Thursday, July 15, 2010

கும்பாவுருட்டி அருவி-அதிகரிக்கும் கேரள வனத்துறையினரின் செக்ஸ் வக்கிரங்கள்

கும்பாவுருட்டி அருவி-அதிகரிக்கும் கேரள வனத்துறையினரின் செக்ஸ் வக்கிரங்கள்
செங்கோட்டை: கேரள மாநிலத்தில் உள்ள கும்பாவுருட்டி அருவிப் பகுதிக்குச் செல்லும் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யும் கேரள வனத்துறையினரின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அவதியுற்று வருகின்றனர்.

செங்கோட்டை அருகே தமிழக எல்லையை தாண்டி அச்சன்கோவில் வனப்பகுதியில் உள்ளது கும்பாவூருட்டி அருவி.

வனப்பகுதிக்குள் அமைந்திருக்கும் இந்த அருவிக்கு கரடுமுரடான பாதைகளை தாணடிதான் செல்ல வேண்டும். இதனால் பெண்கள் அதிக அளவில் அங்கு செல்வதில்லை. ஆனாலும் சில பெண்கள் தங்கள் குடும்பத்தினரோடு வந்து செல்கின்றனர். அப்படி வரும் பெண்களை இங்குள்ள கேரள வனத்துறையினரும், காட்டு பகுதியி்ல் சுற்றி திரியும் ரவுடிகளும் பாலியல் தொந்தரவு செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையி்ல் கடந்த சில தினங்களுக்கு முன் மேலும் ஒரு பகீர் செயலை கேரள வனத்துறையினர் செய்துள்ளனர். தமிழகத்தில் இருந்து ஒரு குடும்பம் கும்பாவூருட்டி அருவிக்கு சுற்றுலா சென்றுள்ளது. அப்போது அவர்களில் ஒரு பெண்ணை வனத்துறையினர் பிடித்து பாலியல் தொந்தரவு செய்துள்ளனர். அந்த பெண்ணின் ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக ஓட விட்டு வேடிக்கை பார்த்துள்ளனர். மேலும், இதை வனக்குழுவினர் செல்போனில் பதிவு செய்து இன்டர்நெட்டில் பரப்பியுள்ளனர்.

தற்போது அந்த காட்சிகள் இணைய தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த காட்சியுடன் வனத்துறையினர் அந்த பெண்ணின் குடும்பத்தினரை மிரட்டும் குரலும் தெளிவாக கேட்கிறது. இந்த பகீர் காட்சிகள் இணையத்தில் வெளிவர தொடங்கியுள்ளதை அடுத்து திருவனந்தபுரம் வனஅதிகாரி வர்கீஸ் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் கேரள-தமிழக எல்லையோர மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குடும்பத்தோடு சென்ற தாயையும், அவரது 15 வயது மகளையும் இக்கும்பல் பலாத்காரம் செய்ததாக அப்போதே தகவல் வெளிவந்தது. ஏற்கனவே இதே பகுதியில் கடந்த சில ஆண்டு காலமாகவே இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

வனப்பகுதியில் நடக்கும் சம்பவங்கள் வெளியே தெரியாமல் புதைந்து விடுவது குறிப்பிடத்தக்கது. ஆரியங்காவு பாலருவியில் குளிப்பதை சில கும்பல்கள் வீடியோ எடுப்பதாகவும் ஏற்கனவே கடந்த ஆண்டே குற்றச்சாட்டுகள் எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.

No comments: