த்தக நிறுவனங்களின் 60க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் கணக்குகளி்ல் பங்குகளை வாங்கி, அதை தங்கள் கணக்கில் விற்று மோசடி செய்துள்ளனர்.

மேலும் தங்கள் வசம் இருந்த விலை குறைந்த பங்குகளை மற்றவர்களை வாங்கச் செய்து (அந்த நபருக்கே தெரியாமல் அவரது கணக்கில் வாங்கி) அவற்றின் விலையை தாறுமாறாகக் கூட்டிவிட்டுள்ளனர்.

இதில் ஒரு நிறுவனத்துக்கு மட்டும் 2 மில்லியன் டாலர் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

மேலும் கூகுளின் பங்குகளையும் பாதி விலைக்கு விற்கச் செய்துள்ளனர்.

இந்த மூவரும் பாங்காங்கில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தபோது அங்கு வந்த சில அமெரிக்க, ஐரோப்பிய நபர்கள் தங்களது பங்குகளை ஹோட்டலில் இருந்த இன்டர்நெட் மையத்தில் ஆன் லைனில் வர்த்தகம் செய்வதைப் பார்த்துவிட்டு, அந்த கம்ப்யூட்டர்களில் அமர்ந்து பாஸ்வேர்ட்களை 'சுட்டுள்ளனர்'.

அதன் பின்னர் அந்த அக்கெளன்ட்களை 'ஹேக்' செய்து அவர்களது வாழ்க்கையில் 'விளையாடியுள்ளனர்'. தொடர்ந்து மேலும் பலரது அக்கெளன்ட்களையும் 'ஹேக்' செய்துள்ளனர்.

No comments: