Thursday, September 17, 2009

கைதிகள் விடுதலை; ஒரே கல்லில் இரு மாங்காய் அடித்த கலைஞர்!


தமிழக அரசியல் தலைவர்களில் 'அரசியல் சாணக்கியர்' என்று கருணாநிதியை வர்ணிப்பர். அவரும் அதற்கேற்றார்போல் அவ்வப்போது தனது சாணக்கியத்தனத்தை நிரூபித்துக்கொண்டிருக்கிறார். கடந்த ஆண்டு அண்ணா பிறந்த நாளின்போது 1405 கைதிகள் விடுதலைக்கு உத்தரவிட்ட கருணாநிதி, அதில் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பரிதவித்துவரும் முஸ்லிம்கள் விடுதலையாகாமல் பார்த்துக்கொண்டார். அதுபற்றி சில சமுதாய அமைப்புகள் கோடிட்டு காட்டியபோது, அவர்கள் மதரீதியான மோதல் சம்மந்தப்பட்ட வழக்கில் தொடர்புடையவர்கள் எனவே அவர்களை விடுதலை செய்வது சாத்தியமில்லை என்று ஒரு சால்ஜாப்பு கருத்தையும் உதிர்த்தார். ஆனால், இந்த ஆண்டு 'பெரிய மனது வைத்து' அடுத்த மாதம் தண்டனை முடிந்து விடுதலையாக இருந்தவர்களில் பத்து பேரை விடுதலை செய்து இஸ்லாமிய சமுதாயத்தின் மீது தனக்குள்ள அக்கறையை[?] காண்பித்துள்ளார். விடுதலையான கைதிகளுக்கு விடுதலையானது ஒரு புறம் அவர்களுக்கு மகிழ்ச்சி என்றாலும், மறுபுறம் கருணாநிதியின் கருணையால் விடுதலையானவர்கள் என்ற பெயர் அவர்களுக்கு வேதனையளிப்பதாக உள்ளது.
இதுபற்றி விடுதலையான அஸ்ரப் என்ற சகோதரர், நாங்கள் இன்னும் பத்து-இருபதுநாளில் தண்டினை காலம் முடிந்து தானாகவே விடுதலையாக வேண்டியவர்கள். மற்ற கைதிகள் 50 பேர் சிறையில் உள்ளனர். அவர்களையும் விடுவித்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என்று கூறியுள்ளார். ஆக கருணாநிதி ஆடிய சதுரங்கம் தெளிவாக புலப்படுகிறது. இது ஒருபுறமிருக்க , இந்த கைதிகள் விடுதலைக்கு எங்கள் இயக்கமே காரணம் என்று விரைவில் சிலர் கிளம்பாமல் இருந்தால் சரி! அதே நேரத்தில் மற்றொரு உண்மையான விடுதலையும் இந்த நாளில் நிகழ்ந்துள்ளது. ஆம்! உலக ரவடி புஷ்ஷிற்கு வாழ்நாள் இழிவை தந்த மாவீரன் முன்தசர் அல் ஸய்தி இராக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மூன்றாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவர் சுமார் பத்து மாதங்களில் விடுவிக்கப்பட்டுள்ளார். புனிதமிக்க ரமலானில் மேற்கண்ட இரு விடுதலைகளும் முஸ்லிம் உலகுக்கு மகிழ்ச்சியை தரக்கூடியதாகும்.

No comments: