Sunday, February 1, 2009

ஆலங்குளத்தில் இரட்டை தம்பளர் முறை 42 குடும்பங்கள் ஊரை விட்டு தள்ளி வைப்பு

ஆலங்குளம்: நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே இரட்டை டம்ப்ளர் முறை நடைமுறையில் உள்ளதாகவும், ஒரு சமுதாயத்தை சேர்ந்த 42 குடும்பங்கள் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஆலங்குளம் ஊராட்சி ஓன்றியம் கல்லூத்து கிராமம், காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சமுத்திரபாண்டி. கழுநீர்குளம் பஞ்சாயத்தின் நான்காவது வார்டு உறுப்பினர்.

இவர் கலெக்டரிடம் அளித்த மனுவில், கல்லூத்தில் உள்ள டீக்கடையில் எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு இரட்டை தம்பளர் முறையில் டீ கொடுத்து வந்தனர். இதுகுறி்த்து மற்ற சமுதாயத்தை சேர்ந்தவர்களிடம் முறையிட்டு வந்தேன்.

இந்நிலையில் ஊர் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அந்த ஊரை சேர்ந்தவர்கள் என்னையும், எங்க ஊர் நாட்டாமையையும் அழைத்தனர். அந்த கூட்டத்திற்கு நான் செல்ல மறுத்து விட்டேன். 27ம் தேதி கூட்டத்திற்கு சென்ற ஊர் நாட்டாமையையும் அவதூறாக பேசியுள்ளனர்.

கடந்த 28ம் தேதி முதல் எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு கடையில் டீ கொடுக்க மறுத்ததுடன் பலசரக்கு கடையில் பொருளை தரவும் மறுத்து விட்டனர். இதனால் கல்லூத்து கிராமத்தை சேர்ந்த ஒரு சமுதாய மக்கள் முத்து கிருஷ்ணபேரி அல்லது ஆலங்குளம் சென்று பொருட்களை வாங்க வேண்டியுள்ளது.

இதுகுறித்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க கோரி கடந்த 28ம் தேதி வீரகேரளம்புதூர் போலீசில் புகார் செய்தோம். ஆனால் போலீசார் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் ஆலங்குளம் தாலுகா அலுவலகத்தில் நடக்கும் சமாதான கூட்டத்துக்கு வரு்மாறு விஏஓவும் போலீசாரும் அழைத்தனர்.

ஆனால் புகார் மீது வழக்கு பதிவு செய்யாமல் சாமாதான கூட்டத்திற்கு அழைத்தது வேதனையை அளி்க்கின்றது. ஊரை விட்டு விலக்கியதால் 42 குடும்பங்கள் எங்கும் பொருட்கள் வாங்கமுடியாமல் அவதிப்படுவதாக அதே ஊரை சேர்ந்த கணேசன் கூறினார்.

இவர்களுடன் இதே ஊரை சேர்ந்த சொரிமுத்து, குமரேசன், மனித உரி்மைகள் களம் இயக்குனர் பரதன், அருந்ததியினர் பெண்கள் எழுச்சி இயக்கத்தின் மாநில அமைப்பாளர் முத்துமாரி ஆகியோரும் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

No comments: