Wednesday, June 24, 2009

மூஸ்லீம்களும் - இடஒதுக்கீடும்

சல்மான் குர்ஷித் அறிவாரா?

மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் தேவையில்லாமல் வார்த்தைகளைவிட வீண்வம்பை விலைக்கு வாங்கிவிட்டார்.

இட ஒதுக்கீடு வழங்கிவிடுவதால் முசுலிம்களின் பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்ந்துவிடப் போவதில்லை என்று கூறியிருக்கிறார்.

முசுலிம்களின் பிரச்சினைகள் என்பது வெறும் பொருளாதாரம் சம்பந்தப்பட்டது என்கிற அளவில்தான் அமைச்சரின் சிந்தனை தேங்கி நிற்கிறது என்று தெரிகிறது.

முதலாவதாக முசுலிம்களுக்கு தேவைப்படுவது கல்வியும், சமூகத்தில் ஒரு கவுரவத்தை அளிக்கும் அரசு வேலை வாய்ப்பும்தான் என்பது வளரவேண்டிய ஒரு சமூகத்துக்குத் தேவையானவையாகும்.

இன்னொரு வகையில் பார்த்தாலும் பொருளாதார வளர்ச்சிக்கு கல்வியும் அவசியம் என்பதையும் மறந்துவிடக்கூடாது. அதுவும் வளர்ந்துவரும் இந்த விஞ்ஞான உலகில் பொருளாதார வளர்ச்சிக்குக் கல்வி மிக அவசியமே!

முசுலிம் மக்களின் கல்வி நிலை எந்த நிலையில் இருக்கிறது என்கிற விவரம் அமைச்சருக்குத் தெரியுமா என்று தெரியவில்லை.

தொடக்கப் பள்ளிகளிலிருந்து உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லும் எண்ணிக்கையில் முசுலிம் மாணவர்களின் வீழ்ச்சி அதிர்ச்சிதரக் கூடியதாக உள்ளது.

இதன் காரணமாக உயர்கல்வியில் முசுலிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளனர்.

4.1.2009 நாளிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏட்டில் ஒரு புள்ளி விவரம் வெளிவந்தது. இந்தியாவில் பல பிரிவுகளைச் சார்ந்த மாணவர்கள் மேல்படிப்புச் சேர்க்கையில் அவரவர் சமூகத்தில் எவ்வளவு விகிதாச்சாரம் இருக்கிறார்கள் என்கிற புள்ளி விவரம் அது. இந்தக் கணக்கீட்டுக்கு கிராஸ் என்ரோல்மென்ட் ரேசியோ (ஜி.இ.ஆர்) என்று கூறுகின்றனர்.

இதன்படி பார்க்கும்பொழுது கிறித்துவர்களின் ஜி.இ.ஆர். 19-.85 விழுக்காடாகும். சீக்கியர்கள் 17.81 விழுக்காடாகும். இந்து தாழ்த்தப்பட்டவர்கள் 7.37 விழுக்காடாகும். முசுலிம்கள் 7.7 விழுக்காடாகும். கிட்டத்தட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் நிலையில்தான் முசுலிம்கள் உள்ளனர் என்பது இந்தப் புள்ளி விவரம் மூலம் அறிய முடிகிறது. முசுலிம்களில் எழுத்தறிவு பெற்ற-வர்களின் விழுக்காடு 42 தான். தேசிய சராசரியைவிட இது மிகவும் குறைவானதாகும்.
மெத்த படித்த அமைச்சராகவும் ஆகியுள்ள சல்மான் குர்ஷித் இந்த விவரங்களையெல்லாம் அறிந்திருந்தால் வெறும் வார்த்தைகளை கொட்டியிருக்க மாட்டார்.

முசுலிம் மக்களின் சமூக நிலையைக் கணித்துதான் சச்சார் கமிஷனும், அதனைத் தொடர்ந்த ரங்கநாத் மிஸ்ரா கமிஷனும் அமைக்கப்பட்டன. முசுலிம்களுக்கு தேசிய அளவில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று பரிந்துரைத்துள்ளனர்.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான் இந்த ஆணையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பதுகூட அமைச்சருக்குத் தெரியவில்லை போலும்.
தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் முசுலிம்களின் இட ஒதுக்கீடுக்கு வகை செய்துள்ளன. அரசுப் பணிகளைப் பொறுத்தவரை முசுலிம்கள் 5 விழுக்காட்டுக்கும் கீழே உள்ளனர் என்று சச்சார் ஆணையம் கூறுகிறது.

அர்ஜூன் சென்குப்தா அறிக்கையோ, இந்தியாவில் உள்ள முசுலிம்களில் 85 விழுக்காட்டினர் அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர் என்றும், தனி நபர் மாத வருமானம் ரூ.60-0-_க்கும் கீழ்தான் என்றும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவேண்டும். உயர்கல்வி பெறவேண்டும் என்ற நினைப்பும் செயல்பாடும் எங்கிருந்து குதிக்கும்?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கிறித்துவர்களுக்கும், முசுலிம்களுக்கும் 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடுக்கு தி.மு.க. அரசு வழி செய்தது.

சில நாள்களில் கிறித்துவர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வேண்டாம் என்று கூறிவிட்டனர். காரணம், கல்வி, வேலை வாய்ப்புகளில் இந்த மூன்றரை சதவிகிதத்தைவிட கிறித்துவர்கள் அதிகமாகவே பலன் பெற்று வருகின்றனர். ஆனால், முசுலிம்களோ இந்த மூன்றரை விழுக்காடு இட ஒதுக்கீடுக்கும் பச்சைக் கொடிகாட்டி விட்டனர். காரணம், இவர்களின் நிலைமை அதளபாதாளத்தில் கிடப்பதுதான். இதனையெல்லாம் புரிந்துகொண்டு இனிமேலாவது அமைச்சர் நிலையில் உள்ளவர்கள் பொறுப்புணர்ச்சியோடு எதையும் அளந்து பேசுவது நல்லது.

---------------------நன்றி:"விடுதலை" தலையங்கம் 23-6-2009

No comments: