Tuesday, December 15, 2009

மொபைல் ரீசார்ஜ் செய்து தந்து ஓட்டு கேட்கும் கட்சிகள்!

வந்தவாசி: வாக்காளர்களைக் கவர என்னவெல்லாம் வழி உள்ளதோ அத்தனை வழியையும் அடித்துப் பிடித்துக் கண்டுபிடித்து தங்கள் பக்கம் இழுத்து வருகின்றனர் கட்சிக்காரர்கள்.

சாதனைகளைப் பார்த்து, வேட்பாளர்களின் பின்னணியைப் பார்த்து, தராதரம் பார்த்து ஓட்டுப் போட்டதெல்லாம் அந்தக் காலம் - ஆதி காலமாகி விட்டது.

இப்போதெல்லாம் யார் அதிகம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கே ஓட்டுக்கள் விழும் காலம். அந்த அளவுக்கு வாக்காளர்களை மாற்றி விட்டனர் கட்சிக்காரர்கள்.

வந்தவாசி தொகுதி இடைத் தேர்தலில் என்னென்ன காட்சியெல்லாமோ அரங்கேறி வருகிறது.

இங்கு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சியினர் பல்வேறு
வழிகளில் வாக்காளர்களைக் கவர்ந்து வருகின்றனர். பிரியாணி போட்டு கிராமத்து வாக்காளர்களைக் கவர்ந்தனர். பின்னர் வேட்டி, சேலைகளை அள்ளி அள்ளி கொடுத்தனர். இப்போது அடுத்த கட்டமாக திமுக சார்பில் வாக்காளர்களைக் கவர குறிப்பாக இளைஞர்கள், இளம் பெண்களைக் கவர, இலவச ரீசார்ஜ் கார்டுகளைக் கொடுத்து ஓட்டு கேட்கின்றனராம்.

கிராமம் கிராமாக செல்லும் கட்சி பிரமுகர்கள், இளைஞர்கள் அதிகம் கூடியிருக்கும் இடங்களை தேடிப் பிடிக்கின்றனராம். பின்னர் அவர்களிடம் ரீசார்ஜ் கார்டுகளை கையில் வைத்து நமக்கே ஓட்டுப் போடணும் என்று அன்பாக கேட்டுக் கொண்டு விடை பெறுகின்றனராம்.

இன்னும் என்னென்ன கன்றாவிக் காட்சிகளைக் காணப் போகிறோமோ..

No comments: