Thursday, June 17, 2010

விபசாரம் செய்யும் கல்லூரி மாணவிகள்

"பிரான்சில் நாற்பதாயிரம் மாணவிகள் கல்லூரிக் கட்டணம் கட்டுவதற்காக விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள்! பிரான்சில் அதிகரித்து வரும் கல்விக் கட்டணத்தை கட்ட முடியாமல் இரண்டு லட்சம் மாணவர்கள் திண்டாடுகிறார்கள். ஒரு ஆய்வின் படி 45000 மாணவர்கள் வறுமையில் வாடுகிறார்கள்." இந்த திடுக்கிடும் செய்தி Le Figaro என்ற பிரபல பிரெஞ்சு தினசரியில் வெளியானது. பல்கலைக்கழக மாணவிகள் படிப்புச் செலவுகளுக்காக விபச்சாரம் செய்வது செல்வந்த மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வருகின்றது. பிரிட்டனில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்றின் படி, விபச்சாரத்தில் ஈடுபடும் மாணவிகளின் எண்ணிக்கை கடந்த ஆறு ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றது. கடந்த ஆறு ஆண்டுகளில் தான் அரசு கல்விக் கட்டணத்தை அதிகரித்திருந்தது. அது அங்கே தற்போது வருடத்திற்கு 3000 பவுன்கள். பிரிட்டிஷ் கல்லூரிகளில் செய்யப்பட்ட ஆய்வின் பொழுது, பத்து சதவீத மாணவர்கள் தமக்கு தெரிந்தவர்கள் விபச்சாரம் செய்வதாக கூறினார்கள்.

பல்கலைக்கழகங்களில் படிக்கும் ஏழை மாணவர்கள் பகுதி நேர வேலை பார்ப்பது வழக்கமாக நடப்பது தான். ஆனால் பகுதி நேர வேலை, படிக்கும் நேரத்தை ஆக்கிரமிக்கிறது. மேலும் வேலை செய்த களைப்பு காரணமாக படிப்பில் கவனம் செலுத்த முடிவதில்லை. அத்தகைய காரணங்களால், பல மாணவிகள் ஒரு உணவு விடுதியில் வேலை செய்வதிலும் பார்க்க, விபச்சாரம் மேல் எனத் தேர்ந்தெடுக்கின்றனர். விபச்சாரம் செய்வதன் மூலம் பணம் இலகுவாக கிடைக்கின்றது. நேரத்தையும் மிச்சம் பிடிக்க முடியும். விபச்சாரத்தில் ஈடுபடும் மாணவிகள் அது குறித்து எவருடனும் பகிர்ந்து கொள்வதில்லை.

இணைய இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த மாணவி ஒருவர் இவ்வாறு கூறினார். "இன்டர்நெட் மூலமாக வாடிக்கையாளர்களை பிடிப்பதாகவும், சில நாட்கள் பேசிப் பார்த்து நம்பிக்கை வந்த பின்னரே, ஹோட்டல்களில் சந்திப்பதாக" தெரிவித்தார். "கல்லூரியில் கூடப் படிக்கும் மாணவி ஒருவர் உணவு விடுதியில் வேலை செய்வதாக சொன்னார். மூன்று மாதங்களின் பின்னர் ஒரு கார் வாங்கினார். உணவு விடுதியில் என்ன சம்பளம் கொடுக்கிறார்கள் என்று எனக்கு தெரியும். மூன்று மாதங்களில் கார் வாங்குவதானால் வேறு தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டும். பல மாணவிகள் காதலன் என்ற பெயரில் பணத்துக்காக ஒருவனுடன் உறவு வைத்துக் கொள்கின்றனர். "


ஐரோப்பிய நகரங்களில் சட்டபூர்வ விபச்சாரிகளுக்கு உதவும் அரச அல்லது தொண்டு நிறுவனங்கள், தம்மிடம் மாணவிகள் பற்றிய புள்ளி விபரம் எதுவும் இல்லை என தெரிவிக்கின்றனர். ஆனால் அதே நேரம் தம்மிடம் உதவி பெறும் விபச்சாரிகளில் மாணவிகளும் இருக்க வாய்ப்புண்டு என்றனர். மாணவிகள் விபச்சாரத்தில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமல்ல. ஆயினும் அவர்கள் பகிரங்கமாக விளம்பரம் செய்ய தடை உள்ளது. பல்கலைக்கழக நிர்வாகங்கள் இந்தப் பிரச்சினை இருப்பதை மறுக்கின்றன. வறுமை காரணமாக கல்விக் கட்டணம் கட்ட முடியாத மாணவர்களுக்கென அரசு மானியம் வழங்குவதாகவும், அதைப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்தனர். அண்மைக் காலமாக மானியத்திற்காக விண்ணப்பித்த மாணவர்கள் தொகை அதிகரித்திருப்பதை ஏற்றுக் கொண்டனர். ஆனால் நாட்டு நிலைமை அவர்கள் சொல்வது போன்றில்லை.

மேற்கு ஐரோப்பா மாறி வருகின்றது. முன்பெல்லாம் கல்வி ஒன்றில் இலவசமாக கிடைத்தது, அல்லது வருமானம் குறைந்தவர்களின் கல்விக் கட்டணத்தை அரசு கட்டி வந்தது. அந்தக் காலம் இப்போது மலையேறி விட்டது. அப்போதெல்லாம் அக்கரையில் சோஷலிச நாடுகள் இருந்தன. அங்கெல்லாம் கல்வி இலவசம். அவர்களை விட நாம் சிறந்தவர்கள் என்று காட்ட வேண்டாமா? இப்பொழுது தான் கம்யூனிச நாடுகள் காணாமல் போய் விட்டனவே. இனி என்ன பயம்? போர்த்தியிருந்த பசுத்தோலை கழற்றி விட்டு, முதலாளித்துவம் தைரியமாக தனது கோரப் பற்களை காட்டுகின்றது.

பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில், ஐரோப்பிய அரசாங்கங்கள் வலதுசாரிக் கொள்கைகளை நடைமுறைப் படுத்தி வருகின்றன. கல்வியில் தனியாரின் ஆதிக்கத்தை அதிகரிப்பது அவர்கள் நோக்கம். அதற்காக வருடாந்த பட்ஜெட்டில் கல்விக்கென ஒதுக்கப்படும் அரச செலவினத்தை குறைத்துக் கொண்டு வருகின்றனர். மக்களுக்கு வழங்கப்பட்ட மானியங்கள் வெட்டப்படுகின்றன.

முதலாளித்துவ குருக்கள் அரசு கல்வியை முழுவதும் தனியாரிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்று சதா காலமும் ஓதிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சொல் தற்போது அரங்கேறுகின்றது. நம் மத்தியிலும் தனியார்மயத்திற்கு ஆதரவளித்து சமூக சீரழிவுகளை வளர்க்கத் துடிக்கும் "முதலாளித்துவ குருக்கள்" இருக்கிறார்கள். "விபச்சாரம் செய்யினும் கற்கை நன்றே!" என்று எமக்கு புத்திமதி கூறலாம். அவர்கள் முதலில் தம் வீட்டுப் பெண்களை விபச்சாரத்திற்கு அனுப்ப முன்வருவார்களா?

இந்த செய்தியை பதிவில்(கலையகம்) பார்த்தோம் அதை அப்படியே இங்கே அளித்தோம்.

No comments: