Sunday, June 14, 2009

சர்ச்சைக்குள்ளான மகளிர் தனி இடஒதுக்கீடு மசோதா!

இறைவனின் படைப்பில் ஆணும்-பெண்ணும் சமம்தான் என்றாலும், இருவரின் குணம், வலிமை, சமூக சூழல் இவையெல்லாம் கவனத்தில் கொண்டு இஸ்லாம், பெண்கள் ஒரு நல்ல மகளாக, மனைவியாக, தாயாக இருந்து வீட்டின் பொறுப்புகளை கவனித்து நிர்வகிக்கவேண்டும் என்று கட்டளையிடுகிறது. இதை பார்க்கும் சிலர் இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறது என்று ஒரு புறம் கூப்பாடு போடுவர். இஸ்லாம் பெண்களை வீட்டில் இருக்க சொல்கிறதே அன்றி, மற்ற எல்லாவகையான உரிமைகளையும் வழங்கியுள்ளது.
பிறக்கும் உரிமை
கல்வி உரிமை
பேச்சுரிமை
மணமகனை தேர்ந்தெடுக்கும் உரிமை
அட்வான்ஸ் மஹர்
விவாகரத்து உரிமை
சொத்துரிமை
மறுமணம் செய்யும் உரிமை.
இப்படியான பல்வேறு உரிமைகளை வழங்குவதோடு , பெண்களை வேலைக்கு சென்று அல்லது அரசியல் உள்ளிட்ட பதவிகளுக்கு சென்று மன, சுமைகளுக்கும் ஆளாகாமல் பெண்களை பராமரிக்கும் முழு கடமையை ஆண்கள் மீது இஸ்லாம் சுமத்தி பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்குகிறது.

ஆனால் இன்று பெண்கள் முன்னேற்றம் என்ற பெயரில் ஆண்களுக்கு சமமாக வேலை, அரசியல் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை அலங்கரிப்பதுதான் பெண்களின் கவுரவம் என்ற மாய தோற்றம் உருவாக்கப்பட்டு அதை நோக்கி பெண்கள் சமூகம் இன்று சென்று கொண்டிருக்கிறது. ஆண்களுக்கு சமமாக எல்லா துறைகளிலும்[அரசியல்உட்பட] பெண்கள் பரினமிப்பதால், பல நேரங்களில் பல இடங்களில் அவர்களது பெண்மைக்கு இழுக்கு உண்டாகும் காரியங்கள் நடப்பதையும் நாம் பத்திரிக்கைகளில் பார்க்கிறோம். அதிலும் மற்ற துறைகளைவிட அரசியல் துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பது அவர்களுக்கு நன்மையை விட அதிகமாக தீமைகளை ஏற்ப்படுத்தித்தரும்.

இத்தகைய அரசியலில் சில ஆண்டுகளாக பெண்கள் அதிக அளவில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தியாவின் இதயமான நாடாளுமன்றத்தின் சபாநாயகராக ஒரு பெண், இந்தியாவின் முதல் குடிமகளாக ஒரு பெண் என்று இடம்பெறும் அளவுக்கு அரசியலில் அவர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது . இவை காணாது என்பது போல அரசு தனி இடஒதுக்கீடு மூலம் இன்னும் அதிகமாக பெண்களை அரசியலுக்கு இழுக்க முயற்சிக்கிறது. அதற்காகத்தான் நாட்டில் எத்துணையோ பிரச்சினைகள் இருக்க அவைகளை புறந்தள்ளிவிட்டு மகளிருக்கு தனி இடதுக்கீடு மசோதா நூறு நாள் திட்டத்தில் நிறைவேற்றப்படும் என்று ஜனாதிபதி உரையில் குறிப்பிட செய்தது.

இந்த மசோதாவுக்கு அரசே எதிர்பாராத பகுதிகளில் இருந்து எதிர்ப்பு வலுத்துள்ளது. சரத் யாதவ், இப்போதுள்ள அடிப்படையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் பாராளுமன்றத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன் என்கிறார். முக்கிய தலைவர்களை அரசியலில் இருந்து அப்புறப்படுத்தவே இந்த மசோதாவை காங்கிரஸ் கொண்டு வருகிறது என்கிறார் முலாயம்சிங் யாதவ். இந்த மசோதாவை இப்போது உள்ளவடிவில் நிறைவேற்ற நாங்கள் விடமாட்டோம்.தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பெண்களும் பயன்பெறும் வகையில் உள் ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டும் என்கிறார் லாலு பிரசாத் யாதவ். இவர்களை எல்லாம் தாண்டி இன்னொரு முக்கியமானவரும் எதிர்க்கிறார். அவர்தான் உமாபாரதி! லாலு சொன்னது போன்ற கருத்தை இவரும்முன்வைக்கிறார்.

இப்படி எதிர் கட்சிகளின் எதிர்ப்பை மீறி இந்த மசோதா நிறைவேற்ற பட்டாலும் அதனால் பெண்களுக்கு எந்த முன்னேற்றமும் இல்லை என்பதை அரசு புரிந்து கொள்ளவேண்டும். எப்படி எனில், தமிழகத்தில் உள்ளாட்சிகளில் பெண்கள் மட்டுமே போட்டியிடும் இடங்கள் ஒதுக்கப்பட்டது. அதில் பெண்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். ஆனால், அவர்களில் பெரும்பாலோர் ரப்பர் ஸ்டாம்பாக இருப்பதோடு சரி! பெரும்பாலும் அவர்களது கணவரோ, அல்லது உறவினரான ஆண்கள்தான் அதிகார பலத்தோடு வளைய வருகிறர்கள். இதே நிலைதான் மகளிர் மசோதா நிறைவேற்றப்பட்டாலும் ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு தொகுதியில் ஒரு பெண் போட்டியிட விரும்பினால் அது அவரின் உரிமை. ஆனால் அந்த தொகுதியில் பெண்தான் போட்டியிடவேண்டும் என்ற நிர்பந்தத்தை உண்டாக்கும் சட்டத்தை அரசு கொண்டுவருவது அதிகார தோரனையாகும்.இதுபோன்ற மசோதாக்களை ஓரம்கட்டிவிட்டு, முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கி ஒரு சமுதாயத்தின் வாழ்க்கை தரத்தை முன்னுக்கு கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்கவேண்டும். தேர்தலில் காங்கிரசுக்கு 'தொண்டைகிழிய' கத்தி பிரச்சாரம் செய்தவர்கள் காங்கிரசை வலியுறுத்தவேண்டும்.

No comments: