Monday, December 28, 2009

பர்தா அணியாமல் இருந்தால் தான் எங்களுக்கு கஷ்டம்!மதவக்கிர கிருக்கன்களுக்கு சவுக்கடி!!


thanks to : -சுமஜ்லா.



............... இந்த இடுகைக்கு என்ன காரணம் என்றால்....


நான் பதிவர் சந்திப்புக்கு பர்தாவுடனே சென்றேன், கடைசிவரை பர்தாவுடனே இருந்தேன் என்று எழுதியிருந்ததற்கு, முந்தய பதிவுகளில் மாற்று மத அன்பர் ஒருவர் இவ்வாறு மறுமொழியிட்டிருந்தார்,


//நான் பேண்ட்டுடனே சென்றேன், கடைசிவரை பேண்ட்டுடனே இருந்தேன்; பெண்கள் புடவையுடனே சென்றார்கள், கடைசிவரை புடவையுடனே இருந்தார்கள், இப்படியெல்லாம் நாங்கள் எழுதினோமா?//


இதைப் படித்ததும், எனக்கு சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை! பர்தாவைப் பற்றி பல தவறான கருத்துக்கள் மாற்று மத அன்பர்களிடையே உள்ளது, அதைத் தெளிவாக்குவது தான் இந்த இடுகையின் நோக்கம்!


சில கேள்விகளும் பதில்களும்...


பர்தா என்றால் என்ன?


பர்தா என்பது உடையல்ல...அது உடைக்கு மேல் அணியும் ஒரு அங்கி தான், அதைக் கழட்டினால் உள்ளே உடை இருக்கும்!!!


அழகாக உடை உடுத்தி, நகையெல்லாம் அணிந்து, பிறகு அதை பர்தாவால் மறைத்துக் கொள்கிறீர்களே?!


நாங்கள் திருமணம் போன்ற விஷேசங்களில், ஆண்களுக்கு தனி இடம், பெண்களுக்கு தனி இடம் என்று ஒதுக்கி இருப்போம். இருவரும் கலப்பதில்லை. ஆக, நாங்கள் வெளியே செல்லும் போது பர்தா அணிந்து சென்றாலும், திருமண மண்டபத்தில் பெண்கள் பகுதிக்கு சென்றதும் அதை கழட்டி பையில் வைத்து விடுவோம். பிறகு திரும்பும் போது, மீண்டும் அணிவோம். உறவுகளின் இல்லங்களுக்கு செல்லும் போது இதே போலத்தான்.


பர்தா அணியச் சொல்லி கட்டாயப்படுத்துவது யார்?


எங்கள் பெண்களிடம் ஏன் என்னிடமும் கணவர் உட்பட எந்த ஒரு ஆணும் கட்டாயப்படுத்தியதில்லை. நானே விரும்பித் தான் அதை அணிகிறேன். அதன் சவுகரியங்களை உணர்ந்த எந்த ஒரு பெண்ணும், பர்தா இல்லாமல் வெளியே செல்வதை விரும்புவதில்லை.


பர்தா ஏன் அணிகிறோம்?


எங்களுடைய அழகும் வனப்பும் கணவருக்கு மட்டுமே சொந்தம் என்று நினைக்கிறோம். இது ஒரு வித சுயநலம் போலத்தான் தெரியும். ஆயினும், எங்கள் வளர்ப்பு முறை அப்படி! ஆக, வெளி ஆண்கள் யாரும் எங்கள் உடலின் தோற்றத்தைப் பார்ப்பது எங்களுக்கு விருப்பமில்லை! அதற்காகத்தான் பர்தா அணிகிறோம்.


ஆண்கள் மட்டும் ஏன் பர்தா அணிவதில்லை?


நிச்சயமாக எங்கள் மதத்தில் ஆண்களுக்கும் பர்தா இருக்கிறது. ஆனால் அது வேறு விதம். ஆணும் பெண்ணும் உடல் தோற்றத்தில் வேறு வேறு மாதிரி இருக்கும் போது, எப்படி இருவருக்கும் ஒரே மாதிரி பர்தா அணிய முடியும்?


ஆண்களுக்கு தாடியும் நீளமான அங்கியும் தொப்பியும், தொப்புள் முதல் முட்டுக்கால் வரை மறைப்பதும் அவர்களுடைய பர்தா போலத்தான். அதோடு, பெண்களைப் பார்த்தால், தம்முடைய பார்வையைத் தாழ்த்திக் கொள்ளும்படி அவர்களுக்கு வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

ஏன் ஒரு சில முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதில்லை?


அதற்குக் காரணம், அவர்களின் வளர்ப்பு தான். நற்குடியில் பிறந்து, இஸ்லாமிய பாரம்பரியப்படி வளர்க்கப்படும் அனைவரும் நிச்சயமாக பர்தாவை விரும்புவார்கள். பொதுவாக ஒரு குடும்பத்தில் பெண் எடுக்கும் போது, அக்குடும்பப் பெண்கள் பர்தா அணிபவராக இருந்தால்,விரும்பி பெண் எடுப்பார்கள்.


பர்தா அணிவது கஷ்டமாக இல்லையா?


உடை அணிவதை நாம் கஷ்டமாக நினைப்பதில்லையே! நாம் நம் கைகளை ஓரளவுக்கும், உடலின் சில பாகங்களையும், உடையினால மறைத்துக்கொள்கிறோம். கையின் பெரும்பகுதியும், கழுத்தும் முதுகும் இடுப்பும் தெரியும்படியாக சேலை கட்டுகிறோம்.


இன்னின்ன இடத்தை மறைக்க வேண்டும், இன்னின்ன இடத்தை மறைக்க வேண்டியதில்லை என்று தீர்மானித்தது யார்? முதன்முறையாக சேலை உடுத்தும் பெண், இடுப்பு வெளியே தெரியும் போது, சற்று சங்கோஷமடைவாளல்லவா? அது போலத்தான், மீதியுள்ள பாகங்களான கழுத்து, கை முதுகு ஆகியவை வெளியே தெரியும் போது, நாங்கள் அவமானப்படுகிறோம். ஆக, பர்தா அணியாமல் இருந்தால் தான் எங்களுக்கு கஷ்டம்.


காலத்துக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ளாமல் ஏன் இன்னும் பர்தா அணிகிறீர்கள்?


பர்தா அணிவதால், எம்மினப் பெண்களின் வளர்ச்சி தடைபடுவதில்லை. மாறாக, படிக்கும் காலத்தில் காதல்வலையில் வீழ்ந்து தம்மை இழந்துவிடாமல், நேரிய வழியில் செல்வதற்கு இது ஏதுவாக இருக்கிறது. பர்தா அணிந்தாலும், நாங்கள் விரும்பியதைப் படிக்கிறோம். விரும்பிய துறையைத் தேர்ந்தெடுத்து முன்னேறுகிறோம். அதற்கு நானே உதாரணம்.


ஏன் இந்த பதிவு?


ஆரம்பத்திலேயே நான் சொல்லிவிட்டேன். மற்றபடி நான் அனைத்து மத பழக்கவழக்கங்களையும் மதிப்பவள்.


சைவ சித்தந்தக் கொள்கையின் பட்டையையும், திருமால் பக்தர்களின் நாமத்தையும், பார்ப்பனீயர்களின் பூணூலையும், பாதிரிகளின் அங்கியையும், கன்னியாஸ்த்திரிகளின் ரோஸரியையும், சீக்கியர்களின் டர்பனையும் புரிந்து கொண்டு அதற்கு மரியாதை தருபவள் நான். அவர்களின் உணர்வுகளை மதிக்கிறேன். அதே போல எம்மையும் எம்பர்தாவையும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தான் இந்த இடுகை!


சந்தேகங்கள் இருந்தால் பின்னூட்டத்தில் கேட்கலாம். ஆனால், மதவக்கிரம் பிடித்த அனானி கமெண்ட்டுகளுக்கு இங்கு இடமில்லை என்று சொல்லிக் கொள்கிறேன்.



Wednesday, December 23, 2009

மாணவியிடம் காமலீலை - ஆசிரியர் கைது

மாணவியுடன் காம லீலையில் ஈடுபட்டு அதை செல்போனில் படம்பிடித்த டியூஷன் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.


மணலி பலராமன் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் (34). திருமணமானவர். மகள், மகன் உள்ளனர். மணலி காமராஜர் தெருவில் டியூஷன் சென்டர் நடத்தி வந்தார். இவரிடம், படிக்க வந்த மணலியை சேர்ந்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார். அதை தனது செல்போனிலும் படம் பிடித்துள்ளார். இதை நண்பரிடம் காட்ட அவர் மூலம் பலருக்கும் எம்எமஎஸ் மூலம் பரவியது. மணலியில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மாணவியின் பெற்றோர் போலீசுக்கு சென்றனர். மாணவியின் எதிர்காலம் கருதி வழக்குப்பதிவு செய்யாமல் போலீசார் விசாரித்து வந்தனர். இதையறிந்த டியூஷன் ஆசிரியர் குடும்பத்துடன் தலைமறைவானார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.


செல்வராஜின் சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் கோனூருக்கு தனிப்படை போலீசார் விரைந்தனர். இதையறிந்த செல்வராஜ், திருப்பதிக்கு தப்பி சென்றார். ரயிலில் ஒவ்வொரு இடமாக சுற்றி வருவது தெரிந்தது. நேற்று சென்ட்ரலில் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் அங்கு சென்று, செல்வராஜை மடக்கி பிடித்தனர்.


பின்னர் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். பல மாணவிகளின் வாழ்க்கையை அவர் சூறையாடி இருக்கலாம் என்ற கோணத்தில் இன்ஸ்பெக்டர் கணேசன் தீவிரமாக விசாரித்து வருகிறார். இதற்கு பின்னரே, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என தெரிகிறது.

பலஸ்தீன் பெண்கைதி தொடந்து 100 நாட்களுக்கும் மேலாக தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

ரமல்லா – இஸ்ரேலிய ரமேல் சிறையில் தமது இளைய மகள் கடந்த நூறு நாட்களுக்கும் மேலாகத்

தொடர்ந்து தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக பெண் கைதி வஃபா அல் பெஸ்ஸின் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.

மனிதாபிமான அமைப்புகள் தலையிட்டு, தமது மகள் மீது இஸ்ரேலிய சிறை நிர்வாகம் மேற்கொண்டுவரும் நியாயமற்ற வதைச்செயல்களை நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அப்பெண் கைதியின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடும்ப அங்கத்தவர்கள் சென்று கைதியைச் சந்திப்பது, கைதி தன் வழக்கறிஞரைச் சந்திப்பது முதலான அனைத்தையும் தடுத்துள்ளதன் மூலம் வெளி உலகத்துடன் எவ்வகையிலும் தொடர்புகொள்ளவே முடியாமல் இஸ்ரேலிய சிறை நிர்வாகம் தமது மகளைத் துன்புறுத்துவதாக அப் பெண்ணின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

பெய்ட் ஹனூன் கடவையருகில் வைத்து 2005 ஜூன் மாதம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் கடத்திச் செல்லப்பட்ட வஃபா, இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் கோர்ட்டினால் 12 ஆண்டுகள்- 14 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். பெரும்பாலும் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தனது தண்டனைக் காலத்தில் நான்கரை ஆண்டுகளைத் தற்போது அவர் நிறைவு செய்துள்ளார்.

நன்றி: PIC

free palestine

குஜராத்: கொடூரத்தின் பதிவாக ஒரு குறும்படம் ‘திற' சென்னையில் எழுச்சியுடன் நடைபெற்ற திரையிடலும் திறனாய்வும்

குஜராத்தில் 2002ம் ஆண்டு நடைபெற்ற முஸ்லிம் இனப்படுகொலைகள் உலகையே உறைய வைத்தன. இந்துத்துவத்தின் சோதனைச் சாலை என வர்ணிக்கப்பட்ட குஜராத்தின் முதலமைச்சர் நரேந்திர மோடியின் ஆசிகளோடும், வழிகாட்டுதல் மற்றும் அரசு எந்திர உதவிகள் துணையுடனும் சங்பரிவார பயங்கரவாதிகள் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களைப் படுகொலை செய்தனர். படுகொலை செய்யப்பட்டவர்களில் பெண்களும், குழந்தைகளும் ஏராளம் அடங்குவர். பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சூறையாடப்பட்டன. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் சொந்த ஊரிலேயே அகதிகளாக்கப்பட்டனர்.

மத்தியிலும், மாநிலத்திலும் பாஜகவின் ஆட்சி நடந்தால் இத்தகைய இனப்படுகொலைகள் அரசு உதவியுடன் அரங்கேறும் என்று குஜராத்தில் காட்டப்பட்டது.

இதையெல்லாம் முன்னின்று நடத்திய கொலை பாதகன் மோடிக்கு மறுபடியும் முதலமைச்சர் பதவி, தண்டனையாக(?) வழங்கப்பட்டது. (முஸ்லிம்களை அகதி முகாம்களில் அடைத்துவிட்டு தேர்தலில் வெற்றி பெற்றது பாஜக.

குஜராத் இனப்படுகொலைகளின் போது முஸ்லிம் பெண்களின் மீது சங்பரிவார ஆண் மிருகங்கள் நடத்திய பாலியல் கொடுமைகள் எழுத்தில் வடிக்க இயலாதவை. இந்தக் கொடியவர்களுக்கு நீதிமன்றங்களில் கண்டனம்தான் தெரிவிக்க முடிந்ததே தவிர, நடந்த கொலைகளுக்கு உரிய தண்டனைகளை வழங்க முடியவில்லை.

மறதியால் சபிக்கப்பட்ட மக்களை திசைதிருப்ப எத்தனையோ வேடிக்கைகள் இங்கே அரங்கேறும். மதவெறியின் கொடூரங்களை அதனால் நடத்தப்பட்டக் கொடுமைகளை, அதை வழிநடத்திய தலைமைகளை, சட்டக் காப்பாளர்களின் கயமைகளை, மக்கள் மறந்துவிடாமலும், மனங்கள் மரத்துவிடாமலும் யாராலும் தடுக்க முடியும்.

அதைச் செய்யவல்ல ஒரே ஆயுதம் கலை ஊடகம்தான். குஜராத்தின் கொடுமைகளை சுப்ரதீப் சக்ரவர்த்தியின் கோத்ரா தக், ரமேஷ் டாம்பிளின் ஆக்ரோஷ் ஆகிய குறும்படங்களின் வாயிலாக வெளிக்கொணரப்பட்டன.

ஆனால் தமிழில் குஜராத்தின் கொடுமைகளை அதியற்புதமாய்ப் பதிவு செய்துள்ளார் இளம் இயக்குநர், பிரின்சு என்.ஆர்.எஸ். பெரியார்.

‘திற' (Open) என்ற அவரது குறும்படத்தின் திரையிடல் மற்றும் திறனாய்வு 17.12.09 அன்று சென்னை ரஷிய கலாச்சார மையத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரி மாணவரான பிரின்சு என்.ஆர்.எஸ். பெரியார், மக்கள் மனசாட்சியை உலுக்கும் வகையில் இந்தக் குறும்படத்தை எடுத்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். குண்டர்களின் அயோக்கியத்தனங்களை, அராஜகங்களை இப்படித் தோலுரித்துக் காட்டிய படம், நாமறிந்த வரை தமிழில் இதுபோல வேறில்லை எனலாம்.

படம் 12 நிமிடங்கள் மட்டுமே ஓடுகிறது. அது ஏற்படுத்தும் தாக்கமோ மணிக்கணக்கில், ஏன் நாள்கணக்கில் நீள்கிறது.

‘திற’ குறும்படம், ஒட்டுமொத்த தேசத்தையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரிக்கிறது என்றால் மிகையில்லை.

குஜராத் கலவரத்தில், தாயைப் பறிகொடுத்து, தந்தையிடமிருந்தும் பிரிக்கப்பட்ட 18 வயது முஸ்லிம் பெண் சகீனா, சங்பரிவாரக் கொடியவர்களால் சிதைக்கப்படும் கொடுமையைப் படம் பதிவு செய்கிறது. இது, மதவெறியால் தெறித்த ரத்தத்தின் ஒரு துளி என்கிறது.

திற படத்தின் திரையிடல் மற்றும் திறனாய்வு நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையேற்றார். சாக்ரடீஸ் பெரியார் வரவேற்புரையாற்றினார். கவிஞர் ராஜசேகர் சிறப்பாகத் தொகுத்து வழங்க, தி.க. பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன், நக்கீரன் கோபால், தமுமுக மாநிலச் செயலாளர் ஜெ. ஹாஜாகனி, பேரா.சுபவீ, திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், ‘நிழல்’ ஆசிரியர் திருநாவுக்கரசு, தலித் முரசு ஆசிரியர் புனிதப் பாண்டியன், வழக்குரைஞர் அருள்மொழி, திரைப்படக் கல்லூரி பேரா. வி.எம். ரவிராஜ், பட இயக்குநர் ஃபாத்திமா பீவி ஆகியோர் திறனாய்வு உரையாற்றினர்.

நன்றியுரை ஆற்றிய குறும்பட இயக்குநர் பிரின்சு என்.ஆர்.எஸ்.பெரியார், “பட விழாக்களுக்கு இப்படத்தை அனுப்பி வைப்போம். படம் பார்த்த உடனேயே ‘அருமையாக இருக்கிறது’ என்று தொலைபேசி வரும். பிறகு என்ன நடக்குமோ நடக்குமோ தெரியாது. நடுவர்கள் இப்படத்தைத் திரையிடவே அனுமதிக்க மறுக்கிறார்கள் என்று தகவல் வரும். இப்படி ஏராளமானப் புறக்கணிப்புகள், தடைகளைத் தாண்டி இந்தக் குறும்படம். தமிழக அரசின், சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை வென்றிருக்கிறது என்றார்.

வழக்குரைஞர் அருள்மொழி, “55 ஆண்டுகளுக்கு முன்னால் உருது எழுத்தாளர் மண்டோ எழுதிய மூலக்கதையைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டிருந்தாலும் இன்றைக்கும் அப்படியே பொருந்துகிறது. பெண்கள் மீதான கொடுமைகளை இப்படம் உள்ளத்தை உலுக்கும் வகையில் பதிவு செய்துள்ளது என்றார்.

தலித் முரசு புனிதப் பாண்டியன், ‘பிற்படுத்தப்பட்டோருக்கும், தலித் மக்களுக்கும் இடையில் கூர்மைப்படுத்தப்படும் சாதி ஆதிக்க உணர்வை எடுத்துரைத்து, அதை அடியோடு களைய அணிதிரள வேண்டும் என்றார்.

பேராண்மை, ஈ, இயற்கை ஆகிய படங்களின் மூலம் சமூக அக்கறையுள்ள திரைப்படங்களால் வெற்றி பெற்றுள்ள இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், படத்தை வெகுவாகப் பாராட்டினார். ‘இளம் வயதில் எனக்கு எழுத்தாளர் மண்ட்டோவைத் தெரியவில்லை. பிரின்சுக்குத் தெரிந்திருக்கிறது. சினிமா எடுப்பது ஒன்றும் கஷ்டமான வேலையில்லை. இதுபோன்ற குறும்படங்களை எடுப்பதுதான் சிரமம். வளரும் தலைமுறையை வாழ்த்துகிறேன் என்றார்.

இப்படத்தை எடுக்க அனுமதியளித்த திரைப்படக்கல்லூரி பேராசிரியர் ரவிராஜ், “எம்.ஜி.ஆர். அரசு திரைப்படக் கல்லூரியைப் பார்வையிட வந்தவர்கள் கல்லூரியின் கட்டடங்கள் மற்றும் வசதிகளைக் குறை சொன்னார்கள். அவர்களிடம் ‘திற’ படத்தைப் போட்டுக் காட்டினேன். வியந்து போனவர்கள், திரைப்படக் கல்லூரிக்குப் பெருமை சேர்த்த படைப்பு இது” என்றார்கள்.

திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேரா. சுபவீ, “படம் எடுப்பது மட்டுமல்ல, மேடையில் பேசுவது, கவிதை எழுதுவது, நடிப்பது என எதுவுமே சிரமமானதில்லை. அதை மனிதநேயத்தோடும், கொள்கைக்காகவும் செய்வதுதான் சிரமமானது. தாழ்த்தப்பட்டவர்களை சங்பரிவாரத்தினர் மக்கள் தொகைக் கணக்கில்தான் சேர்த்துக் கொள்கின்றனர். கோவிலுக்குள் சேர்ப்பதில்லை. சூலம் வழங்கும் நிகழ்ச்சியில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் மதச்சார்பற்ற இந்துக்களையும் சேர்த்தே அழிப்போம் என்றுதான் சொல்கிறார்கள். இத்தகையக் கொடியவர்களை உயிருள்ளவரை எதிர்க்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. இத்திரைப்படம் தெருத்தெருவாக பாராட்டப்பட வேண்டும்' என்றார்.

தமுமுக மாநிலச் செயலாளர் பேரா. ஹாஜாகனி, “திற என்ற இத்திரைப்படம், மனதைத் திறப்பதாகவும், மௌனப் பூட்டுக்களைத் திறப்பதாகவும் அமைந்துள்ளது. இப்படத்தில் காட்டப்பட்ட கொடுமைகளைச் செய்தவர்கள், நாங்கள்தான் இதைச் செய்தோம் என்று பெருமைபொங்க பேட்டி கொடுத்தார்கள். தெஹல்கா இதழ், அதைப் படம்பிடித்து ஒளிபரப்பியது. அவர்களுக்குச் சட்டம் என்ன தண்டனைக் கொடுத்தது?

பாபரி மஸ்ஜிதை இடிக்க ரதயாத்திரை போன அத்வானியையும், அந்த இடத்தை சமப்படுத்துங்கள் என்று இடிப்பதற்கு ஆணையிட்ட வாஜ்பாயையும், பாபரி மஸ்ஜித் இடிப்பை முன்னின்று நடத்திய குற்றவாளிகளையும் சட்டத்தால் தண்டிக்க முடிகிறதா?

மும்பையில் 2 ஆயிரம் முஸ்லிம்களைப் படுகொலை செய்த சூத்ரதாரி என நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா ஆணையத்தால் அடையாளம் காட்டப்பட்ட பால்தாக்கரேவைத் தண்டிக்க முடிந்ததா? உச்சநீதிமன்றம் ராகவன் கமிட்டி என்ற கமிட்டி அமைத்து மோடியின் கொடுமைகளை விசாரித்ததே, மோடி சிறையிடப்பட்டாரா?

இல்லை. சட்டத்தால் சங்பரிவாரத்தின் சல்லிவேரைக் கூட கிள்ளிப்போட முடியவில்லை. ஆனால், செய்த குற்றம் என்னவென்றே தெரியாமல் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் ஆண்டுக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில், எந்த ஆதாரமும் இல்லையென்றாலும் கூட, கூட்டு மனசாட்சியின்படி அப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனை அளிக்கிறது நீதிமன்றம். நாங்கள்தான் செய்தோம் என்று குற்றவாளிகளே கூறினாலும், நீதிமன்றங்களில் அவர்கள் தண்டிக்கப்படுவதில்லை.

எனவே உறங்குகின்ற நாட்டின் மனசாட்சி உலுக்கி எழுப்பப்பட வேண்டும். அதை இப்படம் திறம்படச் செய்துள்ளது'' என்றார்.

நக்கீரன் கோபால்-“இந்தப் படத்திற்குக் கைதட்ட வேண்டும் என்று தோன்றவில்லை. அந்த அளவுக்கு இது உள்ளத்தை பாதித்தது. இந்தக் கொடுமைகளைச் செய்தவர்களை தண்டிக்க முடிந்ததா? என்று பேரா. ஹாஜாகனி கேட்டார். அந்தக் கேள்விக்கு நம்மிடம் பதிலில்லை. ஆனாலும் இந்தக் கொடுமையைச் செய்தவர்களுக்கு இறங்குகாலம் தொடங்கிவிட்டது.

காஞ்சி சங்கராச்சாரியாருக்கு விழுந்த அடி, அந்தக் கூட்டத்தையே ஆட்டிவிட்டது (கூட்டத்தில் சிரிப்பு). இப்போதுவரை அவரது சீடர்களின் லீலைகளை நாங்கள் சீரியலாக எடுத்து வருகிறோம். இந்தக் கொடியவர்களின் முகமூடியைக் கிழிப்பதில் தெஹல்கா பத்திரிகை முக்கியப் பங்காற்றியது. எங்களுக்கு அதில் பெருமை. ‘திற' படம் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது. இயக்குநரின் குடும்பமே படத்தின் தயாரிப்புச் செலவை ஏற்றதால் இவ்வளவு சிறப்பாக வந்துள்ளது. எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்றார்.

தலைமையுரை ஆற்றிய கி.வீரமணி, “தீவிரவாதம் என்றவுடனேயே அதை முஸ்லிம்களோடு முடிச்சுப் போடுகிறார்கள். முஸ்லிம்களைத் தீவிரவாதிகள் என்று சொல்பவர்கள் எப்படிப்பட்டக் கொடிய பயங்கரவாதிகள் என்பதைத்தான் நாம் குறும்படத்தில் பார்த்தோம். எங்கள் இயக்கக் குடும்பத்துப் பிள்ளை பிரின்சு என்.ஆர்.எஸ். பெரியாரும் அவரது குழுவினரும் இதைச் சிறப்பாகப் பதிவு செய்துள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ். கும்பல் முஸ்லிம்களை அந்நியர்களாக சித்தரிக்கிறார்கள். முஸ்லிம்கள் இம்மண்ணின் மைந்தர்கள். அவர்களை அந்நியர்கள் என்று செல்பவர்கள்தான் எங்கோ இருந்து வந்த வந்தேறிகள் என்பதுதான் உண்மை. இங்கே உண்மை தலைகீழாக ஆகியுள்ளது.

மாலேகானில் குண்டுவைத்தது இந்துத்துவ தீவிரவாதிகள்தான். அதை அம்பலப்படுத்திய ஹேமந்த் கர்கரே என்ற நேர்மையான அதிகாரியைக் கொன்றததும் அவர்கள்தான்.

‘கர்கரேவைக் கொன்றது யார்? என்ற புத்தகம் விருப்ப ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியான முஹ்ஷி என்பவரால் எழுதப்பட்டுள்ளது.

ஊடகத்துறையிலும், காவல்துறையிலும், ஐ.பி. எனப்படும் உளவுத்துறையிலும் ஆர்.எஸ்.எஸ். கும்பல் மிகப்பெரிய அளவில் ஊடுருவியுள்ளது. கலை ஊடகங்களைக் கைப்பற்றி மக்களை மூளைச்சலவை செய்து தங்கள் லட்சியத்தை அடையலாம் என சங்பரிவாரக் கும்பல் சதித்திட்டம் தீட்டி அதை நிறைவேற்றியும் வருகிறது. அதை முறியடிக்கும் வேலைகளில் நாம் இறங்க வேண்டும்.

ஒரு கலைப்படைப்பு மக்கள் மனங்களில் எந்த விளைவை ஏற்படுத்துகிறது என்பதை வைத்தே அதை மதிப்பிட வேண்டும் என்றார் தந்தை பெரியார். - என்றார் கி.வீரமணி.

மதவெறிக்கு எதிரான உணர்வையும், மனிதநேயத்தையும் உருவாக்கும் இந்தக் குறும்படக் குழுவினரை வாழ்த்துகிறேன்.

Tuesday, December 15, 2009

மொபைல் ரீசார்ஜ் செய்து தந்து ஓட்டு கேட்கும் கட்சிகள்!

வந்தவாசி: வாக்காளர்களைக் கவர என்னவெல்லாம் வழி உள்ளதோ அத்தனை வழியையும் அடித்துப் பிடித்துக் கண்டுபிடித்து தங்கள் பக்கம் இழுத்து வருகின்றனர் கட்சிக்காரர்கள்.

சாதனைகளைப் பார்த்து, வேட்பாளர்களின் பின்னணியைப் பார்த்து, தராதரம் பார்த்து ஓட்டுப் போட்டதெல்லாம் அந்தக் காலம் - ஆதி காலமாகி விட்டது.

இப்போதெல்லாம் யார் அதிகம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கே ஓட்டுக்கள் விழும் காலம். அந்த அளவுக்கு வாக்காளர்களை மாற்றி விட்டனர் கட்சிக்காரர்கள்.

வந்தவாசி தொகுதி இடைத் தேர்தலில் என்னென்ன காட்சியெல்லாமோ அரங்கேறி வருகிறது.

இங்கு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சியினர் பல்வேறு
வழிகளில் வாக்காளர்களைக் கவர்ந்து வருகின்றனர். பிரியாணி போட்டு கிராமத்து வாக்காளர்களைக் கவர்ந்தனர். பின்னர் வேட்டி, சேலைகளை அள்ளி அள்ளி கொடுத்தனர். இப்போது அடுத்த கட்டமாக திமுக சார்பில் வாக்காளர்களைக் கவர குறிப்பாக இளைஞர்கள், இளம் பெண்களைக் கவர, இலவச ரீசார்ஜ் கார்டுகளைக் கொடுத்து ஓட்டு கேட்கின்றனராம்.

கிராமம் கிராமாக செல்லும் கட்சி பிரமுகர்கள், இளைஞர்கள் அதிகம் கூடியிருக்கும் இடங்களை தேடிப் பிடிக்கின்றனராம். பின்னர் அவர்களிடம் ரீசார்ஜ் கார்டுகளை கையில் வைத்து நமக்கே ஓட்டுப் போடணும் என்று அன்பாக கேட்டுக் கொண்டு விடை பெறுகின்றனராம்.

இன்னும் என்னென்ன கன்றாவிக் காட்சிகளைக் காணப் போகிறோமோ..

Monday, December 14, 2009

பாலியார் புகார்: சென்னை sex சாமியாருக்கு போலீஸ் வலைவீச்சு!

சென்னை கோடம்பாக்கம் சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் மீது ஹேமலதா என்பவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார். வேலைவாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாகவும், தமது ஆபாசப் படங்களை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டுவதாகவும், சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் அடிக்கடி சிங்கப்பூர் சென்று வருவார் எனவும் அந்த புகாரில் கூறியுள்ளார். பெண்ணின் புகாரை அடுத்து சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமாருக்கு போலீஸ் வலைவீசியுள்ளனர்.

சென்னை தேனாம் பேட்டை சேர்ந்தவர் ஹேமலதா. இவர் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:

அடையாறு சர்தார்பட் டேல் சாலையில் உள்ள சக்தி விலாஸ் மிஷனில் உள்ள டாக்டர் ஈஸ்வர ஸ்ரீகுமார் என்கிற சாமியார் தனது நிறுவனத்திற்கு வேலைக்கு ஆள் எடுப்பதாக என் அப்பாவின் நண்பர் மூலம் தகவல் கிடைத்தது.

நானும் அந்த நிறுவனத்திற்கு வேலை கேட்டு விண்ணப்பம் போட்டேன். சாமியார் ஈஸ்வரகுமார் என்னிடம் இண்டர்வியூ நடத்தினார். சூப்பர்வைசர் வேலை தரு வதாகவும் படிபடியாக சிங்கப்பூரில் உள்ள தனது நிறுவனத்தில் பதவி உயர்வும் அதிக சம்பளமும் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினார்.

ஒரு தனி அறையில் வைத்து எனக்கு காபி கொடுத்தார். அதை குடித்த சிறிது நேரத்தில் மயங்கிவிட்டேன். பிறகு கண்விழித்து பார்த்த போது ஆடைகள் களைந்த நிலையில் அலங்கோலமாக கிடந்தேன். என்னை சாமியார் பலாத்காரம் செய்ததை உணர்ந்தேன்.

இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று சாமியார் மிரட்டி அனுப்பினார். அடிக்கடி போன் செய்து அழைத்தார். நான் மறுத்தேன். உன்னுடன் உல்லாசமாக இருந்ததை வீடியோவாக எடுத்து வைத்துள்ளேன். அதனை இண்டர்நெட்டில் போட்டு விடுவேன் என்று மிரட்டினார். இதனால் பயந்து போய் அவரது வீட்டிற்கு சென்றேன். அங்கு மீண்டும் என்னை கற்பழித்தார். எனக்கு 10வயதில் மகள் இருக்கிறாள் என்று கெஞ்சினேன். அவர் விடவில்லை. தொடர்ந்து ஆபாச வீடியோவை காட்டி மிரட்டி என்னை அனுபவித்தார். அவர் மீது நடவடிக்கை எடுத்து எனது ஆபாச வீடியோவை அழித்து எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

புகார் மனு குறித்து விசாரிக்க சைதாப்பேட்டை உதவி கமிஷனர் அதிவீர ராம பாண்டியனுக்கு உத்தரவிடப்பட்டது. இன்ஸ்பெக்டர் குமார் நடத்திய விசாரணையில் சம்பவம் தியாகராயநகர் பகுதியில் நடந்ததாக தெரிய வந்ததால் புகார் மாம்பலம் போலீசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Saturday, December 12, 2009

இந்து மதத்தில் ஒரு பிரிவுதான் இருக்கிறதா? ஒரு பிரிவு இன்னொரு பிரிவை ஏற்றுக்கொள்கிறதா?



‘சிவசேனா’

‘இஸ்லாமியர்' ஒருவர் இந்தியாவின் பிரதமர் ஆக வேண்டுமானால், முசுலிம் சமுதாயத்து மக்கள் பொது சிவில் சட்டம் இயற்ற ஆதரவு தரவேண்டும்; குடும்ப நலத் திட்டத்திற்கு ஆதரவு தரவேண்டும்; வந்தே மாதரம் பாடலை ஏற்கவேண்டும்; எல்லாவற்றிற்கும் மேலாக அயோத்தியில் ராமன் கோயில் கட்ட ஒப்புக்கொள்ளவேண்டும்’ என்று ஆணை போடுகிறார் ‘சிவசேனா’ தலைவர் பால்தாக்கரே!

அதைச் சொல்ல இவர் யார் என்று தெரியவில்லை. இந்தியாவின் சர்வாதிகாரியாக இவர் எந்தத் தேதியிலிருந்து பொறுப்பு ஏற்றுக்கொண்டார் என்றும் தெரியவில்லை.

இந்தியாவில் பிறக்கும் எல்லோரும் சமமானவர்கள்தாம்; சம உரிமை படைத்தவர்கள்தாம். இதில் வேறுபாடு காட்டப்படக்கூடாது என்பதை ஒப்புக்கொண்டு இந்து மதத்தில் உள்ள ஜாதியை ஒழிக்க ஒப்புக்கொள்ளவேண்டும்; உயர்ஜாதி ஆணவச் சின்னமான பூணூலை அகற்றவேண்டும் என்ற நிபந்தனைகளை சிவசேனா, சங் பரிவார் வகையறாக்கள் ஒப்புக்கொள்வார்களா?

இந்தச் சமத்துவத்தை ஏற்றுக்கொண்டவர்கள்தாம் இந்தியாவின் குடிமக்களாக இருக்கவேண்டும் என்கிற நியாயமான, அறிவார்ந்த, மனித உணர்வை மதிக்கும் குரலை ஏற்றுக்கொள்வார்களா இவர்கள்?

இன்னொரு மதத்தைச் சார்ந்தவர்கள் இப்படியெல்லாம் நடந்துகொள்ளவேண்டும் என்று வலியுறுத்த இவர்கள் யார்?

ஆர்.எஸ்.எஸின் முன்னாள் தலைவர் சுதர்சன் இப்படித்தான் ஒருமுறை சொன்னார். முசுலிம்கள் தங்கள் மதத்தை இந்திய மயமாக்கிக் கொள்ளவேண்டும். ராமன், கிருஷ்ணன் கடவுள்களை வழிபடவேண்டும் என்று கூறினார். ‘சிவசேனா’ தலைவரோ, இதே கருத்தை வேறு சொற்களில் சொல்கிறார் என்பதுதான் இதன் பொருள்.

இன்னொரு முக்கிய கேள்வி: இந்து மதத்தின் பிரதிநிதிகளாக இவர்களை யார் ஏற்றுக்கொண்டார்கள்?

இந்து மதத்தில் ஒரு பிரிவுதான் இருக்கிறதா? ஒரு பிரிவு இன்னொரு பிரிவை ஏற்றுக்கொள்கிறதா? ‘வைத்தியரே, முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள்!’ என்பதுதான் நமது முதலாவது வேண்டுகோள்!

‘இந்து’ மதம் என்ற பெயர் அதற்கு உண்டா? என்பதற்கு முதலில் அவர்கள் பதில் சொல்லட்டும்; மற்றவற்றை பிறகு பேசிக் கொள்ளலாம்.

--------------------- மயிலாடன் அவர்கள் 11-12-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை