Monday, December 28, 2009

பர்தா அணியாமல் இருந்தால் தான் எங்களுக்கு கஷ்டம்!மதவக்கிர கிருக்கன்களுக்கு சவுக்கடி!!


thanks to : -சுமஜ்லா.



............... இந்த இடுகைக்கு என்ன காரணம் என்றால்....


நான் பதிவர் சந்திப்புக்கு பர்தாவுடனே சென்றேன், கடைசிவரை பர்தாவுடனே இருந்தேன் என்று எழுதியிருந்ததற்கு, முந்தய பதிவுகளில் மாற்று மத அன்பர் ஒருவர் இவ்வாறு மறுமொழியிட்டிருந்தார்,


//நான் பேண்ட்டுடனே சென்றேன், கடைசிவரை பேண்ட்டுடனே இருந்தேன்; பெண்கள் புடவையுடனே சென்றார்கள், கடைசிவரை புடவையுடனே இருந்தார்கள், இப்படியெல்லாம் நாங்கள் எழுதினோமா?//


இதைப் படித்ததும், எனக்கு சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை! பர்தாவைப் பற்றி பல தவறான கருத்துக்கள் மாற்று மத அன்பர்களிடையே உள்ளது, அதைத் தெளிவாக்குவது தான் இந்த இடுகையின் நோக்கம்!


சில கேள்விகளும் பதில்களும்...


பர்தா என்றால் என்ன?


பர்தா என்பது உடையல்ல...அது உடைக்கு மேல் அணியும் ஒரு அங்கி தான், அதைக் கழட்டினால் உள்ளே உடை இருக்கும்!!!


அழகாக உடை உடுத்தி, நகையெல்லாம் அணிந்து, பிறகு அதை பர்தாவால் மறைத்துக் கொள்கிறீர்களே?!


நாங்கள் திருமணம் போன்ற விஷேசங்களில், ஆண்களுக்கு தனி இடம், பெண்களுக்கு தனி இடம் என்று ஒதுக்கி இருப்போம். இருவரும் கலப்பதில்லை. ஆக, நாங்கள் வெளியே செல்லும் போது பர்தா அணிந்து சென்றாலும், திருமண மண்டபத்தில் பெண்கள் பகுதிக்கு சென்றதும் அதை கழட்டி பையில் வைத்து விடுவோம். பிறகு திரும்பும் போது, மீண்டும் அணிவோம். உறவுகளின் இல்லங்களுக்கு செல்லும் போது இதே போலத்தான்.


பர்தா அணியச் சொல்லி கட்டாயப்படுத்துவது யார்?


எங்கள் பெண்களிடம் ஏன் என்னிடமும் கணவர் உட்பட எந்த ஒரு ஆணும் கட்டாயப்படுத்தியதில்லை. நானே விரும்பித் தான் அதை அணிகிறேன். அதன் சவுகரியங்களை உணர்ந்த எந்த ஒரு பெண்ணும், பர்தா இல்லாமல் வெளியே செல்வதை விரும்புவதில்லை.


பர்தா ஏன் அணிகிறோம்?


எங்களுடைய அழகும் வனப்பும் கணவருக்கு மட்டுமே சொந்தம் என்று நினைக்கிறோம். இது ஒரு வித சுயநலம் போலத்தான் தெரியும். ஆயினும், எங்கள் வளர்ப்பு முறை அப்படி! ஆக, வெளி ஆண்கள் யாரும் எங்கள் உடலின் தோற்றத்தைப் பார்ப்பது எங்களுக்கு விருப்பமில்லை! அதற்காகத்தான் பர்தா அணிகிறோம்.


ஆண்கள் மட்டும் ஏன் பர்தா அணிவதில்லை?


நிச்சயமாக எங்கள் மதத்தில் ஆண்களுக்கும் பர்தா இருக்கிறது. ஆனால் அது வேறு விதம். ஆணும் பெண்ணும் உடல் தோற்றத்தில் வேறு வேறு மாதிரி இருக்கும் போது, எப்படி இருவருக்கும் ஒரே மாதிரி பர்தா அணிய முடியும்?


ஆண்களுக்கு தாடியும் நீளமான அங்கியும் தொப்பியும், தொப்புள் முதல் முட்டுக்கால் வரை மறைப்பதும் அவர்களுடைய பர்தா போலத்தான். அதோடு, பெண்களைப் பார்த்தால், தம்முடைய பார்வையைத் தாழ்த்திக் கொள்ளும்படி அவர்களுக்கு வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

ஏன் ஒரு சில முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதில்லை?


அதற்குக் காரணம், அவர்களின் வளர்ப்பு தான். நற்குடியில் பிறந்து, இஸ்லாமிய பாரம்பரியப்படி வளர்க்கப்படும் அனைவரும் நிச்சயமாக பர்தாவை விரும்புவார்கள். பொதுவாக ஒரு குடும்பத்தில் பெண் எடுக்கும் போது, அக்குடும்பப் பெண்கள் பர்தா அணிபவராக இருந்தால்,விரும்பி பெண் எடுப்பார்கள்.


பர்தா அணிவது கஷ்டமாக இல்லையா?


உடை அணிவதை நாம் கஷ்டமாக நினைப்பதில்லையே! நாம் நம் கைகளை ஓரளவுக்கும், உடலின் சில பாகங்களையும், உடையினால மறைத்துக்கொள்கிறோம். கையின் பெரும்பகுதியும், கழுத்தும் முதுகும் இடுப்பும் தெரியும்படியாக சேலை கட்டுகிறோம்.


இன்னின்ன இடத்தை மறைக்க வேண்டும், இன்னின்ன இடத்தை மறைக்க வேண்டியதில்லை என்று தீர்மானித்தது யார்? முதன்முறையாக சேலை உடுத்தும் பெண், இடுப்பு வெளியே தெரியும் போது, சற்று சங்கோஷமடைவாளல்லவா? அது போலத்தான், மீதியுள்ள பாகங்களான கழுத்து, கை முதுகு ஆகியவை வெளியே தெரியும் போது, நாங்கள் அவமானப்படுகிறோம். ஆக, பர்தா அணியாமல் இருந்தால் தான் எங்களுக்கு கஷ்டம்.


காலத்துக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ளாமல் ஏன் இன்னும் பர்தா அணிகிறீர்கள்?


பர்தா அணிவதால், எம்மினப் பெண்களின் வளர்ச்சி தடைபடுவதில்லை. மாறாக, படிக்கும் காலத்தில் காதல்வலையில் வீழ்ந்து தம்மை இழந்துவிடாமல், நேரிய வழியில் செல்வதற்கு இது ஏதுவாக இருக்கிறது. பர்தா அணிந்தாலும், நாங்கள் விரும்பியதைப் படிக்கிறோம். விரும்பிய துறையைத் தேர்ந்தெடுத்து முன்னேறுகிறோம். அதற்கு நானே உதாரணம்.


ஏன் இந்த பதிவு?


ஆரம்பத்திலேயே நான் சொல்லிவிட்டேன். மற்றபடி நான் அனைத்து மத பழக்கவழக்கங்களையும் மதிப்பவள்.


சைவ சித்தந்தக் கொள்கையின் பட்டையையும், திருமால் பக்தர்களின் நாமத்தையும், பார்ப்பனீயர்களின் பூணூலையும், பாதிரிகளின் அங்கியையும், கன்னியாஸ்த்திரிகளின் ரோஸரியையும், சீக்கியர்களின் டர்பனையும் புரிந்து கொண்டு அதற்கு மரியாதை தருபவள் நான். அவர்களின் உணர்வுகளை மதிக்கிறேன். அதே போல எம்மையும் எம்பர்தாவையும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தான் இந்த இடுகை!


சந்தேகங்கள் இருந்தால் பின்னூட்டத்தில் கேட்கலாம். ஆனால், மதவக்கிரம் பிடித்த அனானி கமெண்ட்டுகளுக்கு இங்கு இடமில்லை என்று சொல்லிக் கொள்கிறேன்.



Wednesday, December 23, 2009

மாணவியிடம் காமலீலை - ஆசிரியர் கைது

மாணவியுடன் காம லீலையில் ஈடுபட்டு அதை செல்போனில் படம்பிடித்த டியூஷன் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.


மணலி பலராமன் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் (34). திருமணமானவர். மகள், மகன் உள்ளனர். மணலி காமராஜர் தெருவில் டியூஷன் சென்டர் நடத்தி வந்தார். இவரிடம், படிக்க வந்த மணலியை சேர்ந்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார். அதை தனது செல்போனிலும் படம் பிடித்துள்ளார். இதை நண்பரிடம் காட்ட அவர் மூலம் பலருக்கும் எம்எமஎஸ் மூலம் பரவியது. மணலியில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மாணவியின் பெற்றோர் போலீசுக்கு சென்றனர். மாணவியின் எதிர்காலம் கருதி வழக்குப்பதிவு செய்யாமல் போலீசார் விசாரித்து வந்தனர். இதையறிந்த டியூஷன் ஆசிரியர் குடும்பத்துடன் தலைமறைவானார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.


செல்வராஜின் சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் கோனூருக்கு தனிப்படை போலீசார் விரைந்தனர். இதையறிந்த செல்வராஜ், திருப்பதிக்கு தப்பி சென்றார். ரயிலில் ஒவ்வொரு இடமாக சுற்றி வருவது தெரிந்தது. நேற்று சென்ட்ரலில் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் அங்கு சென்று, செல்வராஜை மடக்கி பிடித்தனர்.


பின்னர் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். பல மாணவிகளின் வாழ்க்கையை அவர் சூறையாடி இருக்கலாம் என்ற கோணத்தில் இன்ஸ்பெக்டர் கணேசன் தீவிரமாக விசாரித்து வருகிறார். இதற்கு பின்னரே, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என தெரிகிறது.

பலஸ்தீன் பெண்கைதி தொடந்து 100 நாட்களுக்கும் மேலாக தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

ரமல்லா – இஸ்ரேலிய ரமேல் சிறையில் தமது இளைய மகள் கடந்த நூறு நாட்களுக்கும் மேலாகத்

தொடர்ந்து தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக பெண் கைதி வஃபா அல் பெஸ்ஸின் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.

மனிதாபிமான அமைப்புகள் தலையிட்டு, தமது மகள் மீது இஸ்ரேலிய சிறை நிர்வாகம் மேற்கொண்டுவரும் நியாயமற்ற வதைச்செயல்களை நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அப்பெண் கைதியின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடும்ப அங்கத்தவர்கள் சென்று கைதியைச் சந்திப்பது, கைதி தன் வழக்கறிஞரைச் சந்திப்பது முதலான அனைத்தையும் தடுத்துள்ளதன் மூலம் வெளி உலகத்துடன் எவ்வகையிலும் தொடர்புகொள்ளவே முடியாமல் இஸ்ரேலிய சிறை நிர்வாகம் தமது மகளைத் துன்புறுத்துவதாக அப் பெண்ணின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

பெய்ட் ஹனூன் கடவையருகில் வைத்து 2005 ஜூன் மாதம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் கடத்திச் செல்லப்பட்ட வஃபா, இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் கோர்ட்டினால் 12 ஆண்டுகள்- 14 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். பெரும்பாலும் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தனது தண்டனைக் காலத்தில் நான்கரை ஆண்டுகளைத் தற்போது அவர் நிறைவு செய்துள்ளார்.

நன்றி: PIC

free palestine

குஜராத்: கொடூரத்தின் பதிவாக ஒரு குறும்படம் ‘திற' சென்னையில் எழுச்சியுடன் நடைபெற்ற திரையிடலும் திறனாய்வும்

குஜராத்தில் 2002ம் ஆண்டு நடைபெற்ற முஸ்லிம் இனப்படுகொலைகள் உலகையே உறைய வைத்தன. இந்துத்துவத்தின் சோதனைச் சாலை என வர்ணிக்கப்பட்ட குஜராத்தின் முதலமைச்சர் நரேந்திர மோடியின் ஆசிகளோடும், வழிகாட்டுதல் மற்றும் அரசு எந்திர உதவிகள் துணையுடனும் சங்பரிவார பயங்கரவாதிகள் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களைப் படுகொலை செய்தனர். படுகொலை செய்யப்பட்டவர்களில் பெண்களும், குழந்தைகளும் ஏராளம் அடங்குவர். பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சூறையாடப்பட்டன. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் சொந்த ஊரிலேயே அகதிகளாக்கப்பட்டனர்.

மத்தியிலும், மாநிலத்திலும் பாஜகவின் ஆட்சி நடந்தால் இத்தகைய இனப்படுகொலைகள் அரசு உதவியுடன் அரங்கேறும் என்று குஜராத்தில் காட்டப்பட்டது.

இதையெல்லாம் முன்னின்று நடத்திய கொலை பாதகன் மோடிக்கு மறுபடியும் முதலமைச்சர் பதவி, தண்டனையாக(?) வழங்கப்பட்டது. (முஸ்லிம்களை அகதி முகாம்களில் அடைத்துவிட்டு தேர்தலில் வெற்றி பெற்றது பாஜக.

குஜராத் இனப்படுகொலைகளின் போது முஸ்லிம் பெண்களின் மீது சங்பரிவார ஆண் மிருகங்கள் நடத்திய பாலியல் கொடுமைகள் எழுத்தில் வடிக்க இயலாதவை. இந்தக் கொடியவர்களுக்கு நீதிமன்றங்களில் கண்டனம்தான் தெரிவிக்க முடிந்ததே தவிர, நடந்த கொலைகளுக்கு உரிய தண்டனைகளை வழங்க முடியவில்லை.

மறதியால் சபிக்கப்பட்ட மக்களை திசைதிருப்ப எத்தனையோ வேடிக்கைகள் இங்கே அரங்கேறும். மதவெறியின் கொடூரங்களை அதனால் நடத்தப்பட்டக் கொடுமைகளை, அதை வழிநடத்திய தலைமைகளை, சட்டக் காப்பாளர்களின் கயமைகளை, மக்கள் மறந்துவிடாமலும், மனங்கள் மரத்துவிடாமலும் யாராலும் தடுக்க முடியும்.

அதைச் செய்யவல்ல ஒரே ஆயுதம் கலை ஊடகம்தான். குஜராத்தின் கொடுமைகளை சுப்ரதீப் சக்ரவர்த்தியின் கோத்ரா தக், ரமேஷ் டாம்பிளின் ஆக்ரோஷ் ஆகிய குறும்படங்களின் வாயிலாக வெளிக்கொணரப்பட்டன.

ஆனால் தமிழில் குஜராத்தின் கொடுமைகளை அதியற்புதமாய்ப் பதிவு செய்துள்ளார் இளம் இயக்குநர், பிரின்சு என்.ஆர்.எஸ். பெரியார்.

‘திற' (Open) என்ற அவரது குறும்படத்தின் திரையிடல் மற்றும் திறனாய்வு 17.12.09 அன்று சென்னை ரஷிய கலாச்சார மையத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரி மாணவரான பிரின்சு என்.ஆர்.எஸ். பெரியார், மக்கள் மனசாட்சியை உலுக்கும் வகையில் இந்தக் குறும்படத்தை எடுத்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். குண்டர்களின் அயோக்கியத்தனங்களை, அராஜகங்களை இப்படித் தோலுரித்துக் காட்டிய படம், நாமறிந்த வரை தமிழில் இதுபோல வேறில்லை எனலாம்.

படம் 12 நிமிடங்கள் மட்டுமே ஓடுகிறது. அது ஏற்படுத்தும் தாக்கமோ மணிக்கணக்கில், ஏன் நாள்கணக்கில் நீள்கிறது.

‘திற’ குறும்படம், ஒட்டுமொத்த தேசத்தையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரிக்கிறது என்றால் மிகையில்லை.

குஜராத் கலவரத்தில், தாயைப் பறிகொடுத்து, தந்தையிடமிருந்தும் பிரிக்கப்பட்ட 18 வயது முஸ்லிம் பெண் சகீனா, சங்பரிவாரக் கொடியவர்களால் சிதைக்கப்படும் கொடுமையைப் படம் பதிவு செய்கிறது. இது, மதவெறியால் தெறித்த ரத்தத்தின் ஒரு துளி என்கிறது.

திற படத்தின் திரையிடல் மற்றும் திறனாய்வு நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையேற்றார். சாக்ரடீஸ் பெரியார் வரவேற்புரையாற்றினார். கவிஞர் ராஜசேகர் சிறப்பாகத் தொகுத்து வழங்க, தி.க. பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன், நக்கீரன் கோபால், தமுமுக மாநிலச் செயலாளர் ஜெ. ஹாஜாகனி, பேரா.சுபவீ, திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், ‘நிழல்’ ஆசிரியர் திருநாவுக்கரசு, தலித் முரசு ஆசிரியர் புனிதப் பாண்டியன், வழக்குரைஞர் அருள்மொழி, திரைப்படக் கல்லூரி பேரா. வி.எம். ரவிராஜ், பட இயக்குநர் ஃபாத்திமா பீவி ஆகியோர் திறனாய்வு உரையாற்றினர்.

நன்றியுரை ஆற்றிய குறும்பட இயக்குநர் பிரின்சு என்.ஆர்.எஸ்.பெரியார், “பட விழாக்களுக்கு இப்படத்தை அனுப்பி வைப்போம். படம் பார்த்த உடனேயே ‘அருமையாக இருக்கிறது’ என்று தொலைபேசி வரும். பிறகு என்ன நடக்குமோ நடக்குமோ தெரியாது. நடுவர்கள் இப்படத்தைத் திரையிடவே அனுமதிக்க மறுக்கிறார்கள் என்று தகவல் வரும். இப்படி ஏராளமானப் புறக்கணிப்புகள், தடைகளைத் தாண்டி இந்தக் குறும்படம். தமிழக அரசின், சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை வென்றிருக்கிறது என்றார்.

வழக்குரைஞர் அருள்மொழி, “55 ஆண்டுகளுக்கு முன்னால் உருது எழுத்தாளர் மண்டோ எழுதிய மூலக்கதையைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டிருந்தாலும் இன்றைக்கும் அப்படியே பொருந்துகிறது. பெண்கள் மீதான கொடுமைகளை இப்படம் உள்ளத்தை உலுக்கும் வகையில் பதிவு செய்துள்ளது என்றார்.

தலித் முரசு புனிதப் பாண்டியன், ‘பிற்படுத்தப்பட்டோருக்கும், தலித் மக்களுக்கும் இடையில் கூர்மைப்படுத்தப்படும் சாதி ஆதிக்க உணர்வை எடுத்துரைத்து, அதை அடியோடு களைய அணிதிரள வேண்டும் என்றார்.

பேராண்மை, ஈ, இயற்கை ஆகிய படங்களின் மூலம் சமூக அக்கறையுள்ள திரைப்படங்களால் வெற்றி பெற்றுள்ள இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், படத்தை வெகுவாகப் பாராட்டினார். ‘இளம் வயதில் எனக்கு எழுத்தாளர் மண்ட்டோவைத் தெரியவில்லை. பிரின்சுக்குத் தெரிந்திருக்கிறது. சினிமா எடுப்பது ஒன்றும் கஷ்டமான வேலையில்லை. இதுபோன்ற குறும்படங்களை எடுப்பதுதான் சிரமம். வளரும் தலைமுறையை வாழ்த்துகிறேன் என்றார்.

இப்படத்தை எடுக்க அனுமதியளித்த திரைப்படக்கல்லூரி பேராசிரியர் ரவிராஜ், “எம்.ஜி.ஆர். அரசு திரைப்படக் கல்லூரியைப் பார்வையிட வந்தவர்கள் கல்லூரியின் கட்டடங்கள் மற்றும் வசதிகளைக் குறை சொன்னார்கள். அவர்களிடம் ‘திற’ படத்தைப் போட்டுக் காட்டினேன். வியந்து போனவர்கள், திரைப்படக் கல்லூரிக்குப் பெருமை சேர்த்த படைப்பு இது” என்றார்கள்.

திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேரா. சுபவீ, “படம் எடுப்பது மட்டுமல்ல, மேடையில் பேசுவது, கவிதை எழுதுவது, நடிப்பது என எதுவுமே சிரமமானதில்லை. அதை மனிதநேயத்தோடும், கொள்கைக்காகவும் செய்வதுதான் சிரமமானது. தாழ்த்தப்பட்டவர்களை சங்பரிவாரத்தினர் மக்கள் தொகைக் கணக்கில்தான் சேர்த்துக் கொள்கின்றனர். கோவிலுக்குள் சேர்ப்பதில்லை. சூலம் வழங்கும் நிகழ்ச்சியில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் மதச்சார்பற்ற இந்துக்களையும் சேர்த்தே அழிப்போம் என்றுதான் சொல்கிறார்கள். இத்தகையக் கொடியவர்களை உயிருள்ளவரை எதிர்க்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. இத்திரைப்படம் தெருத்தெருவாக பாராட்டப்பட வேண்டும்' என்றார்.

தமுமுக மாநிலச் செயலாளர் பேரா. ஹாஜாகனி, “திற என்ற இத்திரைப்படம், மனதைத் திறப்பதாகவும், மௌனப் பூட்டுக்களைத் திறப்பதாகவும் அமைந்துள்ளது. இப்படத்தில் காட்டப்பட்ட கொடுமைகளைச் செய்தவர்கள், நாங்கள்தான் இதைச் செய்தோம் என்று பெருமைபொங்க பேட்டி கொடுத்தார்கள். தெஹல்கா இதழ், அதைப் படம்பிடித்து ஒளிபரப்பியது. அவர்களுக்குச் சட்டம் என்ன தண்டனைக் கொடுத்தது?

பாபரி மஸ்ஜிதை இடிக்க ரதயாத்திரை போன அத்வானியையும், அந்த இடத்தை சமப்படுத்துங்கள் என்று இடிப்பதற்கு ஆணையிட்ட வாஜ்பாயையும், பாபரி மஸ்ஜித் இடிப்பை முன்னின்று நடத்திய குற்றவாளிகளையும் சட்டத்தால் தண்டிக்க முடிகிறதா?

மும்பையில் 2 ஆயிரம் முஸ்லிம்களைப் படுகொலை செய்த சூத்ரதாரி என நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா ஆணையத்தால் அடையாளம் காட்டப்பட்ட பால்தாக்கரேவைத் தண்டிக்க முடிந்ததா? உச்சநீதிமன்றம் ராகவன் கமிட்டி என்ற கமிட்டி அமைத்து மோடியின் கொடுமைகளை விசாரித்ததே, மோடி சிறையிடப்பட்டாரா?

இல்லை. சட்டத்தால் சங்பரிவாரத்தின் சல்லிவேரைக் கூட கிள்ளிப்போட முடியவில்லை. ஆனால், செய்த குற்றம் என்னவென்றே தெரியாமல் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் ஆண்டுக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில், எந்த ஆதாரமும் இல்லையென்றாலும் கூட, கூட்டு மனசாட்சியின்படி அப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனை அளிக்கிறது நீதிமன்றம். நாங்கள்தான் செய்தோம் என்று குற்றவாளிகளே கூறினாலும், நீதிமன்றங்களில் அவர்கள் தண்டிக்கப்படுவதில்லை.

எனவே உறங்குகின்ற நாட்டின் மனசாட்சி உலுக்கி எழுப்பப்பட வேண்டும். அதை இப்படம் திறம்படச் செய்துள்ளது'' என்றார்.

நக்கீரன் கோபால்-“இந்தப் படத்திற்குக் கைதட்ட வேண்டும் என்று தோன்றவில்லை. அந்த அளவுக்கு இது உள்ளத்தை பாதித்தது. இந்தக் கொடுமைகளைச் செய்தவர்களை தண்டிக்க முடிந்ததா? என்று பேரா. ஹாஜாகனி கேட்டார். அந்தக் கேள்விக்கு நம்மிடம் பதிலில்லை. ஆனாலும் இந்தக் கொடுமையைச் செய்தவர்களுக்கு இறங்குகாலம் தொடங்கிவிட்டது.

காஞ்சி சங்கராச்சாரியாருக்கு விழுந்த அடி, அந்தக் கூட்டத்தையே ஆட்டிவிட்டது (கூட்டத்தில் சிரிப்பு). இப்போதுவரை அவரது சீடர்களின் லீலைகளை நாங்கள் சீரியலாக எடுத்து வருகிறோம். இந்தக் கொடியவர்களின் முகமூடியைக் கிழிப்பதில் தெஹல்கா பத்திரிகை முக்கியப் பங்காற்றியது. எங்களுக்கு அதில் பெருமை. ‘திற' படம் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது. இயக்குநரின் குடும்பமே படத்தின் தயாரிப்புச் செலவை ஏற்றதால் இவ்வளவு சிறப்பாக வந்துள்ளது. எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்றார்.

தலைமையுரை ஆற்றிய கி.வீரமணி, “தீவிரவாதம் என்றவுடனேயே அதை முஸ்லிம்களோடு முடிச்சுப் போடுகிறார்கள். முஸ்லிம்களைத் தீவிரவாதிகள் என்று சொல்பவர்கள் எப்படிப்பட்டக் கொடிய பயங்கரவாதிகள் என்பதைத்தான் நாம் குறும்படத்தில் பார்த்தோம். எங்கள் இயக்கக் குடும்பத்துப் பிள்ளை பிரின்சு என்.ஆர்.எஸ். பெரியாரும் அவரது குழுவினரும் இதைச் சிறப்பாகப் பதிவு செய்துள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ். கும்பல் முஸ்லிம்களை அந்நியர்களாக சித்தரிக்கிறார்கள். முஸ்லிம்கள் இம்மண்ணின் மைந்தர்கள். அவர்களை அந்நியர்கள் என்று செல்பவர்கள்தான் எங்கோ இருந்து வந்த வந்தேறிகள் என்பதுதான் உண்மை. இங்கே உண்மை தலைகீழாக ஆகியுள்ளது.

மாலேகானில் குண்டுவைத்தது இந்துத்துவ தீவிரவாதிகள்தான். அதை அம்பலப்படுத்திய ஹேமந்த் கர்கரே என்ற நேர்மையான அதிகாரியைக் கொன்றததும் அவர்கள்தான்.

‘கர்கரேவைக் கொன்றது யார்? என்ற புத்தகம் விருப்ப ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியான முஹ்ஷி என்பவரால் எழுதப்பட்டுள்ளது.

ஊடகத்துறையிலும், காவல்துறையிலும், ஐ.பி. எனப்படும் உளவுத்துறையிலும் ஆர்.எஸ்.எஸ். கும்பல் மிகப்பெரிய அளவில் ஊடுருவியுள்ளது. கலை ஊடகங்களைக் கைப்பற்றி மக்களை மூளைச்சலவை செய்து தங்கள் லட்சியத்தை அடையலாம் என சங்பரிவாரக் கும்பல் சதித்திட்டம் தீட்டி அதை நிறைவேற்றியும் வருகிறது. அதை முறியடிக்கும் வேலைகளில் நாம் இறங்க வேண்டும்.

ஒரு கலைப்படைப்பு மக்கள் மனங்களில் எந்த விளைவை ஏற்படுத்துகிறது என்பதை வைத்தே அதை மதிப்பிட வேண்டும் என்றார் தந்தை பெரியார். - என்றார் கி.வீரமணி.

மதவெறிக்கு எதிரான உணர்வையும், மனிதநேயத்தையும் உருவாக்கும் இந்தக் குறும்படக் குழுவினரை வாழ்த்துகிறேன்.

Tuesday, December 15, 2009

மொபைல் ரீசார்ஜ் செய்து தந்து ஓட்டு கேட்கும் கட்சிகள்!

வந்தவாசி: வாக்காளர்களைக் கவர என்னவெல்லாம் வழி உள்ளதோ அத்தனை வழியையும் அடித்துப் பிடித்துக் கண்டுபிடித்து தங்கள் பக்கம் இழுத்து வருகின்றனர் கட்சிக்காரர்கள்.

சாதனைகளைப் பார்த்து, வேட்பாளர்களின் பின்னணியைப் பார்த்து, தராதரம் பார்த்து ஓட்டுப் போட்டதெல்லாம் அந்தக் காலம் - ஆதி காலமாகி விட்டது.

இப்போதெல்லாம் யார் அதிகம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கே ஓட்டுக்கள் விழும் காலம். அந்த அளவுக்கு வாக்காளர்களை மாற்றி விட்டனர் கட்சிக்காரர்கள்.

வந்தவாசி தொகுதி இடைத் தேர்தலில் என்னென்ன காட்சியெல்லாமோ அரங்கேறி வருகிறது.

இங்கு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சியினர் பல்வேறு
வழிகளில் வாக்காளர்களைக் கவர்ந்து வருகின்றனர். பிரியாணி போட்டு கிராமத்து வாக்காளர்களைக் கவர்ந்தனர். பின்னர் வேட்டி, சேலைகளை அள்ளி அள்ளி கொடுத்தனர். இப்போது அடுத்த கட்டமாக திமுக சார்பில் வாக்காளர்களைக் கவர குறிப்பாக இளைஞர்கள், இளம் பெண்களைக் கவர, இலவச ரீசார்ஜ் கார்டுகளைக் கொடுத்து ஓட்டு கேட்கின்றனராம்.

கிராமம் கிராமாக செல்லும் கட்சி பிரமுகர்கள், இளைஞர்கள் அதிகம் கூடியிருக்கும் இடங்களை தேடிப் பிடிக்கின்றனராம். பின்னர் அவர்களிடம் ரீசார்ஜ் கார்டுகளை கையில் வைத்து நமக்கே ஓட்டுப் போடணும் என்று அன்பாக கேட்டுக் கொண்டு விடை பெறுகின்றனராம்.

இன்னும் என்னென்ன கன்றாவிக் காட்சிகளைக் காணப் போகிறோமோ..

Monday, December 14, 2009

பாலியார் புகார்: சென்னை sex சாமியாருக்கு போலீஸ் வலைவீச்சு!

சென்னை கோடம்பாக்கம் சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் மீது ஹேமலதா என்பவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார். வேலைவாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாகவும், தமது ஆபாசப் படங்களை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டுவதாகவும், சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் அடிக்கடி சிங்கப்பூர் சென்று வருவார் எனவும் அந்த புகாரில் கூறியுள்ளார். பெண்ணின் புகாரை அடுத்து சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமாருக்கு போலீஸ் வலைவீசியுள்ளனர்.

சென்னை தேனாம் பேட்டை சேர்ந்தவர் ஹேமலதா. இவர் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:

அடையாறு சர்தார்பட் டேல் சாலையில் உள்ள சக்தி விலாஸ் மிஷனில் உள்ள டாக்டர் ஈஸ்வர ஸ்ரீகுமார் என்கிற சாமியார் தனது நிறுவனத்திற்கு வேலைக்கு ஆள் எடுப்பதாக என் அப்பாவின் நண்பர் மூலம் தகவல் கிடைத்தது.

நானும் அந்த நிறுவனத்திற்கு வேலை கேட்டு விண்ணப்பம் போட்டேன். சாமியார் ஈஸ்வரகுமார் என்னிடம் இண்டர்வியூ நடத்தினார். சூப்பர்வைசர் வேலை தரு வதாகவும் படிபடியாக சிங்கப்பூரில் உள்ள தனது நிறுவனத்தில் பதவி உயர்வும் அதிக சம்பளமும் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினார்.

ஒரு தனி அறையில் வைத்து எனக்கு காபி கொடுத்தார். அதை குடித்த சிறிது நேரத்தில் மயங்கிவிட்டேன். பிறகு கண்விழித்து பார்த்த போது ஆடைகள் களைந்த நிலையில் அலங்கோலமாக கிடந்தேன். என்னை சாமியார் பலாத்காரம் செய்ததை உணர்ந்தேன்.

இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று சாமியார் மிரட்டி அனுப்பினார். அடிக்கடி போன் செய்து அழைத்தார். நான் மறுத்தேன். உன்னுடன் உல்லாசமாக இருந்ததை வீடியோவாக எடுத்து வைத்துள்ளேன். அதனை இண்டர்நெட்டில் போட்டு விடுவேன் என்று மிரட்டினார். இதனால் பயந்து போய் அவரது வீட்டிற்கு சென்றேன். அங்கு மீண்டும் என்னை கற்பழித்தார். எனக்கு 10வயதில் மகள் இருக்கிறாள் என்று கெஞ்சினேன். அவர் விடவில்லை. தொடர்ந்து ஆபாச வீடியோவை காட்டி மிரட்டி என்னை அனுபவித்தார். அவர் மீது நடவடிக்கை எடுத்து எனது ஆபாச வீடியோவை அழித்து எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

புகார் மனு குறித்து விசாரிக்க சைதாப்பேட்டை உதவி கமிஷனர் அதிவீர ராம பாண்டியனுக்கு உத்தரவிடப்பட்டது. இன்ஸ்பெக்டர் குமார் நடத்திய விசாரணையில் சம்பவம் தியாகராயநகர் பகுதியில் நடந்ததாக தெரிய வந்ததால் புகார் மாம்பலம் போலீசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Saturday, December 12, 2009

இந்து மதத்தில் ஒரு பிரிவுதான் இருக்கிறதா? ஒரு பிரிவு இன்னொரு பிரிவை ஏற்றுக்கொள்கிறதா?



‘சிவசேனா’

‘இஸ்லாமியர்' ஒருவர் இந்தியாவின் பிரதமர் ஆக வேண்டுமானால், முசுலிம் சமுதாயத்து மக்கள் பொது சிவில் சட்டம் இயற்ற ஆதரவு தரவேண்டும்; குடும்ப நலத் திட்டத்திற்கு ஆதரவு தரவேண்டும்; வந்தே மாதரம் பாடலை ஏற்கவேண்டும்; எல்லாவற்றிற்கும் மேலாக அயோத்தியில் ராமன் கோயில் கட்ட ஒப்புக்கொள்ளவேண்டும்’ என்று ஆணை போடுகிறார் ‘சிவசேனா’ தலைவர் பால்தாக்கரே!

அதைச் சொல்ல இவர் யார் என்று தெரியவில்லை. இந்தியாவின் சர்வாதிகாரியாக இவர் எந்தத் தேதியிலிருந்து பொறுப்பு ஏற்றுக்கொண்டார் என்றும் தெரியவில்லை.

இந்தியாவில் பிறக்கும் எல்லோரும் சமமானவர்கள்தாம்; சம உரிமை படைத்தவர்கள்தாம். இதில் வேறுபாடு காட்டப்படக்கூடாது என்பதை ஒப்புக்கொண்டு இந்து மதத்தில் உள்ள ஜாதியை ஒழிக்க ஒப்புக்கொள்ளவேண்டும்; உயர்ஜாதி ஆணவச் சின்னமான பூணூலை அகற்றவேண்டும் என்ற நிபந்தனைகளை சிவசேனா, சங் பரிவார் வகையறாக்கள் ஒப்புக்கொள்வார்களா?

இந்தச் சமத்துவத்தை ஏற்றுக்கொண்டவர்கள்தாம் இந்தியாவின் குடிமக்களாக இருக்கவேண்டும் என்கிற நியாயமான, அறிவார்ந்த, மனித உணர்வை மதிக்கும் குரலை ஏற்றுக்கொள்வார்களா இவர்கள்?

இன்னொரு மதத்தைச் சார்ந்தவர்கள் இப்படியெல்லாம் நடந்துகொள்ளவேண்டும் என்று வலியுறுத்த இவர்கள் யார்?

ஆர்.எஸ்.எஸின் முன்னாள் தலைவர் சுதர்சன் இப்படித்தான் ஒருமுறை சொன்னார். முசுலிம்கள் தங்கள் மதத்தை இந்திய மயமாக்கிக் கொள்ளவேண்டும். ராமன், கிருஷ்ணன் கடவுள்களை வழிபடவேண்டும் என்று கூறினார். ‘சிவசேனா’ தலைவரோ, இதே கருத்தை வேறு சொற்களில் சொல்கிறார் என்பதுதான் இதன் பொருள்.

இன்னொரு முக்கிய கேள்வி: இந்து மதத்தின் பிரதிநிதிகளாக இவர்களை யார் ஏற்றுக்கொண்டார்கள்?

இந்து மதத்தில் ஒரு பிரிவுதான் இருக்கிறதா? ஒரு பிரிவு இன்னொரு பிரிவை ஏற்றுக்கொள்கிறதா? ‘வைத்தியரே, முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள்!’ என்பதுதான் நமது முதலாவது வேண்டுகோள்!

‘இந்து’ மதம் என்ற பெயர் அதற்கு உண்டா? என்பதற்கு முதலில் அவர்கள் பதில் சொல்லட்டும்; மற்றவற்றை பிறகு பேசிக் கொள்ளலாம்.

--------------------- மயிலாடன் அவர்கள் 11-12-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

Sunday, December 6, 2009

அப்சல் குருவுக்கு ஒரு நீதி - அத்வானிக்கு ஒரு நீதியா?

பாகிஸ்தான் தீவிரவாதிகள் நமது நாடாளுமன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்தியபோது நமது பாதுகாப்பு வீரர்கள் உட்பட தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டனர். ஆளும் கட்சியாக பாஜகவும் காங்கிரஸ் எதிர்க்கட்சி வரிசையிலும் இருந்தபோது 'நாட்டையே உலுக்கிய' இச்செயல் பரபரப்பாகப் பேசப்பட்டது.

தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டதால் அநீதியிழைக்கப்பட்ட பாதுகாப்புப் படையினர் குடும்பத்திற்கு நீதிவழங்கவும் வழக்கை மேற்கொண்டு நடத்தக் குற்றவாளி தேவை என்பதால் முன்னாள் காஷ்மீர் போராளிகளின் கூட்டாளியும் பிற்கால ராணுவ உளவாளியுமான 'அப்சல் குரு' வழக்கின் பிரதானக் குற்றவாளியாக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு நாட்டுமக்களின் கூட்டுமனசாட்சியைக் கருத்தில் கொண்டு மரணதண்டனை விதிக்கப்பட்டார்.

உயிர்பிழைப்பதற்கான அத்தனை வாசல்களும் அடைக்கப்பட்ட பிறகு இனி யாரிடமும் மேமுறையீடு செய்யப்போவதில்லை என்று இருந்தாலும், மனித உரிமை ஆர்வலர்களால் அவரின் மரணதண்டனை இந்திய ஜனாதிபதியின் கருணை மணுவுக்காகக் காத்திருக்கிறது.

நாடாளுமன்றத் தாக்குதலை நடத்தியவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதிலும், பாதிக்கப்பட்ட பாதுகாப்புப்படையினர் குடும்பத்திற்கு நீதியும் நிவாரணமும் வழங்கப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் ஆட்சேபனை இல்லை.

நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் நாட்டு மக்களின் கூட்டு மனசாட்சியைத் திருப்தி செய்வதற்காக அப்சல் குருவுக்கு மரண தண்டனை வழங்குவதாகத் தீர்ப்பளித்தார். ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட போதும், கிரகாம் ஸ்டெயின் உயிருடன் கொளுத்தப்பட்டபோதும், ஒரிசா கந்தன்மால் கிறிஸ்தவர்களின் உடமைகள், உயிர்கள் நாசமாக்கப்பட்ட போதும் விழிக்காத 'கூட்டு மனசாட்சி' அப்சல்குரு விசயத்தில் மட்டும் விழித்துக்கொண்டதற்குக் காரணம் என்னவாக இருக்கும்?

நாடாளுமன்றம் என்பது அரசியல்வாதிகளின் புனிதத் தளமல்ல. ஜனநாயகப் போர்வையில் சர்வாதிகாரிகள் சட்டம் இயற்றும் சபையாகவோ அல்லது ஆளுங்கட்சியின் அடாவடிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் அவையாகவுமே இருந்து வருகிறது. மக்களுக்குச் சேவையாற்றப்போகிறோம் என்று சொல்லி கேள்விநேரத்தைப் புறக்கணித்த புன்னியவான்கள் புழங்குமிடம்தான் நமது நாடாளுமன்றம்! அம்பானிகளைப் பகைத்துக் கொள்ளாத வரையில் மட்டுமே ஆளுங்கட்சி அல்லது எதிர்கட்சி வரிசையில் அமரமுடியும்.


1992 டிசம்பர்-6 அன்று காவிக் கயவர்களால் திட்டமிட்டு தகர்க்கப்பட்ட பாப்ரி மஸ்ஜித் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தளம் என்பதோடு இந்திய வரலாற்றின் பாரம்பர்யச் சின்னமும் ஆகும். பாப்ரி மஸ்ஜிதையும் இடித்து விட்டு நாடு முழுவதும் முஸ்லிம்களைக் கருவருத்தக் கூட்டத்திற்கு முறையே பிரதமர், துணைப் பிரதமர் மற்றும் கேபினட் அமைச்சரகங்களைத் தாரை வார்த்தோம்.

தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்குச் சமம் - நூறு குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு அப்பாவி தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதெல்லாம் வெறும் வாய்ஜாலம் தானா? 17 ஆண்டுகளாக கிட்டத்தட்ட 10 கோடி செலவிட்டு, இதைச் சாக்காக வைத்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நாடாளுமன்ற நேரங்களை வீணடித்து, அவையை முடக்கி, ஒத்திவைத்து என பொன்னான நாடாளுமன்ற நேரங்களை வீணடித்து, சென்றவாரம் தாக்கல்செய்யப்பட்ட லிபரான் கமிசன் அறிக்கையையும் ஏனைய கமிசன் அறிக்கைகளைப்போல் கிடப்பில் போடப்படுமென்றே தெரிகிறது.

லிபரான் கமிசன் அறிக்கையின்படி யாருக்கும் தண்டனைகள் பரிந்துரை செய்யப்படாத காரணத்தால் 68 குற்றவாளிகளில் எவனையும் தண்டிக்கப் போவதில்லையென சொல்லப்படுகிறது.எனில்,என்ன மயிருக்காக இத்தனை களேபரங்கள் நடத்தினர்? என்று சட்டத்தையும் இறையான்மையையும் மதிக்கும் சாமான்யரின் மனதில் கேள்வி எழுகின்றது.

அப்சல் குருவுக்கு மரண தண்டனை வழங்கிய கூட்டு/குருட்டு மனசாட்சி அத்வானி உள்ளிட்ட 68 குற்றவாளிகளுக்காவும் விழித்துக்கொண்டு என்ன தண்டனையை வழங்கப்போகிறது? நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளிடமிருந்து வந்த செல்போன்அழைப்பிற்காக அப்சல் குருவுக்கு மரண தண்டனை வழங்கியது சரியென்றால், பாப்ரி மஸ்ஜிதை இடிக்கும் நோக்கத்துடன் மேடைபோட்டு ஒலிபெருக்கியில் அழைத்த சங்பரிவாரக் கும்பலைச் சர்ந்த 68 பேர் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்படும்? யார் வழங்குவார்? என்பதே தொக்கி நிற்கும் கேள்வி!

பாபர் மசூதி இடிப்பும் - சங் பரிவார் வகையறாக்களும்



திமிரடி என்பது இதுதான்!

1992 டிசம்பர் 6 ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளில் பா.ஜ.க. சங் பரிவார் காவிக் கும்பல் 450 ஆண்டு கால வரலாறு படைத்த சிறுபான்மை மக்கள் வழிபாட்டுத் தலமான பாபர் மசூதியை அயோத்தியில் இடித்துத் துவம்சம் செய்து குதூகலித்தது. உலகமே இது கண்டு நகைத்தது. இந்தியாவின் மதச் சார்பின்மையின் கண்ணியம் இதுதானோ என்று ஏளனம் செய்தது.

ஆண்டுகள் 17 ஓடிவிட்டன. குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. அன்றைய பிரதமர் பி.வி.நரசிம்மராவ் வாக்குறுதி அளித்தபடி இடிக்கப்பட்ட இடத்தில் மசூதி மீண்டும் கட்டிக் கொடுக்கப்படவில்லை.

குதிரை கீழே தள்ளியதும் அல்லாமல் குழியும் பறித்த கதையாக, பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து நாடெங்கும் மதக் கலவரங்களை உண்டாக்கி சிறுபான்மை மக்களின் உயிரைக் குடித்தார்கள்.

இந்த அளவில் பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்களான முஸ்லிம்கள், தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தித் தங்களின் உணர்வுகளைத் தெரிவிக்கவும், பாபர் மசூதி இடிக்கப்பட்ட அதே நாளில் நியாயம் கேட்டுக் குரல் எழுப்புவதிலும் அர்த்தம் உண்டு.

அதே நேரத்தில் அந்த நாளில் நாங்களும் போராட்டம் நடத்துவோம் என்று இந்து முன்னணி வகையறாக்கள் கூறுவது அவர்களின் மதவெறித் தனத்தின் கேவலத்தைப் பறைசாற்றுவதாகும்.

பாதிக்கப்பட்டவர்கள் உரிமைக்குரல் கொடுக்கிறார்கள் என்றால், அந்தப் பாதிப்புக்குக் காரணமானவர்கள் அதற்கு எதிராகக் குரல் கொடுக்க முனைவது எந்த வகையில் நியாயம்?

அடிபட்டவனுக்கு அழக்கூட உரிமையில்லையா? எந்த அளவுக்கு அராஜக புத்தியிருந்தால், இப்படியெல்லாம் செயல்பட முன்வருவார்கள்?

இந்துக்கள் பெரும்பான்மையினர்; முஸ்லிம்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினர்தானே என்ன வேண்டுமானாலும் செய்துவிடலாம் என்கின்ற கொழுப்பா ஆணவமா?

இந்துக்களின் பிரதிநிதிகள் என்று இந்து முன்னணி வகையறாக்களை யார் ஏற்றுக் கொண்டார்கள்? இந்துக்களில் எத்தனை எத்தனை பிரிவுகள் உண்டு? காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோயிலில் யானைக்கு எந்த நாமம் போடுவது என்று சில நாள்களுக்கு முன்பு கூட தகராறு ஏற்பட்டதே, சில ஆண்டுகளுக்கு முன் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டு தெருவில் கட்டிப் புரண்டார்களே!

ராமன் கோயில் விவகாரம் வைணவர்களைப் பொறுத்தது. இதில் சங்கராச்சாரியார் ஏன் தலையிடுகிறார் என்று கூட எதிர்க் குரல் கேட்டதே! திருப்பதி ஏழுமலையான் கோயில் கருவறைக்குள் காஞ்சி சங்கராச்சாரியார் சென்றது கூட பெரிய பிரச்சினையாக புயலாக வெடித்துக் கிளம்பியதே! இந்த நிலையில் இந்து முன்னணிக் கூட்டம் இந்துக்களுக்கெல்லாம் ஏகப் பிரதிநிதிகள் போல வஸ்தாதுக் காட்டுகிறார்களே!

இதுபோல் அடாவடித்தனமாகப் பேசுவது என்பது ராமகோபாலனுக்குக் கைவந்த கலை. அதன் மூலம் ஒரு தற்காலிக விளம்பரம் கிடைக்கும் அல்லவா? அதற்குத்தான் இந்தச் சில்லறை அறிக்கைகள்.

இந்திய அரசு ஒன்றை உணரவேண்டும். பாபர் மசூதி இடிப்பு என்பது மாபெரும் குற்றமாகும். இந்தியாவின் ஒட்டுமொத்த மரியாதையைக் கேவலப்படுத்தக் கூடிய செயலாகும். உலகில் மிகப் பெரிய எண்ணிக்கையில் இருக்கக்கூடிய இசுலாமியர்கள் மத்தியில் இந்தியாவுக்கு எதிரான உணர்வுகளை ஏற்படுத்தக்கூடியதாகும்.

குற்றவாளிகள் தண்டிக்கப்படாத காரணத்தால் இந்து முன்னணி உள்ளிட்ட சங் பரிவார் வகையறாக்கள், நம்மைத் தட்டிக் கேட்க ஆளில்லை என்ற மனப்பான்மையில், இது போன்ற வல்லடி வழக்குகளில் ஈடுபடுகிறார்கள். வீண் வம்புக்கு வரும் விஷம வேலைகளில் குதிக்கிறார்கள். இதனை அனுமதிக்கக்கூடாது.

எவ்வளவு விரைவாக பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத் தரமுடியுமோ, அவ்வளவு விரைவாக அந்தக் கடமையைச் செய்தால்தான் இந்த நச்சுக் கூட்டத்தினரின் விஷமத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். பாதிக்கப்பட்டவர்களிடத்திலிருந்து தீவிர உணர்வோடு இளைஞர்கள் உருவாகாமல் இருப்பதற்கும் இதுதான் சரியான மார்க்கமுமாகும்.

------------------------"விடுதலை" தலையங்கம் 5-12-2009

Saturday, December 5, 2009

டி.எடப்பாளையம்: அரசு மேப்பில் இல்லாத கிராமம்!

விழுப்புரம் மாவட்ட திருக்கோவிலூர் தாலுகாவில்... கடலூரிலிருந்து திருவண்ணாமலை போகும் சாலையில் இருக்கும் கிராமம்தான் டி.எடப்பாளையம். இங்கு 3500 பேர் வசித்துவர.. இவர்களில் 1500 பேர் வாக்குரிமை உள்ளவர்கள். இந்த கிராமத்திற்கு மட்டும் 850 ரேசன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அப்படியிருந்தும் வருவாய்த்துறை... இப்படி ஒரு ஊரே எங்கள் மேப்பில் இல்லை என கைவிரித்திருக்கிறது.
டி.எடப்பாளையம் ஊராட்சித் தலைவரான அப்துல் கபூரோ, எங்க ஊர் நிலபுலன்கள் மூலம் கிடைக்கும் வரி வருவாயும், பத்திரப் பதிவுகள் மூலம் கிடைக்கும் வருவாயும் எங்க ஊராட்சிக்கு கிடைப்பதில்லை. காரணம் வருவாய்த்துறை கெசட்படி... டி.எடப்பாளையம் என்ற கிராமமே வருவாய்த் துறையிடம் இல்லை. எங்க கிராமத்தை நாலா பங்கு போட்டு... சுற்றி இருக்கும் சித்தலிங்கமடம், வடமருதூர், எல்ராம்பட்டு, கொடியூர் ஆகிய 4 கிராமங்களோடும் சேர்த்து வச்சிருக்காங்க.

நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் எங்க கிராமத்தில் இருக்கும் குளத்தை தூர் வாரலாம்னு பார்த்தா... சித்தலிங்கமடத்துக்காரங்க ஓடிவந்து... எங்க ஊராட்சி லிமிட்ல இருக்கும் குளத்தை நீங்க எப்படி தூர்வாரலாம்னு தடுக்குறாங்க. சரி ரோடு போட்டுக் கொடுங்க... குடிதண்ணீர் வசதி பண்ணிக் கொடுங்கன்னு அந்த ஊராட்சிகளைக் கேட்டா... உங்க ஊர்தான் தனி ஊராட்சியாச்சே நீங்களே பண்ணிக்கங்கன்னு கை விரிக்கிறாங்க என்கிறார் கலக்கமாய்.

எடப்பாளையத்தை வருவாய்த்துறை ஒரு கிராமமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என குரல் கொடுத்துவரும் த.மு.மு.க. மாவட்ட நிர்வாகி பைசல் முகமது, எங்கள் கிராமத்துக்கு உண்டான உரிமையைக் கொடுக்கும்வரை வாக்களிக்க மாட்டோம் என சமீபத்திய நாடாளுமன்றத் தேர்தலின் போது அறிவித்தோம்.

இதன்பிறகு ஓடிவந்த அதிகாரிகள். தேர்தல் முடிந்தததும் கிராமத்தின் எல்லைகளை அளந்து தனி ரெவின்யூ கிராமமாக அறிவிக்கிறோம் என வாக்குறுதி கொடுத்தனர். நேர்மையான அதிகாரியான திருக்கோவிலூர் கோட்டாட்சியர் கோதண்டராம குப்தா... சொன்னபடியே கிராமத்தை அளக்கச் செய்தார்.

இந்த நிலையில் அவர் மாற்றலாகிப் போக... வேலைகள் நின்றுபோய் விட்டன. என்ன நடந்தாலும் சரி... எங்க டி.எடப்பாளையம் கிராமத்தை வருவாய் கிராமமாக அறிவிக்கும்வரை நாங்க ஓயப் போவதில்லை என்கிறார் உறுதியான குரல்.

லிபரான் சுட்டிக்காட்டியுள்ள வாஜ்பேயி உள்ளிட்ட 68 குற்றவாளிகள் பிணையில் வெளிவர முடியாத வழக்கில் உடனடியாக கைதுச் செய்யப்பட வேண்டும்.


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோரிக்கை

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பத்து தினங்கள் கழித்து அமைக்கப்பட்ட நீதிபதி மன்மோகன் சிங் லிபரான் ஆணையம் 17 ஆண்டுகள் கழித்து 8 கோடி ரூபாய் செலவு செய்து 48 முறை ஆயுள் நீடிப்புப் பெற்று தனது அறிக்கையை சமர்பித்துள்ளது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த அறிக்கை, விடுதலைப் பெற்ற இந்தியாவில் காந்தியடிகள் படுகொலைக்கு பிறகு நடைபெற்ற மிகப் பெரும் பயங்கரவாதச் செயல்களுக்கு காரணமான நாசகர சக்திகளை தெளிவாக அடையாளம் காட்டியுள்ளது. சங் பரிவார் அமைப்புகள் கூறி வந்தது போல் பாபரி மஸ்ஜித் இடிப்பு தற்செயலாக உணர்ச்சி பெருக்கத்தால் நடைபெற்ற நிகழ்வு அல்ல என்பதை லிபரான் ஆணையத்தின் அறிக்கை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான சங்பரிவார் அமைப்புகள் ஒன்றிணைந்து கூட்டாக நடைமுறைப்படுத்திய நன்கு திட்டமிட்ட நடவடிக்கைகளினால் பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டது என்று லிபரான் ஆணையம் தெளிவான முடிவிற்கு வந்துள்ளது. தவறான கட்சியில் உள்ள நல்ல மனிதர் என்று வர்ணிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பேயிக்கும் பாபரி மஸ்ஜித் இடிப்பில் பங்கு உள்ளது என்று லிபரான் ஆணையம் கூறியிருப்பது இந்த அறிக்கையின் சிறப்பு அம்சம் என்று கூறலாம். ஆர்.எஸ்.எஸ். என்ற தாய் அமைப்பின் கீழ் செயல்பட்டு பாபரி மஸ்ஜித் இடிப்பிற்கு காரணமாக இருந்த அரசியல் தலைவர்கள் முதற் கொண்டு அரசு அதிகாரிகள் வரை லிபரான் ஆணையத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளார்கள்.

பாபரி மஸ்ஜித் இடிப்பு நிகழ்ந்த போது உ.பி.யில் ஆட்சியில் இருந்த கல்யான் சிங் அரசு எவ்வாறு பள்ளிவாசல் இடிப்பிற்கு காரணமாக இருந்தது என்பது குறித்து தெளிவான ஆதாரங்களை எடுத்துக் கூறும் லிபரான் ஆணையத்தின் அறிக்கை அன்றைய நரசிம்ம ராவ் தலைமையிலான மத்திய அரசிற்கு இடிப்பில் உள்ள பங்கை தெளிவுப்படுத்தாது வேதனைக்குரியது. பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட அந்த கருப்பு ஞாயிறு அன்று அன்றைய பிரதமர் நரசிம்ம ராவ் துங்கிக் கொண்டிருந்தார். அன்றைய குடியரசு தலைவர் சங்கர் தயாள் சர்மா எச்சரித்த பிறகு தான் அவர் நாட்டு மக்களிடம் துர்தர்ன் வாயிலாக இடிக்கப்பட்ட பள்ளிவாசல் மீண்டும் அதே இடத்தில் கட்டித் தரப்படும் என வாக்குறுதி அளித்தார். பாபரி பள்ளிவாசலை காக்க தவறிய நரசிம்ம ராவின் நடவடிக்கைக்காக முன்னாள் காங்கிரஸ் தலைவர் சீத்தாராம் கேசரியும் திருமதி சோனியா காந்தி அம்மையாரும் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட நிலையில் லிபரான் அறிக்கை காங்கிரஸ்காரர் போர்வையில் இருந்த சங்பரிவார் விசுவாசி நரசிம்ம ராவின் பங்கை அம்பலப்படுத்தாது நீதிபதி லிபரானின் நேர்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

லிபரான் ஆணையத்தின் அறிக்கை பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கை நடத்தி வரும் மத்திய புலனாய்வு துறையிடம் மேல் நடவடிக்கைக்காக ஒப்படைத்துள்ளதை வரவேற்கிறோம். இதே நேரத்தில் பாபரி மஸ்ஜித் இடிப்பு தொடர்பாக ராய் பிரேலி நீதிமன்றத்தில் 17 ஆண்டுகளாக நடைபெற்று வரும் வழக்கு 3 மாதங்களுக்குள் முடிக்கப்படும் வகையில் உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் ஒரு சிறப்பு விரைவு நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும். ஏற்கெனவே சி.பி.ஐ.யினால் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மட்டுமில்லாது லிபரான் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ள வாஜ்பேயி, வகேலா உள்ளிட்டவர்கள் மீதும் வழக்கு தொடுக்கப்பட்டு அவர்களும் கைதுச் செய்யப்படவேண்டும். லிபரான் ஆணையம் குற்றஞ்சாட்டியுள்ள 68 குற்றவாளிகளில் தற்போது பிணையில் இருப்பவர்களின் பிணை ரத்துச் செய்யப்பட்டு இடிப்பு வழக்கில் தீர்ப்பு வரும் வரை அவர்களை சிறையில் அடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாபரி மஸ்ஜித் இடம் யாருக்கு சொந்தம் என்ற சிவில் வழக்கு 60 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்கப்படவும் மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட தினத்தில் அன்றைய காங்கிரஸ் பிரதமர் நரசிம்ம ராவ் வாக்களித்தது போல் இன்றைய காங்கிரஸ் தலைமையிலான அரசு பாபரி மஸ்ஜிதை அதே இடத்தில் கட்டித்தர வேண்டும்.

வலுவான மதசார்பற்ற தலைமை நாட்டிற்கு மிக அவசியம் என்று நீதிபதி லிபரான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மதசார்பின்மையை முன்னிறுத்தி ஆட்சிக்கு வந்தது. நாட்டில் மதசார்பின்மை ஆழமாக வேரூன்றவும், பாபரி மஸ்ஜித் பிரச்னையில் நரசிம்மராவ் செய்த பாவங்களை கழுவுவதற்காகவும் மேற்சொன்ன கோரிக்கைகளை நிறைவேற்ற உடனடியாக மன்மோகன் சிங் அரசு முன்வரவேண்டும்.
இந்த கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 36 இடங்களில் டிசம்பர் 6 அன்று போராட்டம் நடத்த உள்ளோம்.

பேட்டியின் போது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் எஸ். ஹைதர் அலி, துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ். ரிபாயி, மாநிலச் செயலாளர் மௌலா நாசர், மாநில துணைச் செயலாளர் கோவை செய்யது ஆகியோர் உடன் இருந்தனர்.